4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இனிப்பல்ல, கசப்பு!

சர்க்கரைத் தொழிலில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பாக ஆலோசனை வழங்க மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட ரங்கராஜன் குழு, ஒரு வாரத்துக்கு முன்பு தனது அறிக்கையைக் கொடுத்தது.

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:17 pm

ஆசிரியர்

சர்க்கரைத் தொழிலில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பாக ஆலோசனை வழங்க மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட ரங்கராஜன் குழு, ஒரு வாரத்துக்கு முன்பு தனது அறிக்கையைக் கொடுத்தது. சர்க்கரைத் தொழிலில் தற்போது நிலவும் எல்லாக் கட்டுப்பாடுகளையும் தளர்த்த வேண்டும் என்பதுதான் குழுவின் பரிந்துரை.

மாநில அரசு பரிந்துரை (எஸ்ஏபி) விலையை ரத்து செய்துவிட்டு, சர்க்கரை மற்றும் துணை உற்பத்திப் பொருள்களின் மதிப்பில் விவசாயிகளுக்கு பங்கு கிடைக்கச் செய்யலாம்; நியாயவிலைக் கடைகளுக்கு வழங்குவதற்காக ஒவ்வொரு ஆலையும் சந்தை விலையை விடக் குறைவாக அரசு நிர்ணயிக்கும் விலையில் சர்க்கரையை விற்க வேண்டும் என்கின்ற கடப்பாட்டை நீக்கிவிடலாம்; சணல் பைகளில்தான் சர்க்கரையை மூட்டை கட்ட வேண்டும் என்கின்ற நிபந்தனை தேவையில்லை; சர்க்கரை ஆலைகளுக்கான அரசு நிர்ணயிக்கும் முன்ஒதுக்கீட்டு கரும்புவயல் எல்லைகள் தேவையில்லை; இரு சர்க்கரை ஆலைகளுக்கு இடையே குறைந்தது 15 கிலோமீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை தேவையில்லை; எரிசாராயத்தை (மொலாசஸ்) வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்வதில் மாநில அரசுகள் தடை விதிக்கக்கூடாது; உள்நாட்டுச் சந்தையில் எவ்வளவு சர்க்கரையை (நான்-லெவி சுகர்) ஆலைகள் விற்கலாம் என்று மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அரசால் நிர்ணயிக்கப்படும் நடைமுறை தேவை இல்லை. இவையெல்லாம் ரங்கராஜன் குழுவின் பரிந்துரைகள்.

இந்தப் பரிந்துரைகளைப் பார்த்ததும் சர்க்கரை ஆலைகள் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்பு தெரிவித்துவிட்டன. இன்னும் விவசாயத் தரப்பில் இது பற்றி யாரும் பேசத் தொடங்கவில்லை. ரங்கராஜன் குழு பரிந்துரைகள் குறித்து மத்திய அமைச்சரவை விவாதித்து, ஜனவரியிலிருந்து இதை நடைமுறைப்படுத்தவுள்ளது.

இத்தனைக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுவிட்டால், சர்க்கரை ஆலைகளுக்கும் நன்மை, விவசாயிகளுக்கும் நன்மை, நுகர்வோருக்கும் நன்மை என்று சொல்கின்றது ரங்கராஜன் குழு அறிக்கை.

இருப்பினும், முதல் நபராக பாதிக்கப்படப்போவது நுகர்வோர்தான். நியாயவிலைக் கடையில் தற்போது கிலோ ரூ.13.50க்கு ஒரு கிலோ சர்க்கரை கிடைக்கிறது. இந்த நிலைமை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இருக்காது. சர்க்கரை ஆலைகளின் (லெவி சர்க்கரை) கடப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர், மாநில அரசே சர்க்கரை விலையைத் தீர்மானித்துக்கொள்ள அனுமதிக்கப்படும். வெளிச்சந்தை அளவுக்கு அதே விலை இல்லாவிட்டாலும், குறைந்தது ரூ.25 ஆகிலும் தர வேண்டியிருக்கும்.

இரண்டாவது அடி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு! தமிழ்நாட்டில் எல்லா தனியார் சர்க்கரை ஆலைகளும் பெரும் லாபத்தில் செயல்படும்போது, அரசாங்கத்தின் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மட்டும் நட்டத்தில் செயல்படுவது அனைவரும் அறிந்த உண்மை. குழு பரிந்துரை அமலுக்கு வந்தால், ஒரு விவசாயிகூடக் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு கொண்டுவந்து போட மாட்டார்.

