பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இரண்டாவது தாக்குதல்!

அரை நூற்றாண்டுக்கு முந்திய அறிவியலோ, தொழில்நுட்பமோ இன்று இல்லை. "மைக்ரோ டெக்னாலஜி' ஆகிய நுண் தொழில்நுட்பம்

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:42 pm

நெல்லை சு. முத்து

அரை நூற்றாண்டுக்கு முந்திய அறிவியலோ, தொழில்நுட்பமோ இன்று இல்லை. "மைக்ரோ டெக்னாலஜி' ஆகிய நுண் தொழில்நுட்பம் இன்றைக்கு "மீநுண் தொழில்நுட்பம்' ஆகிய "நானோ டெக்னாலஜி' ஆகப் பரிணமித்துப் புதுவடிவம் பெற்றும் விட்டது. சித்தாந்தங்களும் மாற வேண்டும். பேருந்துகளே புதுநிலையங்கள் தேடி சேரும் காலகட்டத்தில் மனிதர்கள் மட்டும் புதுப்பிக்கப்படாத பழைய அறிவுத் தளத்திலேயே நிற்பது அபத்தம் அல்லவா?
கணிப்பொறியில் வன்பொருளும் மென்பொருளும் ஒன்றோடு ஒன்று சார்புடையவை. வெறும் கணினிப் பெட்டியை வைத்து இருந்தால் எந்தக் கணிப்பும் செய்ய முடியாது. அவ்வாறே, வன்பொருள் தட்டு ("ஹார்ட் டிஸ்க்') ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு எந்தப் பயனும் இல்லை. அப்படித்தான் நாடும் அரசும்.
நாடு என்பது வன்பொருள். அரசு, மென்பொருள். உடல் - வன்பொருள். உயிர் மென்பொருள். இதில் இரண்டும் தனித்தனி அல்ல. உடலால் அழியின் உயிரால் அழிவர். மறுபிறப்பு என்பது தந்தையும் தாயும் பிள்ளைகளிடம் விட்டுச் செல்லும் மரபணுக்கள் மட்டுமே. தனிமனிதன் வாழ்ந்த காலத்தில் செய்த நற்செயல்கள் மனிதர்களின் சிந்தையில் "வாழும்'. அதற்கு உயிர் உண்டு.
பிறப்பு-இறப்பு என்று எல்லாம் சிலர் சிந்திக்கிறார்களே, பிறந்த தேதியை வைத்து பிறப்பு நிர்ணயிக்கப்படுவது வைய வாழ்வில். அவ்வளவுதான். ஆனால் உயிரியல் ரீதியில் அந்தக் குழந்தைக்கான கரு பத்து மாதங்களுக்கு முன்னமேயே பிறக்கத் தொடங்கி விட்டது என்பது அல்லவா உண்மை? அதிலும் முதல் பிறந்த நாள் என்பது பிறந்த முதல் நாள் தானே? முதலாம் ஆண்டு நிறைந்த நாளினையே முதல் பிறந்த நாள் என்று வழங்குகிறோம்.
அந்தக் கரு உற்பத்திக்குத் தேவையான விந்து மூலக்கூறுகளும், சினைமுட்டை மூலக்கூறுகளும் தோன்றியது. அதற்கும் முற்பட்டது ஆயிற்றே. ஆக, எங்கும் எதிலும், இந்த ஆண்டு இந்த நாளில் இத்தனை மணிக்குப் பிறந்தது என்று சொல்வது நாம் நமக்கு நாமே வரையறுத்துக் கொண்ட அடையாள வரம்புகள் மட்டும். எல்லைகள் அல்ல. வளிமண்டலம் வரம்புக்கு உட்பட்டது. வானம் எல்லை அற்றது.
மொழியிலும் அதே நிலைதான். சிந்தனை ஆகிய அறிவியல் உதித்த பின்னரே இலக்கியம் ஆகிய எழுத்து மொழி தோன்றியது. எழுத்து வடிவம் தோன்றியதன் அடிப்படையிலேயே சில மொழிகள் காலத்தால் பிந்தியவை என்று குறிக்கப் பெறுகின்றன. ஒலி, வரி வடிவங்கள் சுமந்து வரும் கருத்து வடிவம்தான் மூன்றாம் நிலை. அதில் பின்தங்கினால் மொழி வளம் குன்றும். நாமும் பழைமைவாதம் புரியும் பயங்கரவாதிகள் ஆகிவிடுவோம்.
மாற்றமே தேவைப்படாத அல்லது மாற்றங்களை எடுத்த வாக்கிலேயே மறுதலிப்பது, குழந்தை பிறந்த உடனேயே கொலை பாதகம் செய்வது போன்றது.
நன்றோ தீதோ, ஒரு அரசின் செயல்துறைகள் எடுத்த முடிவுக்கு அரசே பொறுப்பு. ராணுவம் நடத்தும் செயல்பாடுகளுக்கு அந்த ராணுவத்தை நிர்வகிக்கும் அரசே உரிமை கொண்டாடுவதில் தப்பு இல்லை. அதனால் பெருமையும் சிறுமையும் அந்த அரசையே சாரும். சிறுமைக்குக் கண்டனம் தெரிவிப்பவர்கள் அரசின் பெருமையையும் மனமாரப் பாராட்ட வேண்டும். இந்த அறிவியல் நாகரிகம், புரிதல்தான் இன்று பல துறைகளில் குன்றிவருவதாகத் தெரிகிறது.
