/

பொதுத்துறை வங்கிகளில் நடப்பது என்ன?

கடந்த வாரங்களில் வெளியான பொதுத்துறை வங்கிகளின் டிசம்பர் 15 வரையிலான காலாண்டு முடிவுகளின்படி,

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:39 pm

எஸ். ராமன்

கடந்த வாரங்களில் வெளியான பொதுத்துறை வங்கிகளின் டிசம்பர் 15 வரையிலான காலாண்டு முடிவுகளின்படி, பெரும்பாலான வங்கிகளின் வருமானம் பெருமளவில் குறைந்திருக்கிறது. நாட்டின் பெரிய வங்கியான ஸ்டேட் வங்கியின் லாபம் 62 சதவீதம் வீழ்ச்சி கண்டு, வாராக்கடன்களின் அளவு, 15,957 கோடி அதிகரித்துள்ளது. இந்த வங்கியின் தற்போதைய வாராக்கடன்கள் 72,791 கோடி ரூபாயாகும்.
 பாங்க் ஆஃப் பரோடா, 3,340 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்ட கணக்கு காட்டியிருக்கிறது. பாங்க் ஆஃப் இந்தியாவின் நஷ்ட கணக்கின் அளவு 1,510 கோடி ரூபாயாகும். இதே போல்தான் மற்ற சிறு மற்றும் நடுத்தர வங்கிகளும், பெருமளவில் நஷ்டக் கணக்கு காட்டியிருக்கின்றன. வங்கிகளின் நஷ்டக் கணக்கு, முந்தைய காலாண்டை விட பல மடங்கு அதிகரித்து உள்ளது.
 இதுவரை பட்டியலிடப்படாத வாராக்கடன்களின் ஒரு பகுதியை, டிசம்பர் காலாண்டு கணக்கில் பட்டியலிட்டு, அவைகளுக்கான ஒதுக்கீட்டை வங்கிகள் அதிகப்படுத்தியதுதான், அதற்கான முக்கிய காரணமாகும்.
 2015 மார்ச் இறுதியில் 2.79 லட்சம் கோடி ரூபாயாக இருந்த பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன், செப்டம்பர் இறுதியில் 3 லட்சம் கோடி ரூபாய் அளவில் உயர்ந்து நின்றது. வீரப்ப மொய்லி தலைமையில் அமைக்கப்பட்ட நிதித்துறை நாடாளுமன்ற நிலைக்குழு சமீபத்தில் சமர்ப்பித்த அறிக்கையின்படி, 2016 ஏப்ரல் மாதம், பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன், 4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வளரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
 கடந்த சில ஆண்டுகளாக, ஒவ்வொரு காலாண்டும், நிதி நிலை அறிக்கையை வெளியிடும்போது, வாராக்கடன் விஷயத்தில் உச்ச நிலையைத் தொட்டுவிட்டோம்; எல்லாம் நலமே. இனி இறங்கு முகம்தான் என்று வங்கி நிர்வாகங்கள் தொடர்ந்து அறிவித்துக்கொண்டிருந்தன. ஆனால், வாராக்கடன்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கும் கெட்ட செய்திகள்தான் வந்து கொண்டிருக்கின்றன.
 உண்மையான சில பொருளாதார நலிவு காரணங்களால், வாங்கிய கடனை திருப்பி செலுத்தமுடியாத கடன்தாரர்கள் மீண்டு எழுவதற்கு உதவும்படியாக ரிசர்வ் வங்கி அறிவித்த மறு சீரமைப்பு (Restructuring of stressed assets) திட்டம், வாராக்கடன்களை மறைக்க அல்லது தாமதப்படுத்துவதற்கான சாதனமாக கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டது, இப்பொழுது தெள்ளத் தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது.
 இதன் விளைவாக, கணிசமான அளவிலான வாராக் கடன்கள் பட்டியலிடப்படாமலேயே, கடந்த காலங்களில் ஒத்திப்போடப்பட்டன எனலாம். வங்கிகளின் இந்த யுக்திகளை முழுவதும் கண்டறிய, ரிசர்வ் வங்கிக்கு சில காலம் பிடித்தது.
 அதன் அடிப்படையில், வங்கிகள், தங்கள் நிதிநிலை அறிக்கையை 2017 மார்ச் மாதத்திற்குள் சீர்ப்படுத்தவேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் கோரிக்கை விடுத்தார். அதற்கு முன்னரே, அனைத்து பொதுத்துறை வங்கிகளின் சொத்து மதிப்பு ஆய்வு தணிக்கையை (Asset Quality Review) ரிசர்வ் வங்கி மேற்கொண்டிருந்தது.
 மேன்மேலும் பழுதடைந்துவரும் வங்கி சொத்துகளின் தரத்தை மேம்படுத்த, சில சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய அவசர அவசியத்தை ரிசர்வ் வங்கிக்கு இந்தத் தணிக்கை உணர்த்தியது எனலாம்.
