/

நட்பெனும் நாடாச்சிறப்பு!

சின்ன வயதில் இருள் கண்டு அஞ்சுவது இயல்பு. போகப் போக, அந்த அச்சம் போய் ஒழிவதோடு, இருளையே தஞ்சம் அடைந்து இன்பமும் அமைதியும் கொள்ளத்தக்க பக்குவமும் வந்துவிடுகிறது இல்லையா?

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:51 am

கிருங்கை சேதுபதி



உயிருக்கு உயிராகப் பழகிய நண்பரோடும் பிணக்குக் கொள்ள வேண்டிய கட்டாயம் எல்லாருக்கும் ஒரு கட்டத்தில் வந்துதான் தீரும். அது தீர்ந்துவிட்டால் நல்லது. தீராவிட்டால், புரையோடிப்போன புண்போல, உள்ளுக்குள் இருந்து உறுத்திக்கொண்டே இருந்து தீங்கு விளைவிக்கும்.

அதனைத் தீர்க்கிறேன் பேர்வழி என்று வந்து ஒட்டுமொத்தமாய் அந்த உறவையே தீர்த்துவிட்டுப் போகிறவர்களால் ஏற்படுகிற ஆபத்துகள் எண்ணில் அடங்காதவை. அடுத்துக் கெடுக்கிற இவர்களால் நட்புகள் பகைகளாய்த் திரியும். பகைத்தீ பற்றி எரியும். அது மூட்டியவர்களையும் சேர்த்து எரித்துவிடும் மூர்க்கம் உடையது. 

மூர்க்கர்கள் நட்பில் மட்டுமல்ல, உறவுகளிலும்கூட, ஊடுருவிக் கலந்துவிடுகிறார்கள். உயிர்காக்கும் உணவே, நஞ்சாவதுபோல் உறவாடிக் கெடுத்துவிடுகிற நடமாடும் உறவுக்கொல்லிகள். நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் தேன்குழைத்து நல்லவர்போல் நடித்து உறவையும் நட்பையும் உருக்குலைத்துவிடுகிற இவர்கள் தனிநபர்போல் தோற்றம் காட்டினாலும், பொதுவெளியில் திரிகின்ற நாசகாரக் கும்பல் என்ற எச்சரிக்கை நண்பர்களுக்கு வேண்டும்; உறவினர்களுக்கும் வேண்டும்.

இவர்கள் எங்கிருந்தோ வருகிறவர்கள் அல்லர். நம்முடனே இருக்கும் நிழலைப் போன்றவர்கள். நிஜத்துக்கு எத்தனை வண்ணங்கள் இருந்தாலும் நிழலுக்கு ஒரே நிறம், அது இருளின் நிறம்; பல சமயங்களில் இருப்பதே தெரியாமல், நம்மிடம் தஞ்சம் புகும். அபூர்வமாய், பூதாகரமாகப் பேருருக் கொண்டு பயமுறுத்தும். அந்தக் கணத்தில் சற்றே அச்சம் நமக்குள் எழுந்துவிட்டால், தொலைந்தோம் என்று பொருள். 

நிஜம் கண்டு பழகியவர்கள் நிழல் கண்டு அஞ்சலாகாது.

சின்ன வயதில் இருள் கண்டு அஞ்சுவது இயல்பு. போகப் போக, அந்த அச்சம் போய் ஒழிவதோடு, இருளையே தஞ்சம் அடைந்து இன்பமும் அமைதியும் கொள்ளத்தக்க பக்குவமும் வந்துவிடுகிறது இல்லையா? அதுபோல், இந்த நிழலாளர்களிடத்திலும் நாம் இருக்கப் பழகிக் கொண்டுவிட்டால், நமக்கு நிம்மதி. அதைவிட, இவர்களே நம் பாதுகாவலர்களும் ஆகிவிடுவார்கள்.

இவர்களை எப்படி அடையாளம் காண்பது? மிக எளிது. இவர்கள் நமக்குள்ளேயே இருப்பவர்கள். நமக்குத் தெரியாமலேயே பகைத்தீயை வளர்ப்பவர்கள். உள்ளே இருந்து உறவைக் கொடுப்பதுபோலக் கெடுப்பவர்கள். இவர்கள் நால்வர்போல் தெரிந்தாலும் ஒருவர்தான் என்று உணர்ந்து
கொள்வதற்குப் பொறுமை வேண்டும். பொறுமை காக்கவிடாமல் பொங்கியெழும் பொறாமைதான் இவர்களின் திருமேனி.

அது அன்பு கண்டு பொறாமை, ஆற்றல் கண்டு பொறாமை, வளர்ச்சி கண்டு பொறாமை என நீண்டு நீண்டு எழுகிற பொறாமை. இதற்கு ஆணிவேர் பெறாமை. தன்னால் பெறமுடியாததைப் பெற்றுவிட்ட ஒருவனைப் பார்த்தவுடன் பெருகிவளரும் ஆற்றாமை. 

