அப்பாடா, பிழைத்தோம்!
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66(அ) பிரிவை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வரும், ரோஹிண்டன் நாரிமனும் வழங்கி இருக்கும் தீர்ப்பு சரித்திர முக்கியத்துவம் பெறுகிறது.


தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66(அ) பிரிவை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வரும், ரோஹிண்டன் நாரிமனும் வழங்கி இருக்கும் தீர்ப்பு சரித்திர முக்கியத்துவம் பெறுகிறது. 2000-இல் முந்தைய மன்மோகன் சிங் அரசால் கொண்டு வரப்பட்டது தகவல் தொழில்நுட்பச் சட்டம். இந்தச் சட்டத்தில் 2008-ஆம் ஆண்டு 66(அ) என்கிற சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, ஒருவரது மனதைப் புண்படுத்துகிறது, தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது, அவமானப்படுத்துகிறது என்று ஏதாவது ஒரு காரணத்துக்காக இணையதளம், முகநூல், சுட்டுரை என்று அனைத்து வலைதளப் பதிவுகளுக்காகவும் ஒரு நபர் கைது செய்யப்படலாம் என்கிற நிலைமை ஏற்பட்டது.
இதற்கு முன்னால், திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி பற்றிய கருத்துச் சித்திரம் வரைந்தபோதும், சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே மரணத்தின்போது புணேயைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்ட போதும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66(அ) பிரிவைப் பயன்படுத்தி அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டதுபோல, சமீபத்தில் இன்னொரு நிகழ்வு நடந்திருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது முகநூலில் சமாஜவாதி கட்சித் தலைவர்களில் ஒருவரும், மாநில அமைச்சருமான ஆஸம் கான் பற்றிய கருத்தை வெளியிட்டிருப்பதற்காகக் கைது செய்யப்பட்டு பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்தப் பிரச்னை தொடர்பான பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தன. அந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் செலமேஸ்வரர், நாரிமன் ஆகியோரின் அமர்வுதான் இப்போது வலைதளக் கருத்துப் பதிவுக்கு எதிரான சட்டப் பிரிவு 66(அ)வை ரத்து செய்து தீர்ப்புக் கூறியிருக்கிறது.
"தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66(அ) பிரிவு மக்களின் கருத்துரிமையை நேரடியாகப் பாதிக்கிறது. இந்தச் சட்டப் பிரிவின் மூலம் பேச்சு, கருத்துச் சுதந்திரம் தொடர்பான அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்பது தெளிவு. "எரிச்சலூட்டுவது', "தர்மசங்கடம் ஏற்படுத்துவது', "ஆட்சேபகரமானது', "பாதிப்பை ஏற்படுத்துவது' போன்ற வார்த்தைகள் தெளிவில்லாதவை. இதைக் காவல் துறையினர் எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள முடியும். குற்றம் சாட்டப்படுபவர் நல்லெண்ணத்தில் பதிவேற்றம் செய்த கருத்துக்குத் தவறான அர்த்தம் கற்பித்து அவரைக் காவல் துறையினர் கைது செய்ய முடியும். இது அரசியல் சட்டம் வழங்கி இருக்கும் தனிமனிதக் கருத்துச் சுதந்திர உரிமைக்கு எதிரானது. அதனால், இந்தச் சட்டப் பிரிவை ரத்து செய்து உத்தரவிடுகிறோம்' என்கிற அற்புதமான தீர்ப்புக்கு நீதிபதிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
வலைதள கருத்துப் பதிவுக்குக் கைது நடவடிக்கை என்பதை ரத்து செய்த நீதிபதிகள், ஆட்சேபகரமான, சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பதிவுகளை முடக்கி வைக்கும் 69(அ) பிரிவையும், தவறான நடவடிக்கைக்கு எதிராக இழப்பீடு கோருவதிலிருந்து விலக்கு அளிக்கும் 79-ஆவது பிரிவையும், சில நிபந்தனைகளுடன் தொடர அனுமதி அளித்திருக்கிறார்கள்.
உலகளாவிய அளவில், முகநூல் பதிவுகள் அந்தந்த அரசின் கண்காணிப்பில் உள்ளன. எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் விமர்சனங்கள் பதிவு செய்யப்படுகின்றன என்பது ஆட்சியாளர்களுக்கு எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா, துருக்கி, ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் இணையதளத்தின் மூலமான கருத்துப் பரிமாற்றங்களைக் கண்காணிப்பது, முடக்குவது போன்ற கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2014-இல் பின் பாதியில் மட்டும் இந்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க 5,832 முகநூல் பதிவுகள் முடக்கப்பட்டிருக்கின்றன.
என்ன மாதிரியான பதிவுகள் முடக்கப்பட்டன என்பது கூறப்படாவிட்டாலும், அவை மத துவேஷத்தை ஏற்படுத்துவன என்று காரணம் காட்டப்பட்டிருக்கிறது. அந்தப் பதிவுகள் என்னென்ன என்பது தெரியாமல், அவை பற்றி நாம் கருத்துத் தெரிவிக்க முடியாது. அதேநேரத்தில், இதுபோல முகநூல் பதிவுகளைத் தடுப்பது என்பதை ஏற்றுக்கொள்ள முற்பட்டால், அதன் தொடர்விளைவாக முகநூலில் எது பற்றியும் விமர்சனமோ, குறையோ பதிவு செய்ய முடியாத அவல நிலைமை ஏற்படக்கூடும்.
இந்த நிலைமைக்கு அடிப்படைக் காரணம், ஏனைய சட்டங்களைப் போலத் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000மும், அதில் மன்மோகன் அரசால் செய்யப்பட்ட 66(அ) என்கிற திருத்தமும் ஒரு பதிவு தடை செய்யப்படவோ, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவோ தெளிவான காரணங்களையும், வழிமுறைகளையும் தெரிவிக்காமல் இருப்பதுதான். இணையதளப் பதிவுகளுக்காகவோ, தொலைத் தொடர்பு உபகரணங்கள் மூலமான கருத்து, அச்சுறுத்தல், தரக்குறைவான விமர்சனங்கள் ஆகியவற்றிற்காகவோ இந்தியக் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் வழக்குத் தொடர முடியும் எனும்போது, தகவல் தொலைத்தொடர்புச் சட்டத்தின் 66(அ) பிரிவுக்கு அவசியமே இல்லையே.
இணையதளத்தில், குறிப்பாக முகநூலில் செய்யப்படும் பதிவுகளுக்கு எதிர்க் கருத்துகளை மற்றவர்கள் முன்வைக்க முடியும் எனும்போது அது ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிகோலுமே தவிர யாரையும் இழிவுபடுத்திவிடாது. அங்கொன்றும் இங்கொன்றும் நடைபெறும் தரக்குறைவான செயல்களுக்காக ஒட்டுமொத்த இணையதள, முகநூல் பதிவுகள் மீது சட்டத்தின் கண்காணிப்புக்கும் காவல் துறையின் கைது நடவடிக்கைக்கும் தேவையே இல்லை.
கருத்துச் சுதந்திரம் இந்தத் தீர்ப்பை சரித்திரமாகப் போற்றும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...