 ரிசர்வ் வங்கியின் இம்மாதிரி கண்ணோட்டத்தின் அடிப்படையில், டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட அந்த தணிக்கை முடிவுகளில் அடங்கிய வாராக்கடன்களை வங்கிகள் படிப்படியாக பட்டியலிட்டு, வருவாயிலிருந்து அதற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படவேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது.
 அந்த அறிவுரையின்படிதான், வங்கிகள் இந்த காலாண்டில், தள்ளிப் போடப்பட்ட வாராக்கடன்களின் ஒரு பகுதியை பட்டியலிட்டு, அதற்கான ஒதுக்கீடுகளை செய்யும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. ரிசர்வ் வங்கியால் வலியுறுத்தப்பட்ட இந்த செயல்பாடுகள்தான், வங்கிகளின் வருமானத்தை தற்போது பெருமளவில் குறைத்தது எனலாம்.
 பொதுத்துறை வங்கிகளால் கடந்த மூன்று ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் அளவு 1.14 லட்சம் கோடி ரூபாய் என்ற தகவலும் இந்த தருணத்தில் வெளியாகி, சூழ்நிலையின் வெப்பத்தைக் கூட்டியிருக்கின்றன.
 வங்கிகளில் பெருந்தொகைகளை கடனாகப் பெற்று, அவற்றை திருப்பிச் செலுத்தாதவர்கள், மற்றும் கடன் தள்ளுபடி பலன்களை அனுபவித்தவர்களின் பட்டியலை பொது மக்களின் பார்வைக்கு வெளியிடவேண்டும் என்பது வங்கி தொழிற்சங்கங்கள் உள்பட, பல தரப்பினரின் நீண்ட கால கோரிக்கையாகும். வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படவேண்டும் என்ற போர்வையில், இந்த கோரிக்கை இதுவரை வங்கி நிர்வாகங்கள் மற்றும் ரிசர்வ் வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
 வங்கிகளிடமிருந்து 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று, அந்தக் கடனை திருப்பி செலுத்தாதவர்கள், கடந்த 5 வருடங்களில் 500 கோடி ரூபாய்க்கு மேல் மறுசீரமைப்புக்கு உள்படுத்தப்பட்ட கடன்களின் விவரங்கள் மற்றும் கடன் தள்ளுபடி சலுகைகளை பெற்ற கடன்தாரர்களின் விவரங்கள் ஆகியவைகளை முத்திரையிட்ட கவர்களில் சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம், சமீபத்தில் ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டிருக்கிறது. இது வரை வெளிவராத இம்மாதிரி தகவல்கள் வெளியாவதற்கு உச்சநீதிமன்றத்தின் தலையீடு உதவினால், அது வங்கித் துறையில் ஏற்படும் ஒரு முக்கிய திருப்பமாக கருதப்படும்.
 வங்கிகளின் வாராக்கடன் பிரச்னை இதோடு முடிந்துவிட்டதாக கருதமுடியாது. அடுத்த கால் ஆண்டுகளிலும், இந்த சோகக் கதை தொடரும் என்று எதிர்பார்ப்பதாக, வங்கிகள் சார்பாக சொல்லப்படுகின்றன.
 ஏற்கெனவே தேங்கியிருந்த வாராக்கடன்களை, ஒரு சமய நடவடிக்கையாக வெளியிட்டு, வங்கிகளின் நிதி நிலை அறிக்கையை சீர்படுத்துவது மட்டும் இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஆகமுடியாது. தற்போது வெளிக்கொண்டு வரப்பட்ட பெருந்தொகைக்கான வாராக்கடன்கள் நுண்ணிய ஆய்வுகளுக்கு (Forensic audit) உள்படுத்தப்பட்டு, அதற்கான அடிப்படை காரணங்கள் ஆராயப்பட்டால், அந்த ஆய்விலிருந்து அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் வங்கி நிர்வாகங்கள் பல படிப்பினைகளை கற்றுக்கொள்ளலாம்.
 கடந்த காலங்களில், நாட்டை உலுக்கிய 2எ, நிலக்கரி சுரங்கங்கள் சம்பந்தப்பட்ட ஊழல்களின் பொருளாதார தாக்கம், வங்கி வாராக்கடன்களின் பகுதி காரணியாக இருக்கலாம் என்ற வலுவான கருத்தும் நிலவுகிறது. அந்த ஊழல்களுக்கும், நிலுவையில் இருக்கும் வாராக்கடன்களுக்கும் நிலவும் சம்பந்தங்களை ஆராய்ந்து அறிந்தால், அந்த தகவல், எதிர்காலத்தில் அம்மாதிரி தவறுகளைத் தவிர்ப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
