திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கணிப்பும் எதிர்ப்பும்!

தேர்தல் நெருங்கும்போதெல்லாம் கருத்துக் கணிப்பு பற்றிய விவாதமும் தொடங்கிவிடுகிறது. "கருத்துக் கணிப்புகளை அனுமதிப்பதா வேண்டாமா என்று எல்லா தேசிய கட்சிகளிடமும் ஆலோசனை கேட்டு கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி கடிதம் அனுப்பியது மத்திய தேர்தல் ஆணையம்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:41 pm

ஆசிரியர்

தேர்தல் நெருங்கும்போதெல்லாம் கருத்துக் கணிப்பு பற்றிய விவாதமும் தொடங்கிவிடுகிறது. "கருத்துக் கணிப்புகளை அனுமதிப்பதா வேண்டாமா என்று எல்லா தேசிய கட்சிகளிடமும் ஆலோசனை கேட்டு கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி கடிதம் அனுப்பியது மத்திய தேர்தல் ஆணையம். முதலில் கருத்துக் கணிப்புக்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ் திடீரென்று தனது நிலையை மாற்றிக்கொண்டு, கருத்துக் கணிப்புகள் விஞ்ஞான ரீதியில் அமைவதில்லை என்றும், வெளிப்படைத்தன்மை இல்லாதவையாக இருக்கின்றன என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறது.

ஐக்கிய ஜனதா தளம், சமாஜவாதி கட்சி, பகுஜன்சமாஜ் கட்சி, திமுக என்று பல்வேறு கட்சிகளும் கருத்துக் கணிப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் கருத்தை வழிமொழிந்திருக்கின்றன. பாரதிய ஜனதா தொடங்கி சில கட்சிகள் கருத்துக் கணிப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டிருக்கின்றன. வேடிக்கை என்னவென்றால் கருத்துக் கணிப்பு பற்றிய கருத்தை நமது அரசியல் கட்சிகள் அவ்வப்போது மாற்றியவண்ணம் இருந்திருக்கின்றன என்பதுதான்.

கருத்துக் கணிப்பு பிரச்னையில் 1999 தேர்தலின்போதே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. ஒட்டுமொத்தமாகக் கருத்துக் கணிப்பைத் தடைசெய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்குக் கிடையாது என்றும், வேண்டுமானால் தேர்தல் ஆணையம் கருத்துக் கணிப்புகளை முறைப்படுத்த சில வழிமுறைகளையும், விதிமுறைகளையும் வகுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தெளிவுபடுத்தியது. அதன் அடிப்படையில்தான், வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்புடன் கருத்துக் கணிப்புக்கும் வாக்குக் கணிப்புக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 

தேர்தல் முடிவுகளைக் கணிக்கும் கருத்துக் கணிப்பு, வாக்களிப்புக்கு பிறகு வெளியிடப்படும் வாக்குக் கணிப்பு இரண்டுமே கடந்த அரை நூற்றாண்டு காலமாக மேலை நாடுகளில் ஒரு அறிவுபூர்வ கலையாக உருப்பெற்றுவிட்டிருக்கிறது. உலகின் பல ஜனநாயகங்களிலும் கருத்துக் கணிப்புகளும், வாக்குக் கணிப்புகளும் தேர்தலின் அங்கமாகிவிட்டிருக்கின்றன.

ஆரம்பத்தில் அமெரிக்க பேஸ் பால் விளையாட்டு வீரர்கள் பற்றிய கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்த "நாடே சில்வர்' என்பவர் 2008-இல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் 50 மாநிலங்களில் 49 மாநிலங்களில் வெற்றி பெறுபவர்கள் இன்னார் என்று துல்லியமாகக் கருத்துக் கணிப்பு வெளியிட்டார். கடந்த 2012 அமெரிக்க அதிபர் தேர்தலில் இவரது கணிப்புப்படி 50-க்கு 50 மாநிலங்களிலும் ஆளுநர்கள் வெற்றி பெற்றனர். மக்கள் மனநிலையைத் துல்லியமாகக் கணித்து வெற்றி தோல்வியை அறிவிக்க முடியும் என்பதை "நாடே சில்வர்' நிரூபித்திருக்கிறார்.

மக்கள்தொகை அதிகமுள்ள நாடுகளில் கருத்துக் கணிப்புகள் துல்லியமாக இருக்குமா என்கிற ஐயப்பாடு எழுப்பப்படுகிறது. இந்தியாவைப் பொருத்தவரை எல்லா தேர்தல்களிலும், பரவலாக மாநிலம் தழுவிய அல்லது நாடு தழுவிய கருத்து நிலவுகிறது என்கிறார்கள் தேர்தல் கணிப்பாளர்கள். வாக்காளர்கள் மத்தியில் வெளிப்படைத்தன்மை குறைவாகவே இருந்தாலும்கூட, ஏறத்தாழ இருபது விழுக்காடு தொகுதிகளில் பரவலாக எடுக்கப்படும் கருத்துகள், அநேகமாக சரியான கருத்துக் கணிப்புக்கு உதவுகின்றன என்கிறார்கள்.

கருத்துக் கணிப்புகள் வாக்காளர்களைத் திசைதிருப்பவும், ஏதாவது ஒரு கட்சிக்குச் சாதகமாகவும் பயன்படுத்தப்படலாம் என்பதுதான் கருத்துக் கணிப்புகளுக்கு எதிரான வாதம். அப்படிப் பார்த்தால், ஊடகங்களும் பத்திரிகைகளும்கூட ஏதாவது ஒரு கட்சிக்குச் சாதகமாகவோ, பாதகமாகவோ செயல்படுகின்றன என்பதுதானே உண்மை? அதற்காக பத்திரிகைகளும் ஊடகங்களும் தேர்தல் நேரத்தில் தடைசெய்யப்பட வேண்டும் என்றால் எப்படி? அது கருத்துத் திணிப்பாகவேகூட இருந்தாலும், முடிவெடுக்கும் உரிமை வாக்காளருக்கு என்று விட்டுவிடுவதுதானே முறை.

தவறான வாக்குறுதிகளாலும், வாக்காளர்களை விலைபேசும் கீழ்த்தரமான நடவடிக்கைகளாலும் மக்களாட்சியைக் கேலிக்கூத்தாக்க முற்படுபவர்கள் கருத்துக் கணிப்புகளாலும், ஊடகச் செய்திகளாலும் வாக்காளர்கள் திசைதிருப்பப்பட்டு விடுவார்கள் என்று கவலைப்படுவது வேடிக்கையாக இருக்கிறது. பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி போன்ற எல்லா மேலைநாடுகளிலும் பரவலாக அனுமதிக்கப்பட்டிருக்கும் கருத்துக் கணிப்புகளை உலகமயம் பற்றியும், சந்தைப் பொருளாதாரம் பற்றியும் பேசும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதுதான் நகைமுரண். ஒன்று நன்றாகவே புரிகிறது. காங்கிரஸ் பயந்துபோய் இருக்கிறது என்பதுதான் அது!

இந்த விவாதமே தேவையில்லாதது. கருத்துக் கணிப்புக்குத் தடைவிதிப்பது என்பது, நமக்கு அரசியல் சாசனச் சட்டப் பிரிவு 19(1) (அ) பிரிவின்படி தரப்பட்டிருக்கும் பேச்சுரிமைக்கும், கருத்துரிமைக்கும் எதிரானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.