கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட புதிய யூரியா உரக் கொள்கையின் இறுதி வடிவத்துக்கு மத்திய அமைச்சரவை இரு நாள்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்துள்ளது. உரக் கொள்கையில், யூரியா விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் மானியச் சுமையைக் குறைக்கும் வழிகளுக்கு முன்னுரிமை அளித்திருக்கிறார்கள் என்பது விவசாயிகளுக்கு மனநிறைவு தரும் அம்சம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலேயே யூரியா உரக் கொள்கையை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியிடம் உரங்கள் அமைச்சகம் இரு திட்டங்களையும், உரத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் இரு திட்டங்களையும் அளித்தனர். ஆனால், அவை உரத்தின் விலையை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து முழுமையாக நீக்குவது அல்லது ஓரளவு நீக்குவது என்பதாகவே இருந்தது.
உர மானியம் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், அதைக் கட்டுப்படுத்தாமல் எதுவும் செய்வதற்கில்லை என்ற கருத்தைக் கொண்டிருந்தது நிதி அமைச்சகம். உரத்தின் விலையை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து முழுமையாக நீக்குவதற்குதான் முனைப்பு காட்டியது.
இதற்குக் காரணம், விவசாய உரத்துக்காக நிதிநிலை அறிக்கையில் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மானியம் குறைந்தது ஒன்றரை அல்லது இரண்டு மடங்கு அதிகரித்து விடுவதே வழக்கமாக இருந்தது.
மழை பரவலாகப் பெய்திருந்தால் விவசாய சாகுபடிப் பரப்பு அதிகரிக்கிறது. அப்போது உரங்களின் பயன்பாடும் அதிகரிக்கிறது. உரங்கள் விற்பனை அதிகரிக்கும்போது, சந்தையில் இந்திய உரங்கள் போதுமான அளவு இருப்பதில்லை. ஏற்கெனவே வழங்கும் மானியச் சுமை ஒருபுறம் இருக்க, இறக்குமதி செய்யும் உரங்களின் விலையாலும் மானியச் சுமை அதிகரித்தது. ஆகவே, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, உரங்களின் விலையைச் சந்தையின் ஏற்றத்தாழ்வுக்கு விட்டுவிடுவதே சரியானதாக இருக்கும் என்ற கருத்தைக் கொண்டிருந்தது. தற்போது பா.ஜ.க. அரசு அறிவித்திருக்கும் யூரியா உரக் கொள்கை, உரத்தின் விலை அப்படியே தொடரும் என்று தெளிவுபட அறிவித்துவிட்டது. 50 கிலோ எடை கொண்ட யூரியா மூட்டை விலை ரூ.268 மற்றும் வரிகள் என்பதாக இருக்கும். வேம்பு கலந்த யூரியா எனில் கூடுதலாக ரூ.14 விலை தர வேண்டும்.
இந்தியாவுக்கு ஆண்டுதோறும் சுமார் 3 கோடி டன் யூரியா தேவை. இதில் 2.2 கோடி யூரியா மட்டுமே இந்தியாவில் உள்ள 30 உர ஆலைகள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. பற்றாக்குறை அளவான 80 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் யூரியா உற்பத்தியாளர்கள் வியாபாரக் கூட்டணி (சிண்டிகேட்) அமைத்துக் கொள்வதால், அரசு அதிக விலை கொடுத்து யூரியாவை வாங்கி, குறைந்த விலைக்கு உரங்களை விவசாயிகளுக்கு வழங்கும் நிலை உள்ளது.
தற்போதைய புதிய யூரியா கொள்கையின்படி, அடுத்த நான்கு ஆண்டுகளில் யூரியா உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும் என்பதே இலக்கு. ஆண்டுதோறும் 20 லட்சம் டன் யூரியாவைக் கூடுதலாக உற்பத்தி செய்ய, உர ஆலைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதும், புதிய அலகுகளை அமைக்க உதவுவதும் முன்னுரிமை பெறும். இத்தகைய நடவடிக்கையால் ஆண்டுக்கு ரூ.4,800 கோடி மானியத்தை மிச்சப்படுத்தலாம் என்கிறது மத்திய அரசு.
உர விலையை சந்தையின் ஏற்றத்தாழ்வுகளுக்கு விடாமல் அரசு தன் வசமே வைத்திருப்பது இன்றைய நிலையில் மிகவும் அவசியம். யூரியா உரத்தை சர்க்கரை விலை போல சந்தை தீர்மானிக்க விட்டுவிட முடியாது.
நாம் உர உற்பத்தியில் பற்றாக்குறை நாடாக இருக்கிறோம். உர விலையைச் சந்தை தீர்மானிக்க விட்டுவிட்டால், மிகச் சிறப்பாக செயல்படும் பெருமுதலாளிகளின் தனியார் உர உற்பத்தி நிறுவனங்களுக்கும் அரசு சார்ந்த மற்றும் சில சிறிய தனியார் உற்பத்தி நிறுவனங்களுக்கும் இடையே கடும் போட்டி ஏற்படக் கூடும். உர விலை உயர்வது ஒருபுறம் இருக்க, விலை குறைப்புப் போட்டியில் தாக்குப் பிடிக்க முடியாமல் பத்துக்கும் மேற்பட்ட உர ஆலைகள் மூடப்படும் நிலைமை உருவாகும்.
உரத்தின் உள்நாட்டு உற்பத்தி பாதியாகக் குறைந்து, தேவை மிக அதிகமாக உயர்ந்து, அதை ஈடுசெய்ய மிக அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யவும் அதற்கு வரி விலக்கு அளித்தும் மத்திய அரசு, மிகப் பெரிய இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியதாகிவிடும். விவசாயியும் சரி, தன் உரத்துக்கு மிக அதிக விலை கொடுத்து, ஏமாந்து நிற்கும் நிலைமை ஏற்படும்.
தற்போது அரசு செய்ய வேண்டியதெல்லாம், உர ஆலைகள் எண்ணிக்கையைப் பெருக்குவதும், அவற்றின் உற்பத்தித் தரத்தை அதிகரிப்பதும்தான். தமிழ்நாட்டில் நாப்தா வாயுவால் செயல்படும் உரத் தொழிற்சாலைக்குத் தொடர்ந்து நாப்தா வாயுவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசினால் ஏற்கெனவே முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில், நாப்தா வாயுவால் இயங்கும் ஆலைகளையும் தொடர்ந்து செயல்படச் செய்வதுதான் ஆண்டுக்கு 20 லட்சம் கூடுதல் யூரியா உற்பத்திக்குத் துணை புரியும்.
உரங்கள் நேரடியாக விவசாயிகளுக்குச் சென்றடையும் வழிமுறைகள்தான் இன்றைய தேவை. தனியார் முகவர்கள், விற்பனையாளர்கள் மூலமாக உரங்கள் கைமாறும்போது, அதன் விலையும் கூடுகிறது. சில இடங்களில் கூடுதலாக உரங்கள் பெற்றுப் பதுக்குவதும் நடைபெறுகிறது. சாகுபடி செய்யும் விவசாயி உரத்தை நேரடியாக, வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலமாகப் பெற வழிகோல வேண்டும்.
இந்தியா உர உற்பத்தியில் தன்னிறைவு பெறும் வரையில், அதாவது அடுத்த 4 ஆண்டுகளுக்கு, உர விலையை அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே சரியான முடிவாக இருக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி

தொடா் தோ்தல் விழிப்புணா்வால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பா?
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

