மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

நோக்கம் திசை திரும்பலாகாது!

நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களில் ஒன்றான மேகி நூடுல்ஸ் தற்போது

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:39 am

ஆசிரியர்

நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களில் ஒன்றான மேகி நூடுல்ஸ் தற்போது இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் உணவுக் கலப்படத் தடுப்புப் பிரிவு இந்த மேகி நூடுல்ஸ் பொட்டலங்கள் சிலவற்றை ஆய்வு செய்தபோது அதில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக காரீயம், அஜினோமோட்டோ உப்பு (எம்.எஸ்.ஜி. எனப்படும் மோனோசோடியம் குளுடாமேட்) இருப்பதாகக் கண்டறியப்பட்டு, அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 ஆனால், உத்தரப் பிரதேச மாநில அரசின் ஆய்வுக்கூட மதிப்பீடுகள் குறித்து மறுஆய்வு செய்ய இந்த மாதிரிகள் அனைத்தும், இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையத்துக்கு (எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.) அனுப்பப்பட்டுள்ளன. அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி மத்திய அரசு தீர்மானிக்கும்.
 மேகி நூடுல்ஸ் - ஆய்வு செய்யப்பட்டதில் காரீயத்தின் (லெட்) அளவு 17.2 பிபிஎம் (10 லட்சம் துகள்களில் 17.2) என்ற அளவில் இருந்ததாகவும், இதன் அனுமதிக்கப்பட்ட அளவு 2.5 பிபிஎம் மட்டுமே என்றும் உத்தரப் பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. அதேபோன்று, அஜினோமோட்டோ அளவும் அதிகமாக இருப்பதாகக் கூறியுள்ளது.
 காரீயம், அஜினோமோட்டோ உப்பு இரண்டுமே உடல் நலத்துக்குக் கேடானவை. இவை அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கும் உணவுகளைச் சாப்பிடுவோருக்கு இன்சுலின் உற்பத்தி குறைந்து சர்க்கரை நோய் ஏற்படுதல், இந்த உப்புகளை வெளியேற்ற முடியாத நிலையில் இவை சிறுநீரகத்தில் கற்களாகப் படிந்து பாதிப்பை ஏற்படுத்துதல் ஆகிய பின்விளைவுகள் ஏற்படுகின்றன. சில்லி சிக்கன், பஜ்ஜி மசாலா, சூப் ஆகிய எல்லாவற்றிலும் அஜினோமோட்டோ உப்பு இருக்கிறது.
 தற்போது நெஸ்லே நிறுவனம் மற்ற நாடுகளில் தயாரிக்கும் நூடுல்ஸில் இத்தகைய அளவு மீறல் இல்லை என்பது உறுதி. இதனைக் குறிப்பிடும் நெஸ்லே நிறுவனம், நாங்கள் காரீயத்தைச் சேர்ப்பதில்லை. நூடுல்ஸ் தயாரிக்கப் பயன்படும் அடிப்படைத் தானியங்களை இந்தியாவில்தான் கொள்முதல் செய்கிறோம். ஆகவே, அவற்றின் சாகுபடி முறை காரணமாக, அந்த தானியங்களில் காரீயம் அளவு அதிகமாக இருக்கலாம். மேலும், இந்தியாவில் உணவுப் பொருள்களில் எந்த அளவுக்கு அஜினோமோட்டோ பயன்படுத்தப்படுகிறதோ அதே அளவுக்குத்தான் நாங்களும் பயன்படுத்துகிறோம் என்று விளக்கம் அளித்திருக்கிறது.
