பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நியூட்ரினோ ஆய்வுக்குப் பொன் விழா!

அண்மைக் காலமாக, விண்வெளி, பாதுகாப்பு மற்றும் அணு ஆராய்ச்சித் துறைகளில் உலக அரங்கில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:39 am

நெல்லை சு. முத்து

அண்மைக் காலமாக, விண்வெளி, பாதுகாப்பு மற்றும் அணு ஆராய்ச்சித் துறைகளில் உலக அரங்கில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது. உலகிலேயே முதல் பயணத்தில் செவ்வாய்கோள் தொட்ட "மங்கள்யான்' சாதனை. வளைய லேசர் நிலைச்சுற்றிக் கருவித் துல்லியத்தோடு கண்டம் விட்டுக் கண்டம் தாவும் "அக்னி-5' வெற்றி.

இன்று அணுவின் உட்கருவினுள் மின்நடுநிலை "நியூட்ரான்', எதிர்மின் "புரோட்டான்' இரண்டையும் அணுக்கரு மையத்தில் ஒன்றையொன்று விலக்காமல் பிணைக்கும் நியூட்ரினோ இம்மி பற்றிய ஆராய்ச்சி. உலகின் மிகப் பிரம்மாண்ட ஆய்வகம் நம் தமிழகத்தில் அமைக்கப்பட இருப்பது தமிழருக்குப் பெருமை.

செந்தூர் முருகன் இருக்கும் கடலோரம் குலசேகரப்பட்டினத்தில் இருந்து செவ்வாய்க்கு விண்கலம் அனுப்ப முடியாமல் போனதற்கு 50 ஆண்டுகளுக்கு பிறகுப் புலம்பினோம்.

தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையைக் குடைந்து "இந்திய நியூட்ரினோ ஆய்வகம்' உருவாக இருக்கிறதே, இதற்காகப் பெருமைப்படுவோம். ஒவ்வொரு கணப்பொழுதிலும் அண்டவெளியில் இருந்து பூமிக்கு பல கோடிக்கணக்கில் நியூட்ரினோ மாரி பொழிந்த வண்ணம் உள்ளது.

சூரியனுக்குள் நடக்கும் அணுவினைகளால் புரோட்டான்களும் உற்பத்தி ஆகின்றன. அவை சூரியப் பாண்டத்தின் பல்வேறு அணுப் படல அடுக்குளைத் தாண்டி, ஆவியாக வெளியே வர, ஏறத்தாழ 40 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். நியூட்ரான் என்ற மின்நடுநிலைத் துகள் சிதைந்து வெளிப்படும் நியூட்ரினோ எனும் சிறு இம்மியும் மின் நடுநிலை கொண்டது.

என்ரிக்கோ ஃபெர்மி என்ற இத்தாலிய விஞ்ஞானி அதற்கு நியூட்ரினோ என்றே பெயர் வைத்தார். இது மூன்று வகை - எலக்ட்ரான் நியூட்ரினோ, மியுவோன் நியூட்ரினோ, டெள நியூட்ரினோ.

"உரவுச் சினம் திருகிய உருகெழு ஞாயிறு' (பாடல் - 25) என்று கல்லாடனார் குறிப்பிடுவது அறிவியல் ஆச்சரியம். ஞாயிறு திருகிக் கொண்டு இருக்கிறதாக வருகிறது. இந்தச் சூரியன் துருவ முனைகளில் ஒரு சுழற்சிக்கு 25 நாள்களும், இடுப்புப் பகுதியில் 34 நாள்களும் எடுத்துக் கொள்கிறது. துவைத்த துணி முறுக்கிப் பிழிவது போன்ற தோற்றம்.

அதிலும் நற்றிணைப் பாடலில் (163) கன்னம்புல்லனார் என்ற புலவர் சூரியனைப் பாடும் வரிகளைப் பாருங்கள். "வான மூழ்கிய வயங்குஒளி நெடுஞ்சுடர்க் கதிர்காயத்(து) எழுந்(து) அகம் கனலி ஞாயிறு'. என்ன அற்புதமான விண்இயற்பியல் வரிகள்.

"வயங்கு ஒளி', சூரியனின் ஒளிப்படலம் (ஃபோட்டோஸ்பியர்) தானே. புறப்படலம் ஆகிய "கொரோனா' பல லட்சம் பாகை வெப்பமுடன் நீண்ட அழல்சுடர் நாக்குகள். "அகம் கனலி' சூரியன். உட்கூட்டில் அதீத வெப்பம். ஹைடிரஜன் அணுக்கருக்கள், ஹீலியமாக உருமாறும் அணுப்பிணைவு நிகழ்கிறது.

இந்த ஆதி பகலவனை ஆராய்வதற்கு இந்திய விண்வெளி மையம் "ஆதித்யா' விண்கலத்தை உருவாக்கி வருகிறது. இந்தியச் செயற்கைக்கோள் மையம், உதய்பூர் வானாய்வகம், இந்திய விண் இயற்பியல் மையம், வானலை வானாய்வு மையம், தேசிய வானலை விண்இயற்பியல் மையம் போன்ற பல நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஆதித்யா தயாராகிறது.

