திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இந்திய ஒன்றியம் கலகலக்கும்!

என்னுடைய மாநிலத்திலிருந்து ஒரு சொட்டு நீர் வெளியே போவதைத் தடுப்பதற்காக என்னுடைய இரத்தத்தின் ஒவ்வொரு சொட்டினையும் சிந்துவதற்கு நான் தயாராக இருக்கிறேன்'

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:46 pm

பழ. நெடுமாறன்

என்னுடைய மாநிலத்திலிருந்து ஒரு சொட்டு நீர் வெளியே போவதைத் தடுப்பதற்காக என்னுடைய இரத்தத்தின் ஒவ்வொரு சொட்டினையும் சிந்துவதற்கு நான் தயாராக இருக்கிறேன்' என பஞ்சாப் சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் பாதல் சூளுரைத்திருக்கிறார். அகாலிதளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அங்கு நடைபெறுகிறது.
மேலும் சட்டமன்றத்தில் கீழ்க்கண்டத் தீர்மானத்தை முதல்வர் பாதல் முன்மொழிந்து ஒருமனதாக நிறைவேறச் செய்துள்ளார்.
"சட்லஜ்-யமுனை கால்வாய் வெட்டப்படுவதற்கு நிலம் கொடுக்க முடியாது. இத்திட்டத்தை நிறைவேற்ற முற்படும் எந்த அமைப்பையும் அனுமதிக்க முடியாது. அத்தகைய அமைப்பிற்கு எவ்வித ஒத்துழைப்பும் கொடுக்க முடியாது'.
"1966-ஆம் ஆண்டிலிருந்து அரியாணா, இராசஸ்தான், தில்லி ஆகிய மாநிலங்கள் பஞ்சாப் அளித்த தண்ணீருக்குரிய விலையைக் கொடுக்க வேண்டும். அதைப் பெற்றுத் தருவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும்' என்ற தீர்மானமும் பஞ்சாப் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.
"1966-ஆம் ஆண்டிலிருந்தே பஞ்சாப் அளித்த தண்ணீரைப் பெற்றதற்காக இராசஸ்தான் மாநிலம் 80 ஆயிரம் கோடி செலுத்த வேண்டும்' என அகாலிதள
சட்டமன்ற உறுப்பினரான நிர்மல்சிங்
கூறினார். சுயேச்சை உறுப்பினரான
சிங்ரஞ்சித்சிங் என்பவர் இத்தொகையை மேலும் உயர்த்தி "15.34 இலட்சம் கோடி ரூபாய் கொடுக்க வேண்டும்' என்று கூறினார்.
சட்லஜ்-யமுனை கால்வாய்த் திட்டத்திற்காக கையகப்படுத்திய நிலத்தை அதன் உரிமையாளர்களுக்கு இலவசமாகவே திருப்பி அளிப்பது என பஞ்சாப் அமைச்சரவை செய்த முடிவு ஆழமான உள்நோக்கம் கொண்டதாகும்.
அந்த நிலத்தைத் திரும்பப் பெற்றவர்கள் அதில் கட்டடங்களோ மற்ற கட்டுமானங்களையோ எழுப்பிவிட்டால் பிறகு நிரந்தரமாக இந்தக் கால்வாயை அமைக்க முடியாது போகும்.
பக்கத்து மாநிலங்களைப் பகை நாடுகளாகக் கருதி மேற்கண்டவாறு முதல்வரும், அனைத்துக்கட்சியினரும் முழங்கியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு இவர்கள் ஆத்திரப்படுவது ஏன்?
1981-ஆம் ஆண்டில் அப்போதைய தலைமை அமைச்சர் இந்திரா காந்தி தலைமையில் பஞ்சாப், அரியாணா, இராசஸ்தான் ஆகிய மாநில முதலமைச்சர்கள் கூடி இச்சிக்கல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கிணங்க இராசஸ்தான் மாநிலத்திற்கு 8.5 மில்லியன் கன அடி நீரும், பஞ்சாப் மாநிலத்திற்கு 4.22 மி.க.அடி நீரும், அரியாணாவிற்கு 3.5 மி.க.அடி நீரும் அளிப்பதென உடன்பாடு செய்துகொள்ளப்பட்டது.
மேலும் சட்லஜ்-யமுனை கால்வாய் திட்டத்தை இரண்டாண்டுகளுக்குள் பஞ்சாப் முடிக்க வேண்டும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஆனால், 1985-ஆம் ஆண்டில் இந்திரா காந்தியின் மறைவிற்குப் பிறகு பஞ்சாப் சட்டமன்றத்தில் 1981-ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்பாடு செல்லாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் விளைவாக இச்சிக்கல் நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு விடப்பட்டது.
