/

புத்தகங்களால் மட்டுமே முடியும்!

புத்தகமோ பத்திரிகையோ எத்தனை பிரதிகள் விற்கின்றன என்பதை வைத்து அவற்றின் மதிப்பு கணிக்கப்படுவதில்லை.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:09 am

திருப்​பூர் கிருஷ்​ணன்

புத்தகமோ பத்திரிகையோ எத்தனை பிரதிகள் விற்கின்றன என்பதை வைத்து அவற்றின் மதிப்பு கணிக்கப்படுவதில்லை. விற்பனை குறைவாக இருந்தாலும் தரம் இருந்தால் மதிப்பு கூடுகிறது. கடந்த காலப் பத்திரிகை வரலாற்றில் பெரும் பத்திரிகைகளைப் போல் மணிக்கொடியோ, தீபமோ, சரஸ்வதியோ, சுபமங்களாவோ விற்றதில்லை. ஆனால், இந்தப் பத்திரிகைகள் தான் இலக்கிய வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றன.

புத்தகமும் பத்திரிகையும் அதிகப் பிரதிகள் விற்பது நல்லதுதான். ஆனால், அதிகப் பிரதிகள் விற்பதற்கான சமரசங்களில் எழுத்தாளரோ பத்திரிகை ஆசிரியரோ ஈடுபடலாகாது.

மகாத்மா காந்தி வாழ்ந்த காலத்திலேயே அவர் சென்ற இடங்களிலெல்லாம் சென்று, அவரைப்பற்றி திரைப்படம் எடுத்தவர் ஏ.கே. செட்டியார். சிறந்த காந்தியவாதியான அவர் குமரி மலர் என்ற மாத இதழை நடத்தி வந்தார். மிகக் குறைவான பிரதிகள் மட்டுமே அதை அச்சிட்டார்.

வாசகர்கள் எந்த ஊரிலிருந்து சந்தா கட்ட விரும்பிக் கடிதம் எழுதினாலும் அந்த ஊரில் ஏற்கெனவே உள்ள குமரி மலர் சந்தாதாரரின் முகவரியை எழுதி அவர்களுக்கு அனுப்பிவிடுவார். சந்தாதாரர்களிடம் குமரி மலரை இரவல் வாங்கிப் படித்துவிட்டு ஞாபகமாக திரும்பக் கொடுத்துவிடுமாறு அறிவுறுத்தி எழுதுவார்.

புத்தகத்தைக் கடன் வாங்குபவர்கள் பெரும்பாலும் திருப்பித் தருவதில்லை. அக்கம்பக்க வீடுகளில் காப்பிப் பொடி, சர்க்கரை கடன் வாங்கினால் திரும்பக் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. ஆனால், நம்மிடம் வாங்கிய புத்தகம் வேறு யாருக்கோ கடனாகக் கொடுக்கப்பட்டு விடுகிறது. புத்தகத்தைத் திரும்பக் கொடுக்காதது பற்றிய குற்ற உணர்ச்சி கூட யாருக்கும் இருப்பதில்லை.

"புத்தகங்களைக் கடனாகக் கொடுக்காதீர்கள். திரும்பி வராது. என் நூல் நிலையத்திலுள்ள புத்தகங்கள் எல்லாம் பிறர் எனக்குக் கடனாகக் கொடுத்தவைதான்' என்று அனுபவஸ்தர் ஒருவர் சொன்னதாக ஒரு வழக்கு உண்டு.

இப்போது சில எழுத்தாளர்கள் நூலகங்களில் தாங்கள் புத்தகத்தைத் திருடிய விஷயங்களை விஸ்தாரமாக எழுதிப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். எல்லாத் திருட்டும் தவறுதான். புத்தகத் திருட்டு மட்டும் விலக்கல்ல.

நடந்து சென்றே ஏடுகளைத் தேடித் தேடி உ.வே.சா. பல இலக்கியங்களைப் பதிப்பித்தார். அந்த வகையில் பதிப்பகங்கள் அவருக்குப் பெரிதும் கடன்பட்டுள்ளன. பல அருமையான ஏடுகளை நீரிலும் நெருப்பிலும் விட்டுவிட்டோர் மத்தியில், உ.வே.சா.வுக்கு ஏடு தந்த பெருமக்கள் அனைவரும் தமிழ்கூறு நல்லுலகு நன்றியுடன் நினைவுகூர்வதற்கு உரியவர்கள்.

உலக அளவில் நடைபெற்ற ஷேக்ஸ்பியர் மாநாட்டுக்கு ஆசியாவிலிருந்து அழைக்கப்பட்ட ஆங்கில அறிஞர் கே.ஆர். ஸ்ரீனிவாச ஐயங்கார் ஒரு புத்தகப் பிரியர் (இவர் எழுத்தாளர் பிரேமா நந்தகுமாரின் தந்தை).

