/

ஊழலுக்கு எதிராகவும் ஊர் கூடட்டும்!

'லஞ்ச ஊழல் முன்பிருந்ததைவிட மோசமாகிவிட்டது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:09 am

ஜி. ராமகிருஷ்ணன்

'லஞ்ச ஊழல் முன்பிருந்ததைவிட மோசமாகிவிட்டது. அதனை தவிர்ப்பது என்பதற்கான முன்முயற்சியே இல்லாமல் போய்விட்டது. லஞ்ச ஊழலில் ஈடுபடும் ஏராளமானோர் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். தேசமென்பது அவர்களின் சுரண்டலுக்காக இல்லை. மாறாக, அவர்கள் தேசத்திற்கு தொண்டு புரிவதற்காக வாழ்கிறார்கள்'.
மேற்கண்ட வாசகங்களை படிப்போருக்கு இன்றைய இந்தியாவில், தமிழகத்தில் அரசு அதிகாரத்தில் இருப்போர் செய்யும் ஊழலை பற்றி கூறப்பட்டுள்ளதாக தெரியக்கூடும். ஆனால் இன்று நேற்று அல்ல 68 ஆண்டுகளுக்கு முன்னர் அண்ணல் காந்திஜி ஊழலை கண்டித்து எச்சரிக்கையாக கூறியதுதான் மேலே உள்ள வாசகங்கள்.
நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து ஆறு மாதத்திற்கு உள்ளாக 27.01.1948 அன்று காலை பிராத்தனை கூட்டத்தில் ஆட்சியில் உள்ளவர்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளதை கண்டித்து காந்திஜி பேசியிருக்கிறார். அவர் கொல்லப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக விடுத்த எச்சரிக்கை இது.
இன்று அண்ணல் காந்திஜி உயிரோடு இருந்திருந்தால் ஆட்சியில் இருப்பவர்கள் ஊழலில் ஈடுபடுவதை பற்றி மனம் நொந்து வெதும்பி இருப்பார். ஏனெனில் இன்றைக்கு லஞ்சமும் ஊழலும் இல்லாத துறையே இல்லை என்று ஆகிவிட்டது. ஊழலில் சம்பந்தப்பட்ட தொகை பற்றி படிக்கும் போது, பொதுமக்களுக்கு தலை சுற்றுகிறது.
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் மீதான மேல்முறையீட்டில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் ஊழல் செய்பவர்களை கீழ்க்கண்டவாறு கடுமையாக எச்சரித்துள்ளார்.
"பொது வாழ்வில் ஈடுபடுவோர் தங்களைச் சுற்றி சிறு எண்ணிக்கையிலான அடிவருடிகளை வைத்துக்கொண்டு, தங்களது பலத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி, நியாயமற்ற பலன்களை எடுத்துக் கொள்ளும்போதுதான் முறையற்ற அகங்காரம் கொண்டோரின், தணியாத பேராசைக்கு உற்ற துணையாக ஊழல் உருவெடுக்கிறது.
ஊழல் செய்வோரும் ஊழல்மயமாக்குவோரும் குற்றவாளிகளே. அவர்கள் சமூகத்திற்கும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள்'.
1991 முதல் 1996 வரையில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. அக்காலத்தில் நடந்த ஊழல்களுக்காக தொடுக்கப்பட்டதுதான் ஜெயலலிதா மற்றும் மூவர் மீதான சொத்து குவிப்பு வழக்கு. ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த இந்திரகுமாரி, பொன்னுசாமி ஆகியோர் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறை சென்றனர்.
அக்காலத்தில் அமைச்சராக இருந்த செல்வகணபதி மீதும் ஊழல் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கு நிலுவையில் இருந்தபோது அவர் தி.மு.க.வில் சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு நீதிமன்றம் அவருக்கு இரண்டாண்டு தண்டனை வழங்கியது. இவ்வழக்கின் மேல்முறையீடு தற்போது நிலுவையில் உள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "அரசியலுக்கு வருவோர் மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன் இருக்க வேண்டும்.
ஊழல் செய்து சொத்து குவிக்கும் பேராசைக்காரர்களாக இருக்கக்கூடாது என்பதற்கு மிகச் சிறந்த பாடமாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது. நாளைய சமுதாயமும், நாடும் முன்னேற இந்தத் தீர்ப்பின் வாசகங்களை அரசியல் தலைவர்கள் உற்று நோக்க வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.
இவ்வறிக்கை வரவேற்கத்தக்கது. ஆனால், ஊழல் வழக்குகளில் சிக்குவதில் தி.மு.க.வும் பின்தங்கிவிடவில்லை. மத்திய அமைச்சராக தயாநிதிமாறன் இருந்தபோது சன் தொலைக்காட்சிக்கு 400 தொலைபேசி இணைப்புகள் கொடுக்க வைத்தார் என்ற பிரச்னையில் வழக்கு நிலுவையில் உள்ளது.
அவர் அமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால் தொலைதொடர்புதுறை 400 இணைப்புகள் கொடுத்திருக்காது. அதிகாரத்தை பயன்படுத்திதான் இம்முறைகேடு நடந்தது.
நாடே தலைகுனியும் அளவுக்கு நடந்த 2-ஜி ஊழலை மூடி மறைக்க அன்றைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு முயற்சித்த போது உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் புலன் விசாரணை நடந்து மத்திய அமைச்சர் ஆ. ராசா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட பலர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு இன்னும் வரவில்லை.
