கண்களை விற்று சித்திரம் வேண்டாம்!
கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் நுரையீரல் புற்றுநோய் எண்ணிலடங்கா மக்களைப் பாதித்து வருகிறது.


கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் நுரையீரல் புற்றுநோய் எண்ணிலடங்கா மக்களைப் பாதித்து வருகிறது. இதற்கு தீர்வின்றி லட்சக்கணக்கான மரணங்களை மனிதகுலம் சந்தித்து வருகிறது. இதனைக் குணப்படுத்த மிகப் பெரிய பொருட்செலவில் நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை, அதற்கு அரசு நிதியுதவி, மேலும் மானிய விலையில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள், இத்தகைய மருந்துகளுக்கு மத்திய-மாநில அரசுகள் கோடிக்கணக்கில் செலவழிக்கப்படும் நிலை ஆகியவை தொடர்கின்றன.
இதில் நாம் அறியாதது ஒன்று, நமது மனிதகுலம் மட்டுமின்றி மக்களுடன் வாழும் ஆடு, மாடு போன்ற விலங்குகள், வனங்களில் வாழும் அரிய மிருகங்கள் அனைத்துக்கும் மூச்சுக் குழாய் உள்ளிட்ட நுரையீரல் பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுகிறது. இதற்கான மூல காரணம், காற்றில் கலந்துள்ள நச்சு மாசுதான் என்று பல ஆய்வு முடிவுகள் ஏற்கெனவே நிரூபித்துள்ளன.
காற்றில் நச்சு மாசு கலப்பதற்கு மிக முக்கியமான காரணி புகை மாசு. இந்தப் புகை மாசு, வேதியியல் பொருள்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் புகையினால்தான் என்று நம்மில் பலர் தவறாகக் கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால், புகை மாசு குறித்த கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை என்னவென்றால், தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதிகளில் வெளியேறும் புகை மாசுவைவிட பிளாஸ்டிக் பொருள்கள் மக்களின் பயன்பாட்டில் உள்ள நாடுகளில், அதிலும் குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளை பொது வெளியில் எரியூட்டப்படும் பகுதிகளில்தான் இந்த நச்சுப் புகை மாசு மிக அதிகம்.
பிளாஸ்டிக் கழிவுகள் எரியூட்டப்படுவதால் வெளியேறும் புகைதான் காற்றில் கலந்து அதை மனிதர்கள் சுவாசிக்கும்போது நுரையீரல் புற்றுநோய்க்கு காரணியாக உள்ளது என்ற உண்மை, நம்மில் பலருக்குத் தெரியாது. இந்தத் தருணத்திலாவது புகை மாசின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் வெற்றிக்கு "பிளாஸ்டிக்' அபரிமிதமாக உதவியது. அதைத் தொடர்ந்து அதன் உற்பத்தி அசுர வேகத்தில் அதிகரித்தது. ஆக்டோபஸ் போன்று மெல்ல மெல்ல உலகையே சுற்றி வளைத்துக் கொண்டது. 1960- ஆம் ஆண்டில் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் மிதப்பதை மக்கள் கண்டனர். அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக் ஆபத்து என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
"பிளாஸ்டிக்' ரசாயனத்தால் ஆபத்து அதிகரித்து வருகிறது என அமெரிக்காவைச் சேர்ந்த ரேச்சல் கார்சன் 1962-ஆம் ஆண்டு எச்சரித்தார். மண்ணில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பலநூறு ஆண்டுகள் ஆனாலும் மக்குவதில்லை. அவற்றை தீயிட்டுக் கொளுத்துவதால் ஏற்படும் நச்சுப் புகையால் மனிதர்களின் சுவாச மண்டலம் பாதிப்புக்குள்ளாகி, நுரையீரலில் நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. காற்று மண்டலம், நிலம், நீர் ஆகியவற்றை அது நஞ்சாக்குகிறது. புற்றுநோய்க் கிருமிகளைத் தோற்றுவிக்கிறது.
இந்தியாவில் 77 சதவீத மக்கள் பிளாஸ்டிக் கழிவுகளின் நச்சுப் புகையை சுவாசிக்கின்றனர். சுவாசக் கோளாறுகளால் 2017-ஆம் ஆண்டில் மட்டும் தில்லியில் 15,000 பேர் உயிரிழந்துள்ளனர். மக்களின் வாழ்வாதாரமான நிலத்தடி நீர் முழுமையாக வற்றிப் பாலைவனமாகிவிடும்; "கஜா' புயலைப் போன்று, பிளாஸ்டிக் கழிவுகளின் நச்சுப் புகை மனித குலத்தின் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இதனால்,10 கோடி மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும்.
இதனால் ஆண்டுக்கு இரண்டு லட்சம் மக்கள் உயிரிழந்து வருகின்றனர் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. சுத்தமான குடிநீர் அறவே கிடைக்காமல் மாசடைந்த, தூய்மையற்ற, யுரேனியம் கலந்த நீரால் மனித இனம் பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
புகை மாசு வெளியேற்றத்தால் புவி வெப்பமயமாகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக பருவ நிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் நமது பகுதிகளில் மழையின்மை அல்லது பருவம் தவறிய மழைப் பொழிவு ஏற்படுகிறது. இதனால்தான் புகை மாசு வெளியேற்றத்தை குறிப்பிட்ட அளவுக்கு குறைத்து, அதன் மூலம் புவி வெப்பமயமாதலையும், பருவநிலை மாற்றத்தையும் கட்டுப்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை நிறைவேற்றிட பிரான்ஸ் நாட்டில் கடந்த 2015- ஆம் ஆண்டு சர்வதேச நாடுகள் கூடி முயற்சி மேற்கொண்டன.
