அடல்ஜி திருமணமாகாதவர் எனினும் அவருக்கொரு வளர்ப்பு மகள் உண்டு. அவரது பெயர் நமிதா பட்டாச்சார்யா. இந்த நமிதா பட்டாச்சார்யா, அடல்ஜியின் கல்லூரித் தோழியும், அவரது நெடுநாள் உடனுறை துணையுமான (கம்பானியன்) ராஜ்குமாரி கெளலின் மகள். ராஜ்குமாரி கெளலும், அடல்ஜியும் குவாலியர் விக்டோரியா கல்லூரியில் இணைந்து படிக்கும் போது சினேகமானார்கள். அந்த சினேகம் ராஜ்குமாரி கெளலின் கணவரும், பேராசிரியருமான பி.என் கெளல் காலமான பின் அடல்ஜியின் வீட்டிலேயே அவருக்கொரு நற்றுணையாக தனது குடும்பத்துடன் வந்து நிரந்தரமாக வசிக்கும் அளவுக்கு ஆழமாக பிணைப்பைக் கொண்டதாக மாறியது. ராஜ்குமாரி கெளல் குறித்து அடல்ஜியின் நெருக்கமான நண்பர் வட்டாரங்கள் தவிர்த்து பாஜகவின் பிற தலைவர்களுக்கும் கூட பெரிதாக ஏதும் தெரியாது என்ற நிலையே பல காலம் நீடித்தது. ஏனெனில், தன் சினேகிதியின் மகளை, தன் மகளாக அடல்ஜி தத்தெடுத்துக் கொண்ட போது அதைப்பற்றி வெளி உலகுக்கு அறிவிக்க வேண்டிய நிர்பந்தம் தனக்கு இல்லை என அடல்ஜி முடிவு செய்திருந்தார். 2016 ஆண்டில் ராஜ்குமாரி கெளல் மாரடைப்பின் காரணமாகக் காலமான பின் அடல்ஜி தனது இறுதி மூச்சு வரை தனது வளர்ப்பு மகள் நமிதா பட்டாச்சார்யா மற்றும் பேத்தியுடன் டெல்லியில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.