அரசை மதிப்பீடு செய்வோம்!
இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை செயலிழந்த அரசாங்கம் என்று விமர்சிக்கின்றன.


இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை செயலிழந்த அரசாங்கம் என்று விமர்சிக்கின்றன. ஆளும் கட்சியோ தாங்கள் சாதனை படைத்து வருகிறோம் என அறிக்கைகளை அள்ளி வீசுகிறது. இப்படிப் பேசுகின்ற பேச்சுக்கள் உண்மையைப் பிரதிபலிக்கின்றனவா?
இது உலகெங்கும் உள்ள பிரச்னைதான். இருந்தாலும் மேற்கத்திய நாடுகளுக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மேற்கத்திய நாடுகளில் பொதுமக்கள் சவடால் பேச்சுகளையும், வெற்று அறிக்கைகளையும் நம்புவதில்லை. அவர்கள் அறிவியல்பூர்வமான ஆதாரங்களை மட்டும் வைத்துத்தான் முடிவுக்கு வருவார்கள்.
அத்துடன் அரசாங்கத்தின் செயல்பாடுகளைப் பொதுமக்கள் எளிதாக புரிந்துகொள்வார்கள். அங்கெல்லாம் அரசாங்கத்தின் செயல்பாடுகளும் சிக்கல் நிறைந்ததாக இருக்காது. அரசாங்க அமைப்புக்கள் சிறியதாகவும், ஆளுகை என்பது பெரிய அளவில் இருப்பதாலும், பொதுமக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு அதிகமாக இருப்பதாலும், மக்கள் அரசாங்கத்தின் மீது தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகின்றனர்.
ஆனால் நம் நாட்டில் நம் அரசு தயாரிக்கும் நிதிநிலை அறிக்கையை நம் சட்டப்பேரவை உறுப்பினர்களாலேயே புரிந்துகொள்ள இயலாது. அது அந்த அளவிற்கு சிக்கல் நிறைந்ததாக உள்ளது. இதை எப்படி ஒரு பாமரன் புரிந்துகொள்ள முடியும்? ஆனால் மேலை நாடுகளில் அரசாங்கத்தின் செயல்பாடுகளை மிகத்துல்லியமாக மதிப்பீடு செய்து விடுகின்றனர்.
அரிஸ்டாடில், திருவள்ளுவர். கெளடில்யர் காலம்தொட்டு இன்று வரை ஓர் அரசாங்கம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. அரசாங்கம் என்பது அதிகாரத்தை கையாண்டு மக்களுக்குச் சேவைகள்
செய்ய வேண்டும் என்பதைத்தான் அத்தனை கோட்பாட்டாளர்களும் விளக்கியுள்ளனர்.
ஆனால் அந்த அரசாங்கம் எப்படிச் செயல்படுகின்றது என்பதை எப்படி அளப்பது? ஓர் அரசாங்கம் எப்படி அதிகாரத்தை கையாள்கிறது என்பதைப் பல மூலக்கூறுகளை வைத்து அந்த மூலக்கூறுகளை அளப்பதற்கு அளவீடுகளை உருவாக்கி, அதை அளப்பதற்கு அலகுகளை உருவாக்கி ஆய்வு செய்தால்தான் புரிந்துகொள்ள முடியும்.
அதேபோல் ஓர் அரசாங்கம் எப்படி சட்டங்களையும், கொள்கைகளையும், திட்டங்களையும் உருவாக்குகிறது? எப்படி அரசாங்கத்தை நடத்தி மக்களுக்குச் சேவைகளைச் செய்ய நிதி ஆதாரத்தை உருவாக்குகிறது? எப்படி உருவான நிதியை பங்கீடு செய்கிறது? எப்படி பங்கிட்ட நிதியை செலவிடுகிறது என்பவற்றை அளவிட்டுப்பார்த்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். இன்று நடப்பது மக்களாட்சி, மன்னராட்சி அல்ல. உலகத்தில் இன்று 80% நாடுகள் மக்களாட்சிக்குள் வந்துவிட்டன.
மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் அதிகாரத்தைக் கையாள்வது என்பது, அதிகாரப்படுத்தி, உரிமைகள் தந்து, மக்களை மதித்து, மக்களின் பங்கேற்பைப் பெற்று ஆட்சியை மேம்படுத்துவது என்பதுதான்.
காலகாலமாக ஓர் அரசாங்கத்தை பொருளாதார மேம்பாடு அடிப்படைகளை வைத்தே, வளர்ந்த நாடு, வளர்ச்சிபெற்று வரும் நாடு, பின்தங்கிய நாடு எனப் பிரித்து, பொருளாதார வளர்ச்சிபெற்ற நாடுகளை நல்ல ஆட்சி பெறும் நாடுகள் என்றும், பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய நாடுகளை குறைபாடுகளுடைய ஆட்சி என்றும் வகைப்படுத்துகிறோம்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, தேசிய அரசுகள் உருவாக்கப்பட்டு, திட்டங்கள் போட்டு, பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்தி அரசாங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. மக்களின் மேம்பாடு என்பதைவிட பொருளாதார வளர்ச்சிதான் அடிப்படை என்ற வாதத்தை முன்வைத்து செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டன.
பல நாடுகள் அசுர வேகத்தில் வளர்ச்சி பெற்றன. பொருளாதாரம் வளர்ந்தபோது மக்கள் மேம்பாடு அடைந்தார்களா என்ற கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை. பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள், வளர்ச்சி பெறும் நாடுகள், பின்தங்கிய நாடுகள் அனைத்திலும் அடித்தட்டு மக்கள் மேம்பட்டதாகத் தெரியவில்லை.
இவற்றைப் பார்த்தபோது பொருளாதார மேம்பாடு ஒரு நாடு அடைந்துவிட்டால் அந்தப் பொருளாதார வளர்ச்சி அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்து வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டுவந்துவிடும் என்ற பொருளாதாரக் கோட்பாடு நிராகரிக்கப்பட்டது.
1980-களில் பாகிஸ்தான் பொருளாதார நிபுணர் மெகபூப் அல்-ஹக் உலக வங்கியில் பணிபுரிந்தபோது ஓர் அடிப்படையான கேள்வியை பொருளாதார நிபுணர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் முன் வைத்தார். பொருளாதார வளர்ச்சி என்பது ஓர் அரசின் அடிப்படை குறிக்கோளா அல்லது மக்களின் மேம்பாட்டை கொண்டுவருவதற்கான வழிமுறையா? இது குறித்து விவாதங்கள் நடத்தினார்.
அதன் விளைவு அவர் கருத்தை ஐ.நா. அமைப்பு ஏற்றது. அதன் விளைவு ஓர் அரசாங்கத்தின் செயல்பாடுகளில் மானுட மேம்பாடு என்பதுதான் பிரதான குறிக்கோள் என்பது அங்கீகரிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் மானுட மேம்பாடு உலக நாடுகளில் எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்து ஒரு அறிக்கையைத் தயாரித்து 1991-இல் வெளியிட்டார். அது அரசாங்கங்களில் ஒரு மிகப்பெரிய பார்வை மாற்றத்தை உருவாக்கியது. இந்த அணுகுமுறைக்கு பெரும் ஆதரவை அளித்து உதவியவர் அமர்த்தியா சென்.
இதன் அடிப்படை, மக்களை முதன்மைப்படுத்துவது. மக்கள் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, தரமான, மரியாதையுடைய, உரிமைகள் பெற்ற, அவரவர் திறமைக்கும் சிந்தனைக்கும் ஏற்ற சிறப்புடைய வாழ்க்கையை வாழ வசதிகளை உருவாக்கித் தருவதுதான் ஓர் அரசாங்கத்தின்
கடமையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையை ஐ.நா. நிறுவனம் பிரகடனப்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாடும், இதேபோல் மானுட மேம்பாட்டு அறிக்கையைத் தயாரித்து வெளியிடுகின்றன. ஒவ்வொரு மாநிலமும் மாநில மானுட மேம்பாட்டு அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டன.
