மறந்துபோன மாநில உணர்வு!
மொழிவழி மாநிலம் பிரிந்த நவம்பர் முதல் நாளை அனைத்து மாநிலங்களும் பெருவிழாவாகக் கொண்டாடின. ஆனால், தமிழ்நாட்டில் அதற்கான அறிகுறிகள் ஏதும் தெரியாமலேயே போய்விட்டது.


மொழிவழி மாநிலம் பிரிந்த நவம்பர் முதல் நாளை அனைத்து மாநிலங்களும் பெருவிழாவாகக் கொண்டாடின. ஆனால், தமிழ்நாட்டில் அதற்கான அறிகுறிகள் ஏதும் தெரியாமலேயே போய்விட்டது. தமிழக அரசு இதில் கவனம் செலுத்தாமல் போனதற்குக் காரணம் என்ன? தமிழ்நாட்டில் தமிழ் உணர்வு குறைந்து போய்விட்டதா?
அண்டை மாநிலங்களான ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகியவை இதனை ஒரு விடுதலை நாளைப் போல கொண்டாடி மகிழ்ந்தன. அரசு விழாவாகவே அவை கொண்டாடிய போது, தமிழ்நாடு அரசு மட்டும் இதனைக் கண்டு கொள்ளாமல் போனது அதற்காகப் போராடிய தியாகிகளை அலட்சியப்படுத்தியது போல ஆகிவிட்டது.
கர்நாடக மாநிலத்தில் நவம்பர் முதல்நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. கர்நாடகா ராஜ்யோத்சவா என்ற பெயரில் தனி மாநிலம் உருவான நாள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா கலந்து கொண்டு, கர்நாடக மாநிலக் கொடியான சிவப்பு மஞ்சள் கொடியை ஏற்றி வைத்தார்.
கேரளாவில் அரசு சார்பில் கேரள பிறவி தினம் கொண்டாடப்பட்டது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் மலையாள மொழியை ஆட்சி மொழியாக்கியதை நினைவுகூரும் விழா நடத்தப் பெற்றது. நீர் நிலைகளைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டன.
ஆந்திர மாநிலத்தில் 2013-ஆம் ஆண்டு வரை நவம்பர் முதல் நாள் விசால ஆந்திரா தினமாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. ஆந்திரம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு, இந்த நாளை ஜூன் 2-க்கு மாற்றிமைத்து, அந்த நாளில் அரசு விழாக்கள் நடைபெறுகின்றன.
ஆனால், தமிழ்நாட்டில் நவம்பர் முதல்நாள் அரசு சார்பில் எந்த விழாவும் கொண்டாடப் படவில்லை. தமிழ்நாடு தனி மாநிலமாக அமைந்தது 1956 நவம்பர் முதல் நாள். அதன் மணி விழா நிறைவு ஆண்டு இது. தமிழ்த் தேசிய இயக்கங்களும், தமிழ் ஆர்வலர்கள் சிலரும் இதனை நினைவுபடுத்தும் விதமாக கூட்டங்களும், கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர். ஆனால், பொதுமக்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை.
காங்கிரஸ் கட்சியிலிருந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் முதன் முதலில் தமிழரசு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார். மொழிவழி மாநிலம் பிரிக்கப்படும்போது, வடவேங்கடம் முதல் குமரி வரை உள்ள தமிழகம் அமைக்கப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
திருப்பதியை உள்ளடக்கிய சித்தூர் மாவட்டம் மீது ஆந்திரர்கள் உரிமை கொண்டாடியதையும், திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்த நாஞ்சில்நாடு தேவிகுளம், பீர்மேடு, மலபார் மாவட்டத்திலிருந்த கொச்சி, சித்தூர் ஆகியவற்றின் மீது மலையாளிகள் உரிமை கொண்டாடியதையும் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. கடுமையாக எதிர்த்தார்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்த காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே 'தமிழரசுக் கழகம்' என்ற பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் புதிய தமிழகம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதன்படி தை முதல் நாளை தமிழர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என்று கருதிய ம.பொ.சி. இதற்கு தமிழக அரசியல் தலைவர்களின் ஆதரவைப் பெற்று அறிக்கை வெளியிட்டார். சென்னை செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் 1947, ஜனவரி 14 அன்று தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டது.
1949-ஆம் ஆண்டின் இறுதியில் தமிழக எல்லை மாநாடு ஒன்றினைச் சென்னையில் தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. நடத்தினார். மத்திய நிதியமைச்சராக இருந்து பதவியைத் துறந்த டாக்டர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் இம்மாநாட்டிற்குத் தலைமை ஏற்றார். சென்னை மாநில முதலமைச்சர் பி.எஸ்.குமாரசாமி ராஜா மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
வடவேங்கடம் முதல் தென்குமரி வரை உள்ள தமிழகத்தை அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ம.பொ.சி. முன்மொழிந்து பேசினார். இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
1953-ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். இதனால் ஆந்திராவில் பெரும் கலவரங்கள் நடந்தன. தனி மாநிலக் கோரிக்கை தலைதூக்கி நின்றது.
அதுவரை மொழிவழி மாநிலப் பிரிவினையை ஏற்பதற்கு மறுத்துவந்த பிரதமர் நேரு மனம் மாறினார். பிரதமர் நேரு நாடாளுமன்றத்தில் ஆந்திர மாநிலம் தனியாகப் பிரிக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்தார். இந்நிலையில் சென்னை யாருக்கு? என்ற பிரச்னை பெரும் பூதமாகக் கிளம்பி நின்றது.