90 வயதுக்கு மேல் வாழ்ந்த அவருக்குக் கடைசிக் காலத்தில் கண் பார்வை போய்விட்டது. அப்போது கூட புத்தகங்களைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருப்பார். புத்தகங்களைத் தொட்டுப் பார்ப்பது ஒரு பாதுகாப்புணர்வைத் தருகிறது என்று கூறுவார் அவர்.

மறைந்த எழுத்தாளர் அநுத்தமா ஒருமுறை சொன்னார், புத்தகங்களைப் படிப்பது மட்டுமல்ல, அடுக்கிவைப்பது, அட்டை போடுவது போன்றவை கூட சுகம்தான் என்று. செல்லப் பிராணிகளைப் பராமரிப்பதில் உள்ளது மாதிரி புத்தகங்களைப் பராமரிப்பதிலும் தனி சுகம் உண்டு.

தனது கடைசிக் காலங்களில், கண்பார்வை இல்லாமல் வாழ்ந்த தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தம் பெரியபுராண நூலின் பாடல்களைப் பக்க எண்ணோடு சொல்வார். அவரது புதல்வி வாசித்துக் காட்டும்போது பக்க எண்ணையும் கேட்டு மனத்தில் வாங்கிக் கொள்வார். தற்போது நம்மிடையே வாழ்ந்துவரும் இலக்கியத் திறனாய்வாளர் கோவை ஞானியும் அடுத்தவர்களிடம் சொல்லி நூல்கள் எழுதுபவர்தான்.

சொல்லி எழுதும் முறைக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் பிள்ளையார் தான் என்று சொல்லலாம். வியாசர் சொல்லச் சொல்ல பிள்ளையார் தந்தத்தை ஒடித்து மகாபாரதத்தை எழுதியதாகச் சொல்கிறது புராணம்.

எழுத்தாளர் வை.மு. கோதைநாயகி தொடக்கத்தில் தமது சில நாவல்களைத் தனது தோழி பட்டம்மாளிடம் சொல்லி எழுதினார். காரணம், அப்போது அவருக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. பிறகு பட்டம்மாள் மூலமாகவே அவர் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார்.

சிறந்த பத்திரிகையாளரான எஸ்.எஸ். மாரிசாமி வயோதிகத்தின் காரணமாக, சொல்லி எழுத யாராவது ஆள் கிடைப்பார்களா என்று தேடிக் கொண்டிருந்தார். அப்படி ஆள் கிடைப்பதற்குள் அவர் காலமாகிவிட்டார். அப்போது "முன்பே தெரிந்திருந்தால் நான் போய் உதவி செய்திருப்பேனே, நான் எழுதுவதை விடவும் அவர் எழுதுவதல்லவா முக்கியம்' என்று பெரிதும் மனம் வருந்தினார் எழுத்தாளர் வண்ணநிலவன்.

கோவை போன்ற பெருநகரங்களில் உள்ள செல்வந்தர்கள், அவ்வப்போது ஆயிரம் ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் வாங்குவார்கள். நல்ல புத்தகம் என்று தோன்றுவதையெல்லாம் வாங்கி வீட்டில் அடுக்கி வைப்பார்கள்.

படிக்காமல் புத்தகத்தை அடுக்கி வைப்பதால் என்ன பிரயோஜனம் என்று கேட்கத் தோன்றும். ஆனால், அப்படி வாங்கி வைப்பவர்களால் தான் புத்தகங்கள் தொடர்ந்து விற்பனை ஆகின்றன. அப்படி விற்பனை ஆவதால் தான் பதிப்பகங்களும் எழுத்தாளர்களும் பிழைக்க முடிகிறது.

எனவே, படிக்க நேரமில்லாவிட்டாலும் கூட, புத்தகம் வாங்கும் சக்தி படைத்தவர்கள் நிறைய புத்தகங்களை வாங்க வேண்டும். வாங்கியவர் படிக்காவிட்டாலும் விரும்பிப் படிப்பவர்களுக்கு அந்தப் புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுக்கலாம்.

கலைப் பொருள்கள் வீட்டை அழகு படுத்துவது மாதிரிப் புத்தகங்களும் வீட்டை அழகுபடுத்தத்தானே செய்யும். வாங்கியவர் படிக்காவிட்டாலும் அவரது வாரிசுகள் எதிர்காலத்தில் படிக்கக் கூடுமல்லவா?

புத்தகம் என்பது படிக்க மட்டுமல்ல, நல்ல நிமித்தம் சொல்லும் நண்பனாகவும் இருந்ததுண்டு. நூல் போட்டுப் பார்த்து வரவிருப்பது நல்லதா கெட்டதா என்று ராமாயண புத்தகத்தை வைத்து அறிந்து கொள்ளும் பழக்கம் முன்பு இருந்ததுண்டு.