 நெஸ்லே சொல்வதைப் போல, இந்தியாவில் விளையும் தானியங்களில் காரீயம் அளவு அதிகமாக இருப்பது உண்மையென்றால், அது இந்தியர் அனைவரது உடல் நலத்துக்கும் ஆபத்தானது. நெஸ்லே சொல்லும் கருத்து உண்மைதானா என்பதைக் கண்டறிவதற்குத்தான் இந்திய அரசு முன்னுரிமை தர வேண்டும். அதேபோன்று, இந்தியாவில் தயாராகும் எல்லா வகையான பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் அஜினோமோட்டோ எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டிய பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது.
 இத்தகைய விரிவும் ஆழமுமான செயல்பாடுகளில் ஈடுபடாமல், மேகி நூடுல்ஸ் நிறுவனத்தின் மீதும் அதன் விளம்பரத் தூதுவர்களான அமிதாப் பச்சன், பிரீத்தி ஜிந்தா, மாதுரி தீட்சித் ஆகியோர் மீதும், விளம்பரங்களை வெளியிட்ட நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் பாஸ்வான் எச்சரிக்கை விடுப்பது, உணவுக் கலப்படம் மீதான அக்கறையிலிருந்து இப்பிரச்னையை வேறு தளத்துக்குக் கொண்டு சென்றுவிடும்.
 உணவுக் கலப்படம் குறித்தும், மக்களின் உடல்நலம் குறித்தும் உண்மையான அக்கறை இருக்குமானால், அரசு செய்ய வேண்டியது என்னவெனில், இந்தியாவில் தயாராகும் எல்லா உணவுப் பொருள்களிலும் எந்த அளவுக்கு வேதிப் பொருள்கள் இருக்கலாம் என்கின்ற அளவை மறுஆய்வுக்கு உள்படுத்தி, அளவை நிர்ணயிப்பதும், அதை நிறுவனங்கள் கடைப்பிடிக்கின்றனவா என்பதைத் தொடர்ந்து கண்காணிப்பதும்தான். அதைவிடுத்து, விளம்பரத் தூதுவர்கள், விளம்பரத்தை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை என்பது வெறும் அலட்டல். சட்டத்தின் முன் இவை செல்லுபடியாகாது.
 விளம்பரத்தில் தோன்றி ஒரு பசையைத் தடவினால் முகம் வெள்ளையாகும் என்கிறார் ஒரு பெண், ஒரேயொரு சோப்பு பத்து விதமான தோல் நோய்களை வீட்டுக்குள் நுழையாமல் தடுக்கும் என்கிறார் மற்றொரு பெண். வழுக்கைத் தலையில் முடி வளர்வதாக ஒரு விளம்பரம் விளக்குகிறது. ஒரு தைல விளம்பரம் தலைமுடி கொட்டவே கொட்டாது என்று உறுதி கூறுகிறது. ஒரு பற்பசை பல்நோய் அனைத்தையும் விடுவித்துவிடுகிறது என்கிறார் ஒரு நடிகர். ஒரு கல்லூரியில் படித்தால் உடனே வேலை என்கிறார் ஒரு நடிகை. இதற்கெல்லாம் ஒரு படி மேலாக, ஒரு மாத்திரையைக் கொடுத்தால் கணவன் யயாதி ஆகிவிடுவதாக ஒரு பெண் நம்பச் செய்கிறார்.
 இவை அனைத்தும் தடை செய்யப்படாமல் நடந்து கொண்டிருக்கும்போது, நூடுல்ஸ் விளம்பரத்துக்காக மட்டும் உத்தரப் பிரதேச மாநில அரசு ஆவேசப்படும்போது, அதிலும் குறிப்பாக நெஸ்லே இந்தியா நிறுவனம் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தது என்பதையும் பணம் வைத்திருக்கும் வெளிநாட்டவர் பெயரைக் கொஞ்சம் கொஞ்சமாக சுவிட்சர்லாந்து அரசு தற்போது அறிவித்து வருவதையும் இணைத்துப் பார்க்கும்போது, இந்த விவகாரம் உணவுக் கலப்படத்தின் மீதான அக்கறை என்பதைத் தாண்டி வேறு எங்கோ கொண்டுபோய்விடும் ஆபத்து இருக்கிறது.
 ஆகவே, உணவுக் கலப்பட விவகாரத்தை இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் கொண்டு செல்ல வேண்டும். வெறுமனே நூடுல்ஸ் சிக்கலில் மட்டுமே தேங்கி நிற்கக் கூடாது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.