கிரேக்கத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும்
ஐரோப்பாவின் தென்கிழக்கு நாடான கிரீஸ், பண்டைய நாகரிக வளர்ச்சிக்கு வித்திட்ட பெருமை பெற்றது. தான் வாழ்ந்த குறுகிய காலத்தில்,


ஐரோப்பாவின் தென்கிழக்கு நாடான கிரீஸ், பண்டைய நாகரிக வளர்ச்சிக்கு வித்திட்ட பெருமை பெற்றது. தான் வாழ்ந்த குறுகிய காலத்தில், இந்தியா வரை ஊடுருவி கிரேக்க சாம்ராஜ்யத்தை விரிவடையச் செய்ய முயற்சித்த அலெக்சாண்டரின் வீரம் உலகு அறிந்த ஒன்றாகும்.
சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற மூதறிஞர்கள் வாழ்ந்த இந்நாட்டை, மேற்கத்திய சித்தாந்தங்களின் பிறப்பிடம் என்று சொல்லலாம். பித்தகோரஸ், ஆர்க்கிமிடீஸ் போன்ற கிரேக்க கணித மேதைகளின் புதிய கண்டுபிடிப்புகள், விஞ்ஞான உலகுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை பண்டைய காலத்திலிருந்து நடத்தி, அதை உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமையும் கிரீûஸயே சாரும். இலக்கியத்தில் ஹோமர், ஹெஸியோட் போன்ற கிரேக்க அறிஞர்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
குடியாட்சி (Democracy) தத்துவத்தை கிரேக்கர்கள்தான் முதன் முதலில் உலகுக்கு அறிமுகப்படுத்தினர். தேவர்கள், தேவதைகளை முன்னிறுத்தி பின்னப்பட்ட கிரேக்க புராணக் கதைகள் (Greek mythology) உலக பிரசித்தி பெற்றவை.
அமெரிக்கா உள்பட உலக நாடுகளின் மொழி, அரசியல், கல்வி முறை, சித்தாந்தங்கள், கலை, இலக்கியம், கட்டடக் கலை போன்றவற்றில் கிரேக்க நாகரிகம் ஆழ்ந்த தடங்களைப் பதித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.
மூன்று பக்கங்களில் மத்தியதரைக் கடல் பகுதியால் சூழப்பட்டது கிரீஸ் ஆகும். பூகோள அமைப்பின் காரணமாக, இந்நாடு கப்பல் போக்குவரத்து போன்ற கடல் சார்ந்த தொழில்களையே பெரும்பாலும் சார்ந்திருக்கிறது. திறமை வாய்ந்த மாலுமிகளாகவும், வணிகர்களாகவும் கிரேக்கர்கள் உருவெடுக்க இது ஒரு முக்கியக் காரணமாகும். 80 சதவீதம் மலைப் பகுதி என்பதால், விவசாயத் தொழில் இந்நாட்டில் முக்கிய அங்கம் வகிக்கவில்லை.
மலை சார்ந்த பகுதிகளில் கட்டடக் கலைக்குத் தேவையான மூலப்பொருள்கள் தாராளமாகக் கிடைப்பதால், கிரேக்கர்கள், அந்தக் கலையில் நிபுணத்துவத்தை வளர்த்துக் கொண்டனர். இதன்மூலம் தனிநபர், நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்தியதில் பெருமை பெற்றனர்.
இந்நாட்டின் இயற்கைச் சூழல், புராதன கட்டடங்களைக் கண்டுகளிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
சுதந்திரத்துக்கு முன்னும், பின்னும் பல வெளிநாட்டுத் தாக்குதல்களையும், உள்நாட்டுப் போர்களையும் கிரீஸ் தொடர்ந்து சந்தித்து, அதன் பாதிப்புகளிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. வீரம், கடின உழைப்பு போன்ற கிரேக்கர்களின் குணாதிசயங்கள்தான் இதற்கு முக்கிய காரணிகளாகும்.
இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீண்டு, 1950 முதல் 1980 வரை இந்நாடு கண்ட அசுர வளர்ச்சி, உலகப் பொருளாதார வரலாற்றில் ஓர் அதிசய நிகழ்வு என்று கருதப்பட்டது. தனி நபர் வருவாய், அரசு அதிக வருவாய் ஈட்டும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக கிரீஸ் திகழ்ந்தது.
ஐரோப்பிய கூட்டமைப்பில் அங்கத்தினராக 1981-இல் கிரீஸ் சேர்க்கப்பட்டது. பொருளாதாரச் செயல்பாடுகளில் அதுவரை தன்னாட்சியைத் தக்க வைத்திருந்த அந்நாடு, 2001-இல் கூட்டமைப்பின் பொது நாணயமான யூரோவை பின்பற்ற ஆரம்பித்தது.
அதற்கு பிறகு, அதன் பொருளாதார நடவடிக்கைகள், ஐரோப்பிய யூனியன் மத்திய வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிகழ்வுகள், கிரீஸ் நாட்டின் பொருளாதார வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும்.
