/

வங்கிகள் படிக்க வேண்டிய பாடம்!

தொய்வு என்பது எந்தவொரு வியாபாரத்தையும் சில சமயங்களில் பீடிக்கக்கூடிய ஒரு தாற்காலிக நோய்தான். நிதிப் பற்றாக்குறை, உற்பத்திப் பொருளுக்கான தேவை குறைதல், இறக்குமதிப் பொருள்களால் ஏற்படும் கடுமையான போட்டி, மூலப்பொருள் தட்டுப்பாடு, எதிர்பாராத விலையேற்றம், தொழிலாளர் வேலைநிறுத்தம், நிர்வாகத் திறமை குறைதல் போன்ற நிகழ்வுகள் வியாபாரத் தொய்வுக்கு சில காரணிகளாகும்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:48 am

எஸ். ராமன்

தொய்வு என்பது எந்தவொரு வியாபாரத்தையும் சில சமயங்களில் பீடிக்கக்கூடிய ஒரு தாற்காலிக நோய்தான். நிதிப் பற்றாக்குறை, உற்பத்திப் பொருளுக்கான தேவை குறைதல், இறக்குமதிப் பொருள்களால் ஏற்படும் கடுமையான போட்டி, மூலப்பொருள் தட்டுப்பாடு, எதிர்பாராத விலையேற்றம், தொழிலாளர் வேலைநிறுத்தம், நிர்வாகத் திறமை குறைதல் போன்ற நிகழ்வுகள் வியாபாரத் தொய்வுக்கு சில காரணிகளாகும்.

அதுபோன்ற தருணங்களில், நோயை முற்றவிடாமல், முளையிலேயே அதற்கான காரணங்களைக் கண்டறிந்து, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, தொய்வைச் செப்பனிடும் பணிகளை தீவிரமாக மேற்கொள்வதுதான் பாதிக்கப்பட்ட வியாபார நிர்வாகத்திடமிருந்து எதிர்பார்க்கப்படும் செயல்பாடாகும்.

இம்மாதிரிச் செயல்பாடுகள், நிர்வாகத்தின் மீது கடன் வழங்கிய நிதி நிறுவனங்களின் நம்பிக்கையை வளர்த்து, தொய்வைப் போக்கும் நடவடிக்கைகளில் இரு தரப்பினரும் இணைந்து செயல்படுவதற்கு வழி வகுக்கும் சாதனமாகும்.

வியாபாரத் தொய்வுக் காலங்களில், வங்கிகளிடமிருந்து பெற்ற கடனைக் குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பிச் செலுத்த முடியாமல் போனால், அது தவணை தவறிய கடன் (ஈங்ச்ஹன்ப்ற்) என்று கருதப்படுகிறது. இம்மாதிரி நிகழ்வு 90 நாள்களுக்கு மேல் நீடித்தால், அது வாராக்கடனாக தரம் தாழ்த்தப்படுகிறது.

இடைப்பட்ட காலத்தில், கடன் பெற்ற நிறுவனத்தின் முயற்சிகளில் நம்பிக்கையுள்ள வங்கி, ரிசர்வ் வங்கியின் வழிமுறைகளுக்கு உள்பட்டு, தவணை மற்றும் வட்டித்தொகை திருப்பி செலுத்த வேண்டிய காலத்தை ஒத்திப்போட்டு, கடனாளிக்கு உதவுகிறது. இதனால், தாற்காலிகத் தொய்வு, இருதரப்பிற்கும் பேரழிவாக மாறும் நிலைமை தடுக்கப்படுகிறது.

பெரும்பாலும் வங்கிக் கடனை மூலதனமாகப் பயன்படுத்தி, செயல்பட்டுக் கொண்டிருக்கும் வியாபாரத்தின் பலன்களை நன்கு அனுபவித்துவிட்டு, அந்த வியாபாரம் நலிவடையும்போது, அதைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் கடன் பெற்ற நிர்வாகம் ஈடுபடாமல் வேடிக்கை பார்ப்பது, கடன் வழங்கிய நிறுவனங்களைக் கேலிக்குரியதாக்கி, அவற்றை நஷ்ட குழிக்குள் தள்ளிவிடும்.