ரவி-பியாசு நதிகளின் சமவெளிப் பகுதிக்கு வெளியே இருப்பதால் அரியாணா மாநிலத்திற்கு தண்ணீர் அளிக்க முடியாது என்று பஞ்சாப் கூறியதை ஏற்க மறுத்த நடுவர் மன்றம், நதிகள் ஓடும் பாதைகளும் மாநிலங்களின் எல்லைகளும் மாறலாம்.
அத்தகைய மாற்றம் 1966 நவம்பர் 1-ஆம் தேதி ஏற்பட்டது. அதற்கு முன்னால் பஞ்சாப் மாநிலத்தின் ஒரு பகுதியாக அரியாணா இருந்தது. எனவே அரியாணா மாநிலத்திற்கு இந்நதிகளின் நீரைப் பெறுவதற்கு உரிமை உண்டு என்று கூறியது.
இதற்கிணங்க பஞ்சாப் - அரியாணா மாநில அரசுகள் இணைந்து ரவி-பியாசு இணைப்புத் திட்டத்திற்காக 214 கி.மீ. நீளமுள்ள கால்வாயை அமைக்க வேண்டும் என மத்திய அரசு ஆணைப் பிறப்பித்தது.
அதன்படி அரியாணாவின் எல்லைக்குட்பட்ட பகுதியில் 93 கி.மீ. நீளமுள்ள கால்வாய் கட்டுமானப் பணிகள் நிறைவேற்றப்பட்டன.
ஆனால், பஞ்சாப் அரசு தன் பகுதியில் 121 கி.மீ. நீளமுள்ள கால்வாயை வெட்டுவதற்கான நிலத்தை உரிமையாளர்களிடமிருந்து எடுத்துக்கொண்டபோதிலும், கால்வாய் வெட்டும் வேலையைத் தொடங்கவில்லை.
இத்திட்டத்தால் தனக்கு உரிமையான நீரின் பங்கு குறையும் எனக் கருதிய பஞ்சாப் அரசு இந்த உடன்பாட்டை இரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இதற்கு எதிர் மனுவை அரியாணா தாக்கல் செய்தது.
2003-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் சட்லஜ்-யமுனா கால்வாயை முழுவதுமாக கட்டி முடிக்க வேண்டும் என பஞ்சாப் அரசுக்கு உத்தரவிட்டது.
2004-ஆம் ஆண்டில் இத்தீர்ப்பை இரத்து செய்வதற்கான சட்டத்தை மாநில சட்டப் பேரவையில் பஞ்சாப் காங்கிரசு அரசு கொண்டுவந்து நிறைவேற்றியது.
இச்சட்டத்தை எதிர்த்து அரியாணா அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் 12 ஆண்டு காலம் கழித்து 10.11.2016-இல் பஞ்சாப் அரசு கொண்டுவந்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவே இச்சட்டத்தை இரத்து செய்வதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.
இதற்கு எதிராகத்தான் பஞ்சாப் பொங்கி எழுந்திருக்கிறது. முதலமைச்சரும் சட்டமன்ற உறுப்பினர்களும், உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராகக் கொக்கரித்துள்ளனர்.
தேசிய ஒருமைப்பாட்டைக் காப்பதையே தனது இலட்சியமாகக் கொண்டிருப்பதாகக் கூறிக்கொள்ளும் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த 42 சட்டமன்ற உறுப்பினர்கள் அண்டை மாநிலங்களுக்கு நீர் அளிப்பதைக் கண்டித்து தங்கள் பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.
முன்னாள் முதலமைச்சரும், மக்களவை காங்கிரசு கட்சித் துணைத் தலைவருமான அமரீந்தர் சிங் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளனர். பஞ்சாப் மக்களின் நலனைக் காக்க பெரும் போராட்டம் நடத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
பஞ்சாபில் பா.ஜ.க.-அகாலிதள கூட்டணி அரசும், அரியாணாவில் பா.ஜ.க. அரசும் உள்ளன. இப்பிரச்னையைத் தீர்க்க வேண்டுமென்று உண்மையாகவே பிரதமர் நரேந்திர மோடி நினைத்தால் தீர்க்க முடியும். ஆனால், அவர் அமைதி காக்கிறாரா அல்லது அதற்கான வலிமை அவரிடம் இல்லையா?
மறைந்த தலைமையமைச்சர் இந்திரா காந்தி முன்னிலையில் இரு மாநில காங்கிரசு அரசுகளும் 1981-ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்பாட்டை இப்போதைய பஞ்சாப் மாநில காங்கிரசுகாரர்கள் எதிர்த்துப் பதவி விலகும் கோமாளித்தனம் நடக்கிறது.
தமிழகம் - கேரளம் ஆகிய மாநிலங்களுக்கிடையே முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை எழுந்தபோது உச்சநீதிமன்றம் 28-7-2006 அன்று முல்லைப் பெரியாறு அணையில் நீர்த் தேக்கப்படும் அளவை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த வேண்டும் என்கிற முக்கியமான தீர்ப்பை வழங்கியது.
