புரிதலால் சிந்தனை விரிவடையும்!
எதிர்காலத்தில் தமிழோடு இளைஞர்களையும் வாழ வைக்கும் "தொலைநோக்கு' நிச்சயம் தேவை. குறிப்பாக, பொது மேடைகளில் எதனையும்


எதிர்காலத்தில் தமிழோடு இளைஞர்களையும் வாழ வைக்கும் "தொலைநோக்கு' நிச்சயம் தேவை. குறிப்பாக, பொது மேடைகளில் எதனையும் ஆக்கப்பூர்வமாக வலியுறுத்த வேண்டும். அத்தனைக்கும் மேலாக, சொல்லப்படும் விஷயத்தில் கருத்து, சிந்தனை முக்கியம். அதனாலேயே மூன்று விதிகளை இங்கே வரையறுத்து விடுகிறேன்.
1. புதிதாகச் சொல்ல வேண்டும். 2. புரியும்படி சொல்ல வேண்டும். 3. புதுமையாகச் சொல்ல வேண்டும்.
"அறிவியல் எப்போதும் தவறானது. ஒரு பிரச்னையைத் தீர்த்து வைக்கும் முன் அதுவே பத்து புதுப் பிரச்னைகளை உருவாக்கி விடும்' என்பாராம் ஜார்ஜ் பெர்னாட் ஷா. பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் தானே அறிவியல் சிந்தனை முளைவிடும்.
"ஓர் அறிவியல் கருத்து அங்கீகரிக்கப்படுவதற்கு முன் அது நான்கு கட்டங்களைக் கடந்தாக வேண்டும்' என்பது பேராசிரியர் ஜே.பி.எஸ். ஹால்டேன் முடிவு.
முதலில் "என்னதான் சொல்ல வருகிறார், அந்தக் கருத்து வெறும் அடி முட்டாள்தனம்' என்று எதிர்ப்பது அல்லது அலட்சியப்படுத்துவது, அங்கீகாரத்தின் முதல் கட்டம்.
அடுத்ததாக, "என்னவோ அவர் சொல்வது கேட்பதற்குக் கொஞ்சம் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் உள்ளுக்குள் கோணல், குறுகலான கண்ணோட்டம்' என்று கால் மனது இசைவதுதான், உங்கள் கருத்துப் பரவலின் இரண்டாம் கட்டம்.
"என்னதான் உண்மை இருந்தாலும், இப்போதைக்கு அது அவ்வளவு முக்கியம் இல்லை' என்னும் நழுவல். ஆனால், உங்கள் செய்தி கேட்பவர் மனதில் ஆணி அடித்த வெற்றிக் கட்டம்.
இறுதியில் "ஆமாங்க, நானும் இதைத்தானே ஏற்கெனவே சொல்லி வருகிறேன்' என்று முற்றிலுமாக ஏற்றுக் கொள்ளும் கட்டம்.
ஆராய்ச்சியில் ஆகட்டும், ஆற்றங்கரையில் ஆகட்டும். இந்த நான்கு கட்டங்கள் நிறைவேறியாக வேண்டும். முதலில் வெறுத்து ஒதுக்குங்கள்.
பிரிட்டனில் விட்ஜென்ஸ்டீன் என்கிற ஜெர்மன் பொறியியல் ஆசிரியர் "டிராக்டஸ்' (Tractus) என்ற தலைப்பில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார். "இழுப்பு விசை' பற்றிய ஆராய்ச்சி. இழுப்பு விசை என்றால் காக்காய் வலிப்பு மாதிரியானது அல்ல. காற்றுவெளியின் ஊடாக விரைந்து செல்லும் விமானத்தின் மீது காற்று உராய்ந்து உருவாக்கும் வேகத் தடை. இதனைக் கணித முறைகளால் விளக்க முயன்றார் விட்ஜென்ஸ்டீன்.
கணிதச் சமன்பாடுகளால் இத்தகைய எந்த அறிவியல் உண்மையையும் விளக்கி விட முடியும் என்பது அவரது தீர்மானம்.
முனைவர் பட்டத் தேர்வுக் குழு உறுப்பினரான பேராசிரியர் ஜி.இ. மூர், "விட்ஜென்ஸ்டீனின் ஆய்வுரை பிரமாதம். இதற்கு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறை முனைவர் பட்டமே வழங்கலாம். அத்தனைக்குப் "படு அபாரம்'தான் போங்கள்' என்று ஒரேயடியாகப் புகழ்ந்தார். ஒருவித கிண்டல் விமர்சனம்.
இதேபோல, பெர்ட்ரண்டு ரஸ்ஸல் என்ற மற்றொரு பேராசிரியர் செய்த மதிப்பீடு இன்னும் ஒருபடி மேல். அவர் நேரடியாகவே குறிப்பிட்டார்: "இந்த ஜெர்மன் பொறியியலர் ஒரு முட்டாள்' என்று நினைக்கிறேன். "மனுஷன் எதையும் கணிதத்தால் நிரூபிக்க முடிந்தால் மட்டுமே நம்புவார் போல' என்றாராம். எகத்தாளத்தைப் பாருங்கள்.
