டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செம்மொழி: சில செய்திகள்!

ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இந்திய மொழிகள் பற்றிய ஆய்வு அதிகமாக நடைபெற்றது. 1786-ஆம் ஆண்டில்

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:44 am

சா.கந்தசாமி

ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இந்திய மொழிகள் பற்றிய ஆய்வு அதிகமாக நடைபெற்றது. 1786-ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி அமைத்த இந்திய உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த சர். வில்லியம் ஜோன்ஸ் ஆசிய கழகத்தைத் தோற்றுவித்து, "சம்ஸ்கிருதம் ஒரு செம்மையான மொழி. அது இந்தோ - ஐரோப்பிய மொழிகள் குடும்பத்தைச் சேர்ந்தது. கிரேக்க, லத்தீன் மொழிகளைவிட சிறந்த இலக்கண கட்டமைப்புக் கொண்டது' என்று கூறினார்.

அவர் கூற்று மொழியியல் துறையிலும், கலாசார ரீதியிலும் மிகுந்த கவனம் பெற்றது. பல ஐரோப்பியர்கள் சம்ஸ்கிருதம் படித்தார்கள். அது மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் மொழியாக இருந்தது. பல சம்ஸ்கிருதப் பனுவல்கள் ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன.

இந்தியாவையும், இந்தியர்களையும் அறிந்து கொள்ள சம்ஸ்கிருதம் என்ற ஒரு மொழியே போதுமானது என்ற கருத்து நிலை பெற்று இருந்தது.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் ஒரு அதிகாரியாக இருந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் 1816-ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் டூங்கன் செம்பேல் எழுதிய தெலுங்கு இலக்கணம் என்ற நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் "தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. அது தனி மொழி' என்றார். அவர் கருத்து மொழியியல் துறையில் கவனம் பெற்றது.

1856-ஆம் ஆண்டில் இராபர்ட் கால்டுவெல் லண்டனில் திராவிட மொழிகள் ஒப்பிலக்கணம் என்ற நூலை வெளியிட்டார். ஆங்கில மொழியில் வெளியான நூலில் "தமிழ்,

தெலுங்கு, கன்னடம், மலையாளம் எல்லாம் திராவிட மொழிக் குடும்பம் சார்ந்தவை. திராவிட மொழிகள் குடும்பத்தில் பன்னிரண்டு மொழிகள் உள்ளன. அவை இந்தியாவின் பல பகுதிகளிலும் பேசப்படுகின்றன' என்றார்.

அவருடைய ஆய்வு திராவிட மொழிக் குடும்பத்தைப் பற்றிச் சொல்வதுதான். ஆனால், தமிழ்ப் பற்றியே அதிகமாகச் சொல்லியிருந்தார். அது தமிழர்கள் தங்கள் மொழி மீது பெருமிதம் கொள்ளக் காரணமாகியது.

திருவனந்தபுரத்தில் வசித்த பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை 1891-ஆம் ஆண்டில் எழுதிய மனோன்மணியம் என்னும் நாடகக் காப்பியத்தின் தொடக்கத்தில் தமிழ் மொழியைத் தாயாகவும், தெய்வமாகவும் உருவகப்படுத்தி "எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே' என்று பாடினார்.

தேசிய மறுமலர்ச்சி ஏற்பட்டிருந்த காலத்தில், தமிழர்கள் தங்கள் மொழி மீது ஈடுபாடும் அக்கறையும் கொள்ள அது காரணமாகியது.

1921-ஆம் ஆண்டில் அமெரிக்க மொழியியல் அறிஞர் எட்வெர்ட் ஸ்பர், உலகத்தின் பழைய மொழிகள் பற்றி ஆராய்ந்து, அவற்றின் இலக்கணம், இலக்கியம், பழைமை ஆகியவற்றின் அடிப்படையில் செம்மொழி என்ற கருத்தாக்கத்தை ஏற்படுத்தினார்.

அவருடைய செம்மொழி பட்டியலில் கிரேக்கம், லத்தீன், ஹீப்ரூ, பாரசீகம், சீனம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகள் இடம்பெற்றன.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அவை தாய்மொழி மீது பற்றுக் கொள்ளக் காரணமாக அமைந்தது. ஆனால், சம்ஸ்கிருதம் எந்த மாநிலத்து மொழியாகவும் இல்லை.

