/

வங்கித் துறையில் நடப்பது என்ன?

நம் பொது துறை வங்கிகளின் பொருளாதார நிலைமையோடு, சாதாரண குடிமகனின் அன்றாடப் பொருளாதார நிலைமையை பாதிக்கும் நேரடி மற்றும் மறைமுக வரிப்பணமும் பின்னிப் பிணையப்பட்டிருப்பதால்

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:15 pm

எஸ். ராமன்

நம் பொது துறை வங்கிகளின் பொருளாதார நிலைமையோடு, சாதாரண குடிமகனின் அன்றாடப் பொருளாதார நிலைமையை பாதிக்கும் நேரடி மற்றும் மறைமுக வரிப்பணமும் பின்னிப் பிணையப்பட்டிருப்பதால், அந்த வங்கிகளின் நிதி நிலை அறிக்கைகளை, நாம் அனைவரும் ஓரளவாவது படித்துப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். 
கடந்த வாரத்தில் வெளியிடப்பட்ட பொதுத் துறை வங்கிகளின் டிசம்பர் 2017க்கான காலாண்டு நிதிநிலை அறிக்கைகள், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாகவே அமைந்துள்ளன எனலாம். 
உதாரணமாக, நாட்டின் முதன்மை வங்கியான ஸ்டேட் பாங்க் ரூ.2416 கோடி நஷ்டக் கணக்கை காட்டியதோடு மட்டுமின்றி, அதன் வாராக்கடன்கள், சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருப்பது பொருளாதார வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது எனலாம். நீண்ட காலமாக நலிந்த நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் யூகோ வங்கி, ரூ.1016 கோடி நஷ்டக் கணக்குடன், ரூ.25,382 கோடி அளவிலான வாராக்கடன்களை பிரசவித்திருக்கின்றது. ரூ.638 கோடி அளவிலான நஷ்டத்தோடு, ரூ.13,720 கோடி அளவிலான வாராக்கடன்களுடன் யுனைடெட் பாங்க் சிக்கித் தவிக்கிறது. பெரும்பாலான மற்ற வங்கிகளின் சோகக் கதையும் இதுபோன்றதுதான்.
கடந்த 6 மாத இடைவெளியில், பொதுத் துறை வங்கிகளின் வாரக்கடன்கள், மொத்த கடன் தொகையில் 8.34 சதவீதத்திலிருந்து, 9.45 சதவீதமாக வளர்ந்திருப்பது பெரும் கவலைக்குறிய எதிர்மறை பொருளாதார நிகழ்வாகும். 
இம்மாதிரி, மேன்மேலும் பழுதடைந்து கொண்டிருக்கும் வங்கிகளின் பொருளாதார நிலைமையை ஆராயும்போது, கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு காலாண்டு முடிவுகளின் அறிவிப்பின்போதும், அதற்கு அடுத்த காலாண்டில் நிலைமை சீரடைந்து விடும் என்ற நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்ததோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக வங்கி நிர்வாகங்கள் கருதி செயல்பட்டதுபோலவே நமக்குத் தோன்றுகிறது. எதிர்மறை விமர்சனங்களைத் தற்காலிகமாகத் தவிர்க்கும் நோக்கத்துடன் கூடிய வங்கிகளின் இம்மாதிரி அணுகுமுறைகள், பொதுமக்களிடையே அவைகளின் மீதான நம்பகத்தன்மையை வெகுவாக பாதித்துவிட்டன என்று சொல்லலாம்.
ஒரு வங்கியால் வழங்கப்பட்ட கடன் சார்ந்த முதல் அல்லது வட்டித் தொகை தவணை தொடர்ந்து 90 நாட்களுக்கு மேல் திரும்பச் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தால், அவை வாராக்கடனாக கருதப்பட்டு, அதற்கான ஒதுக்கீடுகள் வங்கியின் லாபத்திலிருந்து எடுக்கப்படுகிறது. எனவே, ஒரு வங்கியின் வாராக்கடன் அதிகரிக்குமானால், அதன் லாபக்கணக்கில் நிச்சயம் தொடர்ந்து ஓட்டை விழுந்து, மூலதனத் தொகையும் கரைந்துவிடும் அபாயம் காத்து நிற்கும்.
