கோழி எழுப்பும் கேள்வி...
அமெரிக்கக் கோழிக் கறி இறக்குமதிக்கு இந்தியா விதித்த தடை செல்லாது என்று உலக வர்த்தக அமைப்பின்


அமெரிக்கக் கோழிக் கறி இறக்குமதிக்கு இந்தியா விதித்த தடை செல்லாது என்று உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூ.டி.ஓ.) மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளதால், அடுத்த 12-18 மாதங்களுக்குள் அமெரிக்கக் கோழிக் கறியை அனுமதித்தாக வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்களை விசாரித்து அறிந்தபோது பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன.
பறவைக் காய்ச்சல் பீதி பரவலாக நிலவியபோது இந்தியா இந்தத் தடையை விதித்தது. இதை எதிர்த்து அமெரிக்கா தொடுத்த வழக்கில் சென்ற ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பு அமெரிக்காவுக்கு சாதகமாக அமைந்ததால், மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் இந்தியா முறையிட்டது. இருப்பினும், அங்கேயும், இந்தியாவின் தடை அறிவியல்பூர்வமற்றது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்தியா தொடர்ந்து மேல்முறையீட்டுக்குச் சென்றதன் நோக்கம் பறவைக் காய்ச்சல் பீதி அல்ல. உள்நாட்டில் கோழிக் கறி வணிகம் பாதிக்கப்படும் என்பதால்தான். பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதோடு, கோழி வளர்ப்பின் மூலம் துணை வருவாய் காணும் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற கவலையால்தான் இந்தியா மேல்முறையீட்டுக்குச் சென்றிருந்தது.
இந்தியா, அமெரிக்காவுக்கான மிகப் பெரிய கோழிக் கறி சந்தை. இந்தியாவில் கோழிக் கறி உண்போர் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு வளர்ந்து கொண்டே போகிறது. கோழிக் கறியின் அளவும் கூடிக் கொண்டே போகிறது. 2014-ஆம் ஆண்டு கோழிக் கறி விற்பனை 37.2 லட்சம் டன்! அதற்கு முந்தைய ஆண்டில் கோழிக் கறி விற்பனை 34.5 லட்சம் டன்! அதாவது ஆண்டுதோறும் சுமார் 3 லட்சம் டன் கோழிக் கறி விற்பனை கூடுகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு, கோழிக் கறிக் கடைகள், சில்லி சிக்கன் தள்ளுவண்டிக் கடைகள் மிகமிகக் குறைவு. ஆனால், இப்போது ஒவ்வொரு தெருமுனையிலும் சில்லி சிக்கன் கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.
அமெரிக்கா தனது கோழிக் கறியைக் கொண்டு வந்து இந்தியாவில் திணித்தால், இந்தியாவின் உள்ளூர் கோழிக் கறி வர்த்தகம் 40% பாதிக்கப்படும் என்று கணிக்கிறார்கள். இந்தியாவில் தற்போது சராசரியாக ஆண்டுக்கு ரூ.50,000 கோடி கோழிக் கறி வர்த்தகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் அதிக அளவு கோழிக் கறி உற்பத்தி செய்யும் மாநிலங்கள் ஆந்திரமும், தெலங்கானாவும்தான். இங்கே விவசாயத்தின் ஒரு பகுதியாக கோழிப் பண்ணையும் பராமரிக்கப்படுகிறது.
அமெரிக்கர்களைப் பொருத்தவரை கோழிக் கால் என்பது தேவையற்ற மாமிசப் பகுதி. அவர்கள் விரும்பிச் சாப்பிடுவது மார்புக் கறி (பிரெஸ்ட் பீஸ்) மட்டுமே. ஆனால், இந்தியாவில் "லெக் பீஸ்' என்கிற கோழிக் கால் விலை அதிகம். அமெரிக்காவில் அது வெறும் மாமிசக் கழிவு. ஆகவே, இந்தியாவில் என்னதான் வரி விதிப்பு இருந்தாலும், "லெக் பீஸ்' அனைத்தையும் இந்தியாவில் கொண்டு வந்து தள்ளுவதென்பது அமெரிக்காவைப் பொருத்தவரை, குப்பையில் கொட்டுவதை இந்தியாவில் கொட்டிக் காசாக்குவோம் என்பதுதான். இந்தியாவில் கோழிக் கால் மட்டுமே கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டால், அதே கோழிக் கால் கறியை கிலோ ரூ.50 அளவுக்கு இந்தியாவில் விற்பனை செய்ய அமெரிக்காவால் முடியும்.
