இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

விமான நிலையங்களில் 'உணவுப் பஞ்சம்'!

விமானப் பயணம் செல்வந்தர்களுக்கானது; விமான நிலையங்களில் உணவுப் பொருள்களின் அநியாய விலை யாருக்கும் ஒரு பொருட்டல்ல என அரசும், அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பதைப் பற்றி...

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 10:57 pm

ப. இசக்கி

விமான நிலையங்களில் உள்ள உணவகங்களில் காபி, தேநீர் மற்றும் உணவுப் பொருள்கள் அநியாய விலைக்கு விற்பனை செய்யப்படுவது குறித்து ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியவில்லையா அல்லது அதைக் கட்டுப்படுத்த அவர்களால் முடியவில்லையா என்பது புரியாத புதிராக உள்ளது.

காபி, தேநீரின் விலை ரூ. 170-இல் தொடங்கி ரூ. 450 வரை விற்கப்படுகின்றன. மூன்று இட்லிகளின் விலை ரூ. 225 மற்றும் வரி. இந்த விலை விமான நிலையங்களுக்கு விமான நிலையம் வேறுபடுகிறது. நெடுங்காலமாக நீடித்து வரும் இந்த விலை உயர்வு குறித்து அவ்வப்போது பொதுமக்கள் மத்தியிலும், சமூக ஊடகங்களிலும் பலத்த விமர்சனங்கள் எழுந்தாலும் அதை சம்பந்தப்பட்டவர்கள் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை என்பது கூடுதல் வேதனை.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூட அவரது ஆதங்கத்தை இரண்டு முறை சமூக ஊடகத்தில் பகிர்ந்திருந்தார். கடந்த 2018-இல் சென்னை விமான நிலையத்தில் காபி விலை ரூ. 180 என்றும், தேநீர் விலை ரூ. 135 என்றும் பதிவிட்டிருந்தார். அதேபோல், 2024-இல் கொல்கத்தா விமான நிலையத்தில் ஒரு குவளை தேநீர் விலை ரூ. 340 என்று குறிப்பிட்டிருந்தார்.

விமானப் பயணம் என்பது செல்வந்தர்கள் மேற்கொள்வது; விமான நிலையங்களில் உணவுப் பொருள்களின் அநியாய விலை அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல; அந்த விலையை ஏற்கும் திறன்படைத்தவர்கள்தான் அங்கு உணவுப் பொருள்களை வாங்குகின்றனர்; சாமானிய மக்களுக்கு அதனால் பாதிப்பு எதுவும் இல்லை என அரசும், அதிகாரிகளும் எளிதாகக் கடந்து செல்ல முடியாது; கூடாது.

பெருநகர பேருந்து மற்றும் ரயில் நிலையங்களுக்கு இணையாக இப்போது விமான நிலையங்களும் பயணிகளால் நிரம்பி வழிகின்றன. விமான நிலையங்களின் உள்ளே பயணிகள் அமர இருக்கை கிடைப்பதுகூட சிரமமாக இருக்கும் சூழல் நிலவுகிறது. விமானப் பயணிகள் அனைவரும் பணக்காரர்கள் அல்லர்; அவர்கள் ஒரு சிறு கூட்டமே. மாறாக, மாறிவரும் காலச் சூழ்நிலையில் நடுத்தர மக்களும் விமானப் பயணத்தை மேற்கொள்கின்றனர். அவர்கள்தான் பெரும்பான்மை பயணிகள் ஆவர்.

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுவோர், அலுவல் முறை பயணம் மேற்கொள்வோர், குடும்பத்துடன் சுற்றுலா செல்வோர், அவசரப் பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக பயணிப்போர் எனப் பலதரப்பட்ட நடுத்தர வர்க்கத்தினரும் விமானப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். விமானத்தை இயக்கும் நிறுவனங்கள், விமானங்களில் செல்வந்தர்கள் பயணிக்க 'பிசினஸ் கிளாஸ்' இருக்கைகள் என 10 முதல் 15 சதவீதத்தை மட்டுமே ஒதுக்குகின்றன.

