ஒருவழியாக உயிர் தப்பினோமே என்று ஆசுவாசத்துடன் கடலில் தங்கள் படகுடன் நகரத் தொடங்கியவர்களுக்கு மீண்டுமொரு பேராபத்து காத்திருந்தது. ஆம், மீண்டுமொரு பெரும்புயலில் சிக்கிக் கொண்டார்கள். பயணத்தின் நடுவில் நடுக்கடலில் நங்கூரம் பாய்ச்சி படகை நிறுத்தியே ஆக வேண்டிய கட்டாயம். அந்தோ பரிதாபம்! நங்கூரம் பாய்ச்சத்தான் முடியவே இல்லை. நங்கூரக் கயிற்றை அறுத்துக் கொண்டு பாய்ந்தோடியது புயல். புயலில் வெறி கொண்டு சீறிப்பாய்ந்த ஆழிப்பேரலைகள் நூற்றுக்கணக்கான கலன் கடல் தண்ணீரை அமிர்த் குஜூரின் படகுக்குள் செலுத்து படகைச் சிதைத்து சுக்குநூறாக்கத் திட்டமிட்டது. நல்ல வேளை அப்படியேதும் நடந்து விடவில்லை.. .புயலிலே சிக்கிய தோணியில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அரை மயக்க நிலையில் இருந்தனர் அமிர்தும் அவரது சகாவும். எரிபொருள் தீரும் வரையிலும் படகு கடலில் மூழ்கவில்லை. அதன் பாட்டில் கடலில் அலை இழுத்த இழுப்புக்கெல்லாம் சுற்றி அலைந்து கொண்டிருந்தது. ஒரு நாளா, இரண்டு நாட்களா? நாட்கள் வாரங்களாயின. ஒரு வாரம், இரண்டு வாரமெனக் கடந்து தொடர்ந்து மூன்றாவது வாரமாகக் குடிக்கத் தண்ணீர் இல்லை, உண்ண உணவில்லை. சாதாரண மனிதர்களால் நிச்சயம் தாக்குப்பிடித்திருக்க முடியாது தான். அமிர்தின் சகாவான திவ்யரஞ்சன் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் ஒடுங்கத் தொடங்கினார். பசி மயக்கத்திலும் நீரற்று வற்றிப் போன உடலுமாகத் தன் சகா, தன் கண் முன்னே இறந்து கொண்டிருப்பதை அறிந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அமிர்த். அவர் இறப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அமிர்த் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒருநாளில் திவ்ய ரஞ்சன் உயிரிழந்தார். அவரது சடலத்தையாவது கரைக்கு கொண்டு சென்றே தீருவது என்று முடிவெடுத்த அமிர்த்துக்கு அதற்கும் வாய்ப்பின்றிப் போனது. சில நாட்களிலேயே சடலம் அழுகத் துவங்க, வேறு வழியின்றி மனதைக் கல்லாக்கிக் கொண்டு சடலத்தை கடலில் வீசி எறிந்தார். பின்னரும் இந்த மனிதர் எப்படி மீண்டார் என்பது திகிலான கதை தான்.