எழுத்தாளர் சாவியின் புகழ்பெற்ற நாவலான "வழிப்போக்க'னில் ஒரு காட்சி. கதாநாயகன் சென்னைக்குப் புறப்படும்போது அவன் அப்பா ஒரு ராமாயணப் புத்தகத்தை அவனிடம் கொடுத்து "கஷ்டம் வரும்போது இதைப் பிரித்துப் படி. உன் கஷ்டம் தீர்ந்து ஆறுதல் கிட்டும்' என்று சொல்வார்.

அவன் ரொம்ப காலம் அதைப் பிரித்துப் படிக்க நேரமில்லாமலே இருந்துவிடுவான். உண்மையிலேயே ஒருமுறை கஷ்டம் வரும்போது அப்பா சொன்னது நினைவு வர, அதைப் பிரித்துப் படிப்பான். படிக்க முற்படுவதற்கும் முன்பாகவே அவன் கஷ்டம் தீர்ந்துவிடும்.

அந்த ராமாயணப் புத்தகத்தின் ஆரம்பப் பக்கங்களின் இடையே நூறு ரூபாய் நோட்டை வைத்திருப்பார் அப்பா. கதாநாயகனின் பொருளாதாரக் கஷ்டத்தை நீக்க அந்த நூறு ரூபாய் பயன்படும். (அந்தக் காலத்தில் நூறு ரூபாய் என்பது பெரியதொகை.)

இப்போது இ-புக் எனப்படும் கணிப்பொறிப் புத்தகங்கள் வரத் தொடங்கிவிட்டன. கணிப்பொறியின் மூலம் பழைய இலக்கியங்கள் முழுவதையும் நாம் வாசிக்க முடிகிறது.

ஆனாலும், அச்சிட்ட புத்தகங்களில் இருக்கும் சௌகரியம் இதில் கிடையாது. முக்கியமாக சாய்வு நாற்காலியில் மல்லாந்து படுத்துக் கொண்டு கணிப்பொறியை வாசிக்க இயலாது. எதிர்காலத்தில் கூட அச்சிட்ட புத்தகங்களுக்கு மதிப்பு குறையும் என்று தோன்றவில்லை.

எழுத்தாளர் கி. ராஜநாராயணன் தமக்கு ஆங்கிலம் தெரியாது என்று கூறினாலும், பல ஆங்கில நூல்களைப் பற்றி அற்புதமாக உரையாடக் கூடியவர் அவர்.

பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம், ஆங்கில இலக்கியம் எல்லாமே நம் அறிவை விசாலப்படுத்தக் கூடியவை. ஓர் உண்மையான வாசகன் எந்த மொழியையும் வெறுக்க இயலாது.

எழுத்தாளர் ஜெயகாந்தன் தாம் பள்ளியில் அதிகம் படித்ததில்லை என்பார். அது உண்மையாக இருக்கலாம். ஆனால், தனிப்பட்ட முறையில் ஏராளமாகப் படித்த பெரிய படிப்பாளி அவர். கம்பனையும் பாரதியையும் அவரைப் போல் எழுத்தெண்ணிக் கற்றவர்கள் இன்று சொற்பம்.

கவிஞர் வைதீஸ்வரனை ஒரு தொலைக்காட்சியில் ஒரு பெண்மணி பேட்டி கண்டார். தாம் தொடக்கத்தில் கையெழுத்துப் பத்திரிகை நடத்தி அதன் மூலம் இலக்கிய ஆர்வம் பெற்றதாகச் சொன்னார் வைதீஸ்வரன். கையெழுத்துப் பத்திரிகையை எத்தனை பிரதி அச்சிட்டீர்கள் என்று தம் அடுத்த கேள்வியைத் தொடுத்தார் பேட்டி கண்ட பெண்மணி. இந்த வினாவுக்கு வைதீஸ்வரன் விடைதெரியாமல் விழிக்க நேர்ந்தது.

கல்வெட்டு, ஓலைச்சுவடி, அச்சு, மின் ஊடகம் எனப் புத்தகத் துறை பல்வேறு பரிணாம வளர்ச்சியைப் பெற்றுக்கொண்டே வருகிறது. இன்னும் என்னென்ன விதத்திலெல்லாம் புத்தகங்கள் வருமோ தெரியாது.

ஆனால், எந்த ஊடகத்திலும் எதையாவது வாசிப்பவர்கள் எப்போதும் இருந்துகொண்டேதான் இருப்பார்கள். ஏனென்றால், சிந்தனைக் கிளர்ச்சியை ஏற்படுத்தவும் மனத்தின் நுண்ணிய ஆற்றல்களை மேம்படுத்தவும் வாழ்க்கையைப் பற்றிய விசாலப் பார்வையைத் தோற்றுவிக்கவும் புத்தகங்களால் மட்டுமே முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.