வங்கிகள் இணைப்பை வரவேற்போம்!
வங்கி துறை சம்பந்தமாக சமீபத்தில் வெளியான அறிக்கைகளில், பொருளாதார வட்டாரங்களில் மிக முக்கியமாக கருதப்படுவது, பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத்,


வங்கி துறை சம்பந்தமாக சமீபத்தில் வெளியான அறிக்கைகளில், பொருளாதார வட்டாரங்களில் மிக முக்கியமாக கருதப்படுவது, பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் பிக்கானீர் அன்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகிய வங்கிகளை இணைக்கும்(Merger) செய்தியாகும்.
1993-லிருந்து பேச்சளவில் உலா வந்து கொண்டிருந்த இந்த இணைப்பு நடவடிக்கைக்கான பூர்வாங்க பணி, அடுத்த நிதி ஆண்டில் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த இணைப்பின் மூலம் 23,000 கிளைகளுடனும் 28.25 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடனும் வலுப்பெறும் ஸ்டேட் வங்கி, உருவத்தில், உலகின் பெரிய வங்கிகளின் பட்டியலில், முதல் 50 இடத்துக்குள் முன்னேறும் என்பது பெருமை படக்கூடிய விஷயமாகும்.
நம் நாட்டின் அரசு வங்கிகள் வாராக்கடன் எனும் புதைகுழிக்குள் சிக்கிக்கொண்டு, அந்த குழியிலிருந்து மீண்டு வர வழி தெரியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் தருணத்தில்தான் இந்த இணைப்பு நடவடிக்கை அரங்கேறி உள்ளது.
பெயருக்கு ஏற்றாற்போல், ஸ்டேட் வங்கி குழுமத்தின் சிறிய அளவிலான வங்கிகள் இதுவரை குறிப்பிட்ட மாநிலங்களை சார்ந்ததாகவே செயல்பட்டு வந்திருக்கின்றன. இணைப்பு நடவடிக்கை, அவற்றின் சேவை சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி, அதற்குண்டான பயன்களை அனுபவிக்க வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மழைத் துளிகளுக்கு ஏங்கும் சாதக பறவை போல், வாராக்கடன்களுக்கு தங்கள் மூலதனத்தின்(Capital funds) பெரும்பகுதியை, சமீப காலங்களில் பலி கொடுத்த பல அரசு வங்கிகள், இழந்த முதலை சரிக்கட்ட தேவையான நிதி ஆதாரங்களை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
ஆனால், பாதிக்கப்பட்ட எல்லா வங்கிகளுக்கும் தேவையான முழு நிதி ஆதாரங்களையும் கொடுக்கும் பொருளாதார வல்லமை தற்போது மத்திய அரசிடம் இல்லை என்றே சொல்லலாம். இந்த நிலைமையை ஓரளவு சரிகட்ட, வங்கி இணைப்புகள் உதவும்.
பொருளாதாரத்தில் சற்று வலுவாக உள்ள வங்கிகளுடன், சிறிய வங்கிகளை இணைப்பதன் மூலம், நிர்வாக ஆளுமை மேம்பட்டு, செலவுகள் குறைந்து, லாப கணக்கு வளம் பெரும். அதை பயன்படுத்தி, வங்கிகள் சந்தையில், தங்கள் முதலுக்கான நிதியை திரட்ட முற்படலாம்.
ஸ்டேட் பாங்க் குழுமத்தை தவிர, எஞ்சியிருக்கும் 20-க்கும் மேற்பட்ட அரசு வங்கிகளில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டவை, வியாபாரத்துக்கு போதிய முதல் இல்லாமல், பெயர் அளவில்தான் இயங்கி கொண்டிருக்கின்றன என்று சொல்லலாம். இவற்றை அவை இயங்கும் பகுதி வாரியாக, பெரிய வங்கிகளுடன் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அந்த நடவடிக்கை ஊழியர் முதல் உச்ச நிர்வாகம் வரை, மூலதன மேம்பாடு உள்பட பலவகைகளில் பயனளிக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம்.
