மரங்கள் உணர்த்தும் பாடங்கள்!
எங்குமே நகர முடியாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கிற மரங்கள் குழந்தைப் பருவத்தில் தொட்டிலாகவும், ஊஞ்சல் கட்டி விளையாடவும், நடை பழகும்போது நடை வண்டியாகவும் பயன்படுகின்றன.


எங்குமே நகர முடியாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கிற மரங்கள் குழந்தைப் பருவத்தில் தொட்டிலாகவும், ஊஞ்சல் கட்டி விளையாடவும், நடை பழகும்போது நடை வண்டியாகவும் பயன்படுகின்றன.
படிக்கிற காலங்களில் மேஜையாகவும், இளைமைப் பருவத்தில் பள்ளியறைக் கட்டிலாகவும், வயதான காலத்தில் ஊன்றுகோலாகவும், இறந்த பின் பாடையாகவும், சடலமான பின்பு எரிக்க விறகாகவும் பயன்படுகிறது மரங்கள்.
பசிக்கு பழங்களை தரும் உணவாகவும், தாகத்துக்கு தண்ணீர் தரக்கூடியதாகவும், நோய்க்கு மருந்தாகவும், வேளாண்மை செழித்து மழை பெய்திடவும், சுத்தமான காற்றை நாம் சுவாசிக்கவும், பலருக்கும் நிழல் தரும் பொதுவுடைமை வீடுகளாகவும், பறவைகளுக்கு பயணியர் விடுதிகளாகவும் பயன்படுகின்றன மரங்கள்.
நகர முடியாமல் ஒரே இடத்தில் நிற்கிற மரங்கள்கூட மனிதனுக்குப் பல சேவைகளை செய்கிற நிலையில் பிறருக்கு பயன்படக்கூடிய வாழ்க்கைதான் உயர்ந்த வாழ்க்கையாக இருக்க முடியும் என்பதே மரங்கள் நமக்கு கற்றுத் தரும் பாடங்கள். உலகில் எந்த இடத்துக்கும் செல்லக்கூடிய மனிதர்களே உங்கள் நிழலிலும் என்னைப் போல பலரையும் அமரவைத்து அழகு பாருங்கள். அதில் கிடைக்கிற ஆனந்தமே பேரானந்தம் எனச் சொல்லாமல் சொல்லுகின்றன மரங்கள்.
சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் ஒரு மரம், இந்தப் பூமிக்கு வழங்கியிருக்கும் சேவையைக் கணக்கிட்டால் அவை நமக்கு சுவாசிக்க வழங்கிய ஆக்சிஜனின் மதிப்பு ரூ.2.50 லட்சம்; காற்று மாசுபடுவதைத் தடுத்து சுற்றுச்சூழலை சுத்தம் செய்ததன் மதிப்பு ரூ.5 லட்சம்; மழையை வரவழைத்து அதை நிலத்தடியில் சேமித்தும், காற்றில் ஈரப்பதத்தை கலந்து காத்ததற்கான மதிப்பு ரூ.3 லட்சம்; மண் அரிப்பைத் தடுத்து ஆறுகளையும், கண்மாய்களையும் காத்ததன் மதிப்பு ரூ.2.50லட்சம் என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தனது வாழ்நாளில் கடைசிச் சொட்டு ஈரப்பதம் இருக்கும் வரை பிறருக்குப் பயன்படுகின்றன மரங்கள். மனிதர்களே என்னைப் போல கடைசிக்காலம் வரை பிறருக்கு உதவியாக இருங்கள் என்கிறது மரங்கள்.
மரத்தில் ஏறி காய்களைப் பறித்தால் கிளைகள் ஒடிந்து விடும். ஆனால், அந்தக் கிளை தரும் இலைகள் அனைத்தும் இரும்புச்சத்து நிறைந்தவை. ஒடிந்து விழுந்து விடாமல் சத்துள்ள மனிதர்களாக எப்போதும் இருங்கள் என்பது முருங்கை மரம் கற்றுத்தரும் பாடம்; உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு பார்க்காமல் வாசலில் நின்று, என்னைப்போல அனைவரையும் வரவேற்றுப் பாருங்கள். வாழ்க்கை இனிக்கும்ட என்கிறது வாழை மரம். கழிவுநீரை ஊற்றினாலும் சுத்தமான இளநீரையே தந்து, உங்களுக்கு யார் தீங்கு செய்தாலும் அவர்களுக்கு நல்லதையே செய்யுங்கள் என்கிறது தென்னை மரம்; விழுந்தால் வீடுகளுக்கு விட்டமாகிறேன், வெட்டினால் சட்டமாகிறேன். அனைவரும் உடலையும், உடல் உறுப்புகளையும் இறந்த பிறகாவது தானம் செய்யுங்கள் என்று சொல்லாமல் சொல்லுவது பனைமரம் கற்றுத் தரும் பாடம். தன்னைக் காலமெல்லாம் தாங்கிய அடிமரத்தை தன் விழுதுகளால் தாங்கிப் பிடித்து, தானும் வாழ வேண்டும், தன்னை வளர்த்தவர்களையும் வாழவைக்க வேண்டும் என்று நடந்து காட்டி பெற்றோர்களை முதியோர்கள் இல்லங்களுக்கு அனுப்புபவர்களுக்கு சரியான பாடம் புகட்டுகின்றன ஆலமரங்கள்.
