பேச்சென்னும் பெருங் கூச்சல்
மனிதர்கள் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே திருத்தமான முறையில் பேசி வருகிறார்கள். பேச்சு என்பது செவியால் கேட்கக் கூடிய சப்தம்.


மனிதர்கள் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே திருத்தமான முறையில் பேசி வருகிறார்கள். பேச்சு என்பது செவியால் கேட்கக் கூடிய சப்தம். ஓசை, இசை, ஒலி, அரவம் என்கிறார்கள்.
சுமார் 10,000 வேறுபட்ட ஒலிகளை மொழியின் வார்த்தைகளாகச் சொல்ல முடியுமென்று கணித்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான சொற்கள் கொண்ட மொழிகள் சில இருக்கின்றன. ஆயிரக்கணக்கான, நூற்றுக்கணக்கான சொற்கள் கொண்ட மொழிகளும் இருக்கின்றன.
மொழிகளின் முதன்மையான நோக்கம் பேசுவதுதான். பல மொழிகள் பேச ஆளில்லாமல் மறைந்துவிட்டன. பேசப்படும் மொழிகள், பேசப்படாத மொழிகள் என்று எல்லாவற்றையும் கூட்டி, உலகத்தில் சுமார் ஏழாயிரம் மொழிகள் இருக்கின்றன என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.
மனிதர்கள் பேசும் மொழியின் சப்தம், கூச்சல், இரைச்சல் என்ன பாடுபடுத்தும் என்பதற்கு ஒரு பழங்கதை இருக்கிறது. ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மெசபட்டோமியாவில் கடவுள்களும், மனிதர்களும் அருகருகில் வசித்து வந்தார்களாம். கடவுள்கள் தியானம் புரிந்து கொண்டும், தங்கள் கரும காரியங்களைச் செய்து கொண்டும் அமைதியாக வாழ்ந்தார்களாம்.
பேசுவதற்குக் கற்றுக் கொண்டிருந்த மனிதர்கள் சப்தமாகப் பேசிக் கொண்டும், பெரிதாகக் கூச்சல் போட்டுக் கொண்டும் இருந்தார்கள். மனிதர்களின் பேச்சும், கூச்சலும் கடவுள்களின் தியானத்தைக் கலைத்தது. தூக்கத்தைப் போக்கடித்தது. மனிதர்களின் இரைச்சலால் கடவுள்கள் கோபம் கொண்டார்கள்.
பேச்சின் சப்தத்தால் வதைக்கும் மனித குலத்தை ஒழிக்க ஒன்றுகூடி முடிவு செய்தார்கள். அதற்காக மகா பிரளயத்தை உண்டாக்கினார்கள் என்று அக்காடியன் மொழியில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கில்காமெஷ் என்ற காப்பியம் குறிப்பிடுகிறது.
தன் மக்கள் மீது பரிவு கொண்ட இயா என்று பெயர் கொண்ட கடவுள் உபார டூட்டு மகன் உத்னபிஷ்டிம் என்பவனிடம் மனிதனோடு சகல ஜீவராசிகளும் உயிர் பிழைக்க வழிகாட்டியது. அதன்படி உத்னபிஷ்டிம் நடந்து கொண்டார். சகல உயிர்களும் பிழைத்தன. அது பைபிள் பிரளயத்துக்கு முந்தைய கதை.
ஆனால், காலப்போக்கில் மனிதன் மகா பிரளயம் ஏற்படக் காரணமாக இருந்த பேச்சின் சப்தம் பற்றி மறந்து போனான். பேச்சில் பேரார்வம் கொண்டு பெரும் சப்தத்தோடு பேசிக் களித்து வருகிறான். பேச்சில் கருத்துக்கு முக்கியத்துவம் கிடையாது. சப்தமாகப் பேசி இரைச்சலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்றே மனிதன் நினைக்கிறான். அது பொதுக் குணமாக இருக்கிறது.
வீட்டில் அப்பா கத்தினால், அம்மா அடங்கிப் போய் விடுகிறார். அம்மாவின் குரல் எழும்பினால் பிள்ளைகள் மெüனமாகி விடுகிறார்கள். அதிகாரி கூச்சல் போட்டால், அலுவலகம் அமைதிப் பூங்காவாகி விடுகிறது. எல்லாம் சப்தம் என்பதன் மகிமை.
