சம்பவங்களில் இருந்து பாடம் கற்போமா?
பொதுவாக ஏதாவது ஒரு பிரச்னை ஏற்படும் சமயத்தில் அதற்குத் தரும் முக்கியத்துவம் தரும் நாம், சிறிது காலத்துக்குப் பின் அதைப் பற்றி


பொதுவாக ஏதாவது ஒரு பிரச்னை ஏற்படும் சமயத்தில் அதற்குத் தரும் முக்கியத்துவம் தரும் நாம், சிறிது காலத்துக்குப் பின் அதைப் பற்றி பெரும்பாலும் மறந்துவிடுகிறோம்.
கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2004-இல் நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துக்குப் பின்புதான், பள்ளிகளில் கட்டடங்கள் விதிப்படி இருக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது. ஆனால், இப்போது அப்படியொரு சம்பவம் நடந்ததையே மறந்துவிட்டோம்.
அதேவகையில்தான் தருமபுரி அருகே உள்ள ஒகேனக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை பரிசல் கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்த விபத்தின் நிலையும்.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளிலும், விடுமுறை நாள்களிலும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு குவிகின்றனர்.
ஒகேனக்கல்லில் மசாஜ் செய்வதை அனுபவிப்பதற்கும், மீன் சாப்பிடவும் பலர் வந்து செல்கின்றனர். மேலும், பலர் பல அடி உயரத்திலிருந்து சினிமாவில் மட்டுமே பார்க்கும் அருவிகளை பார்த்து அனுபவிப்பதற்காக வருபவர்கள்.
மசாஜ் செய்துவிட்டு அருவியில் குளிப்பதாலும் மீன் சாப்பிடுவதாலும் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், பரிசலில் செல்லும்போது ஏற்படும் விபத்துகளால் உருவாகும் துன்பங்களால் எத்தனை பேர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
ஒகேனக்கல்லில் பரிசலில் செல்லும்போது பரிசல் ஓட்டியுடன் சேர்த்து 6 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆனால், கூடுதல் வருமானத்துக்கு ஆசைப்படும் பரிசல் ஓட்டிகள் சிலர் அதிகபட்சமாக 10 பேர் வரை ஏற்றிச் செல்கின்றனர். முறையான கண்காணிப்பு இருந்தால் பரிசல் துறையிலேயே இதைத் தடுத்திருக்கலாம் அல்லவா? பரிசல் ஓட்டிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உரிமம் வழங்கியுள்ளது.
பரிசல் ஓட்டிகள் மது வகைகளை அருந்தி பரிசல்களை இயக்குவதற்கும், மது வகைகளை அருந்திய பயணிகள் பரிசல்களில் செல்லவும் அனுமதிக்கக் கூடாது. இதை உறுதிப்படுத்த வேண்டும்.
தேக்கடியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதற்குப் பின்பு, உயிர் காப்புக் கவசம் அணிந்துதான் நீர்நிலைகளில் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால், உயிர் காப்புக் கவசம் அணிவதற்கும் சேர்த்துக் காசைப் பெற்றுக் கொண்டாலும், அதற்குத் தனியாகப் பணம் தர வேண்டும் என்று வலியுறுத்தும் பரிசல் ஓட்டிகளால்தான் யாரும் இதைப் பொருள்படுத்துவதில்லை.
உயிர் காப்புக் கவசம் இருந்தால் மட்டுமே பரிசலில் ஏற அனுமதிக்க வேண்டும். இதைக் கட்டாயமாக அமல்படுத்த வேண்டும். எந்த நீர்நிலைகளிலும் பரிசலிலோ, படகுகளிலோ உயிர் காப்புக் கவசம் இன்று வரை கட்டாயமாக்கப்படவில்லை.
பரிசல் இயக்குபவர்களுக்கென்று சில வழித்தடங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஆபத்தான, நீர்ச் சுழல் இல்லாத பகுதிகளில் மட்டுமே பரிசல்களை இயக்க வேண்டும். அதை மீறி வேறு வழித்தடங்களில் பரிசல்களை இயக்குபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை பாய்ந்தால் உயிரிழப்புகளைக் கண்டிப்பாகத் தடுக்க முடியும்.
கடந்த சில ஆண்டுகளாக ஒகேனக்கல்லில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் வருபவர்களை என்னதான் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தாலும் காப்பாற்ற முடியாது. ஆனால், சில விபத்துகளைக் கண்டிப்பாகத் தவிர்த்து, மனித உயிரிழப்பைத் தவிர்க்க முடியும்.
அதேபோல, பரிசலில் செல்லும் குழந்தைகளின் வயதை வரைமுறைப்படுத்த வேண்டும். பரிசல்களில் செல்வதற்குக் குழந்தைகளை அனுமதிப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் சில நிபந்தனைகளை உருவாக்க வேண்டும்.
குழந்தைகள் பரிசலில் சென்றால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும். ஆனால், இப்போது அவ்வாறு விதிமுறைகள் எதுவும் வகுக்கப்படவில்லை என்பது வருத்தம் தரும் செய்தி.
ஒகேனக்கல்லைப் பொருத்தவரையில் அருவியைத் தாண்டிச் செல்வதற்கு தொங்குபாலம் உள்ளது. இதற்குக் கட்டணமாக நபருக்கு ரூ.5 வீதம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால், பாலத்துக்கு மறுபகுதிக்குச் சென்று பலர் மது அருந்துகின்றனர், தற்கொலை செய்து கொள்கின்றனர் என்ற காரணங்களைக் கூறி பாலத்தை அடைத்து வைத்துள்ளது மாவட்ட நிர்வாகம்.
இவ்வாறு அடைத்து வைப்பதற்குப் பதிலாக, மது பானங்களைக் கொண்டு வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம். மேலும், காவிரியாற்றின் குறிப்பிட்ட சில இடங்களில் குளிப்பதற்குக் கட்டாயத் தடை விதிக்கலாம்.
தடை இருந்தாலும் ஆபத்தான இடங்களில் குளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாய வேண்டும். காலுக்குத் தகுந்தாற்போல செருப்பை மாற்ற வேண்டுமே தவிர, செருப்புக்குத் தகுந்தாற்போல காலை வெட்டிக் கொள்ளவா முடியும்?
ஒகேனக்கல்லில் உள்ள தீயணைப்புத் துறை, மீட்புத் துறையினருக்கு அதிநவீன சாதனங்கள் வழங்கப்பட வேண்டும். சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் நேரங்களில் கூடுதலாக தீயணைப்புத் துறையினர் பணியில் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள குறைபாடுகளைக் களைந்தால் மட்டுமே உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும். உயிர்ப் பாதுகாப்பு விஷயத்தில் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. யார் தவறு செய்தாலும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறே செய்யாத மனிதர்கள் யாருமில்லை என்பது கண்கூடு. ஆனால், தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...