இந்த ஆண்டின் துவக்கத்தில் சீமைக் கருவேல மரங்களை வேரோடும், வேரடி மண்ணோடும் சேர்த்து தமிழ்நாட்டின் நிலப்பரப்பிலிருந்து முற்றிலுமாக அழித்தே தீர வேண்டும் என்ற கோஷம் மாநிலம் முழுக்கவே உரக்க ஒலித்துக் கொண்டிருந்தது. மக்களிடமும் சீமைக்கருவேலம் குறித்த வெறுப்புணர்வு நிறையவே இருந்தது. கிராம மக்களிடையே சீமைக்கருவேல மரங்கள் தான் அவர்களது குடிநீர் பிரச்னைக்கு ஒட்டுமொத்த காரணம் என வலியுறுத்தப்பட்டு அவற்றை நீக்குவதின் அவசியம் உணர்த்தப்பட்டது. சீமைக்கருவேல மரங்கள் நிலத்தடி நீரை ஒட்டுமொத்தமாக உறிஞ்ச வல்லவை எனவே அவற்றை நீக்கினால் ஒழிய தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்டம் உயராது என்றொரு வாதம் பல சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்களால் முன் வைக்கப்பட்டது. தன்னார்வப் போராளிகளில் மதிமுக தலைவர் வை.கோவின் போராட்டம் அரசு அதிகாரிகளையும், நீதிமன்றங்களையும் கூட அசைத்துப் பார்த்து சீமைக்கருவேல மரங்களுக்கு எதிரான அறிக்கைகளையும், உத்தரவுகளையும் இட வைத்தது. ஒரு சமயத்தில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் தங்களுக்கு கீழிருந்த அதிகாரிகளை முடுக்கி விட்டு கிராமங்கள் தோறும் சீமைக்கருவேல மரங்களை இல்லாமலாக்க ஆணைகளைப் பிறப்பித்தனர்/ திடீரென அந்த அலை ஓய்ந்து... தற்போது சீமைக்கருவேல மரங்களால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு எதுவுமில்லை, மாறாக சீமைக்கருவேல மரங்கள், சூழல் சங்கிலியில் முக்கிய இடம் வகிக்கின்றன. அந்த மரங்களை ஒட்டுமொத்தமாக வெட்டி அழித்தால் மாபெரும் சூழலியல் பாதிப்பு வந்து சேரும் என்ற எதிர்ப்பலையின் பேரோசை காதுச் சவ்வுகளை கிழிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்த இரண்டில் எது நிஜம்?