வண்ணங்கள் அல்ல, எண்ணங்கள் முக்கியம்!
"மாணவர்கள் அமைதியின் தூதுவர்களாக அரும்பங்கு ஆற்றலாம். அதற்காகப் பிரகாசமான எதிர்காலம் குறித்த ஒரு செய்தியை அவர்களுக்குத் தெரிவியுங்கள்!' என்பதே பெரியவர்களுக்கு டாக்டர் கலாமின் வேண்டுகோள்.


"மாணவர்கள் அமைதியின் தூதுவர்களாக அரும்பங்கு ஆற்றலாம். அதற்காகப் பிரகாசமான எதிர்காலம் குறித்த ஒரு செய்தியை அவர்களுக்குத் தெரிவியுங்கள்!' என்பதே பெரியவர்களுக்கு டாக்டர் கலாமின் வேண்டுகோள்.
நம் தலைவர்களோ, புத்தாண்டு விடியும்போதே, "அது அற்ற', "இது அற்ற' காலம் மலர்வதற்குத்தான் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
"ஒரு நாடு ஊழல் அற்ற நாடாக, அழகிய நெஞ்சங்களின் இருப்பிடமாகத் திகழச் செய்வதற்கு, முக்கியமாக மூவரால் மட்டுமே முடியும். அவர்கள் தந்தை, தாய், ஆசிரியர்' என்பார் கலாம். ஆனால், நம்மவரில் சிலர் தெருவோரக் குடுகுடுப்பைக்காரர் மாதிரி தங்கள் மருந்து மட்டுமே வாயு உபத்திரவம் போக்கும், பித்தம் நீக்கும் என்கிறார்கள். நேர்மறைப் பிரசாரம் செய்தவர்கள்தான் சமீப காலமாக அறிவியலிலும், இந்திய அரசியலிலும் வென்று இருக்கிறார்கள் என்பது வரலாறு.
எதையுமே நேர்மறையாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது கலாமின் வாக்கு. "ஃபெயில்' என்பதை ஆங்கிலத்தில் "ஃபர்ஸ்ட் அட்டம்ப்ட் இன் லேர்னிங்' என்கிறார். ஆங்கிலத்தில் "நோ' (இல்லை) என்பதையும் "நெக்ஸ்ட் ஆப்பர்ச்சூனிட்டி' (அடுத்த முறை நல்வாய்ப்பு) என்று தானே உரைக்கிறார். அதுதான் அறிவியல் அனுபவம்.
நாமோ இன்றைய பாலர்களுக்குக் கற்றுத் தரும் ஆங்கில மழலைப் பாடல்களைப் படியுங்கள். "ரிங்கா ரிங்கா ரோசஸ்' எனத் தொடங்கி "ஆல் ஃபெல் ஃடவுண்' (எல்லாம் கீழே விழுந்தன); "லண்டன் பிரிட்ஜ் ஃபாலிங் டவுன்' (பாலம் இடிந்து விழுந்தது); "ஜாக் ஃபெல் டவுன் அண்ட் புரோக் ஹிஸ் கிரெளன்' (மலை மீது ஏறியபோது ஜாக் கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டான்); சுவரில் மேல் அமர்ந்து இருந்த ஹம்ப்டியும் டம்ப்டியும் தடால் என்று கீழே விழுந்தனர் (கிரேட் ஃபால்) - என்று உற்சாக (?) "எழுச்சி'ப் பாடல்கள்.
இளைஞர்களிடம் "ஒளி படைத்த கண்ணினாய் வா' என்றான். அடுத்து "உறுதி கொண்ட நெஞ்சம்' என்றான். பெண்கள் என்றாலும் நேர்கொண்ட பார்வையைத்தான் ஏத்துகிறான். ஒழுக்கத்தின் புற அடையாளம் கண்கள். ஒருவரின் நடத்தையை அவரது கண்களைப் பார்த்தாலே புரிந்துவிடும். "நிலைகுத்திப் பார்க்கிற பார்வை' ஒன்று போதுமே. மூளைக்கும், பார்வை நரம்புக்கும் இடையிலான தொய்வு, புத்தி நிலையைக் காட்டிக் கொடுத்துவிடும். உயிரியல் ரீதியில் இடது மூளை - அறிவியல் சிந்தனைக்கும், வலது மூளை - இலக்கிய உணர்வுக்கும் காரணம். ஆதலால், எண்ணும் எழுத்தும் இரு கண்கள் என்றான் வள்ளுவப் பெருமகன்.
