மக்கள் காத்திருக்கிறார்கள்...
இந்திய அரசின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான வெங்கய்ய நாயுடு "காவிரிப்


இந்திய அரசின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான வெங்கய்ய நாயுடு "காவிரிப் பிரச்னையில் சட்ட முறையிலான தீர்வு காண வேண்டும்' என கூறியுள்ளார்.
காவிரிப் பிரச்னையில் கர்நாடக அரசும், இந்திய அரசும் சட்டத்தை எவ்வாறெல்லாம் துச்சமாக மதித்து தமிழகத்தை வஞ்சித்தன, வஞ்சித்து வருகின்றன என்பதை கீழ்க்கண்ட உண்மைகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
1924-ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட காவிரி உடன்பாட்டை 1974-இல் புதுப்பிக்கப்பட வேண்டி இருந்ததால் 1968-ஆம் ஆண்டு அப்போதைய மத்திய பாசன அமைச்சர் கே.எல். ராவ் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகிய மூன்று மாநில முதலமைச்சர்களை அழைத்துப் பலமுறை பேசியும் பயனில்லாமல் போகவே, 1970-ஆம் ஆண்டில் பேச்சுக்கள் பயனளிக்கும் என்ற நம்பிக்கையை தான் இழந்துவிட்டதாக வெளிப்படையாகக் கூறினார்.
1956-ஆம் ஆண்டு பன்மாநில ஆற்று நீர் பிரச்னைகள் சட்டத்தின் 4(1)-ஆவது பிரிவில், "பேச்சு வார்த்தைகள் பயனளிக்காது என்ற முடிவிற்கு மத்திய அரசு வருமானால் உடனடியாக நடுவர் மன்றம் ஒன்றை அமைப்பதாக அரசிதழின் மூலம் அறிவிக்க வேண்டும்' எனத் திட்டவட்டமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அவ்வாறு நடுவர் மன்றத்தை அமைக்க இந்திய அரசு முன்வரவில்லை. இது முதலாவது சட்ட மீறல் ஆகும்.
இதன் விளைவாக ஹேமாவதி, கபினி, ஹேரங்கி ஆகிய காவிரியின் கிளை நதிகளில் அணைகள் கட்டும் திட்டத்தை கர்நாடகம் தொடங்கிவிட்டது. இதைச் சட்டப்படி தடுத்து நிறுத்த இந்திய அரசு தவறிவிட்டது. இது இரண்டாவது சட்ட மீறல் ஆகும்.
1971-ஆம் ஆண்டில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தது. வழக்கு முடியும்வரை புதிய அணைகளை கட்டுவதை கர்நாடகம் நிறுத்தி வைக்க வேண்டும் என ஆணையிடுமாறு தமிழ்நாடு வேண்டிக்கொண்டது.
சட்டப்படி பேச்சுகளால் இனி பயனில்லை என்ற முடிவிற்கு மத்திய அரசு வந்தால்தான் நடுவர் மன்றக் குழுவை அமைக்க முடியும் என்றும், அத்தகைய முடிவிற்கு இன்னும் வரவில்லை என்றும் இந்திய அரசு பதில் வாக்குமூலம் தாக்கல் செய்ததன் மூலம் கர்நாடகம் புதிய அணைகளைக் கட்டுவதற்கு மறைமுகமாக துணைநின்றது. இது இந்திய அரசின் மூன்றாவது சட்ட மீறல் ஆகும்.
தமிழகம் காவிரிப் பிரச்னை குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கைத் திரும்பப் பெற்றால் பேச்சு நடத்தி தீர்வு காண உதவுவதாக பிரதமர் இந்திரா காந்தி 1972-ஆம் ஆண்டு அளித்த வாக்குறுதியை நம்பி தமிழகம் நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் வழக்கைத் திரும்பப் பெற்றது.
1973-ஆம் ஆண்டு மே மாதம் தில்லியில் மீண்டும் மூன்று மாநில முதலமைச்சர்களின் பேச்சு தொடங்கியது. காவிரி பற்றிய புள்ளிவிவரங்களைத் தருவதற்கு குழு ஒன்றை இந்திய அரசு நியமித்தது. பேச்சுவார்த்தை முடியும் வரை எந்த மாநிலமும் புதிய கட்டுமானங்களை ஏற்படுத்தக்கூடாது என முடிவு செய்து மூன்று முதலமைச்சர்களும் மத்திய பாசன அமைச்சரும் இதில் கையெழுத்திட்டார்கள்.
மேலும் அதே ஆண்டின் இறுதியில் இக்குழுவின் அறிக்கையை மூன்று மாநில முதலமைச்சர்களும் ஆராய்ந்து புள்ளிவிவரங்கள் சரியானவை என்பதை ஒப்புக்கொண்டார்கள். இதைத் தொடர்ந்து இருமுறை பேச்சுவார்த்தைகள் நடந்தன.
1974-ஆம் ஆண்டு நவம்பரில் தில்லியில் கூடிய கூட்டத்தில், காவிரி பள்ளத்தாக்கு அதிகார அமைப்பு ஏற்படுத்தும் திட்டத்தை மூன்று மாநில முதலமைச்சர்களும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், அவ்வாறு அமைப்பை ஏற்படுத்த இந்திய அரசு முன்வரவில்லை. இது நான்காவது சட்ட மீறலாகும்.
1976-77ஆம் ஆண்டு இந்திய அரசு அமைத்த தொழில் வல்லுநர் குழு, தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு எவ்வளவு தண்ணீர் வேண்டுமென்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டு கூறியது. இதன் அடிப்படையில், 1976-ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஒரு நகல் உடன்பாட்டினை இந்திய அரசு உருவாக்கியது.
