/

தேர்தலும் கணிப்புகளும்

இந்தியாவில் அடுத்த ஆண்டு வரவிருக்கும் தேர்தலுக்கான வேலைகள் அனைத்துத் தரப்பிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நம் நாட்டில் நடந்த கருத்துக்கணிப்புகளைப் பற்றியும், அவற்றில் ஏற்பட்ட பிழைகளைப் பற்றியும்

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:32 pm

க. பழனித்துரை

இந்தியாவில் அடுத்த ஆண்டு வரவிருக்கும் தேர்தலுக்கான வேலைகள் அனைத்துத் தரப்பிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நம் நாட்டில் நடந்த கருத்துக்கணிப்புகளைப் பற்றியும், அவற்றில் ஏற்பட்ட பிழைகளைப் பற்றியும் இங்கிலாந்து நாட்டு சமூகவியல் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ஜேம்ஸ் மெனோர், பல்வேறு தகவல்களை புது தில்லியிலிருந்து வெளிவரும் "செமினார்' என்ற ஆய்விதழில் ஒரு கட்டுரை மூலம் வெளிக்கொணர்ந்துள்ளார். அதில், நம் ஊடகங்களும், கருத்தாளர்களும் ஊடக விவாதங்களிலும், கட்டுரைகளிலும் எவ்வளவு பிழைகளான கருத்துகளைத் தந்துள்ளனர் என்பதைப் படம்பிடித்து காண்பித்துள்ளார். 
இந்தியச் சமூகப் பொருளாதார, கலாசார, அரசியல் பின்னணி பற்றிய சரியான புள்ளிவிவரமும் புரிதலும் இல்லாவிட்டால் நாம் முன்வைக்கும் கருத்துகள், விவாதங்கள் அனைத்தும் பொருளற்றவையாகும் என்று விவரித்துள்ளார். 
ஏனெனில், இந்தியாவில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வுகளும் வேறுபாடுகளும் இந்தியாவைப் புரிந்துகொள்வதற்கு இருக்கும் சவால்கள் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொண்டு கருத்துக்கணிப்புப் புள்ளிவிவரங்களை பகுத்துப் பார்த்து கருத்துக் கூறவேண்டும் என்று கூறியுள்ளார். 
இதே கருத்தை மோரிஸ் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேய சமூகவியலாளரும், மைரோன் வெய்னர் என்ற அமெரிக்க சமூகவியலாளரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். இந்த இருவருமே இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து தொடர்ந்து, தாங்கள் இறக்கும்வரை இந்திய அரசியலை ஆய்வு செய்து கட்டுரைகளும், புத்தங்களும் எழுதியவர்கள். உயர்நிலை ஆய்வாளர்களால் பெரிதும் போற்றப்படக்கூடியவர்கள்.
இந்த இருவரும் தாங்கள் இறப்பதற்கு முன் இந்தியா பற்றி கூறும்போது "இந்தியா ஒரு புதிரான நாடு, அதைப் புரிந்துகொள்வது என்பது மிகக் கடினமான ஒரு செயல்' என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளனர். அதேபோல், அரண் லிஜ்பார்ட் என்பவரும் "இந்திய மக்களாட்சி என்பது வரையறைக்குள் அடங்காத ஒரு மகா சக்தி' என்று கூறியுள்ளார். அது மட்டுமல்ல, "இதுவரை மக்களாட்சி பற்றி உருவாக்கப்பட்டுள்ள கோட்பாடுகள் அனைத்தையும் தகர்க்கும் நிலையில் இந்திய மக்களாட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது' எனக் கூறியுள்ளார்.
இந்தக் கருத்தை உள்வாங்கிய நிலையில்தான், தில்லியில் பேராசிரியர் ரஜினி கோத்தாரி உலகத்தரத்தில் இந்திய அரசியல் அறிவியலில் ஆராய்ச்சி நடைபெற வேண்டும் என்ற குறிக்கோளை முன்வைத்து ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கினார். அந்த நிறுவனத்தில் "லோக் நிதி' என்ற ஒரு பிரிவை ஏற்படுத்தி தேர்தல் ஜனநாயகம் தொடர்பான மக்கள் கருத்துக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்தியாவிலும், உலக அளவிலும் நடைபெறும் இந்தியா பற்றிய ஆராய்ச்சிகளுக்கு நம்பகத்தன்மை கொண்ட புள்ளி விவரங்களை சேகரித்தளிக்கும் நிறுவனமாக இந்த "லோக் நிதி' அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இன்று தரமான ஆராய்ச்சிக்கு, நம் நாட்டிலும், வெளி நாட்டிலும் இந்தியத் தேர்தல் பற்றிய ஆய்வுக்கு இந்த நிறுவனத்தால் திரட்டப்படுகின்ற புள்ளிவிவரங்களைத்தான் பயன்படுத்துகின்றனர். மேற்கத்திய நாடுகளில் பல பல்கலைக்கழகங்கள் "லோக் நிதி' திரட்டிய புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தியத் தேர்தல் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளுகின்றன. ஜேம்ஸ் மெனோரும் இந்த "லோக் நிதி' திரட்டிய புள்ளிவிவரங்களை வைத்துத்தான் நம் ஊடக கருத்துக் கணிப்புகளையும் கருத்தாளர்களின் கருத்துகளையும் விமர்சனம் செய்துள்ளார். "இந்தியாவில், ஊடகங்கள் மேற்கத்திய நாட்டில் நடத்தப்படும் கருத்துக்கணிப்பு முறைமைகளைப் பின்பற்றி புள்ளிவிவரங்களைச் சேகரிக்கின்றன. இது முற்றிலும் தவறானது. இந்தியச் சூழக்கேற்ப இந்த முறைமையியல் மாற்றிமைக்கப்பட்டு புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டிருக்க வேண்டும்' என்று தன் வாதத்தை வைத்திருக்கிருன்றார் ஜேம்ஸ் மெனோர். "இந்தக் கருத்துக்கணிப்புகளால் பலர் தவறான முடிவுகளை எடுக்க வழி செய்துவிட்டனர். இந்தத் தவறான முறைமையினால் அறிவுத்தளத்தில் பல எதிர்பாராத விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளார். 
இதற்குப் பல உதாரணங்களை அவர் முன்வைக்கின்றார். 2004-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றபோது உள்நாட்டு ஊடகங்களும், உலக ஊடகங்களும் கிராமப்புற ஏழைகள் மிகப்பெரிய புரட்சியைச் செய்து தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அகற்றிவிட்டனர் என்ற கருத்தை முன்வைத்து பெரும் விவாதங்களை நடத்தின. அவர், "லோக் நிதி' அமைப்பு திரட்டிய புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு இந்தக் கருத்து எவ்வளவு அறிவியல் சிந்தனைக்கு அப்பாற்பட்டது என்பதை விளக்கியுள்ளார். 
அதாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அதிக அளவில் ஆதரவைப் பெற்றது நகரங்களில்தான், அதுவும் பொருளாதாரத்தில் மேம்பட்ட சமூகங்களிலிருந்துதான் என்ற உண்மையை "லோக் நிதி' திரட்டிய புள்ளிவிவரங்களை வைத்து நிரூபித்துள்ளார். எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியை வீழ்த்தியது கிராமத்து ஏழை மக்கள் அல்ல; நகரத்து மக்களும் வசதியானவர்களும் என்பதை ஜேம்ஸ் மெனோர் உறுதிப்படுத்தியுள்ளார். 
2009-ஆம் ஆண்டு, மீண்டும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றது. அப்போது, ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை இளைஞர்களின் சக்தி கொண்டு புனரமைத்துவிட்டார் என்றும், அந்தக் கூட்டணிக்கு இளைஞர்களின் வாக்கு அதிகமாகக் கிடைத்தது என்றும் பல்வேறு கட்டுரைகளும் வெளிவந்தன; ஊடங்களிலும் விவாதங்கள் நடைபெற்றன. மேற்கூறிய கருத்துகளின் உண்மைத்தன்மை பற்றி அறிய "லோக் நிதி' புள்ளிவிவரங்களை வைத்து அலசிப் பார்த்து, காங்கிரஸ் கட்சிக்கு இளைஞர்களின் ஆதரவு என்பது குறைவாகவே இருந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டியுள்ளார். அதுமட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த முடியாமல் திணறுவதை ராகுல் காந்தியே பல கூட்டங்களில் வெளிப்படுத்தியதையும் ஜேம்ஸ் மெனோர் விளக்கியுள்ளார். 
காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல, அதன் கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகளும் அதே நிலையில்தான் இருந்தன என்பதையும் படம்பிடித்துக் காட்டியுள்ளார். இதேபோல் பல உதாரணங்களைக் சுட்டிக்காட்டிவிட்டு அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல, அங்கும் இதுபோன்று பல தவறுகள் நடந்துள்ளன என்பதையும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அங்கெல்லாம் தவறுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார். இந்திய வாக்காளர்களை மிகவும் கவனமாக அணுக வேண்டும் என்பதனை சுட்டிக் காட்டியுள்ளார். 
இந்தியாவில் ஏழை மக்களாக இருப்போர், விழிப்புணர்வு குறைந்தவர்கள், உணர்வுபூர்வமாகச் செயல்படக்கூடியவர்கள், சாதி சமய அடிப்படையில் முடிவெடுக்கக்கூடியவர்கள் என்று மட்டும் கணித்து புள்ளிவிவரங்களைச் சேகரிக்க கூடாது. அவர்கள் இவற்றைக் கடந்து முடிவெடுக்கக்கூடியவர்கள் என்பதைப் புரிந்துகொண்டு ஆய்வு செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 
மக்களாட்சிக் கோட்பாட்டின்படி, சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாக இருக்கும் நாட்டு சமூகங்களில் மக்களாட்சி செயல்படாது. இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகளும் வேறுபாடுகளும் மிகவும் அதிகம். இருந்தும் மக்களாட்சி செயல்படுகிறது. ஆனால் கோட்பாட்டைக் கடந்து இந்திய வாக்காளர்கள் இந்திய மக்களாட்சியை 71 ஆண்டுகளாகக் காப்பாற்றி வருகின்றார்கள் பொதுத்தேர்தல் மூலமாக. இது ஒரு சாதாரண பங்களிப்பு அல்ல. 
உலக ஆராய்ச்சி நிறுவனங்கள் மக்களாட்சி பற்றி ஆய்வு செய்கின்றபோது இந்தியர்கள் தங்கள் தேர்தல் பங்களிப்பினால் கோட்பாடுகளை உடைத்தெரிந்து புதிய அத்தியாயம் படைப்பவர்கள் என்று வர்ணிக்கின்றன. அது மட்டுமல்ல, இந்திய மக்களாட்சியை வலுவுள்ளதாக செயல்பட வைக்க இந்திய ஏழை மக்களின் பங்களிப்பு என்பது உலகை ஆச்சியப்பட வைக்கும் ஒன்றாகும் என்பதனை ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றன. 
இந்திய மக்களாட்சியில் வாக்காளர்களின் பங்கு என்ன என்பதைப் புரிந்துகொள்ள, ஒவ்வொரு வாக்காளரின் சமூகப் பொருளாதார நிலை, அவரின் அரசியல் பார்வை போன்ற பல்வேறு தகவல்கள் முக்கியமானவை என்று கூறியுள்ளார் ஜேம்ஸ் மெனோர். இந்திய வாக்காளரிடம் கேள்வி கேட்டு பதில் வாங்குவதைவிட விவாதம் செய்து கருத்துகளை சேகரிப்பதுதான் சிறந்த முறையாக இருக்கும் என்றும் கூறுகிறார். ஆனால், நம் கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் கேள்வி கேட்கும் முறைமையில்தான் இன்றளவும் செயல்படுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். 
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஒரே இந்தியாதான். ஆனால் எண்ணிலடங்கா வேறுபாடுகள். எனவே, சரியான புரிதலின் அடிப்படையில் சேகரிப்பட்ட புள்ளிவிவரங்கள் மட்டுமே சரியான கருத்துக்களை உருவாக்க உதவியாக இருக்கும். மேற்கத்திய முறையிலான புள்ளிவிவரம் என்பது ஒற்றை மதம், நடுத்தர மக்கள் வாழும் சமூகத்திற்கு ஏதுவானது. இந்தியாவுக்கு அது ஏற்புடையதல்ல. இந்த முறைமையின் மூலம் புள்ளிவிவரம் சேகரித்தால், உண்மையை நிலைநாட்ட முடியாது என்பதை அழுத்தமாகக் கூறுகிறார். 
இந்திய வாக்காளர் பற்றிய புரிதல் இல்லையேல் நாம் நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோம் என்று பொருள். இந்திய வாக்காளர்கள், தங்களின் பதில்களினாலே அறிவுஜீவிகளை ஒன்றும் தெரியாதவர்களாக ஆக்கிவிடுவார்கள். "கருத்துக்கணிப்பு என்பது ஒரு அறிவியல். அதை நாம் ஜோதிடம் ஆக்கிவிடக்கூடாது' என்பதுதான் அவரின் வேண்டுகோள்.

கட்டுரையாளர்:

பேராசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.