உண்மையில், இருபது ஆண்டுகளுக்கு முன்னாள் அமெரிக்காவின் "செவ்வாய் பூகோளக் கண்காணிப்புத் திட்டம்' 1996 நவம்பர் 7 அன்று அறிவிப்பானது. உலகெங்கும் இருந்து 10,000 மாணவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு வயது வரம்புக்கு உள்பட்டவர்களுக்குப் பல்வேறு கட்டங்களில் பல்வேறு அறிவியல் கழகங்களினால் நேர்முகத் தேர்வும், கட்டுரைப் போட்டியும் நடத்தியதில் ஒன்பது பேர் இறுதிக் கட்டத் தேர்வில் வென்றனர்.
அவர்களில் ஹங்கேரி, அமெரிக்கா, பிரேசில், தாய்வான், போலந்து ஆகிய நாடுகளில் இருந்து மொத்தம் ஆறு பேரும், இந்தியாவில் இருந்து மட்டும் மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
15 வயதுப் பிரிவில் ராஜஸ்தானில் உதய்ப்பூரைச் சார்ந்த எஸ்.ஆர். ஹர்தல்கா, 13 வயதுப் பிரிவில் மகாராஷ்டிரத்தின் நாகபுரியைச் சார்ந்த டி.எஸ். கிர்வாத்கர், 10 வயதுப் பிரிவில் பெங்களூருவைச் சார்ந்த விகாஸ் சாரங்கதாரா ஆகியோரே அந்த இளம் விஞ்ஞானிகள்.
2024-ஆம் ஆண்டு செவ்வாய்க் கோளுக்கு ஒருவழிப் பயணம் செல்லத் தயாரானவர்கள் விண்ணப்பங்கள் அனுப்புமாறு அண்மையில் நெதர்லாந்தில் "மார்ஸ் ஒன்' (செவ்வாய் ஒன்று) என்கிற லாப நோக்கு இல்லாத ஓர் அமைப்பு அறிவித்து இருந்தது.
உலகம் முழுதிலும் இருந்து செவ்வாய்க் கிரகத்தில் தங்குவதற்கே இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் தயார் ஆனார்களாம். பெறப்பட்ட 2,02,586 விண்ணப்பங்களில் இருந்து தீவிரப் பரிசீலனைக்குப் பின்னர் 100 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 50 பேர் ஆண்கள், 50 பேர் பெண்கள். மொத்தத்தில் 39 பேர் அமெரிக்கர்கள். 31 பேர் ஐரோப்பியர், 16 பேர் ஆசியாவைச் சார்ந்தவர்கள். 7 பேர் ஆப்பிரிக்க நாட்டினர். 7 பேர் ஓசியானியா நாட்டவர்.
அவர்களில் குறைந்தது 40 பேரையாவது செவ்வாயில் நிரந்தரமாகக் குடியமர்த்தத் திட்டம் இடப்பட்டு உள்ளதாம். 7 ஆண்டுகள் கடுமையான விண்வெளிப் பயிற்சியும் அளிக்கப்பட இருக்கிறது.
இந்த நூற்றுவரில் மூவர் இந்தியர்கள். ஒருவர் அமெரிக்காவில் வசிக்கிறார். மத்திய புளோரிடா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்ட ஆய்வாளர் தரஞ்ஜீத் சிங் பாட்டியா (வயது 29), ஏனைய இருவர் பெண்கள். ஒருவர் துபாயில் வாழும் ரித்திகா சிங் (29). மற்றொருவர் கேரள மாநிலத்தின் ச்ராதா பிரசாத் (19). பாருங்கள், இந்த இளம்பெண்ணின் அறிவியல் துணிச்சல் ஆச்சரியப்பட வைக்கிறது.