வங்கி இணைப்பு நடவடிக்கைகள், எந்த அரசியல் நோக்கமும் இல்லாமல், தொழில் சங்கங்கள் உள்பட, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை ஏற்று, நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நலிந்திருக்கும் வங்கிகள் வளம் பெற, இந்த இணைப்பு நடவடிக்கை ஒரு நல்ல மருந்தாகும்.
அதேபோல், வங்கிகள் தற்போது தங்கள் தோள்களில் சிரமப்பட்டு சுமந்து கொண்டிருக்கும் வாராக்கடன் எனும் சுமையை முழுவதுமாக இறக்கி வைக்க, பேட் பாங்க் (Bad Bank) என்ற அமைப்பை உருவாக்கும் யோசனையும் உலா வந்து கொண்டிருகிறது.
இந்த யோசனைக்கு சாதகமாகவும், பாதகமாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது ஒரு அரசு சார்ந்த அமைப்பாக இருக்கும் என்பதால், சுமை ஒரு குழியிலிருந்து இன்னொரு குழிக்குத்தான் இறக்கப்பட்டு மூடப்படுமே தவிர, அரசுக்கு முழு சுமையும் குறையாது என்பது ஒரு சாராரின் வாதமாகும்.
தற்போது, தனியார் துறையில் இயங்கும் வங்கி வாராக்கடன் சொத்து சீரமைப்பு நிறுவனங்கள் (Asset reconstruction companies) மேலே குறிப்பிடப்பட்ட பணியை செய்து கொண்டிருக்கின்றன. லாபம் ஒன்றே அவற்றின் நோக்கு என்பதாலும், அதிகாரிகளுக்கு சொத்து மதிப்பீடு, விலை நிர்ணயம், சொத்துகளை சரியான தருணத்தில், சரியான விலைக்கு விற்கும் திறமை ஆகிய கலைகளில் நிபுணத்துவ குறைபாடுகளினாலும், வங்கிகளால், பங்கமான சொத்துகளின் மதிப்பில் சிறு பகுதியைத்தான் மீட்கமுடிகிறது.
இதனால், வாராக்கடன்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் (Provsion for bad debts) பெரும்பகுதி நஷ்ட கணக்கிலேயே எழுதப்பட்டு, அதுவே அவற்றின் நிதி நிலை அறிக்கைகளை (Balance sheets) பாதித்துவிடுகின்றன.
கடந்த வருடங்களில், ரிசர்வ் வங்கியால் செயல்படுத்தப்பட்ட பிரத்யேக தணிக்கை நடவடிக்கைகள் (Asset quality review exercise) மூலம் வங்கிகளால் மறைக்கப்பட்ட பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வாராக்கடன்கள் வெளிக்கொணரப்பட்டு, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளும் வலியுறுத்தப்பட்டன.
இந்த பிரத்யேக தணிக்கைகளில் வெளியான வாராக்கடன்கள், படிப்படியாக, கடந்த கால் ஆண்டு கணக்குகளில் எழுதப்பட்டு, அந்த நடவடிக்கைகள் மார்ச் மாத கடைசிக்குள் நிறைவு பெற வேண்டும். ஆனால், அந்த வாராக்கடன்களுக்கான சொத்துகளை விற்று, அவற்றை பணமாக்கும் (Monetisation of assets) நடவடிக்கைகள் ஏதுமின்றி பெரும் மந்த நிலையே நிலவுகிறது.
வழங்கப்பட்ட கடன்களுக்குப் பிணையாக வாங்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு, கடனாளிகள் தரப்பு முறைகேடுகளால் வெகுவாக குறைந்து விட்டது என்பது அதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்பது பொருளாதார நிபுணர்களின் ஒருமித்த கருத்தாகும்.