இந்த நிகழ்வுகளுக்குப் பின், 2003-இல் 5.9 சதவீதம், 2006-இல் 5.6 சதவீத அளவில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது. இந்த வளர்ச்சி, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஆஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன் போன்ற 28 நாடுகளின் சராசரி வளர்ச்சியைவிட அதிகமானதாக இருந்தது.
அதுவரை, வளமுடன் நகர்ந்து கொண்டிருந்த நாட்டின் பொருளாதாரம், 2007-08இல் அமெரிக்கா சந்தித்த பொருளாதாரப் பின்னடைவின் பக்க விளைவுகளை சந்திக்க நேரிட்டது. இது அந்த நாட்டுப் பொருளாதார வீழ்ச்சியின் முதல் கட்டம் என்று சொல்லலாம்.
இந்நாட்டின் பொருளாதாரம் 2009 -லிருந்து 2011 வரை, -3.1, -4.9, -7.11 சதவீத வேகத்தில் பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தது. பின்னடைவுகளை சரிகட்ட அதிக அளவில் தனியார்களிடமிருந்து கடன் பத்திரங்கள் வாயிலாக அரசு கடன் வாங்கத் தொடங்கியது.
கடனுக்கான வட்டி, உற்பத்தி சாராத செலவுகளால் நிதிப் பற்றாக்குறை (Budget deficit) விரிவடைந்து வந்தது. உள்நாட்டு மொத்த உற்பத்தியில் சுமார் 3 சதவீதமாக இருந்த நிதிப் பற்றாக்குறை, 2009-இல் 6 சதவீதம் வரை அதிகரித்ததாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவித்தன.
ஆட்சியாளர்கள் மாறியபோது, முந்தைய புள்ளி விவரங்கள் தவறானவை என்றும், பற்றாக்குறையின் அளவு 15 சதவீதத்துக்கு மேல் சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்தத் தகவலால், கடன் வழங்கியவர்கள் கடன் பத்திரத் தொகைகளைத் திரும்பப் பெற ஆரம்பித்தனர். இதனால், உலக அரங்கில் கிரீஸ் நாட்டின் தரக்குறியீடு (Credit rating) கீழ்நோக்கிச் செல்ல ஆரம்பித்து கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்தது மட்டுமல்லாமல், அந்நாட்டு அரசுக்குக் கடன் வழங்க மற்ற நாட்டு முதலீட்டாளர்கள் தயங்கினர்.
2010-இல் நாட்டின் கடன் தொகை 43,500 கோடி டாலரை தொட்டு நின்றபோது, பன்னாட்டு நிதியம் (International monetary fund), யூரோ நாணயத்தைப் பயன்படுத்தும் நாடுகளின் கூட்டமைப்பு ஆகியன கடன் உதவி அளித்து தாற்காலிகமாக அந்நாட்டை திவால் நிலையிலிருந்து காப்பாற்றின.
ஆனால், கடன் பெற்ற பின்பும், நிலையைச் சரியாகக் கையாளததால், நெருக்கடி நிலைமையிலிருந்து மீள முடியாமல் கிரீஸ் திண்டாடியது.
நிலைமையைச் சமாளிக்க 2012-இல் யூரோ கூட்டமைப்பு இன்னொரு மீட்புக் கடனை கிரீஸýக்கு வழங்கியதோடு, செலவுகளில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியது. இதற்கு, அரசியல்ரீதியாக மக்களிடையே நாட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
அரசியல் வரலாற்றில் மன்னர் ஆட்சி, மக்கள் ஆட்சி, சர்வாதிகாரம், உள்நாட்டுக் கலவரங்கள் போன்ற மாறுபட்ட சூழ்நிலைகளை கிரீஸ் சந்தித்து வந்திருப்பதால், கலவரக்காரர்களை ஒடுக்குவதற்கு கடனாகப் பெறப்பட்ட நிதியிலிருந்து, ஏராளமான தொகை ராணுவத்துக்குத் தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வருகிறது. கடனாகப் பெறப்படும் தொகையின் மற்றொரு பெரும் பகுதி, முந்தைய கடன்களைத் திருப்பிச் செலுத்த பயன்படுத்தப்படுகிறது.
தேவைக்கு அதிகமான அரசு ஊழியர்கள் அரசுக்குப் பெரும் பொருளாதாரத் சுமையாகும். அரசு ஊழியர்களுக்கு 57 வயதில் ஓய்வு கொடுக்கப்படுவதால், அவர்களுக்குத் தொடர்ந்து அளிக்க வேண்டிய ஓய்வு நிவாரணத் தொகை (Retirement benefits) சார்ந்த செலவினங்கள், அரசு கஜானா காலியாவதற்கு ஒரு காரணமாகும்.
இம்மாதிரி செலவினங்களைத் தள்ளிப்போட, ஓய்வு வயதை 62-ஆக உயர்த்தும் ஆலோசனைகளைக்கூட அரசால், அரசியல் காரணங்களுக்காக நடைமுறைப்படுத்த முடியவில்லை. நாட்டின் முக்கியத் தொழிலான கப்பல் போக்குவரத்து துறை சார்ந்த வரிகளை விதிக்கக் கூட அரசு தயங்குகிறது.
