பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மொழி என்பது பேச்சா? எழுத்தா?

'பண்டைத் தமிழ் எழுத்துகள் பிராமி எழுத்திலும், வட்டெழுத்திலும், கிரந்த எழுத்திலும் உள்ளன. கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகு ஏற்பட்ட கல்வெட்டுகளில் இன்றைய தமிழ் எழுத்துகள் உள்ளன.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:16 pm

நெல்லை சு. முத்து

'பண்டைத் தமிழ் எழுத்துகள் பிராமி எழுத்திலும், வட்டெழுத்திலும், கிரந்த எழுத்திலும் உள்ளன. கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகு ஏற்பட்ட கல்வெட்டுகளில் இன்றைய தமிழ் எழுத்துகள் உள்ளன. சிலப்பதிகாரத்தில் "கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி' (5:11) என்று குறிப்பு உள்ளது. கண்ணெழுத்தை அடையாளக் குறியீட்டெழுத்து என்பர்.' முனைவர் ச.வே. சுப்பிரமணியன் கண்ட முடிபு இது ("தமிழ் இலக்கிய வரலாறு' பக். 14).
தொல்லாய்வியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் 1977-ஆம் ஆண்டுத் தொகுப்புப்படி சிந்துவெளிக் குறியீடுகள் மொத்தத்தில் நாலில் ஒரு குறியீடு ஒரு தடவை மட்டுமே தென்படுகின்றது என்றும் அந்தக் குறியீடுகள் ஒரு சீரான முறையில் திரும்பத் திரும்ப இடம்பெறுவதால் அவை மொழியியல் எழுத்துகளே என்றும் எடுத்துரைக்கிறார்.
காலந்தோறும் எழுத்தின் வரிவடிவம் மாறி வருகிறது. அந்நாளில் றா, னா போன்ற நெட்டெழுத்துகளுக்கு கால் (ô) எழுத்து இல்லை. ஆனைக்கொம்பு தூக்கி நின்ற லை, னை, ணை போன்ற உயிர்மெய் எழுத்துகள் திருத்தப்பட்டுவிட்டன.
வடமொழிகளில் எ, ஒ ஆகிய உயிர்க்குறில் ஒலிப்புகள் அறவே இல்லை. சென்னையை சேன்னை என்றுதான் எழுத வரும். சொக்கன் - சோக்கன் தான். தொல்காப்பியரின் புள்ளியால் மெய் தோன்றும்; ஏ, ஓ ஆகிய நெடில் ஒலிகள், குறிலாக ஒலிக்கும். ஒரு ஆச்சரியம். தொல்காப்பிய ஏட்டுப்பிரதிகளில் தமிழிலும் ஏ, ஓ ஆகிய நெடில் ஒலிகள் தனியாக இல்லை. தொலகாப்பியம என்று பிரதி முழுவதும் மெய்க்குப் புள்ளியே இல்லை.
வட எழுத்துகள் நீக்கித் தமிழில் எழுதலாம் என்று விதி வகுக்கிறார். வடசொற்களைத் தேவையானால் ஏற்றுக் கொள்ளலாம் என்கிற தொல்காப்பியரின் மனப்பான்மை இங்கு பாராட்டுக்கு உரியது.
அதிலும், "புதியன புகுதலும் (பழையன கழிதலும்) வழுவல கால வகையினானே' என்பதும் நம் முன்னோர் நமக்கு அளித்த எழுத்துச் சுதந்திரம் அல்லவா? இன்று வட்டார வழக்கில் எழுதப்படும் நவீன படைப்பு இலக்கியங்கள் தமிழுக்குச் சிறப்பு அந்தஸ்து தருகின்றனவே.
சான்றாக, பழுது நீக்குதல் என்பதை ஒக்கிடுதல் என்று எழுதுவர். ஒக்க இடுதல் தானே? "வேலை மெனக்கிட்டு' பணி இன்றிச் சும்மா இருப்பது அல்ல. சித்தர் பாடிய "வேலை மினுக்கு இட்டு' என்பது வேல் ஆயுதத்தினை பளபளப்பாக்கும் வழக்குச்சொல் அல்லவா?
சமஸ்கிருதமும், தமிழும் கலந்த மணிப்பிரவாளத்தின் பல்லவ கிரந்த எழுத்துகளை ஏற்றுக் கொள்ளலாம். குறிப்பாக ஜ, ஷ, ஸ, ஹ போன்றவை அறிவியல் தமிழுக்கு மிகத் தேவை.
ஹைடிரோ கார்பன் இன்று புரட்சித் தமிழ் ஆகிவிட்டது! இனி "செயலலிதா' மரணம் பற்றிப் பேசினால் அது யார் சாவோ என்றுதான் கருதுவோம். சுடாலின், மார்க்கசு, தாசு என்றால் கூடச் சிலருக்குப் புரியலாம். புரட்சித்தலைவர் பெயரை "எம்.சி.ஆர்.' என்றால் விளங்குமா? சர்க்கரை நோயாளிகளுக்கு உரிய "மல்டி செல்லுலார் ரப்பர்' என்று எதிர்காலத் தமிழ் மாணவன் கருதக்கூடும்.
