டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

யாமார்க்கும் குடியல்லோம்

ஒவ்வொரு நாட்டிற்கும் அரசியல் சாசனம் இருக்கிறது. அது குடிமக்கள் அடிப்படை உரிமைகள், கடமைகள் பற்றி உரைக்கிறது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:51 pm

சா.கந்தசாமி

ஒவ்வொரு நாட்டிற்கும் அரசியல் சாசனம் இருக்கிறது. அது குடிமக்கள் அடிப்படை உரிமைகள், கடமைகள் பற்றி உரைக்கிறது. குடிமக்கள் அனைவரும் அரசியல் சாசனம் விதித்துள்ள நடைமுறைகள் படியே நடந்து கொள்ள வேண்டும். அதற்குப் புறம்பாக - எதிராகச் செயல்படுவது குற்றம். அதற்குத் தண்டனை உண்டு.
 அரசியல் சாசனம் என்பது மாற்ற முடியாததோ; திருத்த முடியாததோ இல்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கொண்டு புதிய அரசியல் சாசனம் எழுதிக் கொள்ளலாம்; திருத்தங்கள் செய்து கொள்ளலாம். அந்த உரிமையையும் அரசியல் சாசனமே வழங்கி இருக்கிறது.
 பல நாடுகள் அரசியல் சாசனம் புனிதமானது என்று சொல்லிக் கொண்டே பல திருத்தங்கள் செய்திருக்கின்றன. ஏனெனில், அரசியல் சாசனம் என்பதே மக்களுக்குத்தான். அரசியல் சாசனத்திற்காக மக்கள் கிடையாது. உலக அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப வளர்ச்சி, முன்னேற்றம் என்பதன் அடிப்படையில் மாறுதல்கள், திருத்தங்கள் செய்யப்படுகின்றன.
 1950, ஜனவரி 26-ஆம் நாள் இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது. இனம், மொழி, கலாசாரம், பண்பாடு, நிலவியல் - ஆகியவற்றால் வேறுபட்டிருக்கும் மக்களை ஒன்றாக இணைத்து, சமமாக நடத்துவதுதான் அதன் அடிப்படை. ஆனால், 65 ஆண்டுகளில் நூறு முறைகள் அரசியல் சாசனம் திருத்தப்பட்டிருக்கிறது என்பது அதன் குறைபாடு இல்லை. தேவை, அவசியம் சார்ந்தே நடைபெற்றுள்ளது.
 முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாக அன்னியர்களால் ஆளப்பட்டு வந்த நீண்ட பாரம்பரியமும், பண்பாடும் கொண்ட எளிய மக்களைத் தேசிய மைய நீரோட்டத்திற்குள் கொண்டு வந்து ஒரு நாட்டு மக்களென உணரவும் வாழவும் வைப்பதுதான் நோக்கமாக இருந்தது. அந்த இலக்கில், புதிய அரசியல் சாசனத்தைப் பல அறிஞர்கள் மூன்றாண்டுக் காலம் கடுமையாக உழைத்து, பல முன்னேறிய நாடுகளின் அரசியல் சாசனங்களை அலசி, ஆராய்ந்து அவற்றில் இருந்து உயர்வான அம்சங்களை எடுத்துக் கொண்டு இந்திய அரசியல் சாசனத்தை எழுத ஆரம்பித்தார்கள்.
 இந்தியாவின் ஆட்சிமொழியாக அன்னியர் ஆட்சி காலத்தில் ஆங்கிலம் இருந்தது. அது அடிமையின் சின்னம் என்று தேச பக்தர்கள் கருதினார்கள். சுதந்திர நாட்டின் ஆட்சி மொழியாக அன்னிய மொழி இருக்க முடியாது என்று முழங்கினார்கள். இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழிதான் ஆட்சி மொழி என்று சுதந்திரத்திற்கு முன்பே தீர்மானம் செய்து விட்டார்கள்.
 ஆகையால், ஆட்சி மொழியென்ற அந்தஸ்து பெற்றுவிட்ட இந்தி மொழியில் அரசியல் சாசனம் எழுதினார்கள். விரைவிலேயே அதன் போதாமை தெரிந்தது. பொருள் மாறுபடாமலும், துல்லியமாகப் பொருள் தரவும் கூடியது என்று கருதிய ஆங்கிலத்தில் எழுதினார்கள். பின்னர், அதற்கோர் இந்தி மொழி பெயர்ப்பு செய்து கொண்டார்கள்.
