வெஸ்லீ காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தின் படி குழந்தை ஷெரின் அவர்களது சொந்த மகளில்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிகாரில் ஷெரினை அவர்கள் தத்தெடுத்திருக்கின்றனர். தத்தெடுக்கும் நல்லெண்ணத்திலோ, அல்லது தத்துக் கொடுக்கும் வழக்கங்களிலோ எந்த ஒரு குறையும் இல்லை. ஆனால் யாருக்கு தத்தெடுக்கக் கூடிய அருகதை உண்டோ அவர்களல்லவா குழந்தைகளைத் தத்தெடுக்க வேண்டும்! வேலைப்பளுவாலோ, பிறவி குணாதிசயங்களாலோ கொஞ்சமும் கருணையற்றுப் போனவர்கள் எல்லாம் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கத் தகுதியானவர்களே இல்லை. அதற்கு அவர்கள் குழந்தைகளற்ற வாழ்வையே சிக்கலின்றி தொடர்ந்து விட்டுப் போனால் யாருக்கும் எந்தவித நஷ்டமுமில்லை. மாறாக, ஒரு குழந்தையை தத்தெடுத்து, ஊரார் முன் நல்லவர்கள் வேடம் போட்டு விட்டு, அந்தக் குழந்தையை இப்படி கண்காணாத தேசத்துக்கு அழைத்துச் சென்று அதன் சிறு சிறு குறும்புத்தனங்களையும், பிடிவாதங்களையும் பொறுத்துக் கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ முயற்சிக்காமல் சகிப்புத் தன்மையே இன்றி கொன்று விட்டு அதை மறைக்க நாடகம் ஆடி இருக்க வேண்டியதில்லை. குழந்தை ஷெரினின் புகைப்படங்களை ஊடகங்களில் காண நேர்ந்த ஒவ்வொருவருக்கும் வெஸ்லீ மாத்யூஸ் குறித்து இப்படித்தான் தோன்றியிருக்கக் கூடும்.