டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மழையின் பிழை அன்று

பூமியில் பல்லுயிர் வாழ்க்கைக்கு நீரும், காற்றும், கதிரவன் ஒளியும் காரணமாக இருக்கின்றன. மூன்றும் மனிதர்கள் மதியால் உண்டாக்கப்பட்டவை இல்லை.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:46 am

சா.கந்தசாமி

பூமியில் பல்லுயிர் வாழ்க்கைக்கு நீரும், காற்றும், கதிரவன் ஒளியும் காரணமாக இருக்கின்றன. மூன்றும் மனிதர்கள் மதியால் உண்டாக்கப்பட்டவை இல்லை. அவை இயற்கையின் பெருங் கொடை. எனவேதான், அவற்றைப் பற்றி கவிஞர்கள், ஞானிகள் நெடுங்காலமாகப் பாடி வைத்திருக்கிறார்கள். எத்தனைப் பாடினாலும் அவற்றின் பெருமைகளைப் பாடி முடிக்க முடியாது.
 ÷வானில் இருந்து பொழியும் மழையை இளங்கோ அடிகள் மனம் குளிர வரவேற்று, "மா மழை போற்றுதும், மா மழை போற்றுதும்' என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பாடியிருக்கிறார்.
 ÷சாப்பிடாமல் மனிதர்கள் ஐந்தாறு நாள்கள் இருக்க முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் மனிதர்கள் ஒருநாள்கூட உயிர் வாழ முடியாது. மனிதர்களுக்கு மிகவும் பிடித்தமான உலோகமாகிய தங்கத்தோடுதான் தண்ணீரைச் சேர்த்து சொல்கிறார்கள். அதாவது, உருகி ஓடும் தங்கம் தண்ணீர் என்று. தண்ணீரின் பயன்பாடு தங்கத்தைவிட ஆயிரம் மடங்கு கூடுதலானது.
 ÷மழையாகக் கிடைக்கும் தண்ணீரைக் காப்பது அறிவு கொண்ட மனிதர்கள் கடமை. அதனைக் காக்காமல் விட்டுவிட்டு மழையைக் குறை சொல்வது; நிந்தனை செய்வது, பழிப்பது மடமை.
 ÷உலகத்தின் எல்லா பகுதிகளிலும் மழை பொழிகிறது. பல பகுதிகளில் அதிகமாகப் பொழிகிறது; சில பகுதிகளில் குறைவாகப் பொழிகிறது. மழை பொழியும் காலத்தை அறிந்து அதற்குப் பருவமழை என்று பெயரிட்டு மழை நீரை, குளங்கள், ஏரிகள், ஆறுகளில் அணைகள் கட்டியும் சேமித்து வைத்துக் கொண்டு பயிர்கள் பயிர் செய்து, தாங்களும் தின்று, விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் புசிக்கவும் விட்டார்கள். நெடுங்கால வாழ்க்கையில் நீரின் முக்கியத்துவத்தைப் பிரகடனப்படுத்த, "நீரின்றி அமையாது உலகு' என்றார்கள்.
 ÷தமிழ்நாட்டிற்கு வடகிழக்குப் பருவ காலத்தில் நிறைய மழை கிடைக்கிறது. ஆறுகளில் ஓடிவரும் மழை நீரை அணைகள் கட்டியும், பூமியில் வடிந்தோடும் நீரை குளங்கள், ஏரிகள் வெட்டியும் சேமித்து வைத்துக் கொண்டார்கள். சேமித்த தண்ணீரைக் கொண்டு பயிர்கள் வளர்த்து பசியாற்றிக் கொண்டார்கள்.
 ÷தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளில் பல சாதனைகள் புரிந்திருக்கிறார்கள் என்பது ஏரிகள் வெட்டியதும், ஆற்றில் அணை கட்டியதும், நிலங்களுக்குப் பாசன வசதி செய்து கொடுத்ததும் குறிப்பிட வேண்டியதுதான். ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வெட்டிய மகத்தான ஏரியாகிய தூசி மாமண்டூர் சித்ரமேகன் தடாகம் என்னும் ஏரியும், பராந்தக சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அமைத்த வீராணம் ஏரியும், நீர் வேளாண்மை, நீர் மேலாண்மை பற்றிய புரிதல்தான். ஏரி வாரியம் அமைத்து ஏரிகளை பராமரித்தார்கள். ஏரிக்கு நீர் வரும் கால்வாய்களையும், விளைநிலங்களுக்கு நீர் கொண்டு செல்லும் கால்வாய்களையும் பாதுகாத்து, பராமரித்து வந்தார்கள்.
 ÷எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா வந்த பாரசீக யாத்ரீகனாகிய அல் பெருன், வீராணம் ஏரியில் தேங்கி நிற்கும் தண்ணீரைப் பார்த்து, "இது மனிதர்கள் வெட்டிய ஏரி என்பதை நம்ப முடியவில்லை' என்று எழுதி வைத்திருக்கிறான்.
