இங்குள்ள மக்கள், தங்கள் இருப்பிடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னாறு வனப்பகுதிக்குள் நடந்து சென்று, ஊற்று தோண்டி சேறு கலந்த தண்ணீரை சேகரித்து வந்து, குடிநீராக பயன்படுத்தும் அவல நிலை இருந்தது. தன்னார்வலர் ஒருவர் அமைத்துக் கொடுத்த ஆழ்துளை கிணற்றால், தற்போது தண்ணீர் பிரச்னைக்கு ஓரளவு தீர்வு கிடைத்துள்ளது.வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு ஒகேனக்கல் சொர்க்கமாய் தெரிகிறது. ஆனால், அதனையொட்டி வாழும் மக்களுக்கு வேதனையின் சுவடுகளே அதிகமுள்ளது. காவிரி பொங்கி வழிந்தும், தாகம் தீர்க்க வழியில்லை என்ற ஏக்கமே மேலோங்கி நிற்கிறது. தண்ணீருக்கு தத்தளிக்கும் ஒகேனக்கல் மலைகிராம மக்கள், குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர். மழை, பனிக்காலங்களிலும் கடுமையான காற்று வீசும் காலங்களிலும், இவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இவர்களுக்கு வனவிலங்குகளின் அச்சுறுத்தலும் நிறையவே உள்ளது. இவர்களுக்குத் தேவையான தரமான சாலை வசதி, குடியிருக்க தரமான நீடித்து நிலைக்கத் தக்க வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் இயற்கையோடு இணைந்து வாழும் இந்த மக்களின் வாழ்வு மேம்படும் என்கின்றனர் பழங்குடியினர் நலஆர்வலர்கள்.