அது எந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக இல்லாவிட்டாலும் சர்வதேசச் செம்மொழியாக இருந்தது. அதன் வளர்ச்சி, ஆய்வுக்கு நடுவண் அரசு ஏராளமாகச் செலவிட்டது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பேச்சு மொழியாகவும், இலக்கண, இலக்கியங்கள் கொண்ட மொழியாகவும் இருக்கும் தமிழ் மொழி செம்மொழிதான். எனவே, இந்திய அரசு தமிழ் மொழியை செம்மொழி என்று அறிவிக்க வேண்டுமென்று பல வகையிலும் போராடினார்கள்.

2004-ஆம் ஆண்டில் இந்திய அரசு தமிழ் மொழியை செம்மொழி என்று அறிவித்தது. அதன் வளர்ச்சி, ஆய்வுக்காக C‌e‌n‌t‌e‌r ‌o‌f E‌x​c‌e‌l‌l‌e‌n​c‌e ‌f‌o‌r ‌s‌t‌u‌d‌i‌e‌s ‌i‌n C‌l​a‌s‌s‌i​c​a‌l Ta‌m‌i‌l​ மைசூரில் அமைக்கப்பட்டது. தமிழக அரசு, எங்கள் மொழிக்கான அமைப்பு எங்கள் மாநிலத்தில் இருக்க வேண்டும் என்று சென்னைக்குக் கொண்டு வந்தது.

தமிழக முதல்வராக பதவி வகித்தவர் அதன் தலைமையை ஏற்றுக் கொண்டார். அதன் பெயர், 'C‌e‌n‌t‌r​a‌l I‌n‌s‌t‌i‌t‌u‌t‌e ‌o‌f C‌l​a‌s‌s‌i​c​a‌l Ta‌m‌i‌l' என்று மாற்றப்பட்டு "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' என்று மொழிபெயர்க்கப்பட்டது.

தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூற்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, இறையனார் அகப்பொருள், முத்தொள்ளாயிரம், திருக்குறள் உள்பட பதினெண்கீழ்க்கணக்கு நூற்கள் என்று நாற்பத்தொரு பனுவல்களால் தமிழ் மொழி செம்மொழி ஆனது.

அதன் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை என்று சான்றோர்கள் முடிவு செய்தார்கள். இக்காலவரையறைக்குள் வரும் பக்திப் பனுவல்கள் பலவும் புறந்தள்ளப்பட்டுவிட்டன.

தமிழ் மொழியை செம்மொழி என்று அறிவித்த இந்திய அரசு, 2005-ஆம் ஆண்டில் சம்ஸ்கிருதம் செம்மொழி என்று அறிவித்தது. இந்தோ-ஐரோப்பிய குடும்பத்தில், சம்ஸ்கிருதத்தோடு உலகம் முழுவதிலும் எழுநூறு தாய் மொழிகளும் கிளை மொழிகளும் உள்ளன.

இந்தியாவின் பழைய மொழிகளான தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டும் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டதும் தெலுங்கு, கன்னட மொழியினர் எங்கள் மொழிகளுக்கும் செம்மொழி அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றார்கள். 2008-ஆம் ஆண்டில் தெலுங்கும் கன்னடமும் செம்மொழி ஆயின.

திராவிட மொழி குடும்பத்தில் எழுத்து கொண்ட கடைசி மொழியான மலையாளம் செம்மொழியாக்கப்பட வேண்டும் என்று கோரினர். அதனை ஏற்று 2013-ஆம் ஆண்டில் மலையாளம் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டது.

இந்திய மொழியியல் அறிஞர் டி.பி. பட்நாயக் ஒரிய மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். இந்திய மொழிகள் நிறுவனத்தின் முதல் இயக்குநர். அவர் ஒரிய மொழியை செம்மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

2014-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் ஒரிய மொழி செம்மொழி என்று அறிவிக்கப்பட்டது. அது அர்த்த மகாகியில் இருந்தும் பாலியில் இருந்தும் வளர்ந்த மொழியாகும்.