செவ்வாய் சென்ற முதல் பெண்மணி என்ற பெயர் போதும் என்ற புகழுக்கு அவரது பெற்றோரைத்தான் முதலில் பாராட்ட வேண்டும்.
குழந்தைகளைக் கல்லூரிக்கு அழைத்தது ஆசிரியரா? அரசா? அங்கு ஏதேனும் குற்றம் குறை இருந்தால் மாணவர்கள், பெற்றோர்களிடம் அல்லவா புகார் சொல்ல வேண்டும்? கல்விக் கட்டணம் செலுத்தியவர் பெற்றோர். கல்வி ஊதியத்தொகை வழங்கிட உதவியவர் பெற்றோர். சுய சம்பாத்தியத்தில் வேலை செய்யும் இடத்தில் வேண்டுமானால் படித்த பட்டதாரிகள் தங்கள் சித்தாந்தங்களை முன்நிறுத்தலாம், தப்பு இல்லை. படிக்கும்போதே தலைவர் பட்டமா?
தமிழுக்கே உரிய ஒரு சொற்குழப்பம். வகுப்பில், அலுவலகத்தில் வழிநடத்தும் "லீடர்', கட்சியில், நிறுவனத்தில் தலைமை வகிக்கும் "பிரசிடெண்ட்', குழுமத்தின் "சேர்மன்' - எல்லோரும் "ஹெட்' (தலை) சார்ந்து தமிழில் தலைவர்கள் ஆகிறார்கள், போகட்டும்.
பாரதி, இளைஞர்களிடம் எற்றிவிடக் கூறுவதோ கெட்டப் புத்தகங்களை, "பொய்மை நூல்கள் எற்றுவாய்' என்று உச்சரிக்கிறான் (மலையாள மொழியில் கெட்டவார்த்தைக்குத் "தெறி' என்று பெயர்).
ஒரு கணக்கில் இன்றைய சின்னத்திரை விளம்பரங்களே கூட இந்த வகையில்தான் அமைகின்றன. "இந்த சாதாரண வேட்டியை வாங்காதீர்' என்று மூன்றாவது ஆள் அல்ல, கடைக்காரரே எதிர்விளம்பரம் செய்வது ஆச்சரியம். பிறகு, "பிற' வேட்டியை அங்கு அடுக்கி வைப்பானேன்?
புயலுக்கும் மழைக்கும் எந்த மடையனாவது நாற்காலியைப் போட்டு வீட்டுக்கு வெளியே உட்காருவானா? மழையில் நனையாத பெயின்ட்டுக்கு விளம்பரம். சிலருக்கு எதிர்காலச் "சென்னை'யில் வீட்டுமனை இருக்கிறதாம். உள்ளூர்ச் சாக்கடைக்கு அருகாமை என்கிறார். "வருங்காலக் கூவ'த்தின் கரை அல்லவா?
அடுக்குமாடி விற்பனையாளர், பதிவு செய்த பாமரர்களை ஏமாற்றுவாராம். பல கோடிச் செலவில் கிரிக்கெட் வீரர் வந்து விளம்பரம் தந்தால் வாடிக்கையாளர்கள் மசிவார்களாம். விளம்பரத்திற்காக அறியாத பொருளுக்கு வக்காலத்து வாங்குபவர், "இது என் சொந்தக் கருத்து அல்ல' என்று முன்மொழிந்து பேசினால் என்ன? குளிர்பான விளம்பரத்தில் "நடித்த' நெட்டை மனிதர் வயிற்றில் புண் வந்த பிறகு விளம்பர நடிப்பை நிறுத்திக் கொண்டார் என்கிறார்கள்.
ஏதாயினும் ஒரு வாலிபனின் வீட்டைச் சுற்றிப் பார்த்ததுமே, ஒரு குட்டைப் பாவாடைக்காரி, "தாயார்' ஆவதற்குத் தயார் ஆகிறார். நல்ல குடும்பப் பாங்கு. லுங்கி கட்டியதனால் கட்டுமஸ்தான உடம்பை ரசிக்கிறார், இடுப்பில் குடம் ஏந்திய கருப்புக் கண்ணாடி அழகி, இன்னொரு புறம். நவீன விளம்பரங்கள் சொல்லும் உபதேசம் கொடிது.