வரி ஏய்ப்பாளர்கள் அதிகமாகி வருவதால், அரசுக்கு 2,000 கோடி டாலர் அளவுக்கு வருவாய் குறைகிறது. வரிகளை உயர்த்தி அவற்றை முழுவதும் வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடன் வழங்கும் அமைப்புகளால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஊழல் குற்றங்களில், உலக நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் கிரீஸ் 43-ஆவது இடத்திலிருப்பது, அங்கு லஞ்ச லாவண்யங்கள் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.
கிரீûஸ சேர்ந்தவர்களின் 8,000 கோடி டாலர் அளவிலான தொகை சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் தகவலின் அடிப்படையில், சுவிஸ் அரசின் உதவியுடன் அந்தத் தொகையின் பெரும் பகுதியை தங்கள் நாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபடத் துவங்கி உள்ளது.
சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து வந்த சிரிசா கட்சி 2015-இல் ஆட்சிக்கு வந்தது. அக்கட்சியின் தலைவரான அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் சிக்கன நடவடிக்கைகளுக்கான கோட்பாடுகளை தளர்த்துவற்கான உடன்படிக்கைக்கு வழிவகை செய்வதாகத் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்ததால், அதை நிறைவேற்றும் நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டார்.
சிக்கன நடவடிக்கைகளுக்கான உடன்படிக்கைகளை தகர்த்தெறியும்வரை, கழுத்தில் டை அணிவதில்லை என்ற சபதத்தையும் அவர் எடுத்தார். அதன் வெளிப்பாடாக, நாட்டு மக்களிடையே சிக்கன நடவடிக்கைக்கான கருத்துக் கணிப்பு ஜூலை முதல் வாரத்தில் நடத்தப்பட்டு, அதில் 61 சதவீத மக்கள் சிக்கனத்துக்கு எதிரான வாக்குகளை அளித்தனர்.
ஆனால், கருத்துக் கணிப்பு முடிவுகள், கடன் வழங்கிய நாடுகளிடையே எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று சொல்லலாம்.
இதற்கிடையே, பன்னாட்டு நிதியத்திலிருந்து பெறப்பட்ட கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த கிரீஸ் அரசு தவறியதால், பொருளாதார நெருக்கடி நிலைமை மேலும் அதிகரித்து, வங்கிகள் மூடப்பட்டன.
இந்த விபரீதச் சூழ்நிலையில், கடன் உடன்படிக்கைகள், அதற்கான பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவற்றுக்குக் கட்டுப்பட்டு நடப்பதைத் தவிர, கிரீஸ் அரசுக்கு வேறு மாற்று வழி தென்படவில்லை.
தன் பிடிவாத நிலையிலிருந்து விலகிய கிரீஸ், பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டத்தை யூரோ கூட்டமைப்பின் நிதி அமைச்சர்களின் குழுவிடம் சமர்ப்பித்தது. அதை ஏற்றுக் கொண்ட குழு, அடுத்த மூன்று ஆண்டுகளில் 60,000 கோடி டாலர் வரை அந்நாட்டுக்குக் கடன் வழங்கும் வரைவுத் திட்டத்தை அங்கீகரித்தது.
இதையடுத்து, கிரீஸ் வங்கிகள் செயல்படத் தொடங்கி உள்ளன. ஆனால், நிலைமை சீரடையும்வரை வங்கிகளிலிருந்து பணம் எடுப்பதில், சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
கிரீஸில் புதிய விற்பனை வரி அமலுக்கு வந்துள்ளதால், பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் காத்து நிற்கிறது. இந்த நிகழ்வுகள் மக்களின் மனக் கொந்தளிப்பை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
கிரீஸ் நாட்டின் பொருளாதாரப் பிரச்னைகள் தாற்காலிகமாகத் தீர்க்கப்பட்டதுபோல தெரிந்தாலும், எந்த நேரத்திலும் கொந்தளிக்கும் எரிமலையின் மீது உட்கார்ந்திருந்து ஆட்சி செய்ய வேண்டிய கட்டாய நிலைமைக்கு அந்நாட்டு அரசு தள்ளப்பட்டிருக்கிறது.
எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேனே... என்று கிரீஸ் நாடு புலம்புவது அனைவர் காதுகளிலும் விழுகிறது. இந்த நிலைமைக்கு முக்கிய காரணம், வாக்கு வங்கியை மையமிட்ட அரசியல்வாதிகளின் செயல்பாடுகள்தான் என்பதை அனைவரும் உணர்ந்தால், அதுவே அவர்களுக்கு நல்ல பாடமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த நிலைமைக்கு முக்கியக் காரணம், வாக்கு வங்கியை மையமிட்ட அரசியல்வாதிகளின் செயல்பாடுகள்தான் என்பதை அனைவரும் உணர்ந்தால், அதுவே அவர்களுக்கு நல்ல பாடமாக அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...