ஒருநாள் விட்ஜென்ஸ்டீன் வகுப்பில் கணிதப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். "இந்தக் கணக்கில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை செம்மறி ஆடுகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்' என்று ஆரம்பித்தார்.
"ஆனால் ஐயா, அந்தக் குறிப்பிட்ட எண்ணிக்கை செம்மறி ஆடுகள் இல்லையென்று வைத்துக் கொண்டாலோ...' என்று குறுக்கிட்டார் ஒரு முந்திரிக்கொட்டை மாணவர். "இத்தகைய கேள்வியே கொஞ்சம் தத்துவம் பொதிந்த நகைச்சுவைதானே' என்பதால், "அதுவும் சரிதான்' என்றாராம் விட்ஜென்ஸ்டீன்.
இந்த மாதிரி வாய்வெடித்த பதில்கள் ஆசிரியர்களுக்கு ஆத்திரம் ஊட்டவும் கூடும். பிரிட்டனில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
"காற்று அழுத்தமானியின் உதவியினால் ஒரு கட்டடத்தின் உயரத்தை அளப்பது எவ்வாறு?' என்று தேர்வில் ஒரு கேள்வி. பொதுவாக, காற்று அழுத்தமானி என்பது வளிமண்டல அழுத்தத்தை அளக்க உதவும்.
"ர' எனும் வடிவத்தில் தலைகீழாய்க் கவிழ்த்த ஒரு கண்ணாடிக் குழாய் இருக்கும். அதன் ஒரு புயம் மூடியும், மற்றொரு புயம் திறந்தும் இருக்கும். அந்தக் குழாய்க்குள் கொஞ்சம் பாதரசம் நிரப்பப்பட்டு இருக்கும். மூடிய புயத்தில் பாதரச மட்ட அளவைப் பார்த்து அந்த இடத்தின் காற்று அழுத்தத்தை அளக்கலாம். ஆங்கிலத்தில் இதனை "பாரோமீட்டர்' என்பார்கள் என்றெல்லாம் பள்ளிப் பாடத்தில் படித்திருப்பீர்கள். ஆனால், பாரோமீட்டரால் ஒரு கட்டட உயரத்தை அளப்பதாவது?
அலெக்சாண்டர் காலண்ட்ரா என்ற பேராசிரியர் கைக்கு வந்த விடைத்தாளில் ஒரு மாணவர் எழுதியிருந்த விடை சற்று வித்தியாசமாக இருந்தது.
"காற்று அழுத்தமானியை ஒரு கயிற்றில் கட்டி கட்டடத்தின் உச்சியில் இருந்து கீழே இறக்க வேண்டும். அது தரையைத் தொடும்போது கயிற்றின் நீளமே அந்தக் கட்டடத்தின் உயரம்'. அப்படிப்போடு.
ஆசிரியருக்குக் கெட்ட கோபம். வராதா பின்னே? பெரிய வட்டமாகச் சுழித்து விட்டார். பூஜ்யம் மதிப்பெண். ஆனால், மாணவர் விடுவதாக இல்லை. தனது விடை "சரிதான்' என்று சாதித்தார். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வெற்றியும் பெற்று விட்டார். இருந்தாலும், கல்லூரி நிர்வாகத்துக்கு அந்தத் தீர்ப்பில் திருப்தி இல்லை.
இருந்தாலும், ஆசான் அலெக்சாண்டர் காலண்ட்ரா வேறொரு விடை தருமாறு கேட்டார். மாணவரோ சளைக்காமல், "காற்று அழுத்தமானியை அந்தக் கட்டடத்தின் உச்சியில் இருந்து கீழே போடணும்' என்றார். கண்ணாடிக் குழாயைப் பிறகு சாணி வைத்துத்தான் ஒற்றி அள்ள வேண்டி இருக்கும். ஆசிரியர் மீண்டும் ஆச்சரியத்தில் உறைந்தார். பயல் என்னவெல்லாமோ வாய்க்கு வந்தபடி உளறுகிறாரே என்றுதான் நினைத்தார்.
மாணவன் படுசுட்டி. "அதோ பாருங்கள் சார். கீழே விழும் அழுத்தமானி. தரையைத் தொடுவதற்கு எடுத்துக் கொள்ளும் கால அளவை வைத்தும் கட்டடத்தின் உயரத்தைக் கணித்து விடலாம்' என்றாராம். சபாஷ்.
மாணவரைப் பாராட்டிய அலெக்சாண்டர் காலண்ட்ரா மீது பாய்ந்தது கல்லூரி நிர்வாகம். மாணவரிடம் வேறொரு பதில் தருமாறு மிரட்டியது நிர்வாகம். மாணவரிடம் சரக்குத் தீரவில்லை. அத்தனைக்குச் சிந்தனை வளம் பாருங்கள். "காற்று அழுத்தமானியை வெயிலில் நிறுத்தி வைக்க வேண்டும். அதன் நிழலை, கட்டடத்தின் நிழலோடு ஒப்பிடலாம். ஒத்த முக்கோணங்களின் விகிதாசார அடிப்படையில் காற்று அழுத்தமானியின் உயரத்தால் கட்டட உயரத்தை அளக்கலாம்' என்றார் மாணவர்.