ஒருவர் அதிகாரத்திற்கு வந்தால் அந்த அதிகாரத்தோடு ஊழல் ஒட்டிக் கொள்கிறது. அதிகாரத்திற்கு வருவோரும் அவர் சார்ந்துள்ள அரசியல் கட்சியும் உறுதியாக இல்லையென்றால் ஊழலை தடுக்க முடியாது, ஒழிக்க முடியாது.
அரசியல்வாதிகள், அதிகாரிகள், வணிகக் கூட்டாண்மை நிறுவனங்கள் கூட்டு என்பது ஊழலின் ஊற்றுக்கண்ணாக அமையும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளது. நவீன தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை ஊழலை நிறுவனமயமாக்கியுள்ளது.
தமிழகத்தில் கிரானைட், தாதுமணல், ஆற்று மணல் ஆகியவற்றைக் கொள்ளையடிப்பது பல ஆண்டு காலமாக தொடர்கதையாக உள்ளது. கிரானைட் ஊழல் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் ஆய்வு செய்து சமர்ப்பித்துள்ள அறிக்கையில் அரசுக்கு ரூ.1,06,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.
இம்முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென சகாயம் அறிக்கை பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து ஆட்சியிலுள்ள அ.தி.மு.க. அரசும்
கண்டுகொள்ளவில்லை. எதிர்க்கட்சி
வரிசையிலுள்ள தி.மு.க. தலைமையும் கவலைப்படவில்லை. ஏனெனில், கிரானைட் கொள்ளை ஒரே நாளில் நடந்து விடவில்லை. இரு கட்சிகளின் ஆட்சியிலும் மாறிமாறி தொடர்ந்து நடந்து வந்துள்ளது.
1991 முதல் 2014 வரையில் கிரானைட் வெட்டி எடுக்க நிலங்களை மாநில அரசு காண்டிராக்டர்களுக்கு குத்தகைக்கு விட்ட விவரங்களை சகாயம் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. 1991 முதல் 2011 வரை 176 கிரானைட் குவாரிகளுக்கு குத்தகை அனுமதி அரசாணை பிறப்பிக்கப்பட்
டுள்ளன.
இதில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த 2001 முதல் 2006 வரை 77 குத்தகை அனுமதிகளும், தி.மு.க. ஆட்சியில் இருந்த 2006 முதல் 2011 ஆண்டுகளில் 68 குத்தகை அனுமதிகளுக்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளன என சகாயம் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
தாது மணல் முறைகேடு பற்றி ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்து அளித்த அறிக்கையை (2011-2016 காலத்தில்) சட்டப்பேரவையில் அ.தி.மு.க. அரசு சமர்ப்பிக்கவில்லை. தாது மணல் கொள்ளை நடக்கக்கூடிய காலத்திலும் தி.மு.க. ஆட்சியிலிருந்திருக்கிறது. மணல் கொள்ளை இப்போதும் தொடர்கிறது.
மாநிலத்தில் அரசு வேலை நியமனத்தில், காண்டிராக்ட் விடுவதில், துணை வேந்தர் நியமனத்தில் முறைகேடுகள் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. சத்துணவு உதவியாளர் பணி முதல் போக்குவரத்து ஊழியர்கள் பணி நியமனம் வரை எந்தவொரு நியமனமும் பணம் இல்லாமல் நடக்காது என்ற நிலை உருவாக்கப்பட்டு விட்டது.
ஊழல் எதிர்ப்பு என்ற முழக்கத்தோடு அ.தி.மு.க. துவங்கப்பட்டது. ஆனால் அக்கட்சியின் சார்பில் முதலமைச்சராக பல ஆண்டுகள் பணியாற்றியவரே ஊழல் குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தற்போது ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான கோஷ்டியும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியும் அம்மையார் ஜெயலலிதா காட்டிய வழியில் நடப்போம் என்கிறார்கள். இது சமூகநெறிக்கு, அரசியல் அறத்திற்கு முரணாக உள்ளது.
ஊழலை தடுக்க நாடாளுமன்றம் லோக்பால் சட்டம் கொண்டு வந்தது. மாநில அரசுகள் லோக் அயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டுமென்று லோக்பால் சட்டம் கூறுகிறது. இதுவரையில் தமிழகத்தில் லோக் அயுக்தா சட்டம் கொண்டு வரப்படவில்லை. சட்டம் வந்தால் மட்டும் போதாது, மக்கள் மத்தியில் ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வும் உருவாக்கப்பட வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக் கோரி சென்னையில் அண்மையில் நடைபெற்ற பண்பாட்டு போராட்டமும், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்தக்கோரியும் மக்கள் களம் காண்பதை பார்க்கிறோம். ஊழலே கண்ணாய் கொண்டதாக, மக்கள் நலனில் கிஞ்சித்தும் அக்கறையற்றதாக, சுயநல அரசியல் பெருக்கெடுத்த சூழலில் மக்களே போராட வந்துள்ளனர்.
ஊழலற்ற மாற்று அரசியலை ஆதரிப்பதும், வளர்த்தெடுப்பதுமே முழுமையான தீர்வுகளைக் கொடுத்திடும். ஏனெனில் ஊழலில் வரன்முறையற்று கொள்ளையடிக்கப்படுவது இயற்கை வளமும், மக்கள் பணமும் தான்.

கட்டுரையாளர்:
மாநிலச் செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.