அதனைத் தொடர்ந்து மாவட்ட மானுட அறிக்கை தயாரிக்கப்பட்டன. இந்த அறிக்கைகள் தயாரிப்பதற்கு பெருமளவு நிதி உதவியும், ஆராய்ச்சி உதவியும் ஐ.நா. நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த அறிக்கைகள்தான் மக்களின் வாழ்க்கைத்தரம் ஒவ்வொரு நாட்டிலும் எப்படி இருக்கின்றது என்பதைப் படம்பிடித்து காட்டுகின்றன.
அதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் எப்படி மக்களின் வாழ்க்கைத்தரம் உள்ளது என்பதைப் படம்பிடித்து காண்பித்து வித்தியாசங்களைக் களைந்திட அரசு நிறுவனங்கள் செயல்பட உதவியாய் இருக்கின்றன. இதேபோன்ற அறிக்கை கிராமப் பஞ்சாயத்து அளவில் தயாரிக்கப்பட்டது இந்தியாவிலேயே கர்நாடக மாநிலத்தில்தான்.
எனவே, வாழ்க்கைத்தரம் உயர, ஆரோக்கியமாக மக்கள் வாழ செய்து தரப்படும் வசதிகள், தரமான கல்விக்காக மக்களுக்குச் செய்துதரப்படும் வசதிகள் என அடிப்படையிலான சேவைகள் அனைத்தும் இந்த மானுட மேம்பாட்டு அறிக்கைக்கான அடிப்படைகள்.
எனவே ஒரு அரசாங்கத்தை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றால் இந்த அடிப்படையிலான புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே ஒரு மாவட்டம் எப்படி இருக்கிறது, ஒரு மாநிலம் எப்படி இருக்கிறது, ஒரு நாடு எப்படி இருக்கிறது என்பதைக் கண்டு பிடித்துவிடலாம்.
பொருளாதார வளர்ச்சியில் உயர்ந்த நாடுகளைவிட பொருளாதார வளர்ச்சியில் தளர்ச்சியுற்ற நாடுகள் பலவும் மானுட மேம்பாட்டில் உயர்ந்து காணப்படுகின்றன. நம் நாடு அதற்கு ஓர் உதாரணம். நம் நாடு 9.5% பொருளாதார வளர்ச்சி அடைந்தபோது மானுட மேம்பாட்டில் நாம் கீழே சென்றோம்.
நம்மைவிட பொருளாதார வளர்ச்சி குறைந்த நாடுகளைவிட நாம் இந்த மானுட மேம்பாட்டுச் செயல்பாடுகளில் பின்தங்கி உள்ளது நாம் மக்களை எப்படி வைத்துள்ளோம் என்பதைக் காட்டுகின்றது. அரசுக் கட்டமைப்பில், விஞ்ஞான வளர்ச்சியில், தொழில்நுட்ப வளர்ச்சியில், பொருளாதார வளர்ச்சியில் மேம்பட்ட நாம், மானுட மேம்பாட்டில் ஏன் உயர முடியவில்லை?
இதற்கான பதில், நாம் மக்களை இன்னும் பயனாளிகளாகப் பார்த்து, மனுதாரராகப் பார்த்து, வாக்களாராகப் பார்த்து பழகி அவர்களைப் பொறுப்புள்ள குடிமக்களாக, மரியாதைக்குரியவர்களாக பார்க்காததுதான். பெரும்பான்மையான மக்கள் அடிப்படை வசதிகளற்ற, மரியாதையற்ற, உரிமைகள் பறிக்கப்பட்ட வாழ்க்கையை நடத்தும்போது, மானுட மேம்பாட்டு குறியீட்டு எண் குறைவாகத்தானே இருக்க முடியும்.
உலகப் பசிப்பிணி அறிக்கையில் சீனா மேலே செல்கிறது, இந்தியா கீழே இறங்குகிறது. இதற்கு அடிப்படையான காரணம் மக்களைப் பற்றிய நமது அரசாங்கத்தின் பார்வை. எனவே ஓர் அரசாங்கத்தை மதிப்பீடு செய்ய இந்தப் பின்னணியில் முயன்றால் நாம் எங்கு உள்ளோம் என்பது நமக்கு விளங்கும்.
கட்டுரையாளர்:
பேராசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...