 ஒரு நாடென்பது எப்பொழுதும் ஒரே மாதிரியான அளவில் இருப்பதில்லை. பல்வேறு காரணங்களால் ஒரு நாட்டின் நிலவியல் மாறிவிடுகிறது. அதாவது, ஒரு பெரிய நாடு பிரிக்கப்பட்டுப் புதிய நாடு உருவாக்கப்பட்டு விடுகிறது. அதனால், பெரிய நாட்டு மக்களில் பலர் புதிய நாட்டின் குடிமக்களாகி விடுகிறார்கள்.
 1947-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியா, இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. பிரிக்கப்பட்ட நிலப் பகுதியில் வாழ்ந்தவர்கள் அந்த நாட்டின் குடிமக்களானார்கள். சிலர் தங்களின் பூர்வீக நிலப் பகுதியில் இருந்து புலம் பெயர்ந்து புதிய நாட்டின் குடிமக்களாக மாறினார்கள்.
 மனிதர்கள் பிறந்த நாட்டில்தான் வாழவேண்டும் என்பது கட்டாயமில்லை, அவர்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் இன்னொரு நாட்டிற்குப் புலம் பெயர்ந்து வாழ உரிமை உடையவர்கள் என்று ஐ.நா. சபை பிரகடனப்படுத்தியிருக்கிறது. அதனை எல்லா நாடுகளும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்குப் புலம் பெயர்ந்து சென்று அந் நாட்டின் குடிமக்களாவது என்பது எளிதான காரியமில்லை.
 ஒவ்வொரு நாடும் எல்லை வகுத்துக் கொண்டு இன்னொரு ஆள் உள்ளே வந்து விடக் கூடாது என்று கடுமையான காவல் போட்டு இருக்கின்றன. ஒவ்வொரு நாடும் எல்லை பாதுகாப்புக்குதான் அதிகமாகச் செலவிடுகின்றன. ஏனெனில் தேசத் துரோகிகள், வன்முறையாளர்கள், போதைப் பொருள்கள் கடத்துவோர், பாலியல் தொழிலாளிகள் தன் நாட்டிற்குள் நுழைந்து அமைதியைச் சீர்குலைத்து விடக் கூடாது என்கிறார்கள். மிகவும் கவனமாக நாட்டிற்குள் வர விசா கொடுக்கிறார்கள்.
 பலர் சூழ்நிலைகள் காரணமாகப் புதிய நாட்டின் குடிமக்களாகி விடுகிறார்கள். ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி புரிந்தபோது யூதர்கள் வதைக்கப்பட்டார்கள். அதனால் பலர் அமெரிக்கா, இங்கிலாந்து புலம் பெயர்ந்து சென்றார்கள். அவர்களில் மகா மேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒருவர்.
 அவர் அமெரிக்கா சென்று குடியுரிமை பெற்றார். இந்தியாவின் புகழ்பெற்ற ஓவியரான உசேன் தன் ஓவியங்களைக் காட்சிக்கு வைக்க முடியவில்லை. வன்முறையாளர்கள் அடித்து சீர்குலைக்கிறார்கள் என்று கத்தார்க்குச் சென்று குடியுரிமை பெற்றார். இத்தாலிய பெண்மணியான சோனியா, ராஜீவ் காந்தியை மணந்து கொண்டு இந்திய குடிமகளானார். எந்த நாட்டின் குடிமக்களானாலும் அந்த நாட்டின் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பது விதி.
 குடியுரிமை பெற்ற நாட்டின் மீது மக்கள் மாறாத பற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆட்சிமொழி கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும். தேசியக் கொடியை வணங்க வேண்டும். தேசிய கீதத்தைப் பாட வேண்டும். அதோடு அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும்.