 ஒவ்வொரு வங்கியின் நிர்வாகக் குழுவிலும், ரிசர்வ் வங்கியின் பிரதிநிதி ஒருவர் முக்கிய அங்கம் வகித்து, குழுக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார். ரிசர்வ் வங்கியின் வழிமுறைப்படி, வங்கிகள் வழிதவறி, தடம் மாறாமல் செயல்படுவதற்கான ஆலோசனைகளை வழங்குவதுதான் இந்த பிரதிநிதித்துவத்தின் முக்கிய நோக்கமாகும். வங்கி வியாபாரத் துறையில் (Commercial Banking) அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை இந்தப் பதவிகளுக்கு நியமனம் செய்வதன் மூலம், பிரதிநிதித்துவத்தின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தலாம்.
 பெருந்தொகைக்கான வாராக்கடன்களின் அடிப்படை காரணங்களை ஆராயும்போது, அரசியல் தலையீடுகள். கடன் வழங்குவது மற்றும் வசூல் செயல்பாடுகளில் எந்த அளவுக்கு பங்கு வகித்தன என்பது கண்டறியப்பட்டால், அது தற்போதைய ஆட்சியாளர்களுக்கு ஓரளவு விழிப்புணர்வை ஏற்படுத்த வாய்ப்பை அளிக்கும்.
 வாராக்கடன்களில் ஒரு பகுதி, வங்கிகளின் கூட்டமைப்பு திட்டத்தில் வழங்கப்பட்ட கடன்களாகும் (Consortium lending). கூட்டமைப்பு கடன்களைப் பொறுத்தவரை, அங்கத்தினர் வங்கிகள், கடன் நிர்வாகத்தில் தனிப் பொறுப்புகளை ஏற்று திறன்பட செயல்படுவதில்லை என்பதால் மேற்பார்வை பழுதுபட்டு, கடனாளிகள், கடன் தொகையை மாற்று வழிகளில் செலவழிப்பதற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது எனலாம். இம்மாதிரி தவறுகள் வருங்காலங்களில் அறவே களையப்பட்டால்தான், வாராக்கடன்களின் அளவு குறையும்.
 கட்டமைப்புத் திட்டங்களுக்கு (Infrastructure projects) வழங்கப்பட்ட வங்கி கடன்கள் பெரும்பாலும் வாராக்கடன்களாக வாடி நிற்கின்றன. அம்மாதிரி திட்டங்களை மேற்பார்வையிட்டு, நிர்வகிக்கும் தனித் திறன் வங்கிகளிடம் இல்லை என்று சொல்லலாம். இந்த வகையான கடன்களையும், வாராக்கடன்களையும் கட்டமைப்பு கடன் வங்கி (Bank for  infrastructure projects) என்ற புதிய அமைப்பை உருவாக்கி, அதற்கு மாற்றலாம். அந்த வங்கி, கட்டமைப்பு திட்டங்களில் அனுபவம் பெற்ற தனித் திறமையாளர்களால் நிர்வகிக்கப்படவேண்டும்.
 வழங்கப்பட்ட ஒரு கடன், வாராக்கடனாக மாறுவதற்கு முக்கியக் காரணம், கடன் தொகை முழுவதுமாகவோ அல்லது ஒரு பகுதியோ, அங்கீகரிக்கப்படாத செலவுகளுக்கு கடனாளியால் பயன்படுத்தப்படுவதாகும். இம்மாதிரி முறைகேடுகளைக் கட்டுப்படுத்த, கடன் திட்டங்கள் மீதான வங்கிகளின் மேற்பார்வை (Credit monitoring) வலுப்படுத்தப்படவேண்டும். கடன் விண்ணப்பங்களை ஆழ்ந்து ஆராய்வதிலிருந்து (Credit appraisal).. வழங்கிய கடனை வசூல் செய்வது வரையிலான பணிகளை திறம்பட செய்ய, வங்கிப் பணியாளர்களுக்கு முறையான தொடர் பயிற்சி அளிக்கப்படவேண்டும். வழங்கப்பட்ட கடனை வசூல் செய்யும் கடமை உணர்வு, ஒவ்வொரு வங்கிப் பணியாளரின் உயிர் மூச்சாக இருக்கவேண்டும்.
 வங்கிகளின் கடன் நிர்வாகத்தில் காணப்படும் அடிப்படைக் குறைகளைக் கண்டறிந்து, அவைகளை களைந்தெறிந்தால்தான், வரும் காலங்களில் வங்கிகளின் நிதிநிலைமை மேம்படும்.
 நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் வசிக்கும் அடித்தட்டு மக்களுக்கு பொருளாதார சேவைகளை கொண்டு செல்ல, வலிமையான பொதுத்துறை வங்கிகள் தேவை. வங்கிகளுக்கு அந்த வலிமையை ஊட்ட வேண்டியது அரசின் தற்போதைய தலையாய கடமையாகும்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.