டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

குழந்தைகள் படிப்பும் தொழிலும்

சிறுவர்கள், சிறுமிகள் ஒரு நாட்டின் செல்வங்கள். அவர்கள்தான் வளர்ந்தபின்பு நாட்டை வளப்படுத்துகிறார்கள்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:15 am

சா.கந்தசாமி


 சிறுவர்கள், சிறுமிகள் ஒரு நாட்டின் செல்வங்கள். அவர்கள்தான் வளர்ந்தபின்பு நாட்டை வளப்படுத்துகிறார்கள். சிறுவர்கள் காலம் என்பது ஐந்து வயதில் தொடங்கி பதினைந்து வயது வரையிலான பால்மணம் மாறாத பத்தாண்டுக் காலம்.
 அந்தக் காலம் அவர்களுக்கே சொந்தமானது. ஆடிப்பாடி களிக்கவும், திருத்தமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் அறியக்கூடிய காலம்.
 பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் வழிகாட்ட நல்லதொரு குடிமகனாக அடிப்படையான அறிவு, பண்பு, ஈகை, இணைந்து வாழும் முறை, கீழ்ப்படிதல், முதியோரைப் பணிதல், இயற்கையை அறிதல், விலங்குகள், பறவைகளிடம் நேசம் கொள்ளுதல், நாட்டின் அடிப்படையான சட்ட விதிகளை அறிந்து நடத்தல் - என்பனவற்றைப் பத்தாண்டு பால்ய பருவத்தில் பெறுகிறார்கள் என உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். எனவேதான் குழந்தைகளின், சிறுவர்களின் இளம் பருவம் முக்கியத்துவம் பெறுகிறது.
 தம் குடும்பத்தில் பிறந்தவர்களை முதல் மக்களாகவும், தேசத்தின் நல்ல திறமை வாய்ந்த குடிமகன்களாகவும், உலகத்தின் தேவைக்கேற்ற விதத்தில் பங்காற்றக் கூடிய தகுதி பெற்றவர்களாகவும் வளர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது.
 ஆனால், சிறுவர்கள் நெடுங்காலமாகவே வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். பண்டைய காலத்தில் ஊர் மக்களோடு தந்தை வேட்டைக்குச் சென்றபோது, சிறுவர்கள் வேலெடுத்துக் கொண்டு உடன் சென்றார்கள். நிலத்தை உழுது சீர்படுத்தி விவசாயம் செய்ய ஆரம்பித்தபோது மண்வெட்டி எடுத்துக் கொண்டு போய் நீர் பாயும் வாய்க்காலுக்குக் கரை வெட்டினார்கள்.
 பெண்கள் நடவு நடவும், களையெடுக்கவும் சென்றபோது சிறுமிகள் களைகொட்டு எடுத்துக் கொண்டு சென்றார்கள். பரதவர்கள் படகில் ஏறிக் கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது சிறுவர்கள் பயமின்றிப் படகில் ஏறி உடன் சென்றார்கள். வேட்டை அனுபவம், வேளாண்மை அனுபவம், கடலோடிய அனுபவம் என்று நிறைய அனுபவம் பெற்றார்கள். அனுபவம் என்பதே கல்வியானது.
 ஐரோப்பாவில் தொழில் புரட்சி ஏற்பட்டது. இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. அவற்றுக்கு வேலை கொடுக்க - உற்பத்தியைப் பெருக்க ஏராளமான தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். அதனால், ஏழைக் குடும்பத்துச் சிறுவர்கள் வேலைகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். குடும்பத்துக்குப் பணம் கிடைத்தது.
 எனவே, பலரும் தங்கள் வீட்டுச் சிறுவர்களை வேலைக்கு அனுப்பி வைத்தார்கள். பாரம்பரியமாகக் குடும்பத்து வேலைகளைச் செய்து கொண்டிருந்த சிறுவர்கள் பொருள் உற்பத்தி செய்யும் வேலை செய்தார்கள். குறைந்த கூலிக்கு அதிக நேரம் உழைக்கக் குழந்தைகள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
 சிறுவர்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்தார்கள். அதனால், அவர்களின் குழந்தைப் பருவம் தொலைந்து போய்விட்டது.
 குழந்தைகள் நலம் பேணப்பட வேண்டும்; அவர்கள் கல்வி பெற வேண்டும். அதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று இருபதாம் நூற்றாண்டில் பல சிந்தனையாளர்கள் பேசியும், எழுதியும் வந்தார்கள். ஐ.நா. சபையின் மனித உரிமைகளில் குழந்தைகள் உரிமையும் சேர்க்கப்பட்டது. அதன் காரணமாக குழந்தைகள் உரிமைகள் முக்கியத்துவம் பெற்றன.