உலக மற்றும் உள்நாட்டுப் பொருளாதார சுணக்கங்கள் போன்ற வங்கி கடனாளிகளின் கட்டுபாட்டுக்குள் அடங்காத சில காரணிகள் கட்டுக்குள் வரும்வரை, தொழில் துறை பாதிக்கப்படாமல் இருக்கும் நல்ல நோக்கில், திரும்பச் செலுத்தப்படாமல் நிலுவையில் இருக்கும் கடன்களை வாராக்கடன்களாக மாற்றாமல், மறுசீரமைப்புக் கடன்களாக மாற்றி அமைக்கும் பல திட்டங்களை இந்திய ரிசர்வ் வங்கி, 2008-இல் துவங்கி, கடந்த சில வருடங்களாக அவ்வப்போது அறிவித்து வந்திருக்கிறது. 
இம்மாதிரி நல்நோக்கு திட்டங்களின் உதவியுடன், தற்காலிக இடர்பாடுகளுக்கு உள்ளான சில தொழில் நிறுவனங்கள், மீண்டு எழுந்து, நிலுவையில் இருந்த கடன் மற்றும் வட்டித் தொகையை முறையாக செலுத்தி வருகின்றன. ஆனால், இந்த திட்டங்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி, பல தகுதியற்ற வாராக்கடன்களை மறு சீரமைப்பு கடன்களாக மாற்றிய பெருமை வங்கிகளை சாரும். அதன் பின்விளைவுகளைத்தான் அவை தற்போது சந்தித்துக் கொண்டிருக்கின்றன. 
இம்மாதிரி செயல்பாடுகள், சம்பந்தப்பட்ட வங்கிகளின் வாராக்கடன் அளவை தற்காலிகமாக குறைத்துக் காட்டிக் கொண்டிருக்க உதவி கொண்டிருந்தாலும், எண்ணற்ற எலும்புக் கூடுகள் வங்கிகளின் அலமாரிகளில் இன்னும் அடைந்து கிடக்கின்றன. 
2016-இல் ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட திட்டத்தின் கீழ், மறைக்கப்பட்ட அனைத்து வாராக்கடன்களையும் குறுகிய காலத்தில் கணக்கில் காட்ட வங்கிகள் அறிவுறுத்தப்பட்டன. வங்கிக் கடன் கணக்குகளை, குறுகிய காலத்தில் சுத்தம் செய்யும் திட்டமாக இது அறியப்பட்டது. 
இத்திட்டத்தால், வங்கிகளின் வாராக்கடன் அளவு பெருமளவில் அதிகரித்து, அதற்கான ஒதுக்கீடுகளும் வளர்ந்தன. இந்த 'ஒரு முறை சுத்திகரிப்பு' திட்டத்தினால் வங்கிகளின் வாராக்கடன் கணக்கு விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அதற்கு பிறகு அவை 'சுத்த புத்தக கணக்கை' துவங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. வழங்கப்பட்ட கடன் தொகையை வேண்டுமென்றே திரும்ப செலுத்தாத சில பெரும் கடனாளி நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு, திவால் நடவடிக்கைகளுக்காக அந்த நிறுவனங்களின் பெயர்கள், வணிக நிறுவனங்களின் தேசிய சட்ட தீர்ப்பாயத்திற்குத் தெரிவிக்கப்பட்டன. வாரக்கடன்களை வசூலிக்கும் கடைசி பெரும் முயற்சியாக இது கருதப்பட்டது. 
அம்மாதிரி தெரிவிக்கப்பட்ட சுமார் 350 நிறுவனங்களில், 10 நிறுவனங்களைத் தவிர மற்றவைகளிலிருந்து கடன் தொகையை திரும்பப் பெறும் சாத்தியக்கூறு அதிகம் இல்லையென்றுதான் முதல் தகவல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 
இந்த வாரக்கடன் நிலையை அடிப்படை அளவுகோலாக கருதி, வாராக்கடனால் கரைந்து போன வங்கிகளின் மூலதன தொகையை ஓரளவு நிறைவு செய்ய மறு முதலீட்டுத் திட்டம் மத்திய அரசால் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தளர்ந்த வங்கிகளின் தேவைக்கும், செயல்பாட்டுத் திறனுக்கும் ஏற்ப, இந்த மூலதன தொகைகள், 2 ஆண்டுகளில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 
ரிசர்வ் வங்கியால் அடையாளம் காணப்பட்ட பெரும்கடனாளி நிறுவனங்களைத் தவிர, ரிசர்வ் வங்கியின் பல்வேறு நல்நோக்கு மறுசீரமைப்பு திட்டங்களின் கீழ் வாரக்கடனாக மாற்றப்படாமல், மறுசீரமைக்கப்பட்ட கடன் தொகைகளை வாராக்கடன் வளையத்திற்குள் கொண்டு வரவேண்டிய தேவையில்லை என்று நினைத்து வங்கிகள் ஆறுதல் பெருமூச்சுவிட்டன. இதில், பெரும்பாலான நிறுவனங்கள், நிர்வாக சீரழிவு, கடன் தொகையை வேறு செலவினங்களுக்கு பயன்படுத்துவது போன்ற முறைகேடுகளால் நலிந்தவை என்பதால், அவை மீண்டு எழுந்து, வங்கிக் கடனை திரும்பச் செலுத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்றே சொல்லலாம்.
