அநேகமாக விடுதலை செய்யப்பட்டுவிட்ட நிலையில், 2008 மும்பைத் தாக்குதலுக்குக் காரணமான லஷ்கர்-இ-தொய்பாவின் செயல்பாடுகளுக்குத் தலைமை வகிக்கும் ஜகியுர் ரெஹ்மான் லக்வி, கடந்த 13-ஆம் தேதி மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். மும்பை தாக்குதல் வழக்கில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட லக்வி, ஆள் கடத்தல் வழக்கு ஒன்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தார். அந்த வழக்கிலும் அவரை நீதிமன்றம் பிணையில் விடுவித்துவிட்டது.
அதற்குப் பிறகு பொது அமைதிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மூன்று முறை அவர் திரும்பத் திரும்பக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார். பாகிஸ்தானிலுள்ள பொது அமைதிப் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒருவர் ஒரு மாதத்திற்கு காவலில் வைக்கப்படலாம். இந்த முறையும் அந்த அடிப்படையில்தான் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறாரே தவிர, மும்பைத் தாக்குதல் வழக்குக்கும் இந்தக் கைதுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை..
இந்த முறை, இந்தியாவும் சர்வதேச அளவிலான ஆங்கில ஊடகங்களும் சற்று கவனக் குறைவாக இருந்திருந்தால், லக்வி பிணையில் விடுவிக்கப்பட்டது தெரியாமலேயே போயிருக்கும். சிறையிலிருந்து லக்வி வெளியேறிவிட்டால், அவரை மீண்டும் சிறை பிடிப்பது அல்லது கைது செய்வது என்பது இயலாமலேயே போயிருக்கும். அத்துடன் மும்பைத் தாக்குதல் வழக்குக்கும் முற்றுப்புள்ளி விழுந்திருக்கும்.
இப்போது மட்டும் பெரிய மாற்றம் ஏதாவது ஏற்பட்டுவிட்டதா என்றால் இல்லை. லக்வியின் வழக்குரைஞர்கள் பொது அமைதிப் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையிலான இந்தக் கைதை எதிர்த்து வழக்குத் தொடுக்காமல் இருக்க மாட்டார்கள். இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் அவரைப் பிணையில் விடக் கூடாது என்கிற அரசு தரப்பு வாதத்தில் முன்வைக்கப்பட்ட மும்பைத் தாக்குதல் தொடர்பான ஆவணங்கள் எதையுமே ஏற்றுக் கொள்ளவில்லை என்பது இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்று.
பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்குகளில் பாகிஸ்தான் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் எதுவுமே பாராட்டும்படியானவை அல்ல. மும்பைத் தாக்குதல் தொடர்பான வழக்கில்கூட எட்டு நீதிபதிகள் மாற்றப்பட்டு விட்டனர். பயங்கரவாதிகளுக்கு எதிராகக் கடுமையாக வாதிட்ட அரசின் சிறப்பு வழக்குரைஞர் செüத்ரி சுல்பிகர் அலி சுட்டுக் கொல்லப்பட்டார். அரசு வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே செல்லிடப்பேசி மூலம் மிரட்டப்பட்ட சம்பவங்கள் ஏராளம். குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சி சொல்ல யாருக்கும் துணிவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான், பாகிஸ்தானின் நீதித் துறையிலும், சட்ட திட்டங்களிலும் இந்தியா நம்பிக்கை வைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு கூறுகிறது.
2009-இல் சர்வதேச அழுத்தத்தின் காரணமாக மும்பைத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி ஜகியுர் ரெஹ்மான் லக்வியை பாகிஸ்தான் கைது செய்தது. ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளில், சட்டப்படி அவரைத் தண்டிப்பதற்குத் தேவையான ஆதாரங்களைத் திரட்டி நீதிமன்றத்தில் வலுவான வழக்கை பாகிஸ்தான் அரசு நிறுவி இருக்கிறதா என்றால் இல்லை.
லக்விக்கு எதிராகப் பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் முக்கியமான சாட்சியம் அவரது செல்லிடப்பேசி மூலமான உத்தரவுகள். அதைப் பாகிஸ்தான் அரசுக்கு அளித்திருப்பது இந்தியாவே தவிர, அதைக்கூடப் பாகிஸ்தான் திரட்டவில்லை. இந்தத் தொலைபேசி உரையாடல் லக்வியுடையதுதான் என்பதை நிரூபிக்க, லக்வியின் குரல் மாதிரியை சேகரிக்க வேண்டியது பாகிஸ்தானின் கடமை. ஆனால் பாகிஸ்தான் நாட்டுச் சட்டப்படி, குற்றவாளியின் ஒப்புதல் இல்லாமல் அவரது குரல் மாதிரியை சேகரிக்க முடியாது.
இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று 2012 முதல் இந்தியா பாகிஸ்தானை வற்புறுத்தி வருகிறது. பாகிஸ்தான் அரசு இதற்கு சம்மதித்தாலும்கூட, அதைப் பாகிஸ்தான் ராணுவம் சம்மதிக்குமா என்பது சந்தேகமே. அதற்குக் காரணம், லக்வியை விசாரிக்கவோ, அவரது குரல் மாதிரியின் அடிப்படையில் லக்விக்கும் மும்பைத் தாக்குதலுக்கு உள்ள தொடர்பை நிரூபிக்கவோ முயன்றால், லக்வி உள்ளிட்ட பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே உள்ள தொடர்பு வெளிப்பட்டுவிடும் என்பதுதான்.
சிறையில் இருக்கும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி லக்வி சகல வசதிகளுடன் பராமரிக்கப்படுகிறார். அடியாலா சிறையில், தலைமைக் காவலர் அலுவலகத்திற்கு அருகில் பல அறைகள் அவருக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றன. தொலைக்காட்சிப் பெட்டி, செல்லிடப்பேசிகள், இணையதள வசதி, அவர் விரும்பும் நாளிதழ்கள், தினந்தோறும் டஜன் கணக்கில் பார்வையாளர்கள் என்று சிறைக்குள்ளேயே லஷ்கர்-இ-தொய்பா அலுவலகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் லக்வி.
இன்னும் ஒரு மாதத்திற்கு மட்டுமே இந்தக் கைது செல்லுபடியாகும். பிறகு பொது அமைதிப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் மீண்டும் ஒரு மாதத்திற்கு அவர் கைது செய்யப்பட்டாக வேண்டும். லக்வியின் வழக்கு முடிவு பெறாதவரை, மும்பைத் தாக்குதல் வழக்குக்கு நீதி கிடைக்காதவரை, இந்திய பாகிஸ்தான் உறவிலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.
பயங்கரவாதத்தில் நல்லவன் கெட்டவன் வேறுபாடு இல்லை என்பதையும், லக்வி போன்ற பயங்கரவாதிகளை தண்டனையிலிருந்து பாதுகாப்பது பாம்புக்குப் பால் வார்ப்பதற்கு ஒப்பானது என்பதையும் பாகிஸ்தான் புரிந்து கொள்ளாதவரை, பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, நமக்கும்கூட நிம்மதி கிடையாது! பயங்கரவாதத்திற்கும் முடிவு ஏற்படாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 3 போ் உயிரிழப்பு

தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகார கால வரையறை ஐந்து ஆண்டுகளாக நிா்ணயம்: திருத்தப்பட்ட விதிகள் வெளியீடு

பாகிஸ்தான்: பாதுகாப்புப் படை சோதனையில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஈரான் பிடியில் உள்ள இந்திய மாலுமி பத்திரமாக உள்ளாா் - மத்திய அரசு தகவல்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