அரசினை ஜனநாயக முறைப்படி தேர்வு செய்த மக்களில் 51 சதவீதம் பேர் ஒரு பக்கத்தில் அணி திரண்டால் வெற்றி. மீதம் 49 சதவீதம் பேரும் எதிரிகள், எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள், போராட்டக்காரர்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆவது இயல்பு. பாருங்கள், ஒரு சதவீதம் இடப்பெயர்ச்சி என்பது இரண்டு சதவீத இடைவெளியை உண்டாக்குகிறது.
இங்கு நாடும் வீடும் ஒன்றுதான். வீட்டில் சமையல் அறை மாதிரி நாட்டில் உணவுத் துறை, வேளாண்மை. படிப்பு அறை மாதிரி கல்வித் துறை. மின்சாரம் என்பது உள்கட்டமைப்பு சார்ந்தது. அடுத்து வருமானம் இருந்தால்தான் நாடும் வீடும் வளம்பெறும். அனைத்திற்கும் மேலாக வீட்டின் பாதுகாப்பும், நாட்டின் பாதுகாப்பும் முக்கியம். இரண்டையும் காப்பது தலைவனது முதற்கடமை. பிற துறைகள் ஏனைய தேவைகளைக் கவனித்துக் கொள்ளும்.
வடக்கே காஷ்மீர், காலம்காலமாக ஒரு பிரச்னையாகவே பற்றி எரிவது எதனால்? சிந்தித்தோமா? உண்மையில் பிரச்னை - மதம், பிரிவினைவாதம், மனித உரிமை, சிறப்பு ராணுவப் பாதுகாப்புப் படை எல்லாம் இல்லை. அதற்கும் அப்பால் சர்வதேச அரசியல்.
1950-ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் தனது கிழக்குப் பாகிஸ்தானைக்கூட விட்டுக்கொடுக்கவும், காஷ்மீரைத் தக்க வைத்துக் கொள்ளவுமே விரும்பியது. அண்டை நாடு இந்திய மண்ணில் அத்துமீறி நுழைந்தபோதிலும், இந்தியா தற்காப்பு நடவடிக்கையில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது.
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என்பது வெறும் பம்மாத்து. சீனா நடத்தும் பொம்மலாட்டத்தில் கைப்பாவை பாகிஸ்தான். திரைக்கு வெளியே பாகிஸ்தான் காஷ்மீரைக் காட்டி இந்தியாவுக்கு தொந்தரவு கொடுத்து வருகிறது. சென்ற நூற்றாண்டுகளில் அமெரிக்காவிற்கும் ரஷியாவிற்கும் நடந்த பனிப்போர் மாதிரி இன்று இந்தியாவிற்கும் சீனாவுக்கும் பனிப்போர் என்பதுதான் உண்மை.
சீனாவுக்கு தெற்குப் பிராந்தியக் கடல் பகுதிகளை அணுக முடியவில்லை. அரபு, ஐரோப்பா, மத்தியக் கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளுடன் வர்த்தகத் தொடர்புக்கு பூகோள ரீதியில் இந்தியா, மலாக்கா, ஆசிய நாடுகள் குறுக்கே நிற்கின்றன. இந்தக் குறுக்குவழியில் தொலைவும் குறைவு. பயணச் சிக்கனம் வேறு.
சீனாவின் கஷ்கார் வழி, பாகிஸ்தானின் (பலூச்சிஸ்தானத்தில் அடங்கிய) குவாதர் வழியே பொடிநடையாகக்கூட சென்று அரபிக் கடலில் எண்ணெய்க் குளியல் நடத்தலாம். அதற்கான அனைத்து ஆறு வழி விரைவுத் தடங்கள், போக்குவரத்து வசதிகளை பாகிஸ்தானுக்காக சீனாவே தனது சொந்தச் செலவில் முடித்து கொடுக்கும் என்றால் கசக்கிறதா?
ரயில்வழித் தடங்களும் மணிக்கு 160 கி.மீ. வேகத்திற்குத் துரிதப் பாதைகளாக அமைக்கப்படும். நிலக்கரி, அனல், சூரிய, நீர்மின் நிலையங்கள் பாகிஸ்தான் முழுவதிலும் எழுப்பப்படும். கராச்சியில் இருந்து குவாதருக்கு நெடுவழிச் சாலைகள் பராமரிக்கவும் உத்தேசமாம். இதனால் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், தொழில்நிறுவனங்கள் என்று பாகிஸ்தானுக்கு எல்லாம் இலவசமாகக் கிடைக்கும்.