"இத்தகைய ஆங்கிலச் சொற்களைத் தமிழில் தீட்டும்போது, அவற்றில் பொருட்சிதைவு அல்லது பொருள்மயக்கம் எழும் வாய்ப்புக் கூடாது. ரகர, டகர, லகர எழுத்துகள் பொதுவாக, மொழி முதலில் வருவதில்லை என்பதனாலேயே "ரப்பர் கம்பெனி'யை "இரப்பர் கம்பெனி' என்றெழுதினால், அது என்ன "யாசகர் நிறுவனமோ?' என்ற ஏகடியம் தொனிக்காதோ?'
பண்டைய சிந்துவெளி மக்கள் ஏழு விண்மீன்கள் அடங்கிய "ஓரையன்' என்ற உடுக்கணத்தினை சிவனாகக் கண்டனர். ஓரியன்ட் என்றால் கிழக்கே என்றுதான் பொருள்.
வங்காள மொழியின் கொல்கொத்தா, ஓயில், ஓபீஸ் எல்லாம் கல்கத்தா, ஆயில், ஆபீஸ் ஆன மாதிரி, ஒரையான்-ஒரியன்-ஓரியன் என்ற சொல் ஆதி ஈரானிய உச்சரிப்பில் ஆரியன் ஆயிற்று. "ஆரிய' என்ற சொல் வடமொழியிலும் கிரேக்கத்திலும் பயின்றது. சங்க இலக்கியங்களும் வல்வில் "ஓரி'யைப் புகழ்ந்து பாடுகின்றனவே.
பூமியில் "ஜம்பூத்வீப'த்தின் தென்பகுதியில் பாரத வர்ஷத்தின் கிழக்கில் 21 தேசங்கள் "ஆர்யா வர்த்தம்' ("ஓரிய வர்த்தம்') என்று அழைக்கப்பெறும். கீழை மண்டலம் என்பது பொருள்.
தெற்கில் கொங்கணம் (செளராஷ்ட்ரம்), மஹாராஷ்டிரம், உத்கலம் (ஒடிஸா), கர்னாடகம், கலிங்க தேசம் (வட ஆந்திரம்), ஆந்திர பிரதேசம், யவனம் (இன்றைய தெலங்கானா பகுதி), குளிந்த தேசம் (தெற்கு ஆந்திரம்), கேரளம், திராவிடம் (இன்றைய வடதமிழகம்), சோழ தேசம் (இன்றைய நடுத் தமிழகம்), பாண்டிய தேசம் (இன்றைய தென் தமிழகம்) ஆகிய 12 தேசங்களும் "தக்ஷிணாபதம்'.
பாருங்கள், தமிழ் தேசமே இல்லை. தெலுங்கு சிறந்த ஆந்திராவை ஒட்டிய வட தமிழகமே திராவிட தேசம். அதனாலேயே இன்றைக்கும் தமிழகத்தில் திராவிடர்கள் ஆட்சி. உள்ளபடியே, இந்தியத் திராவிடம் என்பது ஒட்டு மொத்த ஆதிப் பழங்குடிகளைச் சுட்டும் விரிந்த பரப்புடையது.
தென்திராவிடம் என்பது தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு, குடகு ஆகிய திருந்திய திராவிட மொழிகள் மட்டுமன்றி, கூர்க்கர், குடியர், குறும்பர் (குறும்பர் - "புல்லினத்தார்' என்று கலித்தொகை 113:9), கோதவர், கோத்தர், தோடர் (தோடர், துதவர்), கோயர், கோந்தர், படகர் (வடுகர், தெலுங்கர்), பார்ஜியினர், சரவர் எனப் பல உட்பிரிவுகள் உடையது.
பஞ்ச திராவிடர் என்பவர்- "கன்னடர், தெலுங்கு, மகாராட்டிரம், கர்நாடகம், கூர்ச்சரம், என்னுந் தேசத்துப் பிராமணர்' என்று "அபிதான சிந்தாமணி' (ஆசியக் கல்வியியல் கழகம், சென்னை, 1996) பொருள் தருகிறது. இங்கும் தமிழர் இல்லை.
இன்றைக்குத் திராவிடம் என்ற சொல் தெக்காணத்தின் திராவிட இனத்தை மட்டுமே குறிப்பதாகச் சுருங்கிய பொருளில் வழங்கப்படுகிறது.
மயிலை. சீனி. வேங்கடசாமி, "அகத்தியருடன் வந்த அருவாளர் தொண்டை நாட்டில் குடியேறினார்கள். அவர்கள் குடியேறிய பிறகு தொண்டை நாட்டிற்கு "அருவா நாடு' பெயர் உண்டாயிற்று. அருவாளரும் அக்காலத்தில் சமண மதத்தவராக இருந்தனர்' (தமிழுக்கு வழங்கிய கொடை, பக். 108; சங்க கால வரலாற்று ஆய்வுகள், பக். 79) என்று கூறுகிறார்.
