லாபம் யாருக்கு?
அன்னிய நேரடி முதலீட்டை சில்லறை வணிகத்தில் மட்டுமன்றி எல்லாத் துறைகளிலும் அனுமதித்து, வாயில்களை அகலத் திறந்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


அன்னிய நேரடி முதலீட்டை சில்லறை வணிகத்தில் மட்டுமன்றி எல்லாத் துறைகளிலும் அனுமதித்து, வாயில்களை அகலத் திறந்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதில் மிகவும் ஆபத்தானதும், ஒருமுறைக்குப் பலமுறை யோசனை செய்ய வேண்டியதுமான ஓய்வூதியப் பிரிவிலும் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதித்திருப்பதுதான் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 49 விழுக்காடாக அதிகரிக்கும்போது, ஓய்வூதியப் பிரிவிலும் இதே அளவு உயர்த்தலாம் என்றும் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். இதைச் செய்யவும் செய்வார். சந்தேகமில்லை.
"முழுக்க நனைந்தபிறகு முக்காடு எதற்கு?' என்று எல்லாத் துறையிலும் அன்னிய முதலீடு, தனியார்மயம் வந்துவிட்டபிறகு ஓய்வூதியத்திலும் வந்தால் என்ன என்று கேட்கலாம். மற்ற துறைகளைப்போல, ஓய்வூதியத் துறையைக் கருதிவிடக்கூடாது, முடியாது.
ஒவ்வொரு துறையிலும் தனியார் மயம் அல்லது அன்னிய நேரடி முதலீட்டுக்கு வழியேற்படும்போது, அதனால் பாதிக்கப்படுவது அந்தந்தத் துறைசார்ந்த தொழிலாளர்கள் மட்டுமே. அத்துறையை நம்பியிருக்கும் வாடிக்கையாளர் அல்லது நுகர்வோர் பாதிக்கப்படுவது குறைவாகவே இருக்கும்.
உதாரணமாக, சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டைப் புகுத்தினால் பாதிக்கப்படப்போவது அந்த வணிகத்தில் ஈடுபட்டு வருவோர் மட்டுமே. அவர்கள் எண்ணிக்கையையும் நுகர்வோர் எண்ணிக்கையையும் ஒப்பிடும்போது, சிறுவணிகர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். ஆகவேதான், பன்னாட்டு நிறுவனங்கள் முதலில் நுகர்வோரைத் தமது சலுகைகளால் அதிகம் கவர்ந்து, சில்லறை வணிகர்களின் குரல்வளையை நெரித்து விடுகின்றன. அதன் பிறகு, நுகர்வோரைச் சுரண்டத் தொடங்குவர் என்பது வேறு விஷயம்.
இதேபோன்று, ஓய்வூதியப் பிரிவிலும் வாடிக்கையாளரை அல்லது சந்தாதாரரைத் தன்பக்கம் கவர்ந்திழுக்கத் தேவையான கவர்ச்சி ஓய்வூதியத் திட்டங்களை, இனி இந்தியாவில் அன்னிய நேரடி முதலீட்டுடன் களமிறங்கப்போகும் நிறுவனங்கள் முன்வைக்கும். ஆனால், இத்தகைய வாடிக்கையாளர்கள் தொழிலாளர்களும், நடுத்தர வருவாய்ப் பிரிவினரும் என்பதுதான் நம்மை யோசிக்கவும், பயப்படவும் வைக்கிறது. இவர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கப்போகும் நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் என்பதுதான் அந்த பயத்துக்குக் காரணம்.
தற்போது தொழிலாளர் வைப்புநிதி திட்டத்தில், "ஓய்வூதியத் திட்டம் 1995' அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம் ஒரு தொழிலாளரின் ஆயுள் முழுமைக்குமானது. அந்த நபர் இறக்க நேரிட்டால், அவரது குடும்பத்துக்கு ஓய்வூதியம் அல்லது 100 மாதங்களுக்கான ஓய்வூதியத்தின் மொத்தத் தொகை அளிக்கப்படும். இவை அனைத்தும் தொழிலாளரின் மாதச் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 8.33 விழுக்காடு தொகையிலிருந்து என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆனால், இந்தத் திட்டத்தை இதேபோன்று தனியார் நிறுவனங்கள் செயல்படுத்தாது. ஒன்று, சந்தாத் தொகையை அதிகம் கேட்கும்; அல்லது நிபந்தனைகளைக் கடுமையாக்கும்.