 ஒவ்வொரு நாடும் தன் நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப சர்வதேசக் குழந்தைகள் நலச் சட்டங்களை அமல்படுத்துகின்றன. குழந்தைகள் ஆபத்தான வேலைகள் செய்யாமல் தடுக்க தகுந்த சட்டங்களை இயற்றியுள்ளன. ஆனாலும், ஆசிய நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் குழந்தைகள் பெருமளவில் கடுமையான வேலைகள் செய்யக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். வறுமையும், அறியாமையுமே குழந்தைகளை வதைக்கக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
 பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், நார்வே, சுவீடன் உள்பட சில நாடுகள் குழந்தைகள் நலன், கல்வி ஆகியவற்றிலும் உரிமையிலும் அக்கறை கொண்டிருக்கின்றன. தன் நாட்டில் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்துவிட்டதோடு, பிற நாடுகளில் குழந்தைத் தொழிலாளர்களால் செய்யப்படும் பொருள்களை இறக்குமதி செய்வதில்லை.
 அதோடு, சில வகையான பொருள்கள் - குறிப்பாக அலங்காரக் கம்பளி தரை விரிப்புகள், கண்ணாடிப் பொருள்கள், உயர்தர ஜவுளி வகைகள், பட்டாசுகள் போன்றவை குழந்தைத் தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்படவில்லை என்று உத்தரவாதம் கேட்கிறார்கள்.
 சர்வதேசக் குழந்தைகள் நலச் சட்டத்தை இந்தியா ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதோடு, ஐந்து வயதில் இருந்து பதினைந்து வயது வரையிலான குழந்தைகளை ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தக் கூடாது என்றும் இந்திய அரசியல் சாசனம் சொல்கிறது.
 வறுமைக் கோட்டுக்குக் கீழே அதிகமான மக்கள் வாழும் ஜனநாயக நாட்டில், சட்டத்தை அமல்படுத்துவதில் இடர்ப்பாடுகள் இருக்கவே செய்கின்றன.
 அனைவருக்கும் கல்வி அளிக்கப் போதுமான பள்ளிகள் இல்லை. கற்பிக்க போதிய அளவு ஆசிரியர்கள் கிடையாது. ஊதியம் கொடுக்க அரசிடம் பணமில்லை. தங்கள் குழந்தைகளைப் படிக்க அனுப்புவதில் சில பெற்றோர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. கல்வியின் பயன் பற்றிப் போதுமான விழிப்புணர்வு இல்லை.
 ஆனால், குழந்தைகள் மூலம் வருமானம் பார்ப்பதில் அக்கறையுடன் இருக்கிறார்கள். ஒரு தொழிலை சிறு வயதில் கற்றுக் கொண்டுவிட்டால் அது வாழ்க்கைக்கு வழிகாட்டும் என்று நம்பு
 கிறார்கள்.
 உலகத்திலேயே குழந்தைகள் அதிகம் நிறைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 44 கோடி குழந்தைகள் இருக்கிறார்கள். அதில் 1.7 கோடிப் பேர் குழந்தைத் தொழிலாளர்கள். அவர்கள் வேளாண்மை சார்ந்த தொழில்களான நெசவு, ஆடு - மாடு மேய்த்தல், மீன் பிடித்தல் போன்றவற்றில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
 கணிசமானவர்கள் பரம்பரைக் குலத் தொழில்களான மண் பாண்டங்கள், வெள்ளிப் பாத்திரங்கள், பித்தளைப் பாத்திரங்கள் செய்கிறார்கள். பூட்டு, சாவி செய்கிறவர்கள், சிற்பங்கள் படைக்கிறவர்கள் என்று பலர் இருக்கிறார்கள்.
 இவர்கள் நகரங்களை விட்டுத் தொலைவிடத்தில் இருக்கிறார்கள். கல்வி, மின்சாரம், மருத்துவம், போக்குவரத்து வசதிகள் அதிகம் கிடைப்பதில்லை. சமூகத்தின் விளிம்பில் வாழ்கிறார்கள். இவர்களின் குடும்பத்துச் சிறுமிகள் பணத்துக்காக விற்கப்படுகிறார்கள்.
 அவர்கள் வீட்டு வேலைகளுக்கும், பாலியல் தொழிலுக்காகவும் பல இடங்களுக்குக் கொண்டு போகப்படுகிறார்கள். குழந்தைத் தொழிலாளர்கள் என்பதில் சிறுமிகள் நிலைமை சர்வதேச அளவில்கூட பரிதாபமாக இருக்கிறது.