எஞ்சிய 85 முதல் 90 சதவீதம் 'எக்னாமி கிளாஸ்' இருக்கைகள். இவை நடுத்தர வர்க்க பயணிகளால்தான் நிரம்புகின்றன. விமானப் பயணம் செல்வந்தர்களுக்கு மட்டுமே என்றால், அனைத்து இருக்கைகளையும் 'பிசினஸ் கிளாஸ்' இருக்கைகளாக ஒதுக்கி இருக்கலாமே. அவ்வாறு செய்தால் விமான நிறுவனத்தை லாபகரமாக இயக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். விமான நிலையத்துக்குள் உணவகம் நடத்துவதற்கான கடை வாடகை அதிகம்.

வெளியிடங்களை ஒப்பிடும்போது 5 முதல் 10 மடங்கு கூடுதல் வாடகை, பராமரிப்புச் செலவு, பாதுகாப்புச் செலவு, உள்ளே மூலப்பொருள்களைக் கொண்டு வருவதில் உள்ள சிரமம், லாபத்தில் பகிர்வு (விமான நிலையத்தை இயக்கி பராமரிக்கும் தனியார் நிறுவனங்களுடனான பகிர்வு) போன்றவற்றால் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாக நியாயம் கற்பிக்கப்படுகிறது.

இப்போது தில்லி, மும்பை, ஹைதராபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் தனியாரால் இயக்கி, பராமரிக்கப்படுகின்றன. அவை விமான நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கும் விமானங்களை நிறுத்துவதற்கான மற்றும் இயக்குவதற்கான கட்டணங்களில் போதுமான லாபம் கிடைப்பதில்லை.

எனவே, உணவு விற்பனைக் கடைகளுக்கு கூடுதல் வாடகை வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. நிறுவனங்களின் லாபத்தில் சுமார் 70 முதல் 80 சதவீதம் இந்த வழியில் திரட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுவும் பொருள்களின் அநியாய விலைக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. ஆனால், அந்த விலை எல்லாத் தரப்பு பயணிகளாலும் வாங்கக்கூடியதாக இல்லை என்பதுதான் பிரச்னை.

இந்த விலை குறித்து மக்கள் பிரதிநிதிகளில் சிலர் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியதால் இப்போது சென்னை உள்ளிட்ட ஒரு சில விமான நிலையங்களில் 'உடான் யாத்ரி கபே' என்ற பெயரில் உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் நியாயமான விலையில் காபி, தேநீர் மற்றும் தின்பண்டங்கள் கிடைக்கின்றன. ஆனால், அவை அனைத்து விமான நிலையங்களிலும் இல்லை என்பதோடு எல்லா முனையங்களிலும் இல்லை.

எனவே, 'உடான் யாத்ரி கபே'வால் பயணிகளுக்கு முழுமையான பலன் கிட்டுவதில்லை. பயணிகள் வீடுகளிலிருந்து உணவுப் பொருள்களை எடுத்துச் சென்று அங்கு சாப்பிடலாம் என்றால், சில விமான நிலையங்களில் 'வெளி உணவுகளுக்கு அனுமதி இல்லை' என்கின்றனர். இதையெல்லாம் கண்டித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டிய மக்கள் பிரதிநிதிகளுக்கு நியாயமான அல்லது சலுகை விலையில் அவர்கள் பணியிடத்தில் உணவு கிடைக்கிறது.

நாடாளுமன்ற வளாக உணவகத்துக்கு கடந்த 2021-முதல் மானியம் நிறுத்தப்பட்டது. எனினும், அங்கு தாவர உணவு ரூ. 100-க்கும், கோழி பிரியாணி ரூ. 100-க்கும் கிடைக்கிறது. எனவே, விமானப் பயணத்தை மேற்கொள்ள நடுத்தர வர்க்க மக்களை ஊக்குவிக்கும் அதேவேளையில் பசித்தவர்கள் புசிக்க விமான நிலைய உணவகங்களில் நியாயமான விலையில் உணவு கிடைக்கவும் அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.