"ஸ்மார்த்தப் பிராமணர்களுள் ஒருவகையாரான இந்த வகுப்பினர் தமிழ்நாட்டில் பல இடங்களில் இருந்து வருகின்றனர். இந்த வகுப்பிலும் மூன்று பிரிவுகள் உண்டு. அத்தியூர், அருவாட்பாடி, நந்திவாடி என்னும் ஊர்களின் பெயரால் அப்பிரிவுகள் வழங்கப்பெறும். அருவாளர் என்ற கூட்டத்தினருடைய பெயர் பழைய தமிழ் நூல்களில் காணப்படுகின்றது.
அருவாப்பாடி அவர்கள் இருந்த இடமாக இருத்தல் கூடுமென்று எண்ணுகிறேன். அங்கிருந்த அஷ்ட ஸகஸ்ரத்தினர் கிடைத்த தொழில்களைப் பெற்று ஜீவித்துவந்தார்கள்'. (என் சரித்திரம், பக். 22-23) என்கிறார் தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாத ஐயர்.
எண்ணாயிரத்தவர் ஆகிய பிராமணர்கள் முன்னாளில் சமணத்தவர் என்றும் அறியக் கிடக்கிறது. அதனாலேயே அந்தப் பகுதியில் சீவக சிந்தாமணி போன்ற சமணக் கையெழுத்து அல்லது ஏட்டுப்பிரதிகள் கூடுதலாக கிடைக்கப் பெற்றன என்று தெரிகிறது.
மகாகவி பாரதியும், ஆரிய மைந்தன் அகத்திய(ன்) என்றோர் வேதியன் நிறை மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான் என்கிறார்.
ஏதாயினும், "திராவிட' என்பது பிற்காலத்திய வழக்கு. வரலாற்று அடிப்படையில் (கி.மு. 5-ஆம் நூற்றாண்டு) திராவிடர்களுக்கு "திரமிள' என்ற பழம்பெயர் அந்நாளைய சமணர்களால் சூட்டப்பெற்றது.
புத்தர் மறைந்து ஏறத்தாழ 110 ஆண்டுகளுக்குப் பிறகு வைசாலி நகரில் இரண்டாவது சங்கம் (கி.மு. 373) கூடியது. அதில் வைதிக மதத்தின் சில கொள்கைகளை ஏற்று கொண்டவர்கள் ஹீனாயான (இழிவான) பெளத்தர்கள் எனப்பட்டனர்.
"ஹீனாயான' சமயத்தவர் "தேராவாத பெளத்தர்கள்' என்றும் அழைக்கப்பட்டனர். இவர்களும் சிவனடியார்கள் போல, லிங்க உருவத்தையே வழிபடுவர். ஏனையோர் தங்களை மகாயான (உயர்ந்த) பெளத்தர்கள் என்று கூறிக்கொண்டனர்.
அந்த இந்துக்களில் பெளத்தக் கூறுகளை உள்வாங்கிய சிலர் வைணவர் ஆயினர். காந்தாரத்தில் புழங்கிய கராஷ்டி மொழிப்படி, "சிவ'-அல்லாத "ந-சிவ' என்பதைப் புரட்டி வாசித்தால் விஷ்ணு ஆகிவிடும். அஜந்தா, எல்லோரா ஆகிய இடங்களில் சிவன் கோயில்களும், மகாயான, ஹீனாயானக் குகைகளும் மட்டுமே உள்ளன. விஷ்ணு கோயில் இல்லை.
இந்து மன்னர்களிடையே பிராகிருதமே அரசாங்க மொழியாக இருந்தது. அசோகப் பேரரசரின் (கி.மு.268 - கி.மு.232) காலத்தில் பிராகிருத மொழியே பெரும்பாலான கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டன. கி.மு.3 அல்லது 4-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த "சூர்ய ப்ராஜ்ஞாப்தி சூத்ரா' என்னும் வானவியல் குறித்த பிராகிருத மொழி நூலே கி.பி.1500-ஆம் ஆண்டில் தேவநாகரியில் எழுதப்பட்டு உள்ளது.
அசோகரின் பெயரன் ஆன தசரதர் (கி.மு.232-கி.மு.224) ஆண்ட மகத நாட்டில் (கோசல தேசத்தில்) பேசப்பட்ட மொழி "மாகதி'. நேபாளத்தின் மிதிலையில் சீதா தேவி வாழ்ந்த நாட்டில் வழங்கிய மொழி "மைதிலி'. அந்தப் பகுதியில் தோன்றிய கலப்பு மொழி-பாலி. அர்த்த மாகதி (பாதி மாகதி) எனப்படும். இவை சமஸ்கிருதத்திற்கும் முன்னமே அங்கு புழங்கிய மொழிகள்.
ஏதாயினும் அசோகரது ஆணை ஏற்று, பாலி மொழியில் எழுதப்பெற்ற தேராவாத பெளத்த சாசனங்களிலும், பண்டைத் தமிழகத்திலும் புத்த இலக்கியங்கள் பெருகின. சமணமும் தழைத்தது. அதனை எதிர்த்த தேராவத சிசு, திருஞான சம்பந்தரே திராவிட சிசுவும் ஆனார்.

கட்டுரையாளர்:
இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.