ஆனால் இந்த ஆணையை ஏற்க மறுத்த கேரள அரசு இத்தீர்ப்பிற்கு எதிராக அவசரச் சட்டம் ஒன்றை கேரள மாநில சட்டமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றியது. இச்சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழகம் முறையிட்டபோது இச்சட்டம் செல்லத்தக்கது அல்ல என்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்தது.
காவிரி நடுவர்மன்றம் 1991-இல் இடைக்கால தீர்ப்பு வழங்கியபோது, அத்தீர்ப்பை செல்லாததாக்கும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து கர்நாடக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. ஆனால், அந்தச் சட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சனநாயகத்தின் நான்கு தூண்களில் முக்கிய தூணான உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அனைத்துக்கட்சிக் கூட்டத்தையும், சட்டமன்ற பேரவை மற்றும் மேலவைக் கூட்டங்களையும் கூட்டி கேரளம், கர்நாடகம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் தீர்மானங்களை நிறைவேற்றியிருப்பது செல்லத்தக்கதல்ல என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தப் பிறகும் இம்மாநிலங்கள் அதைச் சிறிதளவுக்கூட மதிக்கவில்லை.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் கேரளமும், காவிரிப் பிரச்சினையில் கர்நாடகமும், சட்லஜ்-யமுனை கால்வாய்ப் பிரச்னையில் பஞ்சாபும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதிக்கப் பிடிவாதமாக மறுத்து வருகின்றன.
உச்சநீதிமன்றத்தின் ஆணைகளைப் பகிரங்கமாக மேற்கண்ட மாநிலங்களின் முதல்வர்கள் மீறியபோது அவர்களை உச்சநீதிமன்றம் பெயரளவில் கண்டித்ததோடு நின்றுவிட்டது. தனது தீர்ப்பை ஏற்க மறுத்த அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தப் போக்கு தொடர்கதையாகி இருக்காது.
அதைப்போல உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து அதனை நிறைவேற்றத் தவறிய மாநில முதல்வர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக முன்பு இருந்த காங்கிரசு அரசோ அல்லது இப்போதிருக்கும் பா.ஜ.க. அரசோ நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.
தமிழகத்தில் உள்ள காவிரிப் பாசன விவசாயிகள், முல்லைப் பெரியாறு விவசாயிகள், அரியாணா மற்றும் இராசஸ்தான் விவசாயிகள் ஆகியோர்களின் நலன்களைச் சிறிதளவுகூட எண்ணிப்பார்க்காமல் கேரளம், கர்நாடகம், பஞ்சாப் ஆகிய அரசுகள் செயல்படுகின்றன.
இம்மாநிலங்களில் உள்ள அரசுகள் அகில இந்திய கட்சிகளின் அரசுகளே
என்றாலும், தேர்தல் ஆதாயத்திற்காக, தங்கள் கட்சி அரசுகள் செய்யும் இந்த அழிச்சாட்டியத்தை கண்டிக்கவோ, தடுத்து நிறுத்தவோ அகில இந்திய
கட்சிகளின் தலைவர்கள் யாரும் முன்வரவில்லை.
அரசியல் ஆதாயம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர்களும், கடுகு போல் சிறுத்த உள்ளம் கொண்டவர்களும், அகில இந்தியக் கட்சிகளின் தலைவர்களாக
பல மாநிலங்களிலும் இருப்பதால் இத்தகைய வேண்டாத போக்குகள்
வளருகின்றன.
எதிர்காலத்தில் மேலும் பல மாநிலங்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைத் துச்சமாக மதித்துத் தூக்கியெறியும் நிலை தொடராது என்பதற்கு எத்தகைய உத்தரவாதமும் இல்லை.
ஏனென்றால் தீர்ப்புகளை மதியாத மாநிலங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலை தொடர்ந்தால் இந்திய ஒன்றியத்தின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகிவிடும்.

கட்டுரையாளர்: தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.