இந்த நிலைமை தொடராமல் தடுக்கும் பொருட்டு, ரூ.2000 கோடிக்கு மேல் கடன் தொகை நிலுவையில் உள்ள, மறுசீரமைப்பு என்ற பாதுகாப்பு கேடயத்திற்குள் ஒளிந்திருக்கும் நிறுவனங்களிடமிருந்தும் கடன் தொகையை வசூலிக்கும் திட்டத்தை சம்பந்தப்பட்ட வங்கிகள், 6 மாத காலத்திற்குள் செயல்படுத்த வேண்டும். 
அவ்வாறு செயல்படுத்த முடியவில்லையென்றால், கடனாளி நிறுவனங்களை திவால் நடவடிக்கைகளுக்கு உள்படுத்த வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் தற்போதைய அறிவிப்பு வங்கிகளின் பொருளாதார நிலைமையை மேலும் கீழ் நோக்கி செலுத்தும் வல்லமை படைத்ததாகும். இதனால் வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்து, அவைகளின் லாபக் கணக்கு மேலும் பழுதடையும் வாய்ப்பு உள்ளது. 
மேலே குறிப்பிட்ட புதிய நடவடிக்கையால், வங்கிகளின் மூலதனத் தேவை மேலும் பன்மடங்கு பெருகும். அந்த தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒவ்வொரு ரூபாயும் நாம் கஷ்டப்பட்டு அரசாங்கத்துக்கு செலுத்தும் வரிப்பணத்திலிருந்துதான் எடுக்கப்படுகின்றன என்பதால், இது நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட கவலையாகும்.
சமீபத்தில் வெளியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிகழ்ந்த ரூ.11,000 கோடி கடன் முறைகேடு சார்ந்த செய்திகள் நம் கவலையை மேலும் அதிகரிக்கச் செய்கின்றன. இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்படும் தொழிலதிபர், சமூகத்தில் ஓர் பெரும்புள்ளி. முறைகேடு தொடர்பான செய்தி வெளியாகி, முதல் தகவல் அறிக்கை பதியப்படுவதற்கு முன்பு, அவர் வெளிநாட்டுக்கு சென்றுவிட்ட தகவல், வங்கிகளில் பெறப்பட்ட பெரும் கடன் தொகையை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற விஜய் மல்லையாவின் நடவடிக்கைகளையே நமக்கு நினைவுபடுத்துகின்றன.
இந்த முறைகேடுகளில் பல வங்கி அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. வங்கி அதிகாரிகளை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை பணி இடமாற்றம் செய்யாததும் இந்த முறைகேடுகள் 2011லிருந்து மறைக்கப்பட்டு வந்தததற்கு ஒரு முக்கியக் காரணமாக கருதலாம். 
பல வங்கி அதிகாரிகள் அரசியல் செல்வாக்குடன் வலம் வருவது இதற்கு மூலகாரணமாகும். முந்தைய எதிர்மறை நிகழ்வுகளிலிருந்து வங்கிகள் பாடம் கற்கத் தயாராக இல்லை என்பதையே இம்மாதிரி சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன.
கடனாளிக்கு கடன் வழங்குவது என்பது ஒரு கலை என்றால், அந்தக் கடனை திரும்ப வசூலிப்பது மற்றொரு பிரத்தியேக கலையாகும். வங்கி வியாபாரத்தை திறம்பட நடத்த தேவையான இந்த இரு கலைகளையும் வங்கி நிர்வாகங்கள் சரிவர கற்று பயன்படுத்தத் தவறியதே, வங்கிகளின் தற்போதைய நிலைமைக்கு முழுக் காரணமாகும். 
பெரும் அளவில் பணம் புழங்கும் தளமான வங்கிப் பணியில் திறமையுடன் நேர்மை கை கோத்தால்தான், முறைகேடுகளுக்கான வாய்ப்புகளை வலுவிழக்கச் செய்ய முடியும். அதற்கான சுயபரிசோதனையில் வங்கி நிர்வாகங்கள் தங்களை அடிக்கடி உட்படுத்திக் கொள்வது அத்துறையின் சீரான வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.