'மதராஸ் மனதே' என்பது ஆந்திரர்களின் கோரிக்கையாக இருந்தது. தமிழகத் தலைவர்களுக்கு இது பெரும் போராட்டமாகப் போய்விட்டது. வாழ்வா? சாவா? என்ற நெருக்கடிக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டார்கள்.
சென்னை மேயர் த. செங்கல்வராயனும், தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சியும் முன் முயற்சி எடுத்து 13.2.1953 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை நகரம் தமிழருக்கே உரியது என்று வலியுறுத்தும் தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
முதலமைச்சராக இருந்த ராஜாஜி தில்லி சென்று பிரதமர் நேருவை சந்தித்துப் பேசினார். சென்னை திரும்பிய ராஜாஜி, ம.பொ.சி.யை அழைத்து நிலைமையைத் தெளிவாக்கினார். சென்னை நகரைப் பொதுத் தலைநகராக்க நேரு முடிவு செய்துவிட்டார் என்றால் தாம் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
இந்நிலையில், பிரதமர் நேரு நாடாளுமன்றத்தில் ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனம் ஒன்றை வெளியிட்டார். அதில், ஆந்திராவின் தலைநகரம் ஆந்திர எல்லைக்குள்ளேயே இருக்கும் என அறிவித்தார். அதன் பிறகே தமிழர்களின் கவலைக்கு முடிவு ஏற்பட்டது.
இந்த மொழிவழி மாநிலப் போராட்டத்தில் தமிழகத்தைப் பொருத்தவரை தென் எல்லை மீட்புப் போராட்டமும், வட எல்லை மீட்புப் போராட்டமும் புதிய வரலாறு படைத்தவை எனலாம்.
வட எல்லைப் பாதுகாப்புக் குழு ம.பொ.சி. தலைமையில் அமைக்கப்பட்டது. கே.விநாயகம் இதன் செயலாளர். மக்களை அணி திரட்ட உதவியவர் மங்கலங்கிழார். கடுமையான போராட்டத்துக்குப் பிறகு மத்திய சட்டத்துறை அமைச்சர் எச்.வி.படாஸ்கரை விசாரணைக் குழுத் தலைவராக இந்திய அரசு நியமித்தது.
படாஸ்கர் பரிந்துரைப்படி திருத்தணி தாலூகா முழுவதும் (ஒரே ஒரு கிராமம் நீங்கலாக), சித்தூர் வட்டத்தில் 20 கிராமங்கள், புத்தூர் தாலூகாவில் ஒரே கிராமம், ஆக 322 கிராமங்கள் ஆந்திராவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு தமிழகத்துடன் இணைக்கப்பட்டன.
இந்தக் கிராமங்களின் அப்போதைய மக்கள்தொகை 2,39,502 பேர். அதேபோல தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர், பொன்னேரி தாலூகாக்களிலிருந்து சில கிராமங்கள் ஆந்திராவில் சேர்க்கப்பட்டன.
இந்தப் பெரும் போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தியாக மறவர்கள் ஏராளம். இதன் உச்சமாக ஆந்திர மாநிலம் அமைக்கக்கோரி போராடி உயர்நீத்த பொட்டி ஸ்ரீராமுலு, 1956 அக்டோபர் 13 அன்று தமிழ்நாடு பெயர் கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்த சங்கரலிங்க நாடார் இவர்களை மறக்க முடியுமா?
தமிழ் மாநிலப் போராட்டத்தில் முதலமைச்சராக இருந்த ராஜாஜி, மாநிலக் காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர், சென்னை மேயராக இருந்த செங்கல்வராயன் ஆகியோரின் பங்கு குறிப்பிடத்தக்கது. எனினும் எந்தப் பதவியிலும் இல்லாத சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் பணியினை தமிழ்மக்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே தமிழ் உணர்வு மிக்கவராக விளங்கினார். மாநில சுய நிர்ணய உரிமையை முதன்முதலில் முன்னெடுத்தவர் அவரே!
புதிய தமிழகத்தின் அரசியல் அமைப்பை வேறு எவர் தலையீடும் இன்றி தாமே வகுத்துக் கொள்ளத் தமிழருக்குச் சுய நிர்ணய உரிமை உண்டு என்று கூறினார். இந்தச் சுய நிர்ணயத்தின் வழியே தமிழகத்தின் அரசியல் அமைப்பை வகுக்குங்கால், அது சோஷலிசக் குடியரசாக அமைய வேண்டும் என்றும் அவர் விரும்பினார்.
இவரது கொள்கைகளையே மாநில சுயாட்சி என்ற பெயரில் தற்போது திராவிட இயக்கங்கள் எடுத்துக் கொண்டன. அதுவும் காலப்போக்கில் நீர்த்துப் போய்விட்டது. தமிழ்நாட்டில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது பேச்சளவிலேயே இருப்பதால், அடுத்த தலைமுறைக்குத் தமிழ் உணர்வும் இல்லாமல் போய்விட்டது.
அப்போதும் சரி, இப்போதும் சரி, அண்டை மாநிலங்களான ஆந்திரம், கேரளம், கர்நாடகாவிற்கு இருக்கும் மாநில உணர்வு தமிழர்களுக்கு இல்லாமல் போனது மிகப் பெரிய சோகம்; பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா என்னும் ஆளுமைகளிடமிருந்து தமிழக அரசியல்வாதிகள் பாடம் கற்றுக் கொள்ளாமல் போனதால், மாநில உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன.
உறவுக்குக் கைகொடுப்பதும், உரிமைக்குக் குரல் கொடுப்பதும் மாநில சுயாட்சியின் மகத்தான தத்துவம். இதற்கு மறந்துபோன மாநில உணர்வை வளர்த்தெடுக்க வேண்டும். ஆம், மண் இல்லாமல் மரம் வளராது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...