இதன்படி தமிழகம் காவிரியில் 489 டி.எம்.சி. பெற்றுக்கொண்டிருந்ததில் 100 டி.எம்.சி. குறைத்து 389 டி.எம்.சி. பெற வேண்டும் என்றும், கர்நாடகம் பெற்றுக்கொண்டிருந்த 177 டி.எம்.சி. நீருடன் கூடுதலாக 62 டி.எம்.சி. நீர் சேர்த்து 239 டி.எம்.சி. நீர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், கேரளம் பெற்றுக்கொண்டிருந்த 6.71 நீரைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் இந்த உடன்பாடு கூறியது. முதலில் இதை ஒப்புக்கொண்ட கர்நாடகம் பின்னர் இதை ஏற்க மறுத்துவிட்டது.
பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் கபினி ஆற்றில் 19 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையையும் ஹேமாவதி ஆற்றில் 34 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையையும் ஹேரங்கி ஆற்றில் 6 டி.எம்.சி. கொள்ளளவைக் கொண்ட அணையையும் கர்நாடக அரசு கட்டிவிட்டது.
இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக புதிய அணைகளைக் கட்டிய கர்நாடகத்தின் மீது இந்திய அரசியல் சட்டம் 256-ஆவது பிரிவின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இது ஐந்தாவது சட்ட மீறல் ஆகும்.
உச்சநீதிமன்ற ஆணையின்படி 1990-ஆம் ஆண்டு சூன் இரண்டாம் தேதி காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 1991-ஆம் ஆண்டு நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்வு ஒன்றை அளித்தது.
ஆனால், கர்நாடக சட்டப் பேரவை மற்றும் மேலவை ஆகியவை கூடி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்பை ஏற்க மறுத்து தீர்மானத்தை நிறைவேற்றின. கர்நாடக "காவிரிப் பாசன பாதுகாப்பு சட்டம்' என்ற பெயரில் அவசரச் சட்டம் ஒன்றினை கர்நாடக அரசுப் பிறப்பித்தது.
இந்திய குடியரசுத் தலைவர் இச்சட்டத்தினை உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க ஆணைப் பிறப்பித்தார். 1991-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி கர்நாடக அரசின் அவசரச் சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையினை அரசிதழில் வெளியிட வேண்டுமென மத்திய அரசை தமிழகம் வற்புறுத்தியது. ஆனால், மத்திய அரசு அவ்வாறு செய்யவில்லை. எனவே தமிழகம் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.
இடைக்காலத் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் நடுவர் மன்றத்திற்கு உண்டு என்றும் அத்தீர்ப்பினை உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் ஆணையிட்ட பிறகும் இந்திய அரசு அதைத் தாமதப்படுத்தியது. இது இந்திய அரசின் ஆறாவது சட்ட மீறலாகும்.
2007-இல் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் இந்திய அரசு காலம் கடத்தியது.
பன்மாநில ஆற்றுப் பிரச்னைகள் சட்டத்தில் 2002-ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தம் அந்த ஆண்டு முதலே நடைமுறைக்கு வந்தது.
இத்திருத்தச் சட்டம் 6(2) பிரிவின்படி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பு மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டவுடன் நடைமுறைக்கு வந்துவிடும். உச்சநீதிமன்றத்தின் ஆணையைப் போன்று இதுவும் மதிக்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது ஏழாவது சட்ட மீறல் ஆகும்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழகம் தொடுத்த வழக்கின் விளைவாக 2012-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஆணைப்பிறப்பித்த பிறகே அரசிதழில் அத்தீர்ப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
10-6-2014 அன்று பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள், அனைத்துக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஆகியோர் அடங்கிய குழு சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என வற்புறுத்தியது.
கர்நாடகத்திலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வெங்கய்ய நாயுடுவும் இக்குழுவில் ஒருவர். இத்தூதுக்குழுவின் வேண்டுகோளுக்கிணங்க இதுவரை காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க பிரதமர் மோடி முன்வரவில்லை. இது எட்டாவது சட்ட மீறலாகும்.
கடந்த 48 ஆண்டு காலத்திற்கு மேலாக காவிரி நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பையோ, இறுதித் தீர்ப்பையோ, உச்சநீதிமன்றத்தின் ஆணைகளையோ மதித்திட கர்நாடக அரசு மறுக்கிறது.
காவிரிப் பிரச்னையில் கர்நாடக மாநிலத்தில் அரசியல் சட்டம் செயலற்றுவிட்டது. எனவே உடனடியாக அரசியல் சட்டப் பிரிவு 365 மற்றும் 356 ஆகியவற்றின் கீழ் கர்நாடக அரசின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன்வருமா?
தமிழக உழவர்களையும், மக்களையும், புதுவை மாநிலம் காரைக்கால் பகுதி உழவர்களையும், மக்களையும் வாழ்வா சாவா என்ற நிலைக்கு ஆளாக்கியிருக்கும் கர்நாடகத்தின் அழிச்சாட்டியத்தைப் பார்த்துக்கொண்டு இந்தியாவின் பிற மாநில மக்கள் சும்மா இருக்கப் போகிறார்களா?
கர்நாடகத்தில் உள்ள அகில இந்திய கட்சிகளின் மாநிலக் கிளைகள் ஒன்றுபட்டு, இந்திய அரசியல் சட்டம், உச்சநீதிமன்ற ஆணை, நடுவர் மன்றத் தீர்ப்பு ஆகியவற்றை மதிக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டிக்க முன்வருமா?
தமிழக மக்கள் காத்துக்கொண்டிருக்றார்கள் - முடிவெடுக்க!
கட்டுரையாளர்: தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...