தற்போது இந்திய அரசின் தொழிலாளர் வைப்புநிதி திட்டத்தில் உள்ள மொத்த நிதி 3.26 லட்சம் கோடி ரூபாய். இந்த நிதியைப் பரஸ்பர நிதியில் போடுவதும், பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதும் முறையல்ல, முழுக்க முழுக்க அரசுத் திட்டங்களுக்காக மட்டுமே கடன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதன் காரணம், இந்த நிதி அனைத்தும் நட்டமாகவும், வாராக் கடனாகவும் மாறிப்போனால், தொழிலாளர் குடும்பங்கள் இந்தத் துன்பத்தைத் தாங்கும் சக்தி இல்லாதவை என்பதால்தான். ஆனால், தனியார் ஓய்வூதியத் திட்டங்களில், வசூலாகும் பணத்தை அவர்கள் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதில் அரசு கவனம் செலுத்தாது. அந்த நிறுவனங்கள் திவாலாகிப் போனால், முழுத் தொகையும் தொழிலாளர்களுக்குத் தரப்படமாட்டாது.
தொழிலாளர் வைப்புநிதிக்கு 9 விழுக்காடு வட்டி வழங்க வேண்டும் என்று போராடுவதும்கூட தொழிலாளிக்குப் பயன் கிடைக்க வேண்டும் என்பதால்தான். ஆனால், தனியார் ஓய்வூதிய நிறுவனங்கள் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப வட்டி விகிதத்தைக் குறைக்கும். அதற்கேற்ப ஓய்வூதியத்தின் அளவையும் குறைக்கும். இந்த பாதிப்புகளுக்குக் கூக்குரல் எழுந்தால், ஓய்வூதியம் சார்ந்த முதியோர் இல்லங்களைத் திறந்து, வெறும் சோறுபோட்டு ஆளை முடக்கிப்போடவும் சிறப்பான திட்டம் அறிவிப்பார்கள்.
தற்போது இந்தியத் தொழிலாளர் வைப்புநிதி அலுவலகத்தில் செயல்படாத கணக்குகளில் ரூ. 22,636 கோடி உள்ளது. அதாவது, மாதச் சந்தா செலுத்தப்படாமல் இருக்கும் கணக்குகள். ஒருவேளை அவர்கள் வேலை இழந்திருக்கலாம். அல்லது வேலைபார்த்த நிறுவனம் மூடப்பட்டிருக்கலாம். இனி அவர்கள் புதிய வேலை தேடித் தங்கள் கணக்கைத் தொடர்ந்தால்தான் இது "செயல்படும் கணக்காக' மாறும்.
அதேபோன்று, கேட்பாரில்லா நிதி ரூ. 4,000 கோடி இருக்கிறது. இவர்கள் 58 வயது பூர்த்தியானவர்கள். தங்கள் பணத்தை இவர்கள் கேட்டுப் பெறாததால், கேட்கத் தவறிவிட்டதால் கேட்பு இல்லாமல் கிடக்கும் பணம். இந்தப் பணத்துக்கும் வட்டி போடப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
இவ்வாறான, செயல்படா கணக்குகள், கேட்பு இல்லா கணக்குகள் அரசிடம் இருக்கும் வரை பத்திரமாக இருக்கும். அரசுத் திட்டங்களுக்குத்தான் இந்தப் பணம் பயன்படும்.
இதேபோல, செயல்படாத கணக்குகளும், கேட்பாரில்லாத நிதியும் இனி தனியார் ஓய்வூதிய நிறுவனங்களுக்குக் கிடைக்கப் போகின்றன. குறிப்பிட்ட ஆண்டுகளுக்குச் செயல்படாத கணக்குகள், கேட்பு இல்லா கணக்குகள் அனைத்தும் அப்படியே தனியார் நிறுவனங்களால் கபளீகரம் செய்யப்படப் போகிறது.
"ஆமாம், தனியார் ஓய்வூதிய நிறுவனங்களுக்கு அன்னிய முதலீட்டின் தேவை என்ன? அன்னிய முதலீடு இல்லாமல் தனியார் மயமாக்கினாலே போதாதா?' என்று கேள்வி கேட்காதீர்கள். வாய்ப்புக் கிடைத்தால், இந்தியாவையேகூட அன்னிய முதலீடு கிடைக்கும் என்றால் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துவிடுவார்கள் போலிருக்கிறது!
ஓய்வூதியத் துறையில் அன்னிய நேரடி முதலீடால் - அரசுக்கு - லாபமில்லை! தொழிலாளர்களுக்கு - லாபமில்லை!! ஆட்சியாளர்களுக்கு - தெரியாது!!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...