ஒரு மொழி செம்மொழி என்பது அரசின் அறிவிப்பு வழியாகப் பெற வேண்டியிருப்பதால் பல மொழியினரும் தங்கள் மொழியை செம்மொழி என்று அறிவிக்க வேண்டும். நிதி உதவி செய்ய வேண்டும், விருதுகள் வழங்க வேண்டும் என்று போராட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இந்தியாவின் பழைய மொழிகளில் ஒன்று பாலி. அது பேச்சு வழக்கில் இல்லை. ஆனால், பகவான் புத்தரின் உபதேசங்கள் பாலி மொழியில்தான் உள்ளன. எனவே அது புனித மொழி. அதனைச் செம்மொழியாக்க வேண்டுமென்று பலர் கோரி வருகிறார்கள்.

பிகார், உத்தரப் பிரேதசம், மத்தியப் பிரதேசத்தில் வாழும் யாதவர்கள் பேச்சு மொழி போஜ்புரி. அது கிருஷ்ண பரமாத்மா பேசிய மொழி. ஆகையால், போஜ்புரி மொழியைச் செம்மொழியாக்குவது அரசின் கடமை என்கிறார்கள்.

பிராகிருத மொழிகள் தொகுப்பில் வளமான மொழி மராத்தி. எழுதப்படும், பேசப்படும் மராத்திக்குச் செம்மொழியாக்கப்பட எல்லா தகுதிகளும் உள்ளன. எனவே, மராத்தியை செம்மொழி என்று அறிவிப்பதில் தயக்கம் காட்டக்கூடாது என்கிறார்கள்.

செம்மொழி என்று அறிவிக்கப்பட்டுள்ள ஆறு மொழிகளில் சம்ஸ்கிருதம் தவிர்த்து மற்ற மொழிகள் பேச்சு வழக்கில் உள்ள மாநில மொழிகள். அவை பள்ளிகளில், கல்லூரிகளில் கற்பிக்கப்படுகின்றன.

ஆனால், செம்மொழி கோரிக்கையை முன்வைத்து போராடியவர்களில் பலரும் தங்கள் குழந்தைகளைச் செம்மொழிகளைப் படிக்க அனுப்புவதில்லை. ஏனெனில், உயர் கல்விக்கு - பெரிய வேலைகளுக்குச் செல்ல பயன்படாத மொழியென அவற்றைக் கருதுகிறார்கள்.

பொழுதுபோக்க, சினிமா பார்க்க, கேளிக்கைக்காகச் செம்மொழி படிக்க வேண்டுமா என்று கேட்கிறார்கள்.

செம்மொழி தகுதியைக் கேட்டு வாங்கியவர்களுக்கு, தங்கள் மொழியை செம்மொழி சொற்களால் எழுதக்கூட தெரியவில்லை. சம்ஸ்கிருதம் தவிர, மற்றெந்த செம்மொழிக்குமான அமைப்புக்கு செம்மொழியில் பெயரில்லை.

மூவாயிரம் ஆண்டுகளாகப் பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும் இருப்பதோடு பிற மொழிச் சொற்கள் இன்றித் தனித்தியங்கும் ஆற்றல் கொண்டது என்று சொல்லப்படும் தமிழ்ச் செம்மொழி அமைப்பின் பெயர், "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்'. ஆங்கிலம், இந்தியில் தமிழாய்வு இல்லை. மத்திய என்பது சம்ஸ்கிருதம். நிறுவனம் என்பது புது தமிழ்ச் சொல்.

தன் பெயரைக் கூட செம்மொழி சொற்களால் எழுதிக் கொள்ள முடியவில்லை என்பது அம்மொழியில் சொல் இல்லாததால் வந்ததில்லை. சொல் அறியாதவர்கள் கூடி அக்கறையின்மை, பொறுப்பின்மையால் செய்தது.

செம்மொழி கேட்டவர்கள் முதலில் தம் மொழி அமைப்பதற்கான பெயரைச் செம்மொழிச் சொற்களில் எழுதத் தெரிந்து கொள்ளுங்கள் என்பது செம்மொழித் தகுதியைப் பறிப்பதாகாது என்றே குறிப்பிட வேண்டும்.

கட்டுரையாளர்: எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.