பேச்சின் இரைச்சலை சாசுவதமாக்கப் பல ஆராய்ச்சிகள் செய்தார்கள். அதில் ஒன்றுதான் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் திரைப்படமானது. திரைப்படம் முதலில் பேசாத படமாக இருந்தது. பேசத் தெரிந்த மனிதர்கள் திரைப்படத்தைப் பேச வைத்தார்கள். திரையரங்கத்துக்குச் சென்று இருட்டில் உட்கார்ந்து கொண்டு பேச்சு, பாட்டுக் கேட்டார்கள். ஒரே இரைச்சலாக இருக்கிறது; கேட்க முடியவில்லை என்று விமர்சனம் வைத்தார்கள்.
எழுபதாண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய நாடுகளில் தொலைக்காட்சி பிரபலமாகியது. கல்விக்கு, பொழுதுபோக்குக்கு, பிரசாரத்துக்கு முக்கியமாக இருக்கிறது என்றார்கள்.
திரையரங்கக் கொட்டகையை வீட்டுக்குள் கொண்டு வந்து கத்த வைக்கிறார்கள் என்ற விமர்சனமும் சொல்லப்பட்டது. ஆனாலும், தொலைக்காட்சி மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. குடும்பத்தினர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வது, நண்பர்களோடு உரையாடுவது, சுற்றுலா செல்வது என்பதை எல்லாம் தொலைக்காட்சி முடக்கிவிட்டது.
குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அறைக்கு ஒரு பெட்டி வைத்துக் கொண்டு நிகழ்ச்சிகளைப் பார்க்க ஆரம்பித்தார்கள். அமெரிக்காவில் அது அதிகமாகியது. அதனால், கடுங்கோபம் கொண்டவர்கள் முட்டாள் பெட்டி எனப் பெயரிட்டார்கள்.
மொழியின் இனிமையை குறைக்கிறது, பேச்சை வெறும் சப்தமாக்குகிறது, வெறும் உளறல்களாக - அறிவற்ற விவாதங்களின் ஒலிபரப்புப் பெட்டியாக - விளம்பரம் ஒன்றுக்காகவே தொலைக்காட்சி இருக்கிறது என்ற விமர்சனங்களும் வந்த வண்ணம் இருக்கின்றன.
பல மொழிகள் பேசப்படும் இந்தியாவில் ஒவ்வொரு மொழியிலும் இருபதுக்குக் குறையாத அலைவரிசைகள் (சேனல்) இருக்கின்றன. கற்றவர்கள், மேன் மக்கள், விஷயம் தெரிந்தவர்கள் என்று நினைத்துக் கொள்கிறவர்கள் ஆங்கில மொழி அலைவரிசையைப் பார்க்கிறார்கள்.
இருபத்து நான்கு மணி நேரமும் இடைவிடாது நாட்டிலும், உலகத்திலும் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் கொண்டு வந்து காட்டுவதில் போட்டிப் போடுகின்றன ஆங்கிலச் செய்தி அலைவரிசைகள்.
பகல்பொழுது முழுவதும் நிகழ்ச்சிகளைக் காட்டும் தொலைக்காட்சிகள் இரவில் சிலிர்த்துக் கொண்டு எழும்பி விடுகின்றன.
இந்த நாட்டில் நடந்தது என்ன? நடப்பது என்ன? கனிம வளத்தைக் கொள்ளை அடிப்பவர்கள் யார்? லஞ்ச ஊழல் வழக்குகளின் நிலை என்ன? பாலியல் வன்கொடுமைகள் ஏன் நிகழ்கின்றன.
கல்வி ஏன் காசு பண்ணும் செயலாகி விட்டது என்று பூமியில் நிகழும் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து தீர்வு சொல்ல ஆள்களை அழைத்து வந்து எதிரெதிராக அமர வைக்கிறார்கள். விவாத மேடை, கேள்வி அரங்கம் என்று பலவிதமாகப் பெயர் வைத்துக் கொள்கிறார்கள்.
சேனல் சார்பாக நிகழ்ச்சியை வழங்க கோட்டு, சூட்டு, டை கட்டிக் கொண்டு ஒருவர் வருகிறார். கையில் கத்தைக் காகிதங்கள் வைத்துக் கொண்டு, பென்சிலில் காகிதத்தில் கோடு போட்டுக் கொண்டு நிகழ்ச்சியை ஆரம்பிக்கிறார்.
