இந்த பேசாநோன்பு போராட்டம் தொடர்பான கேள்விகளுக்கு க.இரா.முத்துசாமி எழுதிக் கொடுத்த பதில்கள்.
கேள்வி: தங்களின் போராட்டத்துக்கு தூண்டுகோலாக அமைந்த விஷயம் எது?
பதில்: தாய்மொழிக் கல்வியால் நடக்கும் மோசடிகளும், தனியார் பள்ளிகளில் ஹிந்தி, சம்ஸ்கிருதம் போன்ற மொழிகள் திணிக்கப்படுவதுமாகும். மேலும், ரயில்வே, பொதுத்துறை, வங்கிப் பணிகளில் மற்ற மொழிகள் பயின்றவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தமிழ் மொழிக்கு கொடுக்கப்படாததுமாகும்.
கே: எந்த மொழிக்கும் பேச்சு, எழுத்து, படிப்பு என்ற 3 வடிவங்கள் உள்ள நிலையில் தாய் மொழியான தமிழைப் பேசவில்லை என்ற வருத்தத்தை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?
ப: தாய்மொழிக் கல்வி இல்லாமல் தமிழினம் அடிமையாக்கப்பட்டுள்ளது. நீட் போன்ற தேர்வுகள் திணிக்கப்படும் நிலையில் நான் தாய் மொழியைப் பேசவில்லை என்ற வருத்தம் ஒருபோதும் இல்லை. ஒன்றை இழந்தால் மட்டுமே மற்றொன்று கிடைக்கும் என்பது உலக நியதி.
கே: இயற்கையான வாழ்வு முறையால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் என்ன?
ப: நான் இயற்கையான முறையில் உணவை உட்கொண்டு வருவதால் 83 வயதிலும் நோய் நொடி இல்லாமல் இருக்கிறேன். மருத்துவர்கள் என்னை கரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டியதில்லை என்கின்றனர். நான் பசி எடுக்கும்போது மட்டுமே உணவை உட்கொள்கிறேன். உதாரணமாக இரு நாள்கள் பசி எடுக்கவில்லை என்றாலும் நான் உணவை உட்கொள்வதில்லை. அதேநேரத்தில், அசைவ உணவை நிறுத்தி 40 ஆண்டுகள் ஆகிறது. காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் உண்டவர்கள் தள்ளாத வயதிலும் கோல் ஊன்றாமல் நடக்கலாம்.