சூரியனில் இருந்து நொடிக்கு 1,000 கி.மீ. வேகத்தில் வெளிப்படும் கொரோனா ஒளிச் சுடர்கள் குறித்த ஆய்வு இதில் இடம்பெறுவது ஒருபுறம் இருக்கட்டும்.

எலக்ட்ரான் நியூட்ரினோக்கள் ஒளிவேகத்தில் சூரியப் பரப்பில் இருந்து கண்ணுக்குப் புலப்படாத இம்மிகளாக அண்டவெளிக்குள் உமிழப்பட்டு வருகின்றன.

சூரியனில் இருந்து நொடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் பாய்ந்து வரும் இந்த நியூட்ரினோக்கள் பூமியில் ஒரு தீக்குச்சி முனை அளவு பரப்பிற்குள் நொடிக்கு 65 கோடி இம்மிகள் என்ற வீதத்தில் பூமிக்குள் கடந்து செல்கின்றன. இவற்றை ஆராய்ந்தால் பூமியின் அடி ஆழத்தில் புவி உட்கரு பற்றிய பல உண்மைகளை அறிய முடியும்.

1987-இல் தென்பட்ட "சூப்பர் நோவா' என்ற மிகைப்புது விண்மீன் வெடிப்பின்போது, அண்டவெளியில் பரவிய நியூட்ரினோ புழுதி, "நியூட்ரினோ வானவியல்' என்ற துறைக்கு அடிக்கல் நாட்டியது.

நம் ஆகாய கங்கையிலும் இதே மாதிரி நியூட்ரினோக்கள் சீறிப்பாய்ந்த வண்ணம் இருக்கின்றன. அவற்றை நியூட்ரினோ தொலைகாட்டிகளால் மட்டுமே பதிவு செய்ய முடியும்.

டாடா அடிப்படை ஆராய்ச்சி மையமும் ஜப்பானின் ஒசாகா பல்கலைக்கழகமும் இங்கிலாந்தின் துர்ஹாம் பல்கலைக்கழகமும் இணைந்து "காஸ்மிக்' அண்டக் கதிர்வீச்சில் நியூட்ரினோக்கள் அடங்கி இருப்பதை ஆராய்ந்தன.

1965-ஆம் ஆண்டிலேயே கோலார் தங்கவயல் சுரங்கங்களில் இந்தப் பரிசோதனை நடைபெற்றது. ஒரு வகையில் இன்று நியூட்ரினோ ஆய்வுக்குப் பொன்விழா.

நமது சூரியனே 400 கோடி ஆண்டுகளின் பின் ஆற்றல் தளர்ந்து, புறவெப்பம் தணிந்து குளிர்ந்து, செம்பூத விண்மீன் ஆகி வெடித்துச் சிதறக்கூடும். பத்து நொடிகளுக்குள் அதன் உள்ளிருந்து புறப்படும் நியூட்ரினோக்கள் அண்டவெளியில் வாரி இறைக்கப்படும்.

இந்தப் பூமியில் பகல் பொழுது, வெளிச்சமாக இருக்கிறது. சூரியனை விடவும் பல மடங்கு பொலிவான கோடானு கோடி விண்மீன்கள் மின்னும் இரவு மட்டும் ஏன் இருட்டாக இருக்கிறது? எப்போதாவது சிந்தித்து இருக்கிறோமா? ஆல்பர்ஸ் என்ற அறிஞர்தான் இத்தகைய சிந்தனையை முன்வைத்தார்.

இந்தப் பிரபஞ்சத்தின் அத்தனை ஒளிப் பொருள்களையும் ஒன்று திரட்டி சூரியப் பாத்திரத்தில் ஊற்றினால், ஒரு தண்ணீர்க் குவளை அளவுதான் வரும். இந்தக் கண்டுபிடிப்பால் மனிதனுக்கு என்ன பயன் என்று தயவு செய்து கேட்காதீர்கள்.

விண்இயற்பியல் ஆய்வுக்கும் இந்த நிலத்தடி நியூட்ரினோ நோக்குக் கூடம் தேவை. நியூட்ரினோ இயற்பியல் மற்றும் துறைசார் ஆய்வுகள் மேற்கொள்ளவும் முடிவு எடுக்கப்பட்டு பத்தாண்டுகள் ஆயிற்று.

இந்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் வாயிலாக, நீலகிரி மலை முதலில் பரிந்துரைக்கப்பட்டது. முதுமலை புலிகள் சரணாலயம் இருப்பதால் அங்கு ஆய்வுக் கூடத்தின் ஜனசந்தடியும், போக்குவரத்தும் சுற்றுலாவாசிகளுக்கு இடையூறாக அமையும் என்பதால் அந்த இடம் கைவிடப்பட்டது.

தேனி மாவட்டத்தைத் தேர்வு செய்தாலும் சுருளி அருவி அருகே அடர்ந்த வனப் பகுதியில் மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு உண்டாக்குமே. இறுதியில், 2010 அக்டோபர் 18 அன்று சுற்றுச்சூழல் - வனத்துறை அமைச்சகம், தேவாரம் அருகே போடி மேலைக் குன்றுகளைத் தேர்வு செய்தது.