 அதற்கு எதிராக - மாறாக; பேசுவதோ, எழுதுவதோ தேசத் துரோகம்; அது மன்னிக்கவே முடியாத குற்றம். தனி ஆளாக இருந்தாலும் சரி, ஒரு கட்சியாக இருந்தாலும் சரி, அரசு என்பது தேசத் துரோகத்தை சகித்துக் கொண்டு இருக்க முடியாது. தேசத் துரோகத்தில் ஈடுபடுகின்றவர்களை கடுமையாகத் தண்டித்து அடக்க வேண்டும். தேசத் துரோகிகள் மீது கருணை காட்ட முடியாது என்று ஆளும் கட்சி, ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள்.
 தேசத் துரோகம் என்று சொல்வது அப்பட்டமான மனித உரிமை மீறல்; பேச்சு சுதந்திரம்,கருத்துச் சுதந்திரம் என்பதை நசுக்குவது. அரசியல், சமூக, கலாசார வளர்ச்சி, முன்னேற்றம் என்பதெல்லாம் சுதந்திரமான பேச்சு, எழுத்தால்தான் பெற்று இருக்கிறோம். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சட்டம் வகுத்து எழுதி வைத்த ஹம்முராபி விதிகளில் கூட தேசத் துரோகம் இல்லை. அது ஆங்கிலேயர்கள் கண்டுபிடிப்பு.
 ராஜாவையும், அமைச்சர்களையும், தேவாலயங்களையும் குற்றம் குறைகள் சொல்லி பேசியவர்கள், எழுதியவர்கள் வாயடைக்கவும், முடக்கவும் கொண்டு வந்த பிற்போக்கான சட்டம். பிரிட்டிஷ் அரசு உலகத்தின் பல நாடுகளிலும் வஞ்சகத்தாலும், சூழ்ச்சியாலும் காலனிகளை அமைத்துக் கொண்டபோது வீறுகொண்டெழுந்து குடிமக்களை அடக்க, தண்டிக்க ராஜ துரோகச் சட்டம் கொண்டு வந்தார்கள்.
 இந்தியாவிற்காக ராஜ துரோகச் சட்டத்தை இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்குரைஞருமான தாமஸ் பாபிங்டன் மெக்காலே எழுதி கொடுத்தார். இந்தியா சுதந்திரம் பெற்று, குடியரசானபோது ராஜ துரோகச் சட்டமும் போய்விடும் என்று நாட்டுப்பற்று கொண்ட மக்கள் எதிர்பார்த்தார்கள்.
 தேச பக்தர் வேறு; தேசத்தை ஆள்கின்றவர்கள் வேறு. தேச பக்தர்களுக்குப் பொது நியாயம் தெரியுமே தவிர, அரசியல் சூழ்ச்சிகள் தெரியாது. பேசக் கூடாததையெல்லாம், பேசக் கூடாத இடத்தில் பேசி மக்களிடையே அரசுக்கு விரோதமான எண்ணங்களை விதைத்து விடுவார்கள். அது நாளடைவில் பெரும் மரமாக வளர்ந்து விடும்.
 எனவே, தேசத் துரோக சிந்தனையென்பது மக்கள் மனத்தில் தோன்றவே கூடாது. சட்டப்பூர்வமான அரசுக்கு எதிராகப் பேசுவது, எழுதுவது, சித்திரம் வரைவது, சினிமா என்பதெல்லாம் சகித்துக் கொள்ளவே முடியாது. அது மனித உரிமை கிடையாது; பேச்சுச் சுதந்திரமும் இல்லை.
 எளிய மனிதர்கள் போல் இருக்கும் சிந்தனைவாதிகள் ஆபத்தானவர்கள். அவர்கள் மக்களை விரைவில் வசீகரித்து தேசத் துரோகச் செயல்களில் ஈடுபட வைத்து விடுவார்கள். தன் குடிமக்கள் என்பதற்காக தேசத் துரோகத்தில் ஈடுபடுகின்றவர்களைச் சட்டபூர்வமான அரசாங்கம் பொறுத்துக் கொண்டு இருக்க முடியாது. அவர்கள் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் சரி, எவ்வளவு மக்கள் ஆதரவு பெற்று இருந்தாலும் சரி, தண்டிப்பது என்பது அரசின் கடமை என்கிறார்கள்.
