கல்லூரிகளில் அரசியல் புகுவதும், மாணவர்கள் அரசியலுக்கு வருவதும் தமிழ்நாட்டுக்குப் புதிது அல்ல. 1965-இல் ஹிந்தி எதிர்ப்பு மாணவர்கள் போராட்டக் குழு உருவானதும், தமிழ்நாடு முழுவதிலும் அந்தப் போராட்டத்தால் கல்லூரி வளாகங்கள் ரணகளப்பட்டதும், சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மூடப்பட்டதும் தமிழக வரலாற்றில் மறக்க முடியாத மைல் கற்கள்.
அன்றைய தினம் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு தலைமை ஏற்ற மாணவர்கள் பலரும் அரசியலில் மிக முக்கியத் தலைவர்களாகவும், சிறந்த ஆளுமைகளாகவும் மாறினர். அதன் பிறகு, தமிழ்நாட்டில் அத்தகைய மாணவர் போராட்டம் என்பது ஏற்படவே இல்லை. தமிழ்நாட்டில் வெவ்வேறு காரணங்களுக்காக ஒரு சில அமைப்புகளால் உருவாகும் உணர்வுப்பூர்வமான மாணவர் போராட்டங்கள் பலவும் சில நாள்களிலேயே தணிந்து போவதைக் காண்கிறோம்.
இதற்கு இரண்டு காரணங்கள். போராட்டத்துக்காக முன்வைக்கப்படும் காரணம் ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தின் பெரும் பகுதியும், இது அநீதி என்கிற உணர்வுத் தீயை மூட்டவல்லதாக இல்லை. இன்னொரு காரணம், இன்று சமூக அக்கறையைக் காட்டிலும், நல்ல வேலை, நல்ல வாழ்க்கை என்ற இலக்கே மாணவர்களிடம் முன்னுரிமை பெறுகிறது என்பது.
தற்போது சென்னை இந்திய தொழில்நுட்பக் கல்லூரி (ஐஐடி-எம்) வளாகத்தில் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் (ஏபிஎஸ்சி) விவகாரம்கூட, அந்தக் கல்லூரி வளாகத்தோடே நின்று போனதற்கும் மேற்சொன்னவையே காரணம். இவர்கள் கோரிக்கையில் போதுமான நியாயம் இல்லை. சில ஆங்கிலப் பத்திரிகைகளும் சில தனியார் தொலைக்காட்சிகளும், இந்த மாணவர்களுக்கு ஆதரவாக நின்றபோதிலும்கூட இந்தப் போராட்டம் அந்த வளாகத்தைவிட்டுத் தாண்டவில்லை. பல்வேறு கட்சிகள் இந்த விவகாரத்தை அரசியலாக்கப் பார்த்த போதிலும்கூட, மதுரை போன்ற சில ஊர்களில் இந்த மாணவர்களுக்கு ஆதரவாக சில கட்சிகள் போராட்டம் நடத்தியபோதிலும்கூட, இது குறித்து மற்ற கல்லூரி மாணவர்கள் தீவிரம் கொள்ளவில்லை.
ஏன் தமிழக மாணவர்கள் இதில் கோபம் கொள்ளவில்லை என்கிற கேள்விக்கான விடைக்கு பாரதியாரின் "மாஜினியின் பிரதிக்கினை' வரிகளை மீள்திருப்புதல் வேண்டும்: .....தீயன புரிதல், முறைதவிர் உடைமை, செம்மைதீர் அரசியல் அநீதி ஆயவற்றென் நெஞ்சு இயற்கையின் எய்தும் அரும்பகை அதன் மிசை ஆணை...."நெஞ்சு இயற்கையின் எய்தும் அரும்பகை'-அது தற்போதைய ஐஐடி-எம் போராட்டத்தில் இல்லை என்பதுதான் உண்மை.
