நிகழாண்டில் பருவ மழை மிகக் குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. பெய்ய வேண்டிய மழையளவில் 12% குறைவாக மழை பெய்யும் என்பதே அவர்களது கணிப்பு. இந்தக் கணிப்பு உண்மையாக இருக்கும்பட்சத்தில், 1950 முதலாக இந்தியா எதிர்கொள்ள நேரிட்ட வறட்சிகளில் இது 12-ஆவது வறட்சியாக இருக்கும்.
முந்தைய காலகட்டங்களில் வானிலை மையத்தின் கணிப்புகள் பலவும் தவறாகிப் போனதுண்டு. ஆனால், தற்போது செயற்கைக்கோள் மூலம் மிகத் துல்லியமாக புவிக்கோளத்தின் மாற்றங்களைக் கணிக்க முடிகிறது என்பதால், நிகழாண்டில் பருவ மழை 12% குறையும் என்ற கணிப்பு பொய்ப்பது அரிது.
அனல் காற்றால் சுமார் 2,000 பேர் இறந்து போனதாலும், கேரளத்தில் தொடங்க வேண்டிய தென்மேற்குப் பருவ மழை சுமார் ஒரு வாரம் தள்ளிப் போகிறது என்பதாலும் மட்டுமே இத்தகைய மழைக் குறைவு, வறட்சி கணிக்கப்படவில்லை. புவிவெப்ப மாறுபாடும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. மேற்சொன்ன காரணங்கள் மட்டுமே மழைக் குறைவுக்கான காரணங்கள் இல்லை என்றும், இவை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் வந்து கொண்டிருப்பதுதான் என்றும் சில வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதில் காரணம் எதுவான போதிலும், மழை வழக்கத்தைவிடக் குறைவாகத்தான் பெய்யும் என்பது மட்டும் உறுதி.
இந்த மழைக் குறைவு கணிப்பு குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் கூறும்போது, சென்ற ஆண்டும்கூட வழக்கத்தைவிட மழை குறைவாகப் பெய்தது என்றபோதிலும், வேளாண் உற்பத்தி 2% மட்டுமே குறைந்தது; இந்த ஆண்டு போதுமான உணவுத் தானியங்கள், விதைகள் கையிருப்பில் உள்ளன; ஆகவே, மழைக் குறைவு பற்றி அச்சப்படத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மழைக் குறைவு அல்லது வறட்சி ஏற்படும்போது விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும். குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும். இந்த இரண்டையும் ஓர் அரசு சமாளித்துவிட முடியும் என்றால், அந்த வறட்சியை வலியின்றிக் கடந்துவிட முடியும். அதற்கான முன்னேற்பாடுகளை இப்போதே மத்திய அரசும், மாநில அரசுகளும் மேற்கொண்டால்தான் வரவிருக்கும் வறட்சியைச் சமாளிக்க இயலும்.
வேளாண்மையைப் பொருத்தவரை, ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டுவதில் ஆர்வம் காட்டாமல், விவசாயிகள் ஏமாற்றமடையாத வகையில், வறட்சியைத் தாங்கும் பயிர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தர வலியுறுத்த வேண்டும். பயிர்க் காப்பீடு, குறுகியகால சாகுபடி ஆகியவற்றை ஊக்கப்படுத்தி சொட்டுநீர்ப் பாசன முறைகளுக்கு முன்னெப்போதையும்விட தற்போது அதிகக் கவனம் தர வேண்டும்.
இஸ்ரேல் போன்ற நாடுகளில் மிகக் குறைந்த அளவு பாசன நீரில் நிறைவான சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்து இந்திய வேளாண் அலுவலர்கள் பல குழுக்களாக நேரில் போய்ப் பார்த்து வந்தபோதிலும், அதன் தாக்கம் விவசாயிகளிடம் பரவலாகச் சென்று சேரவில்லை. இப்போதாகிலும் அத்தகைய பாசன நீர் மேலாண்மை குறித்த நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டுபோய்ச் சேர்த்து, அவரவர் பகுதியில், நிலத்தடியில் கிடைக்கும் நீரை எவ்வாறு முழுமையாக வேளாண்மைக்குப் பயன்படுத்தி, வறட்சியின் தீவிரத்தைக் குறைக்க முடியும் என்பதை விளக்குவது அவசியம்.
வறட்சிக் காலங்களில், அன்றாட சமையலுக்கான காய்கறிகளின் விலை அதிகரிப்பது இயல்பு. அதிக நீரை உறிஞ்சும் காய்கறிகளுக்கு முக்கியத்துவம் தராமல், அவற்றை எந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதால் சாதாரண விலைக்குக் கிடைக்கச் செய்ய முடியும் என்பதை ஆலோசித்து அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினால் காய், கனிகளின் விலைகள் மிக அதிகமாக உயராமல் கொஞ்சம் கட்டுக்குள் வைக்கலாம்.
இன்றைய போக்குவரத்து வசதிகள் காரணமாக, வறட்சியால் ஏற்படும் உணவுத் தட்டுப்பாட்டை நீக்கிவிட அல்லது கடுமையைக் குறைத்துவிட முடியும். தண்ணீர்த் தட்டுப்பாட்டைப் போக்குவது மிகவும் அரிதானது. மாநில அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் குடிநீர் ஆதாரங்களையும், நிலத்தடி நீர்வளத்தையும் கண்டறிந்து, குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்கத் தயாராக வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், எந்த அளவுக்கு மழை பெய்யும்போது எங்கெல்லாம் நிலத்தடி நீர் உயர்கிறது, ஏரி குளங்களில் (நில மேற்பரப்பில்) தேங்கும் நீர் எவ்வளவு என்பது குறித்த புள்ளிவிவரமும், மழை குறையும்போது எந்தெந்தக் குளம், ஏரிகள் காய்ந்துபோகின்றன, எந்தப் பகுதியில் கடும் வறட்சியிலும் நீர் வற்றாமல் தங்குகிறது போன்ற புள்ளிவிவரங்களும் மக்களிடம் பேச்சுவழக்கில், அனுபவத்தால் இருக்கிறதே தவிர, மாவட்ட நிர்வாகத்திடம் ஆவணமாக இல்லை.
திருநெல்வேலி கெசட்டியர் தயாரித்த ஆங்கிலேயர் எச். ஆர். பேட், எந்தெந்தப் பகுதியில் எந்த அளவு மழை பெய்தால் எந்தெந்த சிற்றாறுகளில் எவ்வளவு வெள்ளம் வரும், தாமிரவருணியில் எந்த அளவு வெள்ளம் வரும் என்று பதிவு செய்திருந்தார். ஆனால், இப்போது ஆக்கிரமிப்புகளில் நில அமைப்பு முற்றிலும் மாறிப்போனதால் அந்தப் பதிவுகள் இன்று பொருந்தாதவையாக மாறிவிட்டன.
ஆகவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்த அளவு மழை பெய்தால் என்னென்ன மாற்றங்கள் நிலத்தின் மேற்பரப்பிலும், நிலத்தடியிலும் ஏற்படுகிறது என்பதையும், வேளாண்மையில் என்ன மாற்றம் நேரிட்டது என்பதையும் ஆண்டுதோறும் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இன்று நேர்ந்துள்ளது. இதற்காக வானிலை, நீர் மேலாண்மை வல்லுநர்களைக் கொண்டதாக தனித் துறை அமைக்கப்படுதல் வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