தேர்வில்கூட, 100-க்கு 35 மதிப்பெண்கள் பெற்றாலே வெற்றி. புத்திசாலி எதிர்மறையாளர்கள், "என்ன பெரிய ஜெயித்துவிட்டாய்? 65 மதிப்பெண்கள் இழந்தவன் தானே?' என்று ஜெயித்தவனை இழித்துப் பேசுவானேன்?
நல்லபடியாக "எதிர்மறைக் கலாசாரத்தை' வளர்க்கிறோம். "என் எண்ணத்திலே, கல்விமுறை மாணவர்களின் ஆக்கபூர்வமான கற்பனைத் திறன்களை ஊக்குவிப்பதாக அமைய வேண்டும். போற்றத் தக்க நற்குணங்களையும் போதிப்பதாக நம் கல்வி முறை அமைய வேண்டும்' என்பார் கலாம்.
நால்வர்ண பேதம் அறவே கூடாது என்று சொல்லிக்கொண்டே தங்கள் "வர்ண'த்திற்கு ஒதுக்கீடு, சலுகைகளைத் தக்க வைக்க ஏன் இத்தனைப் பிரயத்தனம்? தங்கள் "அடையாள அட்டை'யை எவரும் ஒரு முறைதான் பயன்படுத்த வேண்டும். படிப்பதற்கு இடம் கேட்கலாம். பட்டதாரி ஆன பின்னர், பட்டம் அல்லவா "அடையாள அட்டை'? பணிநாடி "பழைய அட்டை'யைக் காட்டி இடம் கேட்கலாமா? பதவி உயர்வுக்கும் தொடர்ந்து, இதே அட்டையைக் காட்டுவது என்பதும் திறமை கொண்ட ஒருவரது பணி அல்லது உயர்வினை முடக்கும் செயல்
ஆகாதோ?
இங்கே வர்ணம் என்றதும் இறுதியாக ஒரு எதிர்மறைச் செய்தி. ஹோலி கொண்டாடிய நமக்கு அபாயகரமான கன உலோக ஆக்சைடுகளில் ஆரோமின் (மஞ்சள்), மாலச்சைட் (பச்சை), ரோடாமின் (ஆரஞ்சு நிறம்) கலந்து இருந்தது தெரியுமோ என்னவோ? தலைவலி, மூளை வளர்ச்சிப் பாதிப்பு, வாந்தி, குமட்டல், இருமல், நிமோனியா காய்ச்சல், ஞாபக மறதி, ரத்த அழுத்தக் குறைவு என்று அனைத்து நோய்களின் பிறப்பிடம் இந்த ஹோலி வண்ணங்கள்.
கண்வீக்கம் தரும் செம்பு சல்பேட்டு (பச்சை), சிறுநீரகத்தைத் தாக்கும் காரீய ஆக்சைடு (கருப்பு), மூச்சு முட்டலுக்குக் காரணமான பாதரச சல்ஃபைட் (சிகப்பு), நுரையீரல் ஆஸ்துமாவைத் தூண்டும் குரோமியம் புரோமைடு (கடுஞ்சிகப்பு) - அத்துடன் சிலிக்கா எனும் மண் பொருள் அடங்கிய மைக்கா (அப்பிரம்), கல்நார் (ஆஸ்பெஸ்டாஸ்) என புற்றுநோய்க் காரணிகள் எல்லாமே நமக்குக் "கொண்டாட்டம்' தான். புகைத் தடுப்புக்காகப் புற்றுநோய் மருத்துவரும, புற்றுநோய்க் காரணியாக புகை நடிகரும் ஒரே மேடையில் தேசிய கெளரவிப்புகள் ஏற்கும் காலம் ஆயிற்றே.
கட்டுரையாளர்:
இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).
நெல்லை சு. முத்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...