கறிக் கோழி உற்பத்தியாளர்கள் வெளியில் சொல்ல முடியாமல் உள்ளேயே நினைத்து மருகும் விவகாரம்- அமெரிக்கக் கோழிக் காலுடன் இந்தியக் கோழிக் கால் போட்டி போட முடியாது என்பதுதான். அதற்கு வெறும் விலை மட்டுமே காரணம் அல்ல.
அமெரிக்காவில் கோழி வளர்ப்பு, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கண்காணிப்பில் இருக்கிறது. இந்தியாவில், அப்படியல்ல. கறிக் கோழி சீக்கிரமே எடை கூட வேண்டும் என்பதற்காக ஹார்மோன்களை ஊசி மூலமும், தீவனத்தில் கலந்தும் கொடுப்பது இங்கே பரவலான நடைமுறை. இதனால், உயர் நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்கள் அனைவரும் அமெரிக்க "லெக் பீஸ்' சாப்பிடவே விரும்புவார்கள். அதற்கு அவர்கள் விலை அதிகம் கொடுக்கவும் தயங்கமாட்டார்கள்.
இப்போதே சங்கிலித் தொடர் சில்லறை விற்பனைக் கூடங்கள் அனைத்தும் அமெரிக்காவின் லெக் பீஸýக்கு தயாராகிவிட்டன. இந்திய கறிக் கோழி விற்பனையாளர்கள் தங்கள் சந்தையை நடுத்தர மற்றும் ஏழைகளின் பக்கம் திருப்பியாக வேண்டும். இங்கே அதிக விலை, அதிக லாபம் சாத்தியமில்லை.
இந்தியாவுக்கு முழுக் கோழியை மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று அமெரிக்காவுக்கு நிபந்தனை போடலாம். வெட்டப்பட்ட கோழிக் கறி என்றால் (அதாவது லெக் பீஸ்) அதற்கு இரட்டிப்பு வரி போடுங்கள், திணிப்புக்கு எதிரான (ஆன்ட்டி டம்பிங்) வரி விதிப்பு முறைகளைக் கையாளுங்கள் என்று அரசுக்கு இந்திய கோழிக் கறி உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். உலக வர்த்தக விதிப்படி, ஆறு மாதங்களுக்கு மேலாக குளிர்பதன அறையில் இருந்த மாமிசங்களை இந்தியாவில் திணிக்கக் கூடாது என்று இந்தியா தடை விதிக்க முடியும். ஆனால், இவை ஆறு மாதங்களாகக் குளிர்பதன அறையில் இருந்தவை என்பதை நிரூபிப்பது மிகவும் அரிது. இந்தக் கோரிக்கைகளில் எது சாத்தியமாகும், அமெரிக்கா தனது வர்த்தக உத்தியை எவ்வாறு தகவமைக்கும் என்பது இன்னும் வெளிப்படையாகத் தெரியவில்லை.
உலக வர்த்தக அமைப்பில் அங்கம் வகிப்பதாலும், இந்தியா- அமெரிக்கா இடையே பரஸ்பர வணிக ஒப்பந்தங்கள் இருப்பதாலும், மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா கட்டுப்பட்டே நடக்க வேண்டும். அதேவேளையில், இந்திய கோழிக் கறி உற்பத்தியாளர்களின் நலனையும், விவசாயிகள் நலனையும் பாதுகாக்கவும் வேண்டும். என்ன செய்யப் போகிறோம் நாம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...