/

தலைமையைத் தேடுவோம்!

உலகில் தலைசிறந்த நாகரிகங்களில் நமது இந்திய நாகரிகமும் ஒன்று என்பதை யாரும் மறுக்கவில்லை.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:22 pm

க. பழனித்துரை

உலகில் தலைசிறந்த நாகரிகங்களில் நமது இந்திய நாகரிகமும் ஒன்று என்பதை யாரும் மறுக்கவில்லை. ஒரு நாகரிகம் என்பது அடிப்படை அறிவு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பங்கள் இல்லாமல் வளர்ந்து செழித்திருக்க முடியாது. எனவே நம்மிடமும் அறிவியலும் தொழில்நுட்பமும் இருந்திருக்கின்றன என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் இருக்கின்றன. நாளந்தா, தட்சசீலம் ஆகியவை நம் அறிவின் முதிர்ச்சியை உலகுக்கு எடுத்துக்காட்டிய உயர்நிலை அடையாளங்கள். இந்த உண்மையையும் எந்த வரலாற்று ஆசிரியரும் மறுக்கவில்லை. தொன்மை மிக்க நாகரிகத்திற்கு சொந்தக்காரர்களாக இருந்த நாம் எங்கு எப்போது பின்தங்கினோம் என்பதுதான் கேள்வி.
 பொதுவாக எந்தவொரு சமூகமும் காலச்சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றித் தகுதிப்படுத்திக்கொள்ளவில்லை என்றால் அது காலத்தால் பின்னுக்குத் தள்ளப்படும். இது தத்துவம் அல்ல, வரலாறு. நாகரிகம், கலாசாரம் நிறுவனங்கள், அமைப்புகள், குடும்பங்கள், வணிகம் இவை அனைத்திற்கும் இந்த உண்மை பொருந்தும் என்பதை வரலாற்று ஆசிரியர் அர்னால்டு டாயின்பி விரிவாக விளக்கியுள்ளார்.
 உலகத்தில் ஒரு சில சமூகங்கள் விவசாயத்திலிருந்து மேம்பட்டு தொழில்நுட்பத்தையும் அறிவியலையும் பயன்படுத்தி தொழிற்புரட்சியில் ஈடுபட்டு உயர்ந்து கொண்டிருந்த சூழலில், நாம் அடிமைகளாக்கப்பட்டு கிடந்தோம். நீண்ட காலம் நாம் அடிமை வாழ்வு வாழ்ந்ததன் விளைவு, அதுவே நமக்கு சுகமாக மாறிப்போனது. எனவேதான், விடுதலை சிந்தனை இல்லாமலே, நமது பின்புலம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமலே பல நூற்றாண்டுகள் வாழ்ந்துவிட்டோம்.
 அதிலிருந்து மீள்வதற்கு நமக்கு பல நூற்றாண்டுகள் ஆகி இருக்கின்றன. நாம் மீண்டு வந்த வரலாறும் ஒரு புரட்சிகரமான வரலாறுதான். அதுதான் நம் சுதந்திரப் போராட்ட வரலாறு. இந்தியச் சுதந்திரப் போராட்டம் என்பது இந்திய மக்களின் மீட்சிக்காக மட்டும் நடந்த போராட்டம் அல்ல. ஒட்டுமொத்த போராட்டத்தின் முறைமை (ஙங்ற்ட்ர்க்ர்ப்ர்ஞ்ஹ்) எப்படி இருக்க வேண்டும் என்பதை உலகிற்குக் காட்டிய போராட்டம். அப்போராட்டம், மீட்சிக்கு முயற்சிக்கும் அனைத்துச் சமுதாயத்திற்கும் வழிகாட்டும் ஒரு போராட்டமாகும். அதுதான் அகிம்சை வழி, அதாவதுஅற வழிப் போராட்டமாகும். அடிமைப்பட்டுக் கிடந்த அத்தனை சமூகங்களுக்கும் விடுதலை பெறலாம் என்ற நம்பிக்கையைத் தந்த போராட்டம்.
 இந்த வழிமுறையை பின்பற்றிதான் கறுப்பின விடுதலைக்கு மார்ட்டின் லூதர் கிங்கும், நெல்சன் மண்டேலாவும் போராடி வெற்றி பெற்றனர். நாம் நடத்திய சுதந்திரப் போராட்டத்தால் நமக்கு சுதந்திரம் மட்டுமல்லாது, அதைவிடப் பெரிய கொடையும் கிடைத்தது. அதுதான் ஒழுக்கத்திற்கான விழுமியங்கள் மற்றும் நன்நெறி வாழ்க்கைக்கான விழுமியங்கள். இந்த உலகத்தையே அதிர வைத்தது நாம் அடைந்த சுதந்திரமல்ல; அந்த சுதந்திரத்தை அடைவதற்கு நாம் கைக்கொண்ட வழிமுறையே. அதன் மூலம் நமக்கு வாழ்க்கைக்குக் கிடைத்த விழுமியங்கள்.
