மாா்ச் 31-க்குள் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்: அமித் ஷா உறுதிஅந்நியச் செலாவணி கையிருப்பு 72,572.7 கோடி டாலராக அதிகரிப்பு!பயங்கரவாத அச்சுறுத்தல்: தில்லியில் மத, பாரம்பரிய தளங்களில் பாதுகாப்பு அதிகரிப்புபிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கான அனுமதிச்சீட்டு நாளை வெளியீடு!4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வலியின்றி வளர்ச்சியில்லை

ஒவ்வொரு மனிதனுக்கும் வசதியான செயல்கள், சகஜமான மனிதர்கள், பாதுகாப்பான இடம் என்று உண்டு. சிலர், சில வேலைகளை மகிழ்ச்சியோடும் முனைப்போடும் செய்வர், வேறு வேலைகளில் தயக்கம் காட்டுவர். அவர்களுக்கு அவ்வேலைகளி

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:13 pm

இரா. கதிரவன்

ஒவ்வொரு மனிதனுக்கும் வசதியான செயல்கள், சகஜமான மனிதர்கள், பாதுகாப்பான இடம் என்று உண்டு. சிலர், சில வேலைகளை மகிழ்ச்சியோடும் முனைப்போடும் செய்வர், வேறு வேலைகளில் தயக்கம் காட்டுவர். அவர்களுக்கு அவ்வேலைகளில் அனுபவமின்மை அல்லது கசப்பான அனுபவங்கள் காரணமாக இருக்கலாம்.
சிலர், புதிய சூழல் - மனிதர்கள் என வரும்போது மிகவும் தயங்குவதைப்
பார்க்கிறோம். அத்தகைய சூழலையும் சந்தர்ப்பத்தையும் தவிர்ப்பதைக்கூட
காணலாம்.ஆங்கிலத்தில் omfort zone  என்று சொல்லுவார்கள்; தமிழாக்கம் செய்யும்போது, சொகுசு வளையம் என்று வேண்டுமானால் கூறலாம்.
சிலர், இப்பகுதியிலிருந்து வெளிவர பெரும் தயக்கம் காட்டுவார்கள். வேறு சிலர் தயக்கத்தை உடைத்தெறிந்து, புதிய சூழல்களை, சவால்களை எதிர்கொண்டு தமது எல்லையை விரிவுப்படுத்திக் கொள்ளுவார்கள்.
கும்பகோணம் அல்லது சென்னையில், தமது ஆசிரியர் தொழிலை மட்டும் நடத்தியிருந்தால், உபாத்தியாயர் உ.வே.சா., "தமிழ்த்தாத்தா' ஆகியிருக்க முடியுமா?ஊர் ஊராய் அலைந்து திரிந்து, சுவடிகளை கண்டெடுத்து, ஒப்பிட்டு, உரையெழுதி, பதிப்பித்து செயற்கரிய செய்ததால்தான், தமிழ் உள்ளளவும் அவர் பெயர் நிலைக்கும் நிலையை எட்டினார்.
தின்பண்டம், வேடிக்கை, விளையாட்டு, தூக்கம், கேளிக்கை போன்ற சராசரி குழந்தைகளுக்கான சந்தோஷங்களைத் துறந்து, கடுமையான பயிற்சி மேற்கொள்ளும் குழந்தைதான் ஒரு பெரும் விளையாட்டு வீரனாகவோ அல்லது சங்கீத விற்பன்னராகவோ உருவாகின்றது.
அதேபோல, சில சமுதாயம் உழைக்கும் மக்களால் நிரம்பியுள்ளது. சீக்கியர்கள், சோம்பித் திரிவதை அல்லது பிச்சை எடுப்பதை பார்க்க முடியுமா? இந்தியாவின் மிகச் செழிப்பான பகுதியில் இருந்தாலும், விவசாயத்தையும் தாண்டி, உற்பத்தி உள்ளிட்ட பல துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.
மக்கள்தொகையில் இரண்டு சதவீதமே உள்ள சீக்கியர்கள் நம் ராணுவத்தில் இருபது சதவீதம் உள்ளனர். அத்தகைய அர்ப்பணிப்பும் உழைப்பும் அவர்களிடம்உள்ளது.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பிறரது துவேஷத்தால் துரத்தப்பட்டும், இழிவுபடுத்தப்பட்டும், நாடு நாடாக ஓடியும், இடைவிடாது போராடி தங்களுக்கென ஒரு நாட்டினை நிர்மாணித்துக் கொண்டவர்கள் யூதர்கள்.
