இந்த நேரத்தில் தான் பெற்றோர், தம் பிள்ளைகளிடத்தில் டாக்டர், இஞ்ஞினியரிங் தவிர இன்னும் வேறு என்னென்ன விதமான படிப்புகள் எல்லாம் இருக்கின்றன என்ற தேடலைத் தொடங்க ஊக்குவிக்க வேண்டும். அவர்களிடத்தில் இந்த சமூகம் உருவாக்கி வைத்துள்ள... எம் பி பி எஸ், பி இ இரண்டையும் விட்டால் வேறு ஒன்றுமே மதிப்பிற்குரிய படிப்புகள் இல்லை எனும் மாயத்தோற்றத்தை உடைக்க வேண்டும். எத்தனையோ படிப்புகள் இருக்கின்றன. இன்று நம்முன் இருக்கும் அறிவுஜீவிகளான பிரபல அரசியல்வாதிகள் கல்லூரியிலும், பல்கலைக்கழகங்களிலும் கற்றுத்தேர்ந்தது எம் பி பி எஸ்ஸும், பி இ யும் அல்ல. ஆங்கிலம், வரலாறு, புவியியல், புள்ளியியல், கணிதம், விஷுவல் கம்யூனிகேஷன், பொருளாதாரம், வணிகவியல், என எந்தப் பாடமானாலும் முழு ஈடுபாட்டுடன், விருப்பத்துடன் கற்றுத் தேர்ந்தால் அந்தத் துறைகளிலும் டாக்டருக்கு இணையான சம்பளமும், புகழும், சமூக அங்கீகாரமும் பெற முடியும் என்பதை மாணவர்களிடத்தில் பெற்றோர் தான் உருவாக்க வேண்டும். அப்படித் தான் மாணவர்களிடத்தில் ஒரு தெளிவான கண்ணோட்டத்தை நாம் உருவாக்கியாக வேண்டும்.