அதற்கு கேரளத்திலும் சிலர் எதிர்ப்பு அறிக்கைகள் வெளியிட்டனர். சுற்றுச்சூழல், அணு அபாயம், கதிர்வீச்சு ஆபத்து என்றுதான் ஆரம்பிப்பார்கள்.

தாங்கள் மட்டுமே இந்த மனித உயிர்களின் நண்பர்கள், அகில உலகின் தர முத்திரை பெற்ற மனிதாபிமானிகள் என்று முழங்குவது தப்பு இல்லை. உலக அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்கிற நப்பாசையினரும் இதில் அடக்கம்.

ஏதாயினும் அலிகார், வாராணசி, கொல்கத்தா, தில்லி, ஹவாய், இமாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்களில் முதன்மை பல்கலைக்கழகங்களும், சிலிகுரி, சண்டிகார், அகமதாபாத், சிக்கிம் போன்ற இடங்களில் பல்வேறு அறிவியல் கூடங்களும் இந்த ஆய்வில் ஒத்துழைக்கின்றன.

தமிழ்நாட்டில் சலீம் அலி பறவையியல் மையம், கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் ஆகியவை ஆய்வில் கலந்து கொள்வதை நாம் வரவேற்கலாம்.

2000-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற "வீப்-6' என்ற "உயர் ஆற்றல் இயற்பியல் கற்பிதப் பயிற்சி முகா'மில் ("ஒர்க்ஷாக் ஆன் ஹை எனர்ஜி ஃபிசிக்ஸ் ஃபினாமினாலஜி') முளைவிட்ட சிந்தனை - "நியூட்ரினோ துலக்கி' வடிவமைக்கும் திட்டம்.

கொல்கத்தாவில் "சாஹா அணு இயற்பியல் நிறுவனத்துடன் இணைந்து சென்னை, கணிதவியல் நிறுவனம் நடத்திய "நியூட்ரினோ 2001' கருத்தரங்கினில் விவாதிக்கப்பட்டது. "இந்திய நியூட்ரினோ நோக்குக் கூட்டமைப்பு' 2001 செப்டம்பரில் மும்பை, டாடா அடிப்படை ஆய்வு நிறுவனத்தில் கருக்கொண்டது.

2002-ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்கள், அறிவியல் ஆய்வகங்களின் ஆதரவுடன் இந்திய அணுசக்தித் துறையில் "நியூட்ரினோ கூட்டுக் குழு' உருவானது. 2002 ஆகஸ்டில் அணுசக்தித் துறைக்கும் பல்வேறு அமைப்புகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இறுதியாக, புதுக்கோட்டை (தேனி) அருகே பொட்டிபுரம் தேர்வாகி உள்ளது. இந்த நியூட்ரினோ கூடத்தினால் அருகில் சின்னமனூர், தேனி, கம்பம் ஆகியவை முக்கிய அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கான நகரங்கள் ஆகிவிடும்.

எப்படியோ, முதல் கட்டமாக ரங்கபுரம் - பொட்டிபுரம் சாலை இணைப்பு. 100 அடி குறுக்குவெட்டில், ஏறத்தாழ 2.5 கி.மீ. நீளக் குகை குடையப்பட இருக்கிறது.

ஆய்வகத்திற்குத் தேவையான எஃகுத் தகடுகள் தயாரிக்கப்பட்டு விட்டன. இந்திய எஃகு நிறுவனமும், மும்பை பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையமும் முழுமூச்சுடன் பரிசோதித்து வருகின்றன.

பரீட்சார்த்த முறையில் அந்தத் தகடுகளின் உற்பத்தி வழிமுறைகளும், தரமும் ஏற்கத் தக்கதாக அமைந்துவிட்டன. ஒரே அடுக்கில் 100 காந்தத் தகடுகள் வீதம் 150 படலங்களாக அவை அடுக்கி வைக்கப்படும். மொத்தத்தில் 15,000 தகடுகள்.

"இந்தியாவில் தயாரிப்போம்' திட்டமும் இத்துடன் இணைந்தே உயர்கிறது. இந்தியாவின் "செயில்' என்ற நிறுவனத்திடம் இருந்து ஏறத்தாழ 50,000 டன் எஃகு பெறப்பட உள்ளது.

இவையெல்லாம் தேவையா என்று சிலர் கேட்கக்கூடும். இந்திய நோபல் விஞ்ஞானி சர்.சி.வி. இராமனின் "இராமன் விளைவு' வாயு மூலக்கூறுகளினால் வெள்ளை ஒளிச் சிதறல் அடைவதை அடிப்படையாகக் கொண்டது. வானம் நீலம் நிறமாகத் தோன்றுவதன் காரணத்தை விளக்குகிறது.

வானம் நீலநிறமாக இருந்தால் என்ன? சிகப்பு நிறமாக இருந்தால் என்ன? அதனால், மனித வாழ்வுக்கு என்ன உபயோகம் என்று கேட்பவர்களின் மேதாவிலாசத்தைப் பற்றி என்ன சொல்ல?

கட்டுரையாளர்:

இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.