ஒவ்வொரு கரும்பு ஆலைக்குமான கரும்புவயல்கள் ஒதுக்கீடு எல்லைகள் அகற்றப்பட்டால், தனியார் சர்க்கரை ஆலைகள் எந்தத் தொலைவில் இருந்தாலும் விவசாயியைக் கவர்ந்துவிடும், லாரி வாடகை, வெட்டுக்கூலியை தானே ஏற்று, கரும்பை எடுத்துச் சென்றுவிடும். கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் அரசுத்தனமான அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடியாது. நட்டம் அதிகரித்துக் கடைசியில் தனியாருக்கு அவை தாரை வார்க்கப்படும், அல்லது இழுத்து மூடப்படும்.

இரண்டு சர்க்கரை ஆலைகளுக்கு இடையே 15 கிலோமீட்டர் இடைவெளி வேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்பட்டுவிட்டால், அவ்வளவுதான். கூட்டுறவு சர்க்கரை ஆலை பக்கத்திலேயே தனியார் சர்க்கரை ஆலையை 3 மாதங்களில் நிறுவி, சிறப்பாக நடத்துவார்கள்.

மூன்றாவது அடி "குடிமகன்'களுக்கு! சர்க்கரை ஆலைகளின் எரிசாராயத்தைப் பெற்று மதுபானம் தயாரிப்பது மிகவும் செலவு குறைந்தது. தற்போது தமிழ்நாட்டில் எரிசாராயத்தை வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்ல தடை உள்ளது. ஆகவே எரிசாராயம் குறைந்த விலையில் தமிழகத்தில் கிடைக்கிறது. எரிசாராயத்தை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம் என்று மத்திய அரசு சட்டம் கொண்டுவந்தால், தமிழக அரசுக்கு சுங்க வரி கிடைக்கும். ஆனால் ஆலைகள் வைத்ததுதான் எரிசாராயத்தின் விலையாக இருக்கும். விளைவு? மதுபானத்தின் விலையைத் தமிழக அரசு கூட்டும்.

கடைசியாக, இந்தப் பரிந்துரையால் விவசாயி நன்மை அடைவாரா நட்டம் அடைவாரா என்பதுதான் கணிக்க முடியாததாக இருக்கிறது.

மத்திய அரசு அறிவிக்கும் கொள்முதல் விலையை மட்டும் விவசாயிகளுக்கு ஆலைகள் தந்தால் போதுமானது. அதன் பின்னர், சர்க்கரை மற்றும் துணை உற்பத்தியான எரிசாராயம், கரும்புச் சக்கை, சர்க்கரைக்கழிவுகள் ஆகியவற்றின் ஆலைக்கு வெளியிலான சந்தை மதிப்பை மாநில அரசு தீர்மானிக்கும். இந்த மதிப்பின்படி, விவசாயி கொடுத்த கரும்பின் சர்க்கரைத் திறனுக்கு ஏற்ப, 70% விவசாயிக்கும், 30% ஆலைக்கும் கிடைக்கும் என்கின்றது குழு பரிந்துரை. இந்த அணுகுமுறை விவசாயிகளைக் குழப்பும்.

எரிசாராயத்தின் அளவையும் கரும்புச் சக்கை அளவையும் ஆலைகள் குறைத்துக் காட்ட அதிக வாய்ப்பு உள்ளது. சர்க்கரைக்கழிவு என்பது சர்க்கரையை வெள்ளையாக மாற்றப் பயன்படுத்திய ரசாயனங்களின் கழிவு. அதை உரமாக மாற்றலாம் என்று சொல்கிறார்கள். ஆனால், அதற்குச் சந்தை இல்லை.

ஆலைகள் கரும்புச் சக்கைகளை எரித்து, மின்உற்பத்தி செய்து பயன்படுத்துகின்றன. இந்த மின்சாரத்தைத் தேவைக்குப்போக மீதியை மின்தொகுப்புக்கு விற்கலாம். இத்தனை விவகாரங்களையும் மாநில அரசு சரியாக மதிப்பிடும் என்று நம்ப முடியுமா? அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கைகோத்து விவசாயிகளின் நலனை பலி கொடுத்துத் தனியார் லாபம் கொழிக்க உதவ மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

சர்க்கரை பொதுமக்களையும், விவசாயிகளையும் தவிர ஏனையோருக்கு எல்லாம் இனிக்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.