இயற்கை வளங்களை ஏலமுறையில்தான் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்தபோதே "2ஜி அலைக்கற்றையும் இயற்கை வளம்தான், இதை ஏலம் விடாதது குற்றமல்ல" என்ற மனு தாக்கல் செய்ய முயற்சி நடக்கும் என்பது எதிர்பார்த்ததுதான்.
மத்திய அரசைக் கொண்டே மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்ய திமுக நிர்பந்தம் செய்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதல்ல.
"2 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஏற்கெனவே மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டு, திரும்பப் பெறப்பட்ட மறுஆய்வு மனுவை மீண்டும் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்' என்று திமுகவின் செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருக்கும் திமுக, காங்கிரஸ் கட்சிக்கு தரும் நிர்பந்தமாகத்தான் இதை நாம் கருத முடியும்.
"முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை' என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது அரசின் கொள்கை முடிவு; இதில் நீதிமன்றம் தலையிடுவது அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்த மத்திய அரசு, குடியரசுத் தலைவர் மூலமாகவும் விளக்கம் கேட்க வைத்தது. குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்திற்கு மனு அளித்த பின்னர், தனது மறுஆய்வு மனுவை மத்திய அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது. இதற்குக் காரணம், குடியரசுத் தலைவரின் மனுவில் விளக்கம் கேட்டு இடம்பெற்றிருந்த 8 கேள்விகளில் மூன்று கேள்விகள் 2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பானவை.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், ஏலத்தில் மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது அந்த வழக்குக்கு மட்டுமே பொருந்தும்; இயற்கை வளம் எல்லாவற்றுக்கும் பொருந்தாது என்று கூறிய சாசன அமர்வு, குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்ட மனுவில் இடம்பெற்ற 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான 3 கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் நிராகரித்துவிட்டது.
இதற்கு நீதிபதிகள் கூறியுள்ள காரணம், மீதமுள்ள மூன்று கேள்விகளுக்கும் அரசியல் சாசன அமர்வு கருத்து வெளியிட்டால் அது அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு விவகாரத்தில் சில விளைவுகளை ஏற்படுத்தும். எனவே அந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்காமல் நிராகரிக்கிறோம் என்று கூறியுள்ளனர்.
இதன் பின்னரும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு உரிமங்கள் ரத்து தொடர்பான வழக்கில், திரும்பப் பெற்ற மறுஆய்வு மனுவை மத்திய அரசு மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும் என்று திமுக வலியுறுத்தக் காரணம் இருக்கிறது.
பொதுநலனையும் சட்டத்தையும் மீறுவதாக இருக்கும்பட்சத்தில் அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியும் என்று அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது. அதாவது, கொள்கை முடிவானது, மக்கள் நலனுக்குப் பாதிப்பு இல்லாமல் இருந்தால் நீதிமன்றம் தலையிடாது என்பதும் இதற்கு அர்த்தம்.
இப்போது திமுக-வின் வாதம் இதுதான்- 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு 1999-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவு. குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு செல்போன் சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக, அரசுக்கு அதிக வருவாய் குறித்து கவனம் செலுத்தவில்லை என்பதுதான் அது.
"நிலத்திலிருந்து நிலக்கரியை வெட்டியெடுத்தால் நிலக்கரி குறையும். எண்ணெய் எடுத்தால் எண்ணெய் வளம் குறையும். இதை ஒதுக்கீடு செய்ய ஏலம் மட்டுமே நடைமுறையாகக் கருத முடியாது என்கின்றது நீதிமன்றம். ஆனால், அலைக்கற்றை விண்வெளி விவகாரம். எவ்வளவு பயன்படுத்தினாலும் குறையாத இயற்கை வளம். இதனை ஏலத்தில்தான் விட வேண்டும் என்று சொல்வது என்ன நியாயம்?' என்று இப்போதே திமுகவினர் மேடைகளில் பேசத் தொடங்கிவிட்டனர்.
செல்போன்கள் பரவலாக இல்லாத காலத்தில் 4 மெகாஹெர்ட்ஸ் ரூ.1,680 கோடிக்கு ஒதுக்கப்பட்டால், செல்போன் பெருகிவிட்ட இந்நாளில் தற்போது ரூ.14,000 கோடிக்கு ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதே! முதலில் ஏற்பட்ட இழப்பு இப்போது ஈடு செய்யப்பட்டுள்ளதே?' என்றும் பேசத் தொடங்கியுள்ளனர்.
மக்களுக்காகக் குறைவான கட்டணம், அரசின் கொள்கை முடிவு எல்லாமும் சரி. உரிமம் பெற்ற நிறுவனங்கள் தொழில் தொடங்கும் முன்பாகவே பங்குகளை விற்றுப் பெரும் பணம் ஈட்டியுள்ளன என்பதும், சிலருக்கு வருவாய்க்கு மீறிய சொத்து உருவாகியிருப்பதும்தான் இந்த விவகாரத்தில் உள்ள பிரச்னை.
திமுக நிர்பந்திப்பதைப்போல மத்திய அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்தால், இந்த வழக்கு மேலும் சில மாதங்கள், சில ஆண்டுகள் நீடிக்கும். அல்லது அரசின் கொள்கை முடிவு சரிதான் என்று தீர்ப்பு ஏற்படுமாயின், அரசுக்கு இழப்பு என்பது வெறும் சிஏஜி-யின் ஊகம்தான் என்று ஆகிவிடும். இந்த ஊழலை நிரூபிக்க சிபிஐ போதுமான ஆதாரங்களை நீதிமன்றத்தில் அளிப்பதும் சந்தேகம்தான்.
"அலைக்கற்றையும் இயற்கைவளமே; முதலில் வந்தவருக்கு ஒதுக்கியது கொள்கை முடிவு; குறைந்த கட்டணத்தால் மக்கள் நன்மை பெற்றனர்; ஊழல் நிரூபிக்கப்படவே இல்லை என்பதுபோன்ற காரணங்களால் வழக்கு தள்ளுபடியாகும். இதற்கு வழிவகுக்கவே மீண்டும் மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோருகிறது திமுக.
2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாகப் பிரச்னையை இரண்டு பிரிவாக அணுக வேண்டும். ஏல முறையைக் கையாளாமல் முதலில் வந்தவருக்கு ஒதுக்கீடு என்கிற முறையில் அலைக்கற்றை ஒதுக்கீடைச் செய்ததால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு முதலாவது. குறைந்த விலைக்கு, முன் அனுபவம் இல்லாத புதிய நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்து, அவர்கள் செயல்படாமல் இன்னொரு நிறுவனத்திற்கு அதிக விலைக்கு அந்த உரிமத்தை விற்றுக் கொள்ளை லாபம் ஈட்ட உதவியது ஏன் என்பது இரண்டாவது.
முதலாவது மறு ஆய்வு மனுவால் தள்ளுபடி செய்யப்பட்டாலும், இரண்டாவது கேள்விக்கு என்ன பதில் என்பதுதான் விவகாரமே. சட்டத்தை வளைக்கப் பார்க்கிறார்களா, முறிக்கப் பார்க்கிறார்களா என்று தெரியவில்லை. "கூட்டணி' பலமாகவே இருக்கிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை

அடுக்குமாடி குடியிருப்புகளில் பாமக வேட்பாளா் பாலு பிரசாரம்!

தெற்கு லெபனானில் சிலுவை அவமதிப்பு: இஸ்ரேல் வீரருக்கு வலுக்கும் கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

