அதற்குள், இரண்டாவது மாடியின் பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த அதே பக்கத்து வீட்டுக்காரர், அங்கிருந்தவாறே குரல் கொடுத்தார். ‘சார், உங்க வண்டிக்கு அடியில இருந்து, நகர்ந்து அந்தப்பக்கமா நிறுத்தியிருக்கிற எதிர்வீட்டு ஹூண்டாய் வெர்னாவுக்கு அடியில போயிடுச்சு பாருங்க’ என்றார். உடனே அந்த வீட்டுக்காரர்கள் யாராவது தென்படுகிறார்களா என்று தேடினோம். எச்சிலிட வெளியில் வந்த எதிர்வீட்டுப் பெண்ணிடம் இதைச் சொன்னதும் அவர் அலறி அடித்துக் கொண்டு கணவரைக் கூப்பிட உள்ளே ஓடினார். கணவர் வெளியில் வந்து பாம்பைத் தேடும் முன் மாமியார் கையில் உப்பு டப்பியோடு ஓடி வந்தார். ‘சும்மா இரும்மா, எதுக்குப் பதற்றே... இந்தா இதைத் தூவினா... எதுவும் வீட்டுக்குள்ள நுழையாது, அது வேற யாரு, நம்ம நாராயணன் தானே, கன்னத்துல போட்டுக்கோ’ என்றவாறு கையிலிருந்து உப்பைப் பிடிபிடியாக வாசல் கேட்டை ஒட்டித் தூவி விட்டுச் சென்றார்.