நிகழ்ச்சியில் பங்கு பெற இருப்பவர்கள் பற்றி ஒரு வார்த்தையில் அறிமுகம் செய்கிறார். கரம் கூவித்து, தலையசைத்து தங்கள் இருப்பை நிலைநாட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் சமூகப் பிரமுகர்கள். கட்சியின் அதிகாரப்பூர்வமான பேச்சாளர்கள். பொதுவாக மூன்றாம் கட்ட ஆசாமிகள். அவர்களில் மகளிரும் இருக்கிறார்கள்.
உங்களிடம் இருந்து நிகழ்ச்சி தொடங்குகிறது. நீங்கள் தப்பித்துக் கொள்ள முடியாது. ஆதாரங்கள் வசமாக உள்ளன என்று கையில் இருக்கும் காகிதங்களைக் காட்டி சில வரிகள் சப்தமாகப் படிக்க ஆரம்பிக்கிறார். அவர் படித்துக் கொண்டிருக்கும்போதே இடையில் ஒருவர் புகுந்து கூச்சலிடுகிறார். ஒரு பெண்மணி கையை நீட்டி கீச்சுக் குரலில் படபடவென்று பேசுகிறார். மூன்று பேரும் எவ்வளவு வேகமாகத் தங்களால் கத்த முடியுமோ அவ்வளவு வேகமாகக் கத்துகிறார்கள். விவாதக் களம் கூச்சல் களமாகி விடுகிறது. சப்தம் காதை அடைக்கிறது.
பேச்சு என்பது கருத்தைச் சொல்வது, அறிவை நிலைநாட்டுவது, தெளிவுபடுத்துவது என்பதெல்லாம் போக, கட்சி விசுவாசம், தலைவர் பாதுகாப்பு என்றாகி விடுகிறது. தன் பேச்சு விசுவாசம் தலைவர் பார்வைக்குச் செல்ல வேண்டும்.
தலைவருக்காக, கட்சிக்காகப் பெரும் குரலில் கத்தி மற்றவர்களைப் பேச விடாமல் அடித்தது அறியப்பட வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள்.
மேலும், விவாத அரங்கம் எத்தனை சப்தமாக இருக்கிறதோ அத்தனை சதவீதம் வெற்றியென கொண்டாடுகிறார்கள். அதில் நிகழ்ச்சி நடத்துகிறவர்களும் பங்கு பெறுகிறவர்களும் ஒன்றாகச் சேர்ந்து போகிறார்கள். கத்துவதில் யாருக்கும் வெட்கம் இல்லை என்பதைக் கத்தியே நிலை நாட்டுகிறார்கள்.
நிகழ்ச்சியை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது திடீரென்று நிகழ்ச்சிப் பொறுப்பாளருக்கு நினைவுக்கு வருகிறது. அவர் சிரமப்பட்டு ஓரளவு அமைதிபடுத்திவிட்டுச் சொல்கிறார்.
"லட்சக்கணக்கான மக்கள் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். உங்கள் பேச்சை என்னால் நிறுத்திவிட முடியும். ஆனால், நீங்கள் எங்கள் விருந்தினர் என்று.'
தொலைக்காட்சி நேயர்களுக்கு யாரும் விருந்தினர் இல்லை. செவிப்பறையைக் கிழிக்கும், மன அமைதியைக் குலைக்கும் இரைச்சலையும், கூச்சலையும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பேசக் கற்றுக் கொண்ட மனிதர்களுக்குப் பேசுவதில் தணியாத ஆர்வம் இருக்கிறது.
பேசப் பேச ஆர்வம் கூடுகிறது. விவாதம் என்று வருகிறபோது சப்தமாகப் பேசி, கூக்குரலிட்டு மற்றவர்களை அடக்கி வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். அதுதான் தொலைக்காட்சிப் பெட்டியில் ஒளிபரப்பாகிறது.
ஆனால் கத்தல், இரைச்சல், கூச்சல் வழியாக ஒருபொழுதும் வெற்றி பெற்று
விட முடியாது என்பதை நாம் உணர வேண்டும்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
பேச்சில் கருத்துக்கு முக்கியத்துவம் கிடையாது. சப்தமாகப் பேசி இரைச்சலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்றே மனிதன் நினைக்கிறான். அது பொதுக் குணமாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...