 நகரங்களை ஒட்டியிருக்கும் கிராமங்களில் பீடி சுற்றுதல், தீப்பெட்டி செய்தல், பட்டாசு தயாரித்தல், செங்கல் அறுத்தல், கார், ஸ்கூட்டர் பழுது பார்த்தல், ஹோட்டல்களில் எடுபிடி வேலை, காய்கறிக் கடைகள், பெட்ரோல் நிலையங்கள், கட்டுமானப் பணிகள் என்று முறைசாராத வேலைகளில் இருபத்தைந்து சதவீதத்தினர் இருக்கிறார்கள்.
 குழந்தைத் தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் பத்து வயதுக்கு மேற்பட்டவர்கள், ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு படித்தவர்கள். படிப்பதைப் பாதியில் விட்டவர்கள். புத்திசாலிகள். முதலாளிகளிடமும், வாடிக்கையாளர்களிடமும் பழகும் விதம் தெரிந்தவர்கள்.
 ஒழுங்காகப் பள்ளிக்கூடம் போகும் தன் வயதையொத்த மாணவர்களைவிட உலக நடப்புத் தெரிந்தவர்கள். கணக்கு, அறிவியல் பாடங்கள் தெரியாவிட்டாலும் சமூகத்தில் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும் திறன் மிக்கவர்கள்.
 மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள குழந்தைத் தொழிலாளர் புதிய சட்டத் திருத்தத்தின்படி, வனங்கள், வேளாண்மைச் சார்ந்த தொழில்கள், ஆபத்து இல்லாத குலத் தொழில்கள், சர்க்கஸ் தவிர்த்த விளையாட்டுகள், சினிமா சார்ந்த கேளிக்கைக் கொண்டாட்டங்கள் - ஆகிய தொழில்களில் சிறுவர்கள் - குழந்தைத் தொழிலாளர்கள் படிப்புக்குப் பாதகம் ஏற்படாமல் ஈடுபடலாம். பள்ளி
 விடுமுறைக் காலங்களிலும் தொழில் புரியலாம்.
 அதனால், குடும்பத்துக்கு நிலையான வருமானம் கிடைக்கும். தொழில் கற்றுக் கொள்வார்கள். பரம்பரை குடும்பத் தொழில் செழிப்படையும். ஒரு தலைமுறையில் இருந்து அடுத்தத் தலைமுறைக்கு தொழில்நுட்பம் செல்லும். அதோடு, புதிய அறிவியல் தொழில் அறிவு சேரும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.
 தொழில், கலை என்பதில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாம் மேன்மையுற்று இருந்தோம். உயிர் காக்கும் ஆயுர்வேதம் நம்முடைய பாரம்பரியத் தொழில். இயற்கையான தாவரங்கள் கொண்டு உயிரைக் காத்தோம். யோகா என்னும் மருந்து இல்லாத உடல்நலம் காக்கும் பாரம்பரிய முறை நம்முடைய சொத்தாக இருந்தது.
 நாம் பிரிட்டீஷாருக்கு அடிமைப்பட்டபோது, நமது கலை, கலாசாரம், தொழில், கல்வி, வாழ்க்கை முறை - எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். அதனால், உயர்வான பாரம்பரியத் தொழில்கள் அழிந்துவிட்டன. எனவே, வேலையில்லாத் திண்டாட்டம், குழந்தைத் தொழிலாளர்கள் என்ற பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன.
 நமது நாட்டுப் பிரச்னைகளை நமது பாரம்பரிய வாழ்க்கை முறை, பண்பாடு, தொழில், தேவை ஆகியவற்றின் அடிப்படையில் ஆராய வேண்டும். எனவே, பாரம்பரிய ஆபத்து இல்லாத குடும்பத் தொழில்களைச் சிறுவர்கள் செய்வதை ஒரு குற்றமாகக் கருத வேண்டியது இல்லை. அவர்கள் படிப்பு கெடாமல் பெற்றோர்கள் பாதுகாக்க வேண்டும்.
 குடும்பத் தொழில்கள் பலவும் நசிந்ததன் காரணமாக குடும்பங்கள் நகரங்களுக்குக் குடிபெயர்ந்து வந்துவிட்டன. நகரங்களில் பாரம்பரியத் தொழில் புரிய வசதிகள் இல்லை. பெற்றோர்கள் அதனை விரும்புவதும் இல்லை.
 ஏனெனில், அதில் போதுமான வருவாய் கிடைப்பதில்லை. அதற்கு மரியாதை, கெüரவம் கிடையாது. எனவே, தங்கள் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க ஆசைப்படுகிறார்கள். அரசு அவர்களை உற்சாகப்படுத்தி ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும்.
 கல்வி என்பதுதான் அறிவு பெறவும், பெற்ற அறிவை நிலைநாட்டவும் ஆதாரமாக இருக்கிறது. அதனை இளமையில் பெற குழந்தைகளுக்கு உரிமை இருக்கிறது. எதைச் சொல்லியும் அதனைப் பறிக்கக் கூடாது.
 
 (இன்று சர்வதேச குழந்தை
 தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்)
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.