1959-ஆம் ஆண்டுவாக்கில் கட்டமைக்கப்பட்ட காரகோரம் நெடுவழிச் சாலை, 1979-ஆம் ஆண்டு திறப்புவிழாவும் கண்டது. அன்றைக்குத் தனது குவாதருக்கு சீனா வருவதை மறுதலித்து வந்த பாகிஸ்தான் இன்றைக்கு அந்த வழியில் சிகப்புக் கம்பளம் விரித்துவிட்டது.
அதிலும் காரகோரம் நெடுஞ்சாலை நான்கு அல்லது ஆறு வழித் தடங்களாக மாற்றப்படும். இங்குதான் இந்தியாவிற்குத் தலைவலி. சீனா - பாகிஸ்தான் இணைப்புக்கு நடுவே இருக்கிறது பாரத மாதாவின் தலை. அங்கு நெற்றிப் பகுதியில் குங்குமத் திலகமாகத் திகழும் ஜம்மு - காஷ்மீரின் ஜில்கித் - பலூச்சிஸ்தான் பிரதேசம் இந்தியாவிற்குச் சொந்தம். என்றாலும், சட்ட விரோதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் கிடக்கிறது.
சீனாவுக்கும்கூட, 1960-ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தானால் "கொடை'யாக வழங்கப்பட்ட கிழக்கு, வடக்கு ஜம்மு - காஷ்மீரின் ஷேக்ஸ்காம் பள்ளத்தாக்கு மட்டுமல்ல, 1950-ஆம் ஆண்டுகளில் திபெத்துடன் இணைப்பாகப் பெறப்பட்ட அக்சாய் சின் என்ற பகுதியும் தன்வசம் உள்ளது.
குவாதருக்கு ஏன் இந்த முக்கியத்துவம்? எண்ணெய் நிரம்பி வழியும் மஸ்கத், குவாதரில் இருந்து 400 கி.மீ. அருகில் இருப்பதுதான் காரணம். ஹார்முஸ் வளைகுடா வழியே கடற்பயணம் என்றாலும் 12 மணி நேரம் தானாம். ஏற்கெனவே ஆப்பிரிக்காவில் முக்கால் பகுதி சீனாவின் பிடியில் உள்ளது. அதனால் தனது சாம்ராஜ்ஜியத்திற்குள் சென்று வருவதில் குறுக்கே இருப்பது இந்தியாவின் காஷ்மீர்தான்.
இலங்கையும் புத்தம் சரணம் கச்சாமி என்று சீனாவின் பக்கம் ஒரே மஞ்சள் போர்வையில் இசைக்கிறது.
பாகிஸ்தானில் 5,000 கோடி டாலர் முதலீடு செய்திருக்கிறது சீனா. இது பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தில் ஒருபங்கு. ஒருவகையில் டிராகனின் வாயில் இருந்து பாகிஸ்தான் இனி மீள முடியாது. அது சீனாவின் 24-ஆவது மாநிலம் போலவே ஆகிவிட்டது. அதனால்தான் காஷ்மீர் அணையாத பிரச்னையாகவே உள்ளது.
அத்தனையும் மீறி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்தியது முதல் தாக்குதல். இன்று 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து அகற்றியது. கள்ள நோட்டுப் புழங்கும் பயங்கரவாதிகளிடம் நடத்திய இரண்டாவது அதிரடித் தாக்குதல்.
அதிலும் இனி வரும் ரூ.2,000 தாளில் நானோ தொழில்நுட்ப அடிப்படையில் ஒளிந்து இருக்கும் மிகுதிறன் உணரி, அந்த ரூபாய்த் தாள் இடம்பெயரும் இடங்களை அவ்வப்போது செயற்கைக்கோள் வழி அரசுக்குத் தகவல் செலுத்துமாம்.
பிறகென்ன, சுவிஸ் வங்கி மட்டுமல்ல, சிங்கப்பூர், மலேசியா என எங்கெங்கு பறந்து சென்றாலும் கள்ளப் பணத்தின் வழித்தடம் கணினித் திரையில் அம்பலம் ஆகிவிடும். அதற்கான விசேட மீநுண் கணினிச் சில்லு ஒன்று இடம்பெற இருக்கிறது. அந்த நோட்டினை எந்த இடத்தில் பதுக்கி வைத்தாலும் செயற்கைக்கோள் காட்டிக் கொடுத்து விடும். அதுதான் இந்த அறிவார்ந்த சிந்தனை அறிவியல்வாதிகளுக்கு மட்டுமே உதிக்கும். இதை வைத்து இலக்கியவாதிகள் வேண்டுமானால் அறிவியல் கவிதை புனையலாமே.

கட்டுரையாளர்:
இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.