சென்னை ஐஐடி மாணவர்களில் சிலர் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தொடங்க விழைகிறார்கள். கல்லூரி நிர்வாகம் அதற்கு அனுமதி அளிக்கிறது. அவர்கள் கல்லூரி வளாகத்தில் இயங்கலாம், நிகழ்ச்சிகள் நடத்தலாம், கூட்டம் தொடர்பான அழைப்புகளை அறிவிப்புப் பலகையில் பொருத்தலாம், கணினி வழியாக மாணவர்களுக்குத் தகவல்களைப் பரிமாறலாம் என அனுமதிக்கும் கல்லூரி நிர்வாகம், கல்லூரியின் பொது நிபந்தனைகளுக்கு உள்பட்டு என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்குகிறது.
இருப்பினும், பாஜக அரசின் முதலாம் ஆண்டுக் கொண்டாட்டத்தின்போது இந்த மாணவர் அமைப்பு பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து துண்டறிக்கை வெளியிடுகிறது. இதன் பிரதி தில்லிக்கும் போய்ச் சேருகிறது. இதுகுறித்து தில்லியிலிருந்து நிர்வாகத்துக்கு விளக்கம் கேட்டு கடிதம் வந்தபோது, அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட நிர்வாகிகளிடம் இதற்கு விளக்கம் கேட்கப்படுகிறது. ஏன் கல்லூரியின் அனுமதியின்றி, கல்லூரியின் பெயரைப் பயன்படுத்தி இத்தகைய அறிக்கை வெளியானது என்று காரணம் கேட்கப்படுகிறது. சரியான விளக்கம் தரும்வரை தாற்காலிகமாக அனுமதி நிறுத்தி வைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
நிச்சயமாக இது அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்துக்கான தடை அல்ல. அந்தக் கல்லூரி வளாகத்துப் பொருள்களை அவர்கள் தங்கள் நோக்கத்துக்காகத் தாற்காலிகமாகப் பயன்படுத்த இயலாது. அவ்வளவுதான்.
அதே அறிக்கையை அவர்கள் பல ஆயிரம் அச்சிட்டு ஊர் முழுவதும் விநியோகிப்பதில் சென்னை ஐஐடி-க்கு ஆட்சேபம் இருக்க முடியாது. அந்த அறிக்கையில் சென்னை ஐஐடி மாணவர்கள் என்பதைத் தவிர்த்து, வெறுமனே அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் என்று போட்டுக் கொள்ளலாம் என்பதே ஐஐடி சொல்லும் தாற்காலிக அனுமதி நிறுத்தத்துக்கு விளக்கம். மாணவர்கள் ஓர் அரசுக்கு எதிராகக் கருத்து சொல்லவோ அல்லது பிரதமரை விமர்சிக்கவோ தடையே கிடையாது. தாராளமாகச் செய்யலாம். ஆனால், அரசு நிறுவனமாகிய ஐஐடி பெயரை இதில் இழுக்காதீர்கள் என்றுதான் அவர்கள் சொல்கிறார்கள்.
கல்லூரி நிர்வாகம் போடும் "வட்டத்துக்குள்' நின்று வாள் வீசுவதுதான் திறமை. அதைத்தான் அன்று ஹிந்தியை எதிர்த்த மாணவர்கள் செய்தார்கள். இதே வழிமுறையை அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டமும் செய்திருக்கலாம். அதை விட்டுவிட்டு, கல்லூரி நிர்வாகம் விளக்கம் கேட்டுக் கடிதம் எழுதியதையும், விளக்கம் வரும் வரை தாற்காலிகமாக அனுமதி நிறுத்தப்பட்டிருப்பதையும், ஏதோ கருத்துச் சுதந்திரத்துக்குப் போடப்படும் தடை என்பதுபோல பிரச்னையைத் திசை திருப்பி, அதை அரசியலாக்க முயல்வது, அவலை நினைத்து உரலை இடிக்கும் பேதைமை. ஊடகங்களுக்கு அடுத்தப் பிரச்னை கிடைத்துவிட்டால் இதைக் கை கழுவி விடும். அதுவரை, நேரம் போகாமல் தவிக்கும் ஒரு சில அரசியல்வாதிகளுக்குப் பொழுதுபோகும், அவ்வளவே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