 தண்டனைதான் மனிதர்களைக் கட்டுக்கோப்பில் வைத்திருக்கும். எவ்வளவு கடுமையான தண்டனை கொடுக்கப்படுகிறதோ - அந்த அளவுக்கு நாடு அமைதியாக இருக்கும். எனவே, அரசாங்கம் தண்டனை கொடுப்பதற்கு அஞ்சவே கூடாது. எனவேதான், தண்டனையை நீதிபதியும், வெகுமதியை மன்னனும் கொடுக்க வேண்டுமென்று இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேக்கிவெல்லி சொல்லி வைத்திருக்கிறார்.
 மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் புறவுலகத்தில், செளகரியங்களை உண்டாக்கிக் கொள்வதில், அனுபவிப்பதில் மகத்தான முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள். ஆனால், உளவியல் ரீதியில் ஆதிகால மனிதனாக வஞ்சம், சூழ்ச்சி, கொலை, கொள்ளையில் ஈடுபடுகின்றவர்களாகவும், சட்டப்பூர்வமான அரசைக் கவிழ்த்துவிட்டு தன்னாட்சி அமைக்க பேராசைக் கொண்டிருக்கிறார்கள். அதன் வழியாகப் பரம்பரை ஆட்சியை ஸ்தாபிக்கிறார்கள். அதுதான் தேசத் துரோகம்.
 ஒரு நாட்டின் குடிமக்கள் அந்நாட்டிற்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அரசாங்கத்திற்கு எதிராக - மக்கள் நலன் சார்ந்து எதுவும் பேசக் கூடாது. சுய சிந்தனை, கருத்து என்பதே குடிமக்களிடம் இருக்கக் கூடாது. அவர்கள் தேர்தலின்போது வரிசையில் நின்று வாக்களிக்கவும், அரசு தரும் விலையில்லாத பொருள்களை வாங்கிக் கொண்டு போகவும் இருக்கிறவர்கள் என்ற அபிப்பிராயமே ஆட்சியாளர்களின் செயல்பாடுகளாக இருக்கின்றன.
 அதில் சர்வாதிகாரிகள், கொடுங்கோலர்கள் இருப்பது போல ஜனநாயகவாதிகளும் இருக்கிறார்கள். ஆகையால், பல்வேறு விதங்களில் அர்த்தம் செய்து கொள்ளும் விதமாக தேசத் துரோகச் சட்டம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 தேசத் துரோகச் சட்டம் சமுத்திரம் போல பரந்து இருப்பது. அது சொல்வதைவிட சொல்லாமல் விட்டு இருப்பதன் வழியாகவே பலரையும் பிடித்து விடுகிறார்கள். அதில் அசல் தேச பக்தர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இந்திய தேசியப் போராட்டத்தை முன்னின்று நடத்திய திலகர், வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, மகாத்மா காந்தி, வ.வே.சு. ஐயர் எல்லாம் தேசத் துரோக வழக்கில் சிக்கிக் கொண்டு தண்டனைப் பெற்றவர்கள் என்பது சரித்திரம்.
 தேசத் துரோகச் சட்டத்தை உலகத்திற்கு அறிமுகப்படுத்தி, உத்தம தேச பக்தர்களைச் சிறையில் அடைத்த இங்கிலாந்து, அச்சட்டம் தேவையில்லாதது என்று புறந்தள்ளிவிட்டது. ஆனால், தேசத் துரோகச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட சுதந்திரம் பெற்ற நாட்டில் அது ஜீவிதமாக இருக்கிறது என்பது வரலாற்றின் முரண்.
 தேசம், தேசப்பற்று என்பதெல்லாம் மனிதர்களுக்கு இயற்கையானது இல்லை; இயல்பானதும் கிடையாது. இரண்டும் சொல்லிக் கொடுக்கப்பட்டது. மாறக் கூடியதும், மாற்றிக் கொள்ளவும் தக்கது; சமூக நலம், சொந்த விருப்பத்தாலும் அமைவது. மனிதர்கள் லட்சியம் என்பது சர்வதேச குடிமக்களாக இருப்பதென்பதுதான்.
 அதைத்தான் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டில் பிறந்த திருநாவுக்கரசர், "யாமார்க்கும் குடியல்லோம்' என்று பாடினார். அது பாடப்பட்டக் காலத்தைவிட நவீன காலத்தில் அதிகமான முக்கியத்துவம் பெறுகிறது. } இது தேசத் துரோகச் சட்டம் என்பதற்கான முதல் எதிர்க்குரல்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.