தற்போது சாரங்கியை, பரியேறும் பெருமாள் திரைப்படத்து ஜாதி வெறி பிடித்த வயோதிக கதாபாத்திரம் ஒன்றுடன் ஒப்பிட்டு மீம்ஸ்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. கிட்டத்தட்ட உண்மைக்கு மிக நெருக்கத்தில் அமையக் கூடியதான இந்த ஒப்பீட்டை புறம்தள்ளுவது கடினம். ஏனெனில், கட்டுரையின் தொடக்கத்தில் சாரங்கி உதிர்த்த முத்தே அதற்கு ஒரு சோறு ஒரு பதம் சான்று. எனவே, மத வெறியைத் தூண்டும் சக்தி, அது எந்த ரூபத்தில் வெளிப்பட்டாலும், அதை கண்டிப்பதே உண்மையான ஊடக தர்மம். அவ்வகையில், பொது மக்களிடையே சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் விதத்திலான அமைச்சர் சாரங்கியின் கருத்துக்கள், அவை முன்பே அவரிடமிருந்து வெளிப்பட்டவையாகவும் இருக்கலாம், அல்லது இனிமேல் வெளிப்படவிருப்பதாகவும் இருக்கலாம். அது எப்படிப்பட்டதாக இருந்தபோதும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது என்பதைப் பதிவு செய்தாக வேண்டிய தருணம் இது.