 அந்த விழுமியங்களை, சுதந்திரப் போராட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள், தங்கள் வாழ்க்கைப் பாதைக்கு கிடைத்த ஊன்றுகோலாகவே நினைத்தனர். அந்த அளவுக்கு அவர்களின் நினைவிலும் பார்வையிலும் அணுகுமுறையிலும் நடத்தையிலும் செயல்பாட்டிலும் உணர்வுபூர்வமாக ஒழுக்க விழுமியங்களை பின்பற்றத் தயாராகி விட்டனர்.
 பெற்ற சுதந்திரத்தை நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். உண்மைதான். ஆனால், அதை விடவும் சிறப்பாக, மானுடத்திற்கு வழிகாட்டும் உயர்நிலை தர்மநெறிகளை நம்மால் பேணிக்காக்க முடியவில்லை. தியாகம், சேவை, எளிமை, உண்மை, சத்தியம், சகிப்புத்தன்மை, ஏழைகளின் மீது அக்கறை, தூய்மை, அகிம்சை, கூட்டுச் சமூக வாழ்க்கை, கூட்டுக் குடும்ப வாழ்க்கை, நாட்டுக்கு உழைத்தல், நல்லோரைப் போற்றுதல், சிக்கனம், சேமிப்பு போன்ற எண்ணற்ற வாழ்க்கைக்கான விழுமியங்களை சுதந்திரப் போராட்ட காலத்தில் காந்தியார் மக்களின் உணர்வுகளில் புகட்டினார்.
 ஆனால், சுதந்திரத்தை அனுபவிக்க ஆரம்பித்த நாம், தியாகத்தின் மூலம் உணர்வில் ஊட்டப்பட்ட அந்த மகத்தான வாழ்க்கை விழுமியங்களை இழந்துவிட்டோம். இந்தத் தாழ்நிலைக்கு நாம் வந்ததற்கு மிக முக்கியக் காரணம், நமக்கு வழிகாட்டிய ஆட்சியாளர்கள். இந்தச் சூழலை கோர்வால் என்பவர் 1951-ஆம் ஆண்டிலேயே படம் பிடித்துக் காட்டினார்.
 மத்திய திட்டக்குழு கோர்வாலை அழைத்து, "நம் ஆளுகை, அரசு நிர்வாகம் என அனைத்தையும் ஆய்வு செய்து நாம் சென்று கொண்டிருக்கின்ற பாதை சரியானதா என்பதைக் கண்டுபிடித்து அரசுக்குக் கூறுங்கள்?' என்று கேட்டுக்கொண்டது மத்திய திட்டக்குழு. அதன்படி, அவரும் ஆய்வு செய்து ஓர் அறிக்கையினை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தார். அந்த ஆய்வு அறிக்கையில் இந்தியா எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார் கோர்வால்.
 "சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தி, இந்திய மக்களிடம் மிக உன்னதமான வாழ்க்கை நெறிகளை உணர்வு நிலைக்குக் கொண்டு சென்று அந்த நெறிகளை எல்லாத் தரப்பு மக்களையும் பின்பற்ற பழக்கியிருந்தார் . அந்த ஒழுக்க நியதிகள் என்பது மிக உயர்ந்த வாழ்க்கை விழுமியங்கள். அந்த விழுமியங்கள்தான் இந்தியாவின் ஆன்மாவாகவும் சக்தியாகவும் வியந்து பார்க்கப்பட்டது. அது மட்டுமல்லாது எல்லாத் தரப்பு மனிதர்களும் தங்கள் வாழ்க்கையில் அந்த விழுமியங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற சூழலுக்கு அன்று இருந்த தலைமை வழிகாட்டியது. எளிய வாழ்க்கையில் ஏற்றமுடன் வாழ்வதை பாமரனையும் உணர வைத்தார் காந்தி.
 காந்தியின் கீழ் செயல்பட்ட தலைவர்கள் சாதாரண ஏழை எளிய மக்கள் வாழ்ந்திடும் வாழ்வு நிலைக்குத் தங்களை ஆட்படுத்திக்கொண்டனர். அந்தத் தலைவர்கள் தியாகத்திற்கும் நேர்மைக்கும் சத்தியத்திற்கும் எளிமைக்கும் நியாயத்திற்கும் முன்மாதிரிகளாக விளங்கினார்கள். இந்த வாழ்க்கை நெறிமுறைகள் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வந்தால் இந்தியாதான் உலகுக்கு வழிகாட்டும் தேசமாக இருக்க முடியும். அதுதான் காந்தியின் கனவாகவும் இருந்தது. அவர் காட்டிய திசை மாற்று திசை, உன்னத திசை. அந்த திசை மேற்கத்திய வளர்ச்சித் திசைக்கு முற்றிலும் மாறுபட்ட திசை.