இதற்குத் திருவள்ளுவர் தந்த பெயர் "அழுக்காறு'. இந்த அழுக்காறு, அகம். இது வெளிப்படுகிறபோது தெரிகிற ஒரு முகத்துக்கு "அவா' என்று பெயர். ஆசை இயல்பானது; பேராசை பெரிதானது; இந்த இரண்டுக்கும் அடுத்த நிலையில் அடக்கமுடியாத நிலையில் எழும் பெரும்பேராசை. எத்தனை பெற்றாலும் அடங்காத மீப்பெரும் பேராசை அது. பெரியதுபோல் அது தோற்றம் காட்டினும் மிகமிக அற்பமானது. 

இயல்பாக வாயைத் திறந்தவுடன் எழுகிற, "அ', அடங்காத பேராசையாய் விரிவதை அடுத்து வருகிற "வா' விரித்துக்காட்டும். அழுக்காற்றின் அடங்காத பெருவிரிப்பு, இந்த "அவா'. வியப்பு என்பதுபோல் மயங்கவைக்கும் இந்த விரிந்த வாய்க்குப் பின்னால் பதுங்கியிருக்கும் அவாவின் வழியாகப் பாய்கிற அழுக்காறு இருக்கிறதே, அது நீண்டு பின்னர் வெகுளியெனக் கனன்று எழும்.

வெகுளியைக் கோபம் என்று கொள்வது பொருத்தமானது அல்ல. அது தும்மலைப்போல் இயல்பாய் எழுவது. தொடர்ந்து வரும் தும்மல் நோயின் அறிகுறி என்று தெரிந்துகொள்வதுபோல், எதற்கெடுத்தாலும் வந்து வந்து முகத்தைக் கெடுக்கிற கோபம் ஒருவருக்கு இருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் இந்த அவாவும், அழுக்காறும் ஒளிந்திருக்கின்றன என்று பொருள்.

பொதுவாய், கோபம் நல்ல குணம். அடங்காப் பெருங்கோபம், சினம். அதற்குத் திருவள்ளுவர் வைத்த பெயர் "சேர்ந்தாரைக் கொல்லி'. அது முதலில் தன்னைச் சுடும்; பிறகு தன்னைச் சேர்ந்தவர்களைச் சுடும். அதனால்தான், அது, "இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்' என்று எச்சரிக்கிறார், அவர். "உலகத்து நெருப்புச் சுடுவது, தான் சேர்ந்த இடத்தையே - இந்நெருப்புச் சேராத இடத்தையும் சுடும்' என்னும் வேற்றுமை தோன்ற நின்றது' என்று மேல் விளக்கம் அளிப்பார் பரிமேலழகர்.

அதாவது, இந்தச் சேர்ந்தாரைக் கொல்லி, சேர்ந்து இருக்கிற இனத்தவர்களையும் சுடும்; சேரவருகிற நட்பினரையும் சுடும். கொல்லி என்று முன்னாலேயே சொல்லப்பட்டதால், அது கொன்றுதான் தீர்க்கும் என்பது உணர்ந்துகொள்ள வேண்டிய உள்பொருள். தன்னைச் சார்ந்தவரைச் சுட்டுக் கொன்ற பிறகும், இது சாகாது; பழிவாங்கல் என்ற பெயரில் தொடரும் இந்தச் சினம். இதன் அபாயகரமான வெளிப்பாடு வெகுளி; கொன்றதற்குப் பின்னாலும் குன்றாமல் எரியும் கொடுந்தீ.

புணை என்பதற்குத் தெப்பம் என்று பொருள். எத்தனை பெருவெள்ளத்திலும் மூழ்கிவிடாமல் காப்பாற்றிக் கரையேற்றிவிடக்கூடியது புணை. அதற்குப் புனைபெயர் சூட்டினால், நட்பு. அது உறவினும் உயர்ந்தது. ஆசைக்கடலில் அழுந்திக் கிடக்கும்போது அங்கிருந்து பேசிப்பேசிக் கரையேற்றிவிடுகிற நட்பினை நாடவிடாமல், உள்ளிருந்தே பொசுக்கிவிடுகிற வெப்பக் கொலைக்கருவி (வெப்பன்) இந்த வெகுளி.

இந்த நெருப்புக் கடலில் நம்மை இழுத்துக் கொண்டுபோய்ச் சேர்க்கிற ஆறுதான் அழுக்காறு. அது அளவுகடந்து பெருகியோடுதற்குக் கரைகடந்த கரையாக இருப்பது அவா என்பது இப்போது புரிகிறதல்லவா?

இந்த நெருப்புக் கடலையும் நீந்திக் கரை சேர்க்க வேண்டிய பொறுப்புடன் செயல்படுகிற புணையாகிய நண்பர்களை இன்னும் சிதைப்பது, "இன்னாச்சொல்'. இது இனிய சொல்லுக்கு எதிர்ப்பதம் அல்ல. தீங்கு என்று பொருள் தரும் தீச்சொல். இது தீயினும் அஞ்சத்தக்க தீமை பயப்பது. 
இது குறித்து இன்னுமொரு எச்சரிக்கைக் கொடியை ஏற்றிக் காட்டுகிறார் திருவள்ளுவர். "தீயினால் சுட்ட புண் கூட, உள் ஆறிவிடும். (வெளியில் ஆறுவதற்கு வெகுநாள் ஆகும்) ஆனால், நாவினால் சுட்ட வடு எத்தனை யுகங்கள் ஆனாலும் ஆறவே ஆறாது'.