இந்த ஒப்பந்தம் இறுதி வடிவம் பெறுவதற்கு, மிகவும் கடினமான சூழ்நிலைகளைக் கடந்து வரவேண்டிய நிலை ஏற்பட்டது. பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள நாடுகளுக்கும், வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் இடையில் கருத்தொற்றுமை ஏற்படாத காரணத்தால் இழுபறி ஏற்பட்டது.
மேலும் 2016-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதியன்று சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற பருவநிலை மாற்றத்துக்கான உலக நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற "பருவநிலை குறித்த விவாத மாநாடு' நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் என்ற முறையில் நானும் (கே.பி.ராமலிங்கம்), அன்றைய கர்நாடக சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த தினேஷ் குண்டுராவும் பங்கேற்றோம்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பல நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிப்புக்கே தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் பிளாஸ்டிக் தயாரிப்புக்குத் தேவைப்படும் மூலப் பொருள்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கவும் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து போலந்து நாட்டின் கடோவைஸ் நகரில் இந்த ஆண்டு கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை 200 நாடுகள் கூடி விவாதம் நடத்தின. இரு வகையான நாடுகளுக்கிடையில் உருவான மாறுபட்ட கருத்துகள் காரணமாக தொடர்ந்து கடும் விவாதங்கள் நடைபெற்றன. இதனால், திட்டமிட்டதைவிட ஒருநாள் கூடுதலாக விவாதம் நடைபெற்றது. எனினும், இந்த ஆரோக்கியமான, அவசியமான, அத்தியாவசியமான விவாதம் முடிவுக்கு வந்து, உலக நாடுகள் மகிழத்தக்க வகையில் ஒப்பந்தத்தின் செயல் திட்டத்துக்கு சர்வதேச நாடுகள் கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி ஒப்புதல் அளித்தன.
1880-ஆம் ஆண்டிலிருந்து 2012-ஆம் ஆண்டுவரை பூமியின் சராசரி வெப்பநிலை 0.85 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அண்டார்டிகா கண்டத்தின் பனிக்கட்டிகள் உருகி கடலின் நீர் மட்டம் அதிகரித்து, பல தீவுகளும் கடலோரப் பகுதிகளும் கொஞ்சம் கொஞ்சமாக கடல் கொள்ளும் அபாயத்தில் உள்ளன. மேலும், வெப்ப அதிகரிப்பால் காற்று மண்டல சுழற்சியில் மாற்றங்கள் ஏற்பட்டு புயல், வெள்ளம், வறட்சி போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
மனிதர்களின் தொழிற்புரட்சிக்குப் பிறகு பூமியை வெப்பமாக வைத்திருக்கும் கரியமில வாயு, நச்சு புகை மாசு உள்ளிட்டவை காற்று மண்டலத்தில் அதிக அளவு கலக்கத் தொடங்கிவிட்டதால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு பேரழிவுகளை ஏற்படுத்தத் தொடங்கி விட்டது. இந்தப் பாதிப்புகளை பெருமளவு குறைக்க கரியமில வாயு உள்ளிட்ட வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் வாயுக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை, பொது வெளியில் எரியூட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து வெளியேறும் புகை ஆகியவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.
விவசாயிகளுக்கும் "பிளாஸ்டிக்' ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. நீர் நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நகர்ப்புறங்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மழைக்காலங்களில் விவசாய நிலங்களில் கலக்கிறது. ஏரி, குளங்களை ஆக்கிரமித்துள்ளது. சுமார் 1,350 நோய்களால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது; இதற்கு முழுமையான காரணம் பிளாஸ்டிக் கழிவுகளே.
ஒட்டுமொத்த மனித வாழ்வையே பல்வேறு நிலைகளில் "பிளாஸ்டிக்' உபயோகம் சிதைத்துச் சீரழித்துவிட்டது. மனித குலத்துக்கு ஒன்றே செய்வோம்; நன்றே செய்வோம்; அதையும் இன்றே செய்வோம்! எனவே, கட்சி பேதமின்றி மனித இனத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு கட்சியும் இயக்கம் தொடங்கி பிளாஸ்டிக் பொருள்களுக்கு எதிராகச் செயல்பட வேண்டும். எந்தவொரு நிறுவனத்தின் மிரட்டலுக்கும் அஞ்சாமல் "பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை' என்ற அறிவிப்பிலிருந்து தமிழக அரசு பின்வாங்கக் கூடாது.
தமிழகத்துக்குள் எந்த வடிவத்திலும், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் பொருள்கள் தலைகாட்ட அனுமதிக்கக் கூடாது! விவசாயிகள் இணைந்து நின்று இந்தப் போரிலும் வெற்றி காண வேண்டும். நகர் மக்களையும் நாம் இணைத்துக் கொள்வது அவசியம். ஏனெனில், நகர்ப்புறங்களில் பிளாஸ்டிக் கழிவுகளால் கழிவுநீர்ப் பாதையில் அடைப்புகள் ஏற்படுவதால் சாக்கடை நீர் தேங்கி சுகாதாரச் சீர்கேட்டுக்கு வழி வகுக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
மனித குல அழிவைத் தடுப்பது முக்கியமா? சிலரது வியாபாரம் முக்கியமா? கண்களை விற்று சித்திரம் வாங்குவது புத்திசாலித்தனம் இல்லை!
கட்டுரையாளர்:
தலைவர்,
இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...