தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

நீரின்றி அமையாது உலகு...

மழை நீர் சேமிப்பு அமைப்புகளை ஏற்படுத்தாமலும், அரசு அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்ததற்காகவும்

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:30 am

ஆசிரியர்

மழை நீர் சேமிப்பு அமைப்புகளை ஏற்படுத்தாமலும், அரசு அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்ததற்காகவும் புது தில்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்களுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அபராதம் விதித்துள்ளது.
 இதில் குறிப்பாக, நான்கு மருத்துவமனைகளுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வளாகங்களில் மழை நீர் சேமிப்பு அமைப்புகள் பராமரிக்கப்படவில்லை என்பதுடன், நிலத்தடி நீரை அனுமதியின்றி தினமும் பல ஆயிரம் லிட்டர் உறிஞ்சி எடுத்துள்ளனர். இவர்களுக்கு பலமுறை அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியும்கூட உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினர் என்று பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஸ்வதந்தர் குமார் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
 இந்த மருத்துவமனைகளில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஆய்வு நடத்தி அளித்த அறிக்கையின் அடிப்படையில்தான் நிலத்தடி நீர் பயன்பாடு குறித்து கணக்கீடு செய்யப்பட்டு, எச்சரிக்கை செய்யப்பட்டு, தற்போது அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. புது தில்லியில் மட்டுமல்ல, இந்தியாவின் மாநகர, நகரங்களில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களும், மருத்துவமனைகளும் அரசின் அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன. அரசு அதிகாரிகள் அதைத் தடுப்பதாகத் தெரியவில்லை.
 மருத்துவமனை என்பது எத்தனை படுக்கை வசதி கொண்டது, ஒரு நாளைக்கு எவ்வளவு நிலத்தடி நீர் தேவைப்படுகிறது, ஒரு நாளில் எந்தெந்த நேரத்தில் நிலத்தடி நீரை எடுக்கிறார்கள் என்ற விவரங்களை அளித்துதான் அனுமதி பெற முடியும். ஹோட்டல்களும் தங்களிடம் எத்தனை அறைகள் உள்ளன, எவ்வளவு நீர் தேவைப்படுகிறது என்பதைத் தெரிவிக்க வேண்டும். இப்படியெல்லாம் அரசு விதிமுறை இருப்பதே பலரும் அறியாதது.
 மருத்துவமனைகளும், ஹோட்டல்களும் தண்ணீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சுவதால் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள வீடுகளுக்குத் தண்ணீர் இல்லாமல் போகிறது. அவர்களது கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் வற்றிப் போகின்றன. சென்னை போன்ற கடலோர நகரங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிடுகிறது.
 உள்ளாட்சி அமைப்புகள் வழங்கும் குடிநீரையும் மோட்டார் வைத்து மருத்துவமனைகள் உறிஞ்சுகின்றன. அறுவைச் சிகிச்சைக் கருவிகளை நிலத்தடி நீரால் கழுவினால் சீக்கிரத்தில் பழுதாகி விடுகின்றன என்பதுதான் இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ஆனால், அவர்கள் பயன்படுத்தும் கூடுதல் நீருக்கான வணிகக் கட்டணத்தை மாநகராட்சிக்கோ, உள்ளாட்சி அமைப்புக்கோ செலுத்துகிறார்களா என்றால், கிடையாது.
 அடிபம்புகள், வாளி மூலம் நிலத்தடி நீரை எடுப்பதைத் தவிர்த்து வேறு எந்த வகையில் நிலத்தடி நீரை யார் எடுத்தாலும் அரசு அனுமதி அவசியம். தமிழ்நாட்டைப் பொருத்தவரை மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர் ஆதார விவரக் குறிப்பு மையம் என்று ஒன்று உள்ளது. இவர்கள்தான் எந்தெந்த மாவட்டத்தில், எந்தெந்த வட்டத்தில் நிலத்தடி நீர், ஏரி, குளம் போன்ற நீர் அமைப்புகளில் சேமிக்கப்படும் நீர் அளவு கூடுவதையும், குறைவதையும் கணக்கிடுபவர்கள். ஆனால், இது அனுமதி வழங்கும் அதிகாரம் பெற்ற அமைப்பா என்பதே தெளிவு இல்லாமல் இருக்கிறது.
 இந்தியாவில் ஆண்டுதோறும் நிலத்தடியை நிரப்பும் நீர் அளவு 43.3 கோடி கனமீட்டர். இதில் 68% பருவ மழை மூலமாக நேரடியாக மண்ணுக்குள் வந்து சேர்கிறது. மற்றவை நில மேற்பரப்பில் உள்ள குளம், ஏரி, ஆறுகளின் கசிவு நீர். நிலத்தடி நீரில் 91% விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும், மீதமுள்ள 9% மட்டுமே நிறுவனங்களாலும், வீட்டுப் பயன்பாட்டுக்கும் எடுக்கப்படுவதாகவும் அரசு புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும் இது சரியான புள்ளிவிவரமாகத் தெரியவில்லை.
 நகரங்களில் மருத்துவமனைகளும், ஹோட்டல்களும் நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன என்றால், புறநகர்ப் பகுதியில் இப்போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்களும், மென்பான நிறுவனங்களும் உறிஞ்சியெடுத்து தண்ணீரைக் காசாக்குகிறார்கள். பல ஊர்களில் விவசாயக் கிணறுகளின் நீரை சாயப் பட்டறைகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் லாரிகளில் அனுப்பி வியாபாரம் செய்கிறார்கள். இது சட்டப்படி குற்றம் என்றாலும் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
 நிலத்தடி நீரைக் கட்டுப்பாடு இல்லாமல் பயன்படுத்தினால், நிலத்தடியில் ஏற்படும் வெற்றிடத்தில் மண் அடுக்குகள் அமிழ்ந்துவிடவும், அதனால் நிலத்தின் மேற்பரப்பில் சிறு அளவிலான நில அதிர்வுகளைச் சந்திக்க நேர்கிறது என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக, சென்ற ஆண்டு கலிபோர்னியாவில் நேரிட்ட நாபா நிலநடுக்கம் குறித்து அறிஞர்கள் பலரும் இதே கருத்தை முன்வைத்தனர். நிலத்தடி நீர் அதிகமாக சுரண்டப்படும் இடங்களில் கட்டுமானங்கள் மண்ணில் அமிழ்ந்து விடுதல் அதிகமாக நடைபெறுகிறது. இதை நிலநடுக்கம் என்று அறிவியல்பூர்வமாகச் சொல்ல முடியாது என்றாலும், நிலத்தடி நீர்ச் சுரண்டலால் ஏற்படும் பாதிப்பு என்பதை மறுக்கவே முடியாது.
 தமிழ்நாட்டைப் பொருத்தவரை மழை நீர் சேமிப்பு அமைப்புகள் மூலமும், மற்ற கட்டுப்பாடுகள் மூலமும் நிலத்தடி நீர் நிரம்பும் அளவு 77% ஆக இருக்கிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் நாம் மிகவும் முன்னேறிய நிலையில் இருக்கிறோம். ஆனாலும், மருத்துவமனை, ஹோட்டல்கள் நிலத்தடி நீரை, இலவசமாக எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சுரண்டுவதைத் தடுத்தே ஆக வேண்டும்.
 சாமானிய மக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்குத்தான் தண்ணீரைப் பொருத்தவரை முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். வணிகமும், வியாபாரமும் அதற்குப் பிறகுதான் என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.