 ÷மனிதர்கள் இந்த உலகத்தில் வாழும் பல்வேறு ஜீவராசிகளில் ஒன்றுதான், என்றாலும் சிந்திக்கவும், பேசவும், எழுதவும் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். நினைவாற்றல் கொண்டு இருக்கிறார்கள். ஆயுதங்கள் செய்யவும், அவற்றைப் பயன்படுத்தவும் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். தங்களின் அறிவு, ஆற்றலால் முதலிடத்தில் இருக்கிறார்கள். அவர்களால் வெல்ல முடியாதது எதுவும் இல்லை என்பதை மதி நுட்பத்தால் நிலைநாட்டி வருகிறார்கள். தன் நலத்திற்காக பல நல்ல காரியங்கள் செய்து கொண்டு சுகஜீவனம் நடத்தும் மனிதர்கள் பல கெட்ட காரியங்களும் செய்து இருக்கிறார்கள். அவர்கள் செய்த கெட்ட காரியங்கள் அவர்களை மட்டும் பாதிக்காமல் சுற்றுப்புறச் சூழல் என்பதை நிலைகுலைய வைத்து, வருங்கால மனிதர்களையும், அவர்களின் அக, புற வாழ்க்கையையும் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது.
 ÷உலகத்தில் இயற்கையாக நடந்தவற்றில் ஏற்பட்ட பேரழிவுகளைவிட, மனிதர்கள் தங்களின் அறிவால் ஏற்படுத்திக் கொண்ட அழிவுகளே அதிகம். அதில் மனிதர்கள்தான் அழிந்து போனார்கள் என்பதில்லை, பலவிதமான ஜீவராசிகள் அடியோடு ஒழிந்து போய்விட்டன. வனம் திடலாகி விட்டது. மரம் செடி, கொடிகள், நீர்வாழ் உயிரினங்கள் எல்லாம் குறைந்து கொண்டே வருகின்றன. ஆனால் மனிதர்கள் மட்டும் பெருகிக் கொண்டே வருகிறார்கள். மனித இனம் பெருக்கத்தைத் தடுக்க; குறைக்க எடுத்துக் கொண்ட எந்த முயற்சியும் பலன் தரவில்லை.
 ÷பூமி என்பது மனிதர்கள் வாழ்வதற்கு மட்டும் உருவானது இல்லை. பலவிதமான உயிரினங்கள் வாழ்வதற்கானது. மனிதர்கள் தங்களின் திறமையைக் காட்டவும், தங்களின் பரம்பரையினர் சுகவாழ்வு வாழவும், பணம் சம்பாதிக்க பலவிதமான காரியங்கள் செய்கிறார்கள். அதில் ஒன்றுதான் பூமி மீதான ஆக்கிரமிப்பு. இயற்கை அழிப்பு. பூமி என்பதை மனித ஆற்றலால் உண்டாக்க முடியாது; பெருக்கவும் வழியில்லை. ஆனால் அதன் வளத்தைப் பாழ்ப்படுத்த முடியும்; வனப்பைக் குறைக்க முடியும்.
 ÷தம் முன்னோர்கள் உருவாக்கிக் கொடுத்துவிட்டுச் சென்ற ஏரிகளை ஆக்கிரமித்து குடியிருப்புகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், நீதிமன்றங்கள், நினைவகங்கள், விளையாட்டு மைதானங்கள் அமைத்துக் கொண்டு பருவ காலத்தில் பொழியும் மழை நீரை சாலைகளில் ஓடவிட்டு விட்டார்கள். சாலைகளில் ஓடிய நீர் போக்கிடம் இல்லாமல் வீடுகளுக்குள், தொழிற்சாலைகளுக்குள் புகுந்துவிட்டது. மழை நீரோடு கழிவுநீரும் கலந்து கொண்டு நாற்றமடிக்க ஆரம்பித்துவிட்டது. நீர் வடிய இடமில்லை. வாழ்க்கை ஸ்தம்பித்துப் போய் விட்டது என்று பலரும் கூப்பாடு போடுகிறார்கள். பத்திரிகைகள், ஊடகங்கள் படங்களோடு செய்தி வெளியிடுகின்றன. அரசும், கட்சிகளும் களத்தில் இறங்கி நிவாரணம் வழங்குகின்றன. மக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். ஐம்பது லட்சம், ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கிய இல்லத்தில் வாழ முடியாமல் வெளியேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
 ÷இது மழையின் பிழை இல்லை. ரியல் எஸ்டேட் என்ற பூதம் மக்களை மதி இழக்க வைத்து குளங்கள், ஏரிகள், ஆற்றின் கரைகளில் வீடு கட்டி விற்றுவிட்டது. பதினைந்து ஆண்டுகளாக மழையற்ற பூமி காய்ந்து கிடந்தது, இனி மழையே வராது என்று மக்கள் நம்பிவிட்டார்கள்.