இந்த நான்கு முகங்கள் தாங்கிய ஒருநபர்தான் இத்தனை பேராபத்துகளையும் உருவாக்கித் தருகிற பெரும்பாவி. அதன் பெயர் அழுக்காறு. அதனால்தான், "அழுக்காறு என ஒரு பாவி' என்று அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்கிறார் திருவள்ளுவர். 

அவர் சொல்லும் "ஒரு' என்பது "ஒன்று' என்று பொருள் தருகிற எண்ணுப்பெயர் அல்ல; எண்ணிப் பார்க்க முடியாத, எண்ணற்ற இன்னல்களை எப்போதும் தந்துகொண்டே இருக்கும் தகவிலாத் தன்மையது என்ற பொருள் தருவது. இந்த "ஒரு' பாவியை, "ஒப்பில்லாத' பாவி என்று 
உணரக் காட்டுகிறார் பரிமேலழகர்.

இது பாவிக்கப்படுவதால் வருகிற பாவம். அதாவது அனுபவத்தில் வந்து அல்லல் கொடுப்பது. அப்பாவியாய் இருக்கும் எப்பாலரையும் ஈர்த்துத் தன்வசப்படுத்திவிடுகிற அபாயகரமான பாவி, அழுக்காறு. இது அருட் செல்வத்தையும் பொருட்செல்வத்தையும் அழித்துவிட்டுப் பெருநரகத்தில் கொண்டுபோய்த் தள்ளிவிடும் பேராபத்து உடையது. அதனால்தான்,
அழுக்காறு என ஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்
என்று தெளிவுபடுத்துகிறார் திருவள்ளுவர். இதன் கூட்டாளிகள்தான், அவா, வெகுளி, இன்னாச் சொல் ஆகியன.

புறத்தே தெரியாமல் புறம்பேசுவாரின் அகத்தே புகுந்து ஆட்படுத்தும் இத்தகு அழிவு சக்திகளே நமது உறவையும் நட்பையும் உருக்குலைக்கும் பெருங்கொல்லிகள். இவர்களால் ஆட்கொள்ளப்பட்ட நம் உறவினர்களும் நண்பர்களும் பகைவர்களாகத் திரிந்துவிடுவார்கள். பல பண்புகளைத் திரித்துச் சிதைத்தும் விடுவார்கள். இவர்கள் கரோனாத் தீநுண்மி போல் பரவி உறவைக் கெடுக்கும் கரவுத் தீநுண்மிகள்.

இதனைப் பற்றிப் பரவவிடாமல் அணைக்கிற கவசம்தான் அன்பு. இது அகக்கவசம் மட்டுமன்று, முகக்கவசமும்கூட. அறம் என்னும் தன்னாற்றலின் உரம் குன்றவிடாமல் அரவணைத்துக்காக்கும் திறம் அன்புக்கே உண்டு. மறத்தையும் மறக்காமல் காக்கும் இந்த அன்புதான், அருளைப் பெற்றுத் தரும் அன்னை. பேணி வளர்க்கும் செவிலி, செல்வம்.

அன்பென்னும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு என்கிறார் திருவள்ளுவர்.

"ஒருவனுக்குத் தொடர்புடையார் மாட்டுச் செய்த அன்பு, அத்தன்மையால் பிறர் மாட்டும் விருப்பம் உடைமையைத் தரும். அவ்விருப்பம் உடைமைதான் அவற்குப் பகையும் நொதுமலும் இல்லையாய் யாவரும் நண்பு என்று சொல்லப்படும் அளவிறந்த சிறப்பினைத் தரும்' என்று விளக்குகிறார் பரிமேலழகர்.
இந்த அன்பின் இன்னொரு பரிமாணம்தான் நண்பர்களுக்குள் ஏற்படும் பிணக்கு. இணக்கத்திற்குத் துணையாக இருக்க வேண்டிய இப்பிணக்கினை, இடையில் புகுந்து கெடுக்கும் தீயவர்கள் புறத்தே இருப்பவர்கள் போலத் தெரிந்தாலும் அவர்களுக்குத் துணையாக நம் அகத்தே இருக்கும் அகப்பாவியாகிய அழுக்காறுதான் முதலில் அகற்றப்படவேண்டியது. அது நீங்கிய பிறகு நம்மை யாரும் நெருங்கமுடியாது என்பதை அனுபவத்தில் கண்டவர்களே அன்புடையவர்கள். காக்கிறவர்கள் நண்பர்கள். நட்பும் உறவும் கலந்த கேண்மையில் இவ்வுலகம் தழைப்பது இயல்பு.

கட்டுரையாளர்: எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.