நலிந்த தொழில் நிறுவனங்களை, செழிப்பாக இயங்கும் மற்ற நிறுவனங்களுக்கு விற்பது, வங்கி கடனின் ஒரு பகுதியை, பங்கு மற்றும் கடன் பத்திரங்களாக மாற்றுவது போன்ற மாற்று ஏற்பாட்டு திட்டங்களை ரிசர்வ் வங்கி சமீப காலங்களில் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டங்களின் நல்ல நோக்கத்திற்கு மாற்றாக, வங்கிகளும், கடனாளிகளும், வாராக்கடன்களின் வெளிப்பாட்டை தள்ளிப்போட, இந்தத் திட்டங்களின் போர்வைகளுக்குள் புகுந்து, வங்கிக் கடனை திருப்பிக் செலுத்தாமல் காலம் கடத்துகின்றனர் என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.
பிணைய சொத்துகளை சட்ட ரீதியாக விற்பதில் ஏற்படும் தாமதங்கள், வங்கிகளை பெரும் நஷ்டத்திற்கு உள்ளாக்குகின்றன என்பதை உணர்ந்து வங்கிகள் வேகமாக செயல்பட வேண்டியது அவசியமாகும்.
பொதுத்துறை வங்கிகளில் சமீப காலங்களில் நிலவி வரும், பணியாளர்கள் பற்றாக்குறை, அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்காமலேயே தொடர்ந்து கொண்டிருப்பது, வங்கிகளின் தொடர் வளர்ச்சிக்கு சாதகமானது அல்ல. போதிய பணியாளர்கள் இல்லாமல், எந்த வங்கி சீர்திருத்தமும் வெற்றி பெறமுடியாது என்பது அனுபவ பூர்வமான உண்மையாகும்.
வாராக்கடன்களை வசூலிப்பதில் தங்கள் திறமைகளைப் பயன்படுத்தத் தவறும் வங்கிகள்தான், தற்போது, வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச வைப்புத்தொகையை நிர்ணயம் செய்து, குறைபாடுகளுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறைகளை அமல்படுத்த முற்படுகின்றன.
மேலும், மாதம் மூன்று அல்லது நான்கு முறைகளுக்கு மேல் வங்கி கணக்கில் ரொக்க தொகையை செலுத்துவது மற்றும் ஏ.டி.எம்.களிலிருந்து பணம் எடுப்பது ஆகியவற்றுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க முற்படுவது ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு சாதகமான நடவடிக்கைகள் அல்ல.
வங்கிகளின் செயல்பாடுகள், பலதரப்பட்ட மக்களும், வங்கி சேவைக்குள் வருவதற்கு ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் அமைய வேண்டும். அதற்கு பதிலாக, புதிய கட்டணங்களை அறிவிப்பது, வாடிக்கையாளர்கள் வங்கி சேவையை தவிர்க்க ஊக்கப்படுத்துவதாக அமைந்துவிடும்.
நாட்டின் பொருளாதார தூண்களான வங்கிகளின் செயல்பாடுகள், அரசாங்கத்தின் பொருளாதார நோக்கங்களோடு ஒத்துப்போக வேண்டியது அவசியம். அனைத்துத் தரப்பு மக்களையும் வங்கி சேவை மையத்திற்குள் கொண்டு வருவது அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கும்போது, அந்த நோக்கத்தை தகர்க்கும்படியான செயல்பாடுகளில் வங்கிகள் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும்.
பெரும் கடனாளிகளுக்கு வழங்கப்படும் கடன் தள்ளுபடி உள்பட பல சலுகைகளின் காரணமாக வங்கிகள் இழப்பது பெரும் தொகையாகும். அதன் மூலம் ஏற்படும் இழப்புகளை குறைக்க முற்பட்டாலே, வங்கிகளின் வருமானம் நிச்சயமாக பெருகும்.
உயர் பண மதிப்பு நீக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார தாக்கங்களிலிருந்து சாமானிய மக்கள் இன்னும் மீளவில்லை. அந்த தாக்கத்தினால், பல குடும்பத் தலைவர்கள் வேலை இழந்து நிற்கின்றனர்.
அந்த புண் ஆறுவதற்கு முன்பே, சாதாரண வங்கி சேவைகளுக்கு கூடுதல் கட்டணங்களை புகுத்துவது என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலாகும் என்பதை வங்கிகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...