அரசராக இருந்தாலும் உயர்பதவியில் இருக்கும் போது ஆணவம் கூடாது என்கிறது குளக்கரை கோயில்களின் ஓரங்களில் நிற்கும் அரச மரம். எந்த மண்ணாக இருந்தாலும் அதில் வாழ்ந்து காட்டுவேன் என எந்த மண்ணிலும் வளரக் கூடியதாக இருக்கிறது வேப்ப மரம். நாங்கள் இருக்கிறோம், கவலைப்படாதீர்கள் என அரச மரம் இறைவனாகவும், வேப்ப மரம் அம்மனாகவும் வழிபாட்டு மரங்களாக இருக்கின்றன. பேராசையே துன்பங்களுக்குக் காரணம் என புத்தருக்கு புத்தியும், ஞானமும் தந்த மரம் போதிமரம். மரங்களின் மகத்துவங்களை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால்தான் ஆலயங்களில் ஸ்தல விருட்சங்களாகவும் இருந்து அருள்பாலிக்கின்றன.
நச்சு வாய்வை உட்கொண்டு, பிராண வாயுவை வெளியிடுவது மரங்கள் செய்யும் அற்புதங்கள். மலர்களை, காய்களை, கனிகளை, கீரைகளை நமக்குத் தருகின்றன. நிழலையும், குளிர்ச்சியையும் வாரி வழங்கும் வள்ளல்களாகவும் இருக்கின்றன. புவி வெப்பமடைதல் விளைவைக் குறைக்கின்றன. மண் அரிப்பையும்,நிலச்சரிவுகளையும் தடுக்கிறது. காய்ந்து போன சருகுகள்கூட மண்ணுக்கு உரமாகி மண் வளத்தைப் பாதுகாக்கிறது. கதவுகளாகவும்,ஜன்னல்களாகவும் நமது வீடுகளை அலங்கரிப்பதும் மரங்கள்தான்.
புவி வெப்பமயமாதலால் மனிதர்கள் வாழத்தகுதியற்றதாக பூமி ஆகும் நிலை ஏற்படலாம் என அறிவியலாளர்களை அச்சம் சூழ்ந்திருக்கும் நிலையில், வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற நிலை மாறி, ஆளுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். நாம் இறக்கும் வரையிலும் நம்மைச் சுமக்கும் பூமித் தாய்க்கு மரங்கள் நடுவதை தவிர நம்மால் வேறு என்ன கைமாறு செய்துவிட முடியும்?
ஒரு கிளி வளர்த்தேன், சிறகுகள் முளைத்ததும் பறந்து போய் விட்டது; ஒரு அணில் வளர்த்தேன், கொஞ்சம் பெரிதானதும் ஓடிப் போய் விட்டது; ஒரு மரம் வளர்த்தேன்; அந்த மரம் பெரிதானபோது பறந்து போன கிளியும், ஓடிப் போன அணிலும் நான் வளர்த்த மரத்துக்கே வந்துவிட்டன. எனவே, மரம் வளர்த்தால் நம்மை விட்டுப் போன எல்லாமே திரும்ப வந்துவிடும் என்றார் அப்துல் கலாம்.
ஒட்டுமொத்த மரங்களும் இன்று மக்களைப் பார்த்து கேட்கும் கேள்வி என்னவென்றால், இன்று நீங்கள் எங்களைக் காப்பாற்றுங்கள், நாளை நாங்கள் உங்களைக் காப்பாற்றுகிறோம் எனக் கெஞ்சாமல் கெஞ்சுகின்றன. எந்த மரமாக இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் ஒரு பாடத்தை உணர்த்துவதால், ஆளுக்கு ஒரு மரம் வளர்ப்போம். ஆரோக்கியத்திற்காகவாவது மரங்கள் வளர்ப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...