 ஆனால், நாடு சுதந்திரம் அடைந்து மூன்று நான்கு ஆண்டுகளுக்குள் அந்த உயரிய வாழ்க்கை விழுமியங்கள் அனைத்தும் இந்திய அரசியலில் ஆட்சியில் மற்றும் நிர்வாகத்தில் தகர்ந்து கொண்டு வருகின்றன' என்று எடுத்துக்காட்டினார் கோர்வால். "அரசியல்வாதிகள், மேற்கத்திய வாழ்வு முறைக்குத் திரும்பிவிட்டனர். இதற்கு ஒரு காரணம் உண்டு. அதாவது நாடு மேற்கத்திய வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும்போது, மேற்கத்திய வாழ்க்கைமுறை தானாக நம்மிடம் வந்து சேர்ந்துவிட்டது. மேற்கத்தியமயமும் நவீனமயமும் நம்மை ஆட்கொண்டுவிட்டன. எளிய வாழ்க்கை என்பது கடந்த கால வரலாறாக மாறிவிட்டது. ஆடம்பர வாழ்க்கைக்கு அரசியல்வாதிகள் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு விட்டனர்.
 பொது வாழ்வில் இருப்போர், குறிப்பாக, ஆட்சியில் இருப்போரின் செயல்பாடுகளின் மீது மக்கள் நம்பிக்கை இழக்க ஆரம்பித்துவிட்டனர். இந்தச் சூழல் வெகு வேகமாக இந்திய மக்களை வேறு திசைக்கு அழைத்துச் செல்ல போகிறது என்பதைச் சுட்டிக்காட்டினார். எனவே இந்தச் சூழலிருந்து மீள நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், உயர் பதவி வகிப்பதற்கான ஆள்களைத் தேர்வு செய்யும்போது, கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரராகவும், சேவை மனப்பான்மை கொண்டவராகவும், உயர் தர்மநெறிகளை உயிராக எண்ணிப் போற்றி, அதனைத் தனது தனிவாழ்க்கையிலும் கடைப்பிடிப்பவராகவும் இருக்கும் ஆள்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இல்லையேல், சுதந்திரப்போரில் அடைந்த உயர்வையும் மரியாதையையும், உலக அரங்கில் இந்தியா இழந்துவிடும்' என்று 1951-ஆம் ஆண்டிலேயே எச்சரித்தார் கோர்வால்.
 இன்று நம் அரசியல் எங்கு இருக்கிறது? கொள்கையற்றதாக, பொய்மை நிறைந்ததாக, அறம் பிறழ்ந்ததாக திகழ்கிறது. அரசியல் ஊனமுற்று விளங்குகின்றது. நம் கல்வி எப்படி இருக்கிறது? தன் சுகம் பெருக்க தன் வசதி பெருக்க மக்களைச் சுரண்டும் உத்திகளை கற்றுக்கொள்வதாக மாறிவிட்டது. வணிகத்திற்கு எந்த தர்மமும் இல்லை. எல்லையில்லா லாபம், அந்த லாபம் தன் புத்தியால் வந்ததாக விளக்கம். உழைப்பே இல்லாமல் செல்வம் சேர்க்கக் கற்றுக்கொண்டு விட்டோம். இவற்றையெல்லாம்தான் "ஏழு பாவங்கள்' என்று மகாத்மா காந்தி அன்றே கூறினார்.
 நாம் பொருளாதாரத்தில் வளர்ந்திருக்கலாம்; அறிவியலில் மேலோங்கி இருக்கலாம்; தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கலாம். ஆனால் நமக்குப் பெரிய பலமாக விளங்கிய ஒழுக்க நியதிகளில் நாம் தாழ்வுற்று நிற்கிறோம் என்பதைத்தான் நம் அரசியல், வணிகம், கல்வி, மதம் அனைத்தும் காட்டுகின்றன. நாம் மீட்சி பெற வேண்டுமென்றால், நம் நாட்டுக்கு உரித்தான ஒழுக்க நியதிகள் எவையெவை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நம் சமூகத்தை நெறிப்படுத்தும் பணியில் நாம் உடனடியாக இறங்கியாக வேண்டும். அதற்கான மாற்றுத் தலைமை இன்று நமது சமூகத்திலும் அரசியலிலும் தேவை. தேடுவோம் நமக்கான தலைமையை!
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.