"என்னடா விவரம் புரியாமல் பேசுகிறாய்? இதுதானா வகுப்பில் ஆசிரியர் சொல்லித் தந்த விடை?' என்றது நிர்வாகம்.
"இன்னொரு விடையும் இருக்கிறது' மாணவர் விடுவதாக இல்லை. "கட்டடத்தின் மொட்டை மாடியில் இருந்து அந்தக் காற்று அழுத்தமானியை ஊசல் மாதிரி தொங்காட்டம் போடச் செய்ய வேண்டும். தரைமட்டத்தில் இருந்து உயரே செல்லும்தோறும் ஊசலின் அலைவு நேரம் மாறுபடும். அதை வைத்தும் கட்டட உயரத்தை அளந்து விடலாமே'. மாணவரிடம் இயற்பியல் ஞானம் அளவுக்கு அதிகமாகவே இருக்கத்தான் செய்கிறது.
"இல்லையென்றால், கடைசியாக அந்தக் காற்று அழுத்தமானியை "அடி ஸ்கேல்' (அளவுகோல்) மாதிரி வைத்து முழம்போட்டு அளந்து பார்ப்பதைத் தவிர வேறு வழியே இல்லை' என்று முடித்து வைத்தார். ஆசிரியர்களும், நிர்வாகமும் கப்சிப்.
"இத்தனை வழிகளும் உதவாது என்றால், இறுதியாக ஒரு விடை இருக்கிறது' என்றதும் அனைவரும் ஆர்வமுடன் மாணவரைச் சூழ்ந்து கொண்டனர்.
"வேறு ஒன்றுமில்லை. அந்தக் கல்லூரி மேலதிகாரியையே அவரது அறைக்குள் சந்தித்துக் கேட்டுவிடலாம். விடை அளித்தால் அந்தக் காற்று அழுத்தமானியை அவருக்கே பரிசாகத் தருவதாக வாக்களித்தால் போதும். சபலப் புத்திக்காரர் என்றால் பேசாமல் கட்டடத்தின் உயரத்தைச் சொல்லிவிடுவார்'. இது இன்றைக்கு நடைமுறை சாத்தியம்.
ஏதானாலும், அந்த மாணவரின் அறிவுத் திறமையைப் பாராட்டத்தான் வேண்டும்.
ஆக, அறிவியல் என்பது விடையில் இல்லை. வினாக்களில்தான். பலவிதமாகச் சிந்திக்கும் திறனில்தான் அடங்கி உள்ளது இளைஞர்களே. அதற்காக, அந்த மாணவனின் கடைசி உத்தியை மட்டும் பயன்படுத்திவிடாதீர்கள். ஏற்கெனவே பள்ளி, கல்லூரி, மருத்துவம், பொறியியல் பட்டப் படிப்பு, தொழில் துறைத் தேர்வு முறைகளில் முறைகேடுகள் குறித்த ஊடகச் செய்திகள் சகிக்கவில்லை.
அதனால், ஒருவருக்குப் புதிதாக ஒன்றைப் போதிப்பதற்கு மேதை பிக்காசோ கூறும் வழி: முதலில் அவருக்குத் தெரிந்ததையும், நாம் சொல்ல விரும்புவதையும் முதலில் கொஞ்சம் கூட்டிக் குறைத்துக் கூறுங்கள். ஆசாமி குழம்பிப் போகட்டும். பரவாயில்லை. அப்போதுதான் அந்தச் செய்தி அவருக்கு சற்றுக் கலங்கலாக ஏதோ பிடிபடுவது போல் இருக்கும். புருவத்தைச் சுளித்து முகம் சுருக்குவார்.
"ஆமாம், இது எனக்கு முன்னமே தெரியுமே' என்பார். அந்த எண்ணம் மெல்ல நிதானமாக அவர் மனதில் துளிர்விடும். மேற்கொண்டு தானாகவே சிந்திக்கத் தொடங்குவார். அப்புறம் என்ன? முதலில் நீங்கள் சொன்ன குழப்பங்களைக் கொஞ்சம் புரிந்து கொள்ள முற்படுவார். புரிதலால் சிந்தனை விரிவடையும். "மண்டைப் பூட்டு' உடைபடும்.
எதையும் புரிந்தது என்றால் புரிகிறது என்று சொல்லுங்கள். புரியவில்லை என்றால் புரியவில்லை என்று சொல்லுங்கள். புரிந்ததைப் புரியவில்லை என்றும், புரியாததைப் புரிந்தது என்றும் பொய் சொன்னால் புரிந்ததும் கூடப் புரியாமல் போய்விடும் என்பதை நன்றாகப் புரிந்துகொண்ட பின்னரே புரியாததைப் புரிந்தது என்று சொல்ல வேண்டும். என்ன, புரிகிறதா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...