 ÷குளம், ஏரி, ஆறு ஆகியவற்றைப் பாதுகாப்பது வீண் வேலை; செய்யத் தகாதது என்று அரசு மெத்தனமாக இருந்துவிட்டது. இந்தியாவிலேயே அதிகமான ஏரிகள் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. 39,202 ஏரிகள் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. பல ஏரிகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவிட்டன. பல ஏரிகள் கரைகள் உடைக்கப்பட்டு வேறு பயன்பாட்டிற்கு உள்ளாகி வருகின்றன. சில ஏரிகள் தூர்வாரப் படாமல் தூர்ந்து கொண்டு வருகின்றன.
 ÷ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வெட்டப்பட்ட வீராணம் ஏரியின் நீரின் கொள்ளளவு 1923-ஆம் ஆண்டு வரை 41 மில்லியன் கன மீட்டர். வீராணம் ஏரியில் இருந்துதான் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. ஆனாலும், அது கவனிக்கப்படவில்லை என்று சொல்லப்பட்டு வருகிறது.
 அதற்கு எடுத்துக்காட்டாக 1991-ஆம் ஆண்டில், ஏரியின் கொள்ளளவு 28 மில்லியன் கன மீட்டராகக் குறைந்துவிட்டது என்று நீர்வள பொறியாளரான பழ. கோமதிநாயகம் எழுதியிருக்கிறார்.
 ÷"தண்ணீரும் காவிரியே', "நடந்தாய் வாழி காவிரி' என்பதெல்லாம் பழங்கதையாகிவிட்டது. இந்தியாவில் நதிகள் என்பன அவை உற்பத்தியாகும் மாநிலத்திற்கே சொந்தம் என்பது போலாகிவிட்டது.
 ஒவ்வொரு மாநிலமும் தண்ணீருக்காக உச்சநீதிமன்றத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் ஒரு நாட்டின் எல்லையை ஆற்றிலும், கடலிலும், மலையிலும் பிரிப்பார்கள்.
 ஆனால், இந்தியாவில் மாநில எல்லைகளை அதிகமான மக்கள் பேசும் இடத்தை எல்லையாகக் கொண்டு பிரித்தார்கள். அதனால், சங்க இலக்கியத்தில் பாடப்பட்ட பெரியாறு கேரளாவிற்குப் போய்விட்டது. பெரியாற்றில் வெள்ளைக்கார பென்னி குயிக் அணை கட்டிக் கொடுத்தார். 1895-ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட அந்த முல்லைப் பெரியாறு அணை பழையதாகிவிட்டது.
 ÷தமிழ்நாட்டில் பாய்ந்து வரும் காவிரி, கர்நாடகத்தில் குடகில் உற்பத்தியாகிறது. அது தமிழர்கள் வாழ்வோடும், சரித்திரத்தோடும், கலாசாரம், இலக்கியம் என்பதோடு இணைந்து போவது. ஆனால், கர்நாடக அரசு காவிரி ஆற்றிலும், அதன் உபநதிகளிலும் அணை கட்டிக் கொண்டு ஒரு சொட்டுத் தண்ணீர் கூடக் கொடுக்க மாட்டோம், காவிரித் தண்ணீர் முழுவதும் எங்களுக்கே போதுமானது இல்லை; ஆகையால், காவிரித் தண்ணீர் இல்லை என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள். தமிழகத்திற்கு இருப்பதெல்லாம் மழை பொழியும் காலத்தில் தண்ணீரை ஏரி, குளங்களில் சேமித்து வைத்துக் கொண்டு தொழில், வாணிபம், விவசாயம் செய்வதும், குடிப்பதும்தான்.
 ÷தமிழகத்திற்குப் பருவமழை மட்டுந்தான் என்றில்லை, பருவம் தப்பிப் பொழியும் மழையும் தேவைதான். வரவேற்கக் கூடியதுதான். மழை என்பது வான் அமிர்தம். மழையின்றி வாழ்க்கை இல்லை. அது பல்லுயிர் வாழ வழி செய்கிறது.
 ÷மழையை வரவேற்க மனமும், பாதுகாக்க வேண்டிய ஏற்பாடுகளும் செய்து கொள்வது மக்கள், அரசின் கடமை. அதனை விட்டு விட்டு மக்கள் அரசு மீதும், அரசு மழை மீதும் குற்றம் சொல்வது பொறுப்பின்மை, அக்கறையின்மையாகும்.
 ÷தமிழகம் மிதப்பது மழையின் பிழை அன்று.
 கட்டுரையாளர்:
 மூத்த எழுத்தாளர்
ரியல் எஸ்டேட் என்ற பூதம் மக்களை மதி இழக்க வைத்து குளங்கள், ஏரிகள், ஆற்றின் கரைகளில் வீடு கட்டி விற்றுவிட்டது. பதினைந்து ஆண்டுகளாக மழையற்ற பூமி காய்ந்து கிடந்தது, இனி மழையே வராது என்று மக்கள் நம்பிவிட்டார்கள்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.