அவர்களது இன்னலுக்கு இணையாக இன்னொரு நாட்டினர் இன்னல்களை ஏற்றிருப்பார்களா என்பது சந்தேகமே. அவர்கள் தாங்கள் சென்றிருந்த நாடுகளில் சுகமாக வாழ பழக்கிக் கொண்டிருந்தால் இஸ்ரேல் உருவெடுத்திருக்குமா?பொதுவில் நோக்கும்போது, இவர்கள், தங்களை ஒரு சிறு வளையத்துக்குள் அடக்கிக் கொள்ளாது, தங்களது எல்லையை விரிவு செய்வதன் மூலம் செயற்கரிய செயல்களை செய்தவர்களாகிறார்கள்.
தங்களது சொகுசு வளையத்தை விட்டு இவர்கள் வெளிவாராதிருந்தால் தங்களது இலக்கையோ - புகழையோ - உயரிய நிலையையோ அடைந்திருக்க முடியாது.குழந்தைகளும் இளைஞர்களும், தங்களது comfort zone  பகுதியின் சிந்தனை யிலிருந்து வெளியேவரும்போதுதான் - தொலைக்காட்சிப் பெட்டிகளில் நேரத்தை செலவிடுவதிலிருந்தும், வெட்டிப் பேச்சில் இருந்தும், பழகிய வேலைகளை மட்டுமே செய்வதில் இருந்தும், தனித்தியங்க தயங்குவதிலிருந்தும் வெளிவரும்போதுதான் - அவர்கள் தங்களை மென்மேலும் திறமையாளர்களாக செதுக்கிக் கொள்ள முடியும்.
இவர்களது comfort zone-ஐ சொகுசு வளையத்தை விரிவு செய்ய, பெற்றோர் ஊக்கமும் பயிற்சியும் தரவேண்டும்.
சில சமயம் இவர்களது புதிய முயற்சிகள் போதுமான பலனைத் தராவிட்டாலும்கூட முயற்சியினை கைவிடாமல் தொடரவேண்டும்.
சுதந்திரப் போராட்டத்தின்போது, ஏராளமானோர் சொத்து சுகத்தை இழந்தனர், பெண்டு பிள்ளைகளைப் பிரிந்தனர், சிறை சென்றுத் துன்பங்களை ஏற்றனர், பல தியாகங்களை செய்தனர்.
அதற்கு முக்கிய காரணம், நம் தலைவர்கள் அவர்களை சுதந்திரத்தின் சிறப்பையும் அவசியத்தையும் உணரச் செய்து, சுதந்திர தாகம் ஊட்டி, தியாகங்களுக்கும், தண்டனைகளைக்கூட ஏற்கும் மனப்பான்மைக்கும் தயார் செய்தனர். மேலும், தாங்களும் அவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்
தனர்.அமைதி - நல்லிணக்கம் - வளர்ச்சி குறித்த ஏராளமான பெரும் சவால்களை எதிர் நோக்கியிருக்கும் இத்தருணத்தில், ஒரு நாடு என்ற அளவில் கடும் உழைப்பினை நல்கவும், குறுக்கு வழியில் பொருள் சேர்ப்பது, தவறான வழியில் உயர்வை அடைவது போன்றவற்றை தவிர்க்கவும், சிற்சில தியாகங்களுக்கும் நாம் தயாராக வேண்டும்.
அனைவரும் தங்களது சொகுசு வளையத்தில் இருந்து வெளி வர வேண்டிய தருணம் இது. இத்தகைய உணர்வுகளை மக்களிடையே ஓங்கச் செய்யும் பொறுப்பு தலைவர்களிடம் இருக்கிறது.
வலியில்லையேல் வளர்ச்சி இல்லை. ஒரு குழந்தை பிறக்கும்போது தாய்க்கு ஏற்படும் பிரசவ வலிபோல, உயரிய நிலையை எய்துவதற்கு சில வலிகளை ஏற்க வேண்டியது இருக்கும்.
வளர்ச்சிக்கும் வெற்றிக்குமான செயல் திட்டங்கள் வகுப்பது என்பது ஒரு புறம் இருப்பினும், முதல் கட்டமாக, மனத்தளவில் நாம் சில இடர்களுக்கும் - இழப்புக்களும் - தியாகங்களுக்கும் தயாராகவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.