நலிந்த வியாபாரம், கொழுத்த முதலாளி என்ற நடைமுறை அவலங்களை நீண்ட காலமாக நம் வங்கித் துறை சந்தித்து வந்திருக்கிறது. வழங்கிய கடனை வசூலிக்க வசூல் சட்டங்கள் அமலில் இருந்தாலும், அவற்றைச் செயல்படுத்துவதில் வங்கிகள் பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. இதற்கான முக்கியக் காரணங்கள், கடன் பெற்றவர்களின் எதிர்மறை எண்ணங்களும், செயல்பாடுகளும்தான்.

ரிசர்வ் வங்கியின் தற்போதைய கவர்னர் ரகுராம் ராஜன், 2013 செப்டம்பரில் பதவி ஏற்றவுடன், கடன் வசூல் செயல்பாடுகளில், வங்கிகளுக்குத் தேவையான முழு ஆதரவையும் அளிக்கவல்ல நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் என்று உறுதி அளித்தார்.

வியாபாரத் தொய்வு போன்ற உண்மையான காரணங்களினால், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்களுக்கும் (ஈங்ச்ஹன்ப்ற்ங்ழ்ள்), வசதியிருந்தும் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாத ஏய்ப்பாளர்களுக்கும் (ரண்ப்ப்ச்ன்ப் க்ங்ச்ஹன்ப்ற்ங்ழ்ள்) இடையே பாகுபாடுகளை வங்கிகள் வகுத்து இனம் காண வேண்டும்.

வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது தக்க நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனங்களில் நிர்வாகங்களை மாற்றி அமைக்க முயற்சி செய்ய வேண்டும் என்று வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

தற்போது நடைமுறையில் உள்ள வங்கிக் கடன் வசூல் சட்டத்தின் வாயிலாக, ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான வாராக்கடன்களை, நீதிமன்றங்களின் குறுக்கீடுகள் இல்லாமல் அடமானமாகப் பெறப்பட்ட சொத்துகளை (விவசாய நிலங்களைத் தவிர்த்து) விற்பனைச் செய்து, கடனை வசூலிக்கும் அதிகாரம் வங்கிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

வங்கிகளின் சொத்து விற்பனைச் செயல்பாடுகள் குறித்து, கடனாளிகள் தங்கள் குறைகளை கடன் வசூல் தீர்ப்பாயத்திடம் (ஈங்க்ஷற் தங்ஸ்ரீர்ஸ்ங்ழ்ஹ் பழ்ண்க்ஷண்ய்ன்ஹப்) முறையிடலாம்.

சட்டச் செலவுகளை ஏற்க வசதியில்லாத சிறு கடனாளிகள் தவிர, மற்ற கடனாளிகள் யாவரும் வங்கிகளின் வசூல் செயல்பாடுகளை முடக்கும் பொருட்டு தீர்ப்பாயத்தை அணுகி, வசூல் நடவடிக்கைகளை முறியடிக்க முயற்சிக்கின்றனர்.

சில லட்சம் ரூபாய் முதலும், வட்டியும் செலுத்தி, வாங்கிய கடனைச் சீர்படுத்த விருப்பமில்லாத கடனாளிகள், திறமையான வழக்குரைஞர்களை அமர்த்தி, பல லட்சம் ரூபாய் செலவு செய்து, சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, வங்கிக் கடன் வசூலுக்குத் தடை பெறுகின்றனர்.

சில சமயங்களில், தீர விசாரிக்காமல் ஒரு தலைப் பட்சமாக தீர்ப்பாயம் சொத்துகளை விற்கத் தடை வழங்குகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் எழுகின்றன. அவை சமூக நோக்குடன் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வங்கித் தரப்பிலிருந்து முன்வைக்கப்படுகின்றன.

மேலும், பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தீர்ப்பாய பணியாளர்கள் அமர்த்தப்படாதது கடன் வசூலில் பெரும் பின்னடவை ஏற்படுத்துவதாக வங்கி நிர்வாகங்கள் முறையிடுகின்றன.

குறைகளை நிவர்த்தி செய்ய, கடன் வசூல் துறையில் வங்கி அதிகாரிகளுக்கு போதிய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். வங்கிகளின் சட்ட நிர்வாகத் துறை பலப்படுத்தப்பட வேண்டும். கடனாளிகளின் சொத்து விற்பனையின்போது, முறைகேடுகள் நடக்காமல் பாதுகாக்க அதற்கான மேற்பார்வை வலுப்படுத்தப்பட வேண்டும்.

25 லட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியவர்களின் பட்டியல், ரிசர்வ் வங்கி, சிபில் (இண்க்ஷண்ப்), செபி (நங்க்ஷண்) போன்ற அமைப்புகளுக்கு வங்கிகளால் அவ்வப்போது அனுப்பப்படுகின்றன.

பொருளாதார வசதி இருந்தபோதிலும், வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தாத அணுகுமுறை, கடன் தொகையை ஒப்புக்கொள்ளப்பட்டதைத் தவிர மற்ற செலவினங்களுக்குப் பயன்படுத்தல் (ஈண்ஸ்ங்ழ்ள்ண்ர்ய் ர்ச் ச்ன்ய்க்ள்) ஆகிய கடனாளியின் செயல்பாடுகள், ரிசர்வ் வங்கியின் தற்போதைய வழிமுறைகளின்படி, கடன் ஏய்ப்பாளர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்.

அம்மாதிரி சேர்க்கைக்கான அறிவிப்பு சம்பந்தப்பட்ட வங்கியால் வெளியிடப்பட வேண்டும். அந்தப் பட்டியலில் இடம் பெற்றவர்கள் நிர்வகிக்கும் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு, எந்த வங்கியும் அந்த நிறுவனங்களுக்கு கடன் வசதிகளை வழங்காது.

செபி உத்தரவிட்டால், சந்தைகளில் அந்த நிறுவனங்கள் பங்கு மற்றும் கடன் மூலதனத்தைத் திரட்டும் முயற்சிகள் தடை செய்யப்படும். பலவிதமான காரணங்களால், வங்கிகள் இதுவரை எந்த உயர்நிலைக் கடனாளியையும் கடன் ஏய்ப்பாளர் என்று அறிவிக்க முடியவில்லை.

ஆனால், தடைகளைத் தாண்டி, வங்கி சரித்திரத்தில் ஒரு திருப்பு முனையாக கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி, 400 கோடி ரூபாய் அளவிலான கடன் தொகையை திருப்பிச் செலுத்தாத கிங்பிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையா உள்பட நான்கு இயக்குநர்களைக் கடன் ஏய்ப்பாளர்களாக அரசுடைமையாக்கப்பட்ட யுனைடெட் வங்கி அறிவித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

வங்கிக் கடன் வசூல் நிர்வாகத்தில் இந்த நடவடிக்கை ஓர் நல்ல ஆரம்பம் என்று கருதலாம். 17 வங்கிகள் அடங்கிய கூட்டமைப்பிலிருந்து (இர்ய்ள்ர்ழ்ற்ண்ன்ம் ர்ச் க்ஷஹய்ந்ள்) இந்த நிறுவனத்தால் பெறப்பட்ட 7,000 கோடி ரூபாய் அளவிலான கடன் தொகை, திருப்பிச் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசு வங்கிகளின் தற்போதைய கடன் வசூல் மந்த நிலைமையினால் ஏற்படப்போகும் விபரீத விளைவுகளை உணர்ந்த வங்கிகளின் தொழிற்சங்கத் தலைவர் வெங்கடாசலம், கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியலை மற்ற வங்கிகளும் உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்பட்டால், வங்கிக் கடனை வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாதவர்களுக்கு அது நல்ல பாடமாக அமையும் என்று கருதலாம். கடன் ஏய்ப்பாளர்கள் குறைந்தால், வங்கிகளின் கடன் வசூல் செயல்பாடுகள் நிச்சயம் மேம்படும் என்று நம்பலாம்.

வாங்கியக் கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு, பொருளாதார மோசடி குற்றவாளிகளுக்குரிய தண்டனையை வழங்க வழி செய்யும் வகையில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனிப்பட்டவர்களின் சமூக அந்தஸ்தை மட்டும் அடிப்படைக் காரணியாகக் கொண்டு, அவர்கள் சார்ந்த நிறுவனங்களுக்கு பெருந்தொகையைக் கடனாக வாரி வழங்கும் அணுகுமுறையை வங்கிகள் தவிர்க்க வேண்டும்.

அனைத்துக் கடன் வழங்கும் அங்கீகாரங்களும், நிறுவனத்தின் யதார்த்தமான செயல்பாடுகளைச் சார்ந்ததாக அமைய வேண்டும் என்ற பாடங்களை தங்களது கடந்த காலத் தவறுகளிலிருந்து கற்றறிந்தால், வங்கிகளின் வளர்